புதன், 22 அக்டோபர், 2014

ஜுரதேவர் வழிபாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்.

ஜுரதேவர் வழிபாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்.
சிவபெருமானின் அம்சம் கொண்டவர் ஜுரதேவர். மூன்று தலைகளும், மூன்று கால்களும் கொண்டவர். திருநீற்றையே ஆயுதமாகக் கொண்டு மக்களுக்கு ஏற்படும் நோய்களைப் போக்குபவர். பழமையான சிவாலயங்களில் இவருக்கு சந்நிதி இருக்கும். இவரது திருவடியில் விபூதி வைத்து அர்ச்சித்து பூசிக்கொள்ள மஞ்சள் காமாலை உள்ளிட்ட நோய்கள் வராமல் தீர்வு ஏற்படும். பாலபிஷேகம், தயிர்ச்சாத நைவேத்யம் இவருக்குரிய வழிபாடுகள்

சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வெளியே தான் செயய வேண்டும் என்கிறார்களே! ஏன்?

சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடி மரத்திற்கு வெளியே தான் செயய வேண்டும் என்கிறார்களே! ஏன்?
இரண்டு காரணங்களுக்காக இப்படிச் செய்ய வேண்டும் என்பது வழக்கம். ஒன்று நாம் காலை பின்புறமாக நீட்டி நமஸ்காரம் செய்யும் போது, கால்பக்கம் தெய்வ சந்நிதிகள் எதுவும் இருக்க கூடாது. கொடி மரம் இருக்கும் பகுதியில் வேறு சந்நிதிகள் இருக்காது என்பதால் அந்த இடத்தில் நமஸ்காரம் செய்கிறோம். மற்றொன்று கொடி மரத்தின் அருகில் பலிபீடம் இருக்கும். நம் மனதிலுள்ள ஆணவம், பேராசை, பொறாமை போன்ற தீய எண்ணங்களை நமஸ்காரம் செய்யும் போது பலியிடுவதாக அதாவது அகற்றிக் கொள்வதாக நமஸ்காரம் செய்கிறோம். இதனால் சாஷ்டாங்க நமஸ்காரத்தை கொடிமரத்திற்கு வெளியே தான் செய்ய வேண்டும்.

வழிபாட்டுக்குரிய விக்ரகங்களை கருங்கல்லில் மட்டும் வடிப்பது ஏன்?

வழிபாட்டுக்குரிய விக்ரகங்களை கருங்கல்லில் மட்டும் வடிப்பது ஏன்?
பஞ்சலோக விக்ரகங்களும் கோயிலில் இருக்கிறதே! இன்னும் தங்கம்,வெள்ளி, வெண்கலம் போன்ற உலோகங்களும் வழிபாட்டுக்காக வடிக்கப்பட்டுள்ளன. தெய்வீக சக்தியை ஈர்த்து தன்னுள் வைத்துக் கொள்ளும் தன்மை கருங்கல், உலோகம் என அனைத்திற்குமே இருக்கிறது.

கோபுர தரிசனம் செய்வதால் மட்டுமே கோயிலுக்குச் சென்று வந்த பலனைப் பெற முடியுமா?

கோபுர தரிசனம் செய்வதால் மட்டுமே கோயிலுக்குச் சென்று வந்த பலனைப் பெற முடியுமா?
வேலை நிமித்தமாக கோயிலுக்குச் செல்ல முடியாதவர்களுக்கும், பயணம் செய்பவர்களுக்கும் மட்டுமே கோபுரதரிசனம் பொருந்தும். மற்றவர்கள் கோயிலுக்குள் சென்று கடவுளை வழிபட்டு வருவதே முறை.

மணமக்கள் அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதன் நோக்கம் என்ன?

மணமக்கள் அருந்ததி நட்சத்திரம் பார்ப்பதன் நோக்கம் என்ன?
வசிஷ்டர் என்னும் மாமுனிவரின் தர்மபத்தினி அருந்ததி. மனைவி என்னும் சொல்லுக்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். வசிஷ்டர் மனதில் நினைப்பதையே அருந்ததி செயல்படுத்துவார். நீண்ட வம்சவிருத்தி கொண்டவர் இவர். பராசர முனிவருக்குப் பாட்டி. வியாசருக்குக் கொள்ளுப் பாட்டி என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். இவரது ஒழுக்கத்தின் மாண்பினால் தீர்க்க சுமங்கலியாக விளங்கும் பாக்கியமும், வானில் நட்சத்திரமாகவும் ஒளிவீசும் பேறும் பெற்றவர். அருந்ததி போல வாழ வேண்டும். குலம் தழைக்க பிள்ளைகள் பெற்று தீர்க்க சுமங்கலியாக வாழ வேண்டும் என்ற அடிப்படையில் இம்மாதரசியை கண்டு வணங்கி ஆசி பெறுவது திருமண வைபவத்தில் முக்கியமான நிகழ்ச்சியாக கருதப்படுகிறது

கோயிலில் கொடிமரம் இருப்பதன் தத்துவம் என்ன?

கோயிலில் கொடிமரம் இருப்பதன் தத்துவம் என்ன?
"ஆலயம் புருஷாகாரம்' என்று ஆகம சாஸ்திரம் கூறுகிறது. "மனித உடலைப் போன்றது கோயில்' என்பது இதன் பொருள். கோயிலில் கருவறையே தலை. மகா மண்டபம் மார்புப் பகுதி, மார்பின் இடப்புறம் இதயம் துடிப்பது போல, நடராஜப் பெருமான் நடனமாடிக் கொண்டிருக்கிறார். அதனைத் தொடர்ந்து வயிற்றுப் பகுதியில் நாபி எனப்படும் தொப்புள் பகுதியாக இருப்பது கொடிமரம். ராஜகோபுரம் இறைவனின் திருவடி. திருவிழா காலத்தில் தேவர்களை அழைப்பதற்காக கொடிமரத்தில் கொடியேற்றி வழிபாடு நடத்துவர்

கும்பாபிஷேகத்தை தரிசிப்பதால் ஏற்படும் நன்மை

கும்பாபிஷேகத்தை தரிசிப்பதால் ஏற்படும் நன்மையைக் கூறுங்கள்.
 
ஆன்மிகத்தில் நிகழும் அபூர்வமான நிகழ்ச்சி கும்பாபிஷேகம். இதன் மூலம் கண்ணுக்குத் தெரியாத கடவுளை ஒரு குறிப்பிட்ட கோயிலில் குறிப்பிட்ட தெய்வத்தின் பெயரால் வரவழைக்கிறோம். தெய்வீக சக்தி அப்போது நம் உடலில் பதிவதால் இறைச்சக்தியில் மூழ்கி புனிதமடைகிறோம். இதனால், உடலும், மனமும் உறுதி பெற்று வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கிறது

ஆறுபடை வீட்டு தரிசனத்தை முதல் படை வீட்டிலிருந்து தான் தொடங்க வேண்டுமா?

ஆறுபடை வீட்டு தரிசனத்தை முதல் படை வீட்டிலிருந்து தான் தொடங்க வேண்டுமா?
அப்படி ஒன்றும் கிடையாது. அவரவருக்கு ஏற்ற முறையில் படைவீடுகளை விரும்பிய நேரத்தில்
தரிசிக்கலாம்.

பிரதோஷத்தன்று நந்தியின் கொம்புக்கு இடையில் சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்பது ஏன்?

பிரதோஷத்தன்று நந்தியின் கொம்புக்கு இடையில் சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்பது ஏன்?
பிரதோஷ காலத்தில் நந்தியின் கொம்புக்கு இடையில் சுவாமி நடனம் ஆடுவதாக ஐதீகம். அந்த சமயத்தில் நந்தீஸ்வரரை வழிபட வேண்டுமே தவிர, நந்தியைத் தொட்டு கொம்புக்கு இடையில் தரிசிக்க முயல்வது, காதில் வேண்டுதலைச் சொல்வது போன்றவற்றில் ஈடுபடுவது கூடாது.

குழந்தை இல்லாத தம்பதியரின் குறை தீர பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.

குழந்தை இல்லாத தம்பதியரின் குறை தீர பரிகாரம் இருந்தால் சொல்லுங்கள்.
சில விஷயங்களைச் செய்வதற்கு புத்திரனுக்கே அதிகாரம் இருக்கிறது. அதனால் ஒருவரை தத்து எடுத்துக் கொள்ளலாம் என்கிறது சாஸ்திரம். தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். குழந்தை இல்லாத தம்பதியர் போலவே பெற்றோர் இல்லாத குழந்தைகளும் சிரமப்படுகிறார்கள். இருசாராரும் இணையும் முயற்சியை மேற்கொண்டால் எவ்வளவோ பேர் மகிழலாமே!

வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம் ஏதாவது சொல்லுங்கள்?

வாஸ்து தோஷம் நீங்க எளிய பரிகாரம் ஏதாவது சொல்லுங்கள்?
"வாஸ்து தோஷம் என்ற ஒன்றே இல்லை, அதனால், நமக்கு எந்த கஷ்டமும் இல்லை' என்னும் இரண்டு வரிகளை முழுமையாக நம்பி, தினமும் 16 முறை ஜபம் செய்யுங்கள். இது தான் எளிய பரிகாரம். க்ஷ

கோயில் பிரசாதமாக கொடுத்த எலுமிச்சம்பழத்தை என்ன செய்ய வேண்டும்?

கோயில் பிரசாதமாக கொடுத்த எலுமிச்சம்பழத்தை என்ன செய்ய வேண்டும்?
மற்றைய நைவேத்ய பிரசாதங்களைச் சாப்பிடுவது போல் இதையும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்

கோலத்தின் நடுவே மஞ்சள், குங்குமம் வைப்பது சரி தானா?

கோலத்தின் நடுவே மஞ்சள், குங்குமம் வைப்பது சரி தானா?
தவறு. கோலத்தை அரிசிமாவினால் மட்டுமே இட வேண்டும். இதன் மூலம் எறும்பு போன்ற உயிர்களுக்கு உணவளிக்கிறோம். கால்மிதி படும் இடத்தில் வழிபாட்டுக்குரிய பொருட்களான மஞ்சள், குங்குமம் போன்றவற்றை வைப்பது கூடாது.

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று சித்தர்கள் பாடுகிறார்களே. சிலை வழிபாட்டை ஏன் சித்தர்கள் மறுக்கிறார்கள்?

நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று சித்தர்கள் பாடுகிறார்களே. சிலை வழிபாட்டை ஏன் சித்தர்கள் மறுக்கிறார்கள்?
"மனமது செம்மையால் மந்திரம் ஜபிக்க வேண்டாம்' என்பதற்குச் சொன்ன பதிலே இதற்கும் பொருந்தும். எனினும் சற்று விரிவாக்கச் சிந்திப்போம். நாதன் நமக்குள் இருப்பதை உணர்ந்து வாழ்பவர்களுக்கு சிலை வழிபாடு தேவையில்லை என்பது சித்தரின் கருத்து. இறைவன் நம்முள் உயிரில் கலந்து நிற்கிறான் என்பது முதுகலைப்படிப்பு போன்றது. சிலை வழிபாடு என்பது அரிச்சுவடி போன்றது. முதுகலைப்பட்டம் பெற்றவர்களுக்கு அரிச்சுவடி படிக்கத் தேவையில்லை. ஆனால், அரிச்சுவடி இல்லாமல் யாரும் படிக்க முடியாது. "நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்' என்று சொன்னார் திருமூலர். ஒட்டு மொத்த சித்தர்களும் சிலை வழிபாட்டை மறுக்கிறார்கள் என்று கருதுவது தவறு. திருமூலரும் ஒரு சித்தர் தான். அவரே சிவலிங்கத் திருமேனி முதலாகிய பல வடிவங்களைக் குறிப்பிடும் வழிபடும் முறைகளையும் விளக்கியுள்ளனர்.

கர்ப்பிணிக்கு அணிவிக்கும் வளையலால் குழந்தைக்கு உண்டாகும் நன்மை என்ன?

* கர்ப்பிணிக்கு அணிவிக்கும் வளையலால் குழந்தைக்கு உண்டாகும் நன்மை என்ன?
வளையல் காப்புக்கு "கங்கண தாரணம்' என்று பெயர். கருச்சிதைவு ஏற்படாமல் குழந்தையைப் பாதுகாக்க இதைச் செய்ய வேண்டும்.

எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் போது ஒருவர் செய்யும் தீய செயலும் கடவுள் செயலாகி விடுமே.

 எல்லாம் கடவுள் செயல் என்று சொல்லும் போது ஒருவர் செய்யும் தீய செயலும் கடவுள் செயலாகி விடுமே. எத்தனையோ பிறவிகள் எடுக்கிறோம். இதற்கு முன்பான பிறவிகளில் எவ்வளவோ நல்லதும், தீயதும் செய்திருப்போம். அதன் பலனாகவே இன்பதுன்பம் கலந்த வாழ்வை அனுபவிக்கிறோம். அதுபோல, நல்லவர்களாகவும் தீயவர்களாகவும் வாழ்வதும் இப்படித் தான். கடுமையான பாவம் செய்து தண்டனை அனுபவிக்க வேண்டியவர்களையும் இறைவன் கருணையால் ஆட்கொள்கிறார். அதாவது ஒருவர் தவறு செய்தால் தண்டனையை அனுபவித்தபின் பிறகு துன்பம் நீங்கி விடும். நல்லவர்கள் கஷ்டப்படுவதும் கூட இந்த அடிப்படையில் தான். "தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்று புறநானூற்றுச் செய்யுள் குறிப்பிடுவதைக் காணலாம். சூரபத்மனைப் பிறக்கச் செய்ததும், அவன் மூலம் தேவர்கள் துன்பப்பட்டதும் இறைவன் செயல். சூரபத்மனையே மயில் வாகனமாக ஏற்றுக் கொண்டதும் இறைவன் செயல் தான்.

ராஜகாளியம்மனுக்கு செவ்வரளி மாலை வைக்கலாமா?

ராஜகாளியம்மனுக்கு செவ்வரளி மாலை வைக்கலாமா?
காளியம்மனுக்கு சிவப்பு நிற மலர்கள் சாத்துவது சிறப்பு. செவ்வரளி மாலை சூட்டி வழிபடுவதால் செவ்வாய் தோஷம் அகலும்.

வெள்ளிக்கிழமையில் பூஜையறையில் சொல்வதற்கு எளிய பாடல்

வெள்ளிக்கிழமையில் பூஜையறையில் சொல்வதற்கு எளிய பாடல் ஏதும் இருக்கிறதா?
வீட்டில் விளக்கேற்றி விட்டு அபிராமி பட்டர் பாடிய அபிராமி அந்தாதியை மனம் உருகிப் பாடுங்கள். காப்புச் செய்யுளில் விநாயகரை வணங்கி விட்டு, அதிலுள்ள பாடல்களில் உங்களுக்குப் பிடித்தமான எளிய பாடல்களைப் பாடுங்கள். பின்வரும் இந்த ஒரு பாடல் மட்டும் கூட போதுமானது.
""தனந்தரும் கல்வி தரும் ஒருநாளும் தளர்வறியா
மனந்தரும் தெய்வ வடிவும் தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனந்தரும் நல்லன எல்லாம் தரும் அன்பர் என்பவர்க்கே
கனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே''

அபிராமி அந்தாதியின் சிறப்ப

அபிராமி அந்தாதியின் சிறப்பைச் சொல்லுங்கள்.
லலிதா சகஸ்ரநாமம், தேவி பாகவதம், சவுந்தர்யலஹரி போன்ற மந்திர நூல்களை அறிந்தவர் அபிராமி பட்டர். அவற்றின் சாரத்தை எல்லாம் ஒன்றாக்கி தமிழில் அபிராமி அந்தாதியைப் பட்டர் பாடிஉள்ளார். அதனால், அம்பிகையை இஷ்ட தெய்வமாகக் கொண்டிருப்பவர்களுக்கு அபிராமி அந்தாதி ஒரு வரப்பிரசாதம்.

பார்வதி என்று தேவியைக் குறிப்பிடுவது ஏன்?துர்க்கை வழிபாட்டுக்குரிய நாட்கள் எவை?

பார்வதி என்று தேவியைக் குறிப்பிடுவது ஏன்?
மலைக்கு அதிபதியாகிய பர்வதராஜனின் மகளாகப் பிறந்ததால் அம்பிகைக்கு "பார்வதி' என்று பெயர் உண்டு. மலைமகள் என்றும் சொல்வர்.

துர்க்கை வழிபாட்டுக்குரிய நாட்கள் எவை?
எல்லா நாட்களுமே வழிபாட்டுக்கு உரியவை தான். செவ்வாய், வெள்ளி, ஞாயிறு ஏற்றவை. அதிலும் ராகுகாலம் துர்க்கைக்கு மிகவும் உகந்தது.

கணவன் மனைவி ஒற்றுமைக்கு பரிகாரம்

* கணவன் மனைவி ஒற்றுமைக்கு பரிகாரம் சிவபார்வதி இருவரும் சரிபாதி இணைந்த அர்த்தநாரீஸ்வரர் வழிபாடு தம்பதி ஒற்றுமைக்கு சிறந்த பரிகாரம். வெள்ளிக்கிழமையில் விரதமிருந்து அம்மன் சந்நிதியில் விளக்கேற்றி வழிபாடு மேற்கொள்ளுங்கள். விரைவில் பலன் உண்டாகும்.

அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது ஏன்?

அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றுவது ஏன்?
அம்மனுக்கு மாவிளக்கு ஏற்றி வழிபடுவதால் ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கும். இதற்காக விரதம் இருந்து மாவிளக்கு தயாரிப்பர். பச்சரிசியை ஊற வைத்து, இடித்து மாவாக்கி அதில் ஏலம், சுக்கு, வெல்லம் சேர்த்து, அகல் விளக்கு போல வடித்து, நெய் சேர்த்து தீபமேற்றி அம்மன் சந்நிதியில் வைப்பர். அம்மனுக்கு பொங்கலிடும் போது மாவிளக்கும் ஏற்ற வேண்டும் என்பது வழக்கம். இந்த வழிபாடு மிகவும் பழமையானது.

சிலர் நீராடி விட்டு ஈர உடையுடன் கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்களே, இது சரியா?

சிலர் நீராடி விட்டு ஈர உடையுடன் கோயிலை வலம் வந்து வழிபடுகிறார்களே, இது சரியா?
இது தவறு. நன்கு துவைத்து காய்ந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு வழிபாடு செய்ய வேண்டும் என நமது தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.

பூணூல் அணிவதன் நோக்கம் என்ன?

பூணூல் அணிவதன் நோக்கம் என்ன?
வேதம் படிக்கவும், வேதநெறி நிற்பதற்கும் வழங்கப்படுகின்ற அதிகார அடையாளமே பூணூல். இது பற்றி இரு இடங்களில் திருமூலர் திருமந்திரத்தில் கூறியுள்ளார். பூணூலும், குடுமியும் வேதாந்தத்தையும், ஞானத்தையும் உணர்த்தும் அடையாளங்களாக அந்தணர்களுக்கு உரியது என "அந்தணர் ஒழுக்கம்' என்னும் பகுதியிலும், ஆறாம் தந்திரத்தில் "திருநீறு' அதிகாரத்தில், "நூலும் சிகையும் உணரார் நின் மூடர்கள்
நூலது வேதாந்தம் நுண்சிகை ஞானமாம்' எனவும் இதன் மகத்துவத்தைக் குறிப்பிடுகிறார்

விளக்கேற்றிய வேளையில் வீட்டில் தூங்கக் கூடாது என்கிறார்கள். இது குழந்தை, நோயாளி போன்றவர்களுக்கும் பொருந்துமா?

விளக்கேற்றிய வேளையில் வீட்டில் தூங்கக் கூடாது என்கிறார்கள். இது குழந்தை, நோயாளி போன்றவர்களுக்கும் பொருந்துமா?
பொதுவாக வயது முதிர்ந்தவர்கள், நோயாளிகள், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் இவர்கள் அனைவருமே இது போன்ற விரதம் உட்பட பல விஷயங்களில் விதிவிலக்காக கருதப்படுகிறார்கள்.

மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்பதன் பொருள் என்ன?

 மனமது செம்மையானால் மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்பதன் பொருள் என்ன?
மந்திரம் ஜபிக்க வேண்டாம் என்ற ஒரு வரியை மட்டும் எடுத்துக் கொள்ளக் கூடாது. "மனம் செம்மைப்படும் போது' என்பதையும் கவனிக்க வேண்டும். செம்மைப்படுவது என்பது ஆசாபாசங்கள் என்னும் அழுக்குகள் நீங்கி தூய்மைஅடைவது என்று பொருள். இந்த மன அழுக்கு களைப் போக்க இன்னும் சோப்புத்தூள் விற்பனைக்கு வரவில்லை. மந்திரம் ஜபிப்பது ஒன்று தான் வழி. இப்படி அதிகமான ஜபங்கள் செய்து மனதிலுள்ள இருள் நீங்கும் போது ஏற்படுவது தான் "மனமது செம்மையாதல்' எனப்படும். அதாவது வேறு எந்த விருப்பங்களும் இல்லாமல் இறைவனுடைய திருவடிகளை அடைவது ஒன்றே போதும் என்ற நிலையை மனம் முழுமையாக அடையும் போது, விருப்பங்களை நிறைவேற்றிக் கொடுப்பதாகிய மந்திரங்களை(காமிய மந்திரங்களை) ஜபிக்கும் அவசியம் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனவே, செம்மையடையும் வரை மந்திரம் ஜபிக்க வேண்டும்.

முருகன் கை கூப்பி நம்மை வணங்குவது போல ஒரு படம் இருக்கிறதே. கடவுள் நம்மை வணங்குவது போல இருப்பது சரிதானா?

 முருகன் கை கூப்பி நம்மை வணங்குவது போல ஒரு படம் இருக்கிறதே. கடவுள் நம்மை வணங்குவது போல இருப்பது சரிதானா?
முருகன்சிவலிங்கத்தை வணங்குவதையே இவ்வாறு சித்தரிக்கிறார்கள். தாங்கள் நினைப்பது போல முருகன் நம்மை வணங்கவில்லை. தந்தையை வணங்க வேண்டிய ஒழுக்கத்தை நமக்கு காட்டுகிறார். திருச்செந்தூர் முருகன் பஞ்சலிங்கங்களை வழிபடுபவராக உள்ளதும் குறிப்பிடத்தக்கது. அந்தக் கோயிலில் இதற்குரிய சித்திரமும் இருக்கிறது

தற்காலத்தில் குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்களின் பெயர் வைத்து விட்டு, வேறொரு மாடர்ன் பெயரையும் வைத்துக் கொள்கிறார்கள். இது சரியான முறையா?

தற்காலத்தில் குழந்தைகளுக்கு வீட்டுப் பெரியவர்களின் பெயர் வைத்து விட்டு, வேறொரு மாடர்ன் பெயரையும் வைத்துக் கொள்கிறார்கள். இது சரியான முறையா?
ஒருவருக்கு எவ்வளவு பெயர்கள் வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளலாம். தவறில்லை. இறைவனுக்கு ஆயிரம் பெயர்கள் இருப்பதால் தானே சகஸ்ர நாம அர்ச்சனை செய்கிறோம். சதீசன் என்னும் சிவன் பெயரை "சதீஷ்' என்றும், ரமேசன் என்ற விஷ்ணுவின் பெயரை "ரமேஷ்' என்றும் மாடர்னாக வைத்துக் கொள்கிறார்கள். இந்தி மொழிக் கலப்பினால் தான் இப்படி பெயர் வைக்கும் வழக்கம் வந்துள்ளதே தவிர, பெரிய தவறு ஒன்றுமில்லை. ஆனால், "ஆபத்சகாயம்' என்ற இறைவனின் அற்புதமான பெயரைச் சுருக்கி "ஆபத்து' என்று கூப்பிடாமல் இருந்தால் சரி தான்.

சுப விஷயத்தில் வலக்கை, வலக்கால் இரண்டுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இடது கை, காலுக்குக் கொடுப்பதில்லையே ஏன்?

சுப விஷயத்தில் வலக்கை, வலக்கால் இரண்டுக்கும் கொடுக்கும் முக்கியத்துவத்தை இடது கை, காலுக்குக் கொடுப்பதில்லையே ஏன்?
இடது கை, கால்களைக் கட்டி விடுவதில்லையே. அவைகளும் இணைந்து செயல்பட்டால் தான் மனிதன் இயங்க முடியும். இயற்கையாகிய உலகமே வலமாகத் தான் சுழல்கிறது. எல்லா மந்திரங்களின் மூலமாகிய பிரணவம் (ஓம்) வலமாகத் தான் சுழிக்கப்படுகிறது. இந்த அடிப்படையில், வலப்பாகத்தை மங்களத்தின் சின்னமாகச் சாஸ்திரங்கள் கூறியுள்ளன. இடது கையால் செய்ய வேண்டிய வேலைகளை வலக்கையால் செய்ய ஆசைப்பட மாட்டோம் அல்லவா? இதனை இதனால், இப்படித் தான் செய்ய வேண்டும் என்ற நியதியை புறக்கணிப்பது, ஆராய்வதும் எல்லாம் வேண்டியதில்லை. அதனால் பலவித குழப்பங்களும், பிரச்னைகளுமே ஏற்படுகின்றன.

எல்லா செல்வமும் தரும் தீப வழிபாடு

தீபாவளி தினத்தன்று வீட்டில் அவசியம் விளக்குகள் ஏற்ற வேண்டும். விளக்குகள் அகிலாண்ட நாயகியின் திருவடிகள் ஆகும். விளக்கின் அடிப்பாகத்தில் பிரம்மா நிலைப் பெற்றுள்ளார். கீழ் தண்டு பாகத்தில் ஸ்ரீ மகாவிஷ்ணு நிலை பெற்றுள்ளார். நெய், எண்ணெய் நிறைந்திருக்கும் இடம் சிவபெருமானின் திருமேனி திகழும் இடமாகும்.

விளக்கின் ஐந்து முகங்கள் விநாயகர், முருகர், ஸ்ரீராமர், ஸ்ரீகிருஷ்ணர், இந்திரன் ஆகியோர் அலங்கரிக்கும் இடமாக கருதப்படுகிறது. ஆண்டவன் எங்கே இருந்தாலும், எந்த வடிவத்திலே இருந்தாலும், ஜோதி வடிவத்திலே நம்முடைய மனதிலே உள்ளத்திலே உறைகிறான். ஆகவே தீப வழிபாட்டின் மூலம் மனதில் உள்ள ஜோதியை வழிபடும் பலனை நாம் பெறலாம்.

மனதில் உள்ள துன்பங்கள், கஷ்டங்கள், கவலைகள் எல்லாம் நீங்க வேண்டும் என்பதற்காகத்தான் நம் முன்னோர்கள் ஜோதி வழிபாட்டையே ஆரம்பித்தார்கள். தீபத்தில் துர்கா, லட்சுமி, சரஸ்வதி என்ற மூன்று சக்திகளும் உள்ளனர். தீப ஒளி புற இருளை அகற்றுகிறது. தீப பூஜை உள்ளத்தின் இருளைப் போக்குகிறது. அதாவது தீய சிந்தனைகள் ஏற்படாத வண்ணம் தடுக்கிறது.

மனதில் உள்ள கவலைகளைப் போக்குகிறது. எனவே தீபாவளி தினத்தன்று தீபம் ஏற்றி வணங்கிப் பூஜை செய்ய வேண்டும். சாமிக்கு முன்னால் சின்னதாக அகல் விளக்கு ஏற்றி, அரைமணி நேரமாவது எரிவதற்கு எண்ணெய் விட்டு, பூப்போட்டு, தேவியை மனதில் தியானித்துப் வழிபாடுகள் செய்ய வேண்டும்.

அப்படிச் செய்பவர்களுக்கு வாழ்க்கையில் எல்லாக் கஷ்டங்களும் நீங்கி எல்லாவிதமான சந்தோஷங்களும், சவுக்கியங்களும் ஏற்படும். தீபம் எரிந்து முடிந்த பிறகு, பூஜைகள் எல்லாம் பூர்த்தியான பிறகு யாரும் விளக்கைப் பட்டென்று அணைப்பதோ, வாயால் ஊதி அணைப்பதோ கூடாது. மெல்ல அந்தத் திரியைப் பின்னுக்கு இழுத்து, அது எண்ணெய்க்குள் அமிழ்ந்து விடுமாறு அப்படியே விட வேண்டும்.

மற்ற வகைகளில் தீபத்தை அணைத்தால் பாவம் வந்து சேரும். தினமும் காலையிலும், மாலையிலும் - வீட்டிலும், வியாபார இடங்களிலும் விளக்கேற்றி வழிபட்டு வருபவர்களின் வறுமை அகலும். அவர்களுக்கு நிச்சயம் லட்சுமியின் அருள் கிடைக்கும். சுபகாரியங்களில் குத்துவிளக்கு ஏற்றி வைக்கிறார்கள்.

இது பித்தளை அல்லது வெள்ளி குத்து விளக்காக இருக்க வேண்டும். எவர்சில்வர் குத்துவிளக்கு ஏற்ற வேண்டாம். குத்து விளக்கின் 5 முகங்களின் காரணம் பெண்களின் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத் தன்மை ஆகிய 5 குணங்களிலும் பிரகாசிக்க வேண்டும் என்பதாகும்.

இதற்காகவே பெண்களை திருமணம் ஆகி புகுந்த வீடு வந்த உடன் விளக்கேற்றச் சொல்கின்றனர். வெள்ளி அல்லது பஞ்சலோக விளக்கில் தீபம் ஏற்றினால் லட்சுமியின் கருணை கிட்டும். வெள்ளி விளக்கில் தீபம் ஏற்ற பலவீனங்கள் அகலம். பாவம் விலகும். சனீஸ்வர பாதிப்புகளிலிருந்து விடுபட கோவில்களில் இரும்பு விளக்கு ஏற்றலாம்.

ஆவணி, கார்த்திகை மாதங்களில் விசேஷ தீப அலங்காரம் செய்தால் அதிக பலன்கள் கிடைக்கும். திருநீறு, ருத்திராட்சம் அணிந்து சிவபெருமானின் பெயர்களை உச்சரித்து மாலையில் தீபங்கள் ஏற்றி வைத்தால் வறுமை நீங்கும். புதிய பருத்தி ஆடையில் மஞ்சள் தோய்த்துக் காயவைத்து அதில் திரி செய்து அம்பாளுக்குப் பஞ்சமி திதியில் விளக்கேற்றினால் பிறரால் சந்தேகிக்கப்படும் நிலை வராது.

புதிய பருத்தி ஆடையில் குங்குமத்தை தோய்த்துக் காய வைத்து அதில் திரி செய்து திரயோதசி திதியில் சிவனுக்கு தீபம் போட்டால் சுக்ரதோஷம், செவ்வாய் தோஷம் போன்ற கடுமையான தோஷங்கள் விலகும். புதிய பருத்தி ஆடையில் சந்தனத்தில் பன்னீர் கலந்து தடவி காய வைத்து திரி செய்து விளக்கேற்ற வேண்டும்.

திருவாதிரை நட்சத்திரத்தில் ஆரம்பித்து ஒரு வருடம் தொடர்ந்து இவ்வாறு விளக்கேற்றி வர நரம்புத் தளர்ச்சி, வெண்குஷ்டம் போன்ற நோய்களின் வேகம் தணியும். வாழைத்தண்டு திரி போட்டு விளக்கேற்றினால் தெய்வ குற்றம், பிதுர் சாபம் நீங்கும்.

பருத்தி பஞ்சுத்திரி எல்லா நன்மைகளையும் கொடுக்கும். தாமரைத் தண்டு நூல் திரி போட்டு விளக்கேற்றினால் முன்வினை பாவம் போகும். நம்மிடம் இருக்கும் செல்வம் நிலைத்து நிற்கும். வெள்ளை எருக்கம் இலைப்பட்டை திரியைப் போட்டு விளக்கேற்றினால் அதிக செல்வம் கிடைக்கும். பேய் பிடித்தவர்களுக்கு அதன் தொல்லை தீரும்.

சிகப்பு வண்ண ஆடையில் செய்த திரியைப் போட்டு விளக்கேற்றினால் செய்வினை தோஷங்கள் நீங்கும். திருமணத் தடை அகலும். மலட்டுத்தன்மை போகும். புதிய மஞ்சள் வண்ண ஆடையால் செய்த திரி போட்டு விளக்கேற்ற வியாதிகள் குணமாகும்.

அம்பாளின் அருள் கிடைக்கும். தீபத்திற்கு நெய்விட்டு ஏற்றுவது மிகமிகச் சிறப்பு. சகலவித செல்வச் சுகத்தையும், வீட்டிற்கு அமைதியையும் அது தருகிறது. விளக்கு எண்ணெய் விட்டு விளக்கேற்ற புகழ், சுகம், தாம்பத்திய சுகம் இவைகளை விருத்தி செய்கிறது.

நல்லஎண்ணெய் விட்டு விளக்கேற்ற எல்லா பீடைகளும் விலகும். மண்ணால் செய்யப்படும் அகல் விளக்கு, பஞ்சலோகம் அல்லது வெள்ளியால் செய்யப்படும் விளக்குகள் பூஜைக்கு மிகவும் சிறந்தவை.