Friday, April 4, 2014

மகாபாரதத்தின் 18 பர்வங்கள்:

மஹாபாரதம், இது உலகின் மிக நீண்ட இதிகாசங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது இலியட், ஒடிஸ்சி ஆகிய இரண்டு இதிகாசங்களும் சேர்ந்த அளவிலும் 10 மடங்கு பெரியது. தாந்தே எழுதிய தெய்வீக நகைச்சுவை (Divine Comedy ) என்னும் நூலிலும் ஐந்து மடங்கும், இராமாயணத்திலும் நான்கு மடங்கும் நீளமானது. ஒரு லட்சத்திற்கும் மேலான சுலோகங்களையும், 18 லட்சத்திற்கும் மேலான வார்த்தைகளையும், 74000 திற்கும் மேற்பட்ட பாடல்களையும், நீண்ட நெடும் உரைநடை பகுதிகளையும் கொண்டது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த மாபெரும் காப்பியத்தை 18 பர்வங்களாகவும் 98 துணை பர்வங்களாகவும் நமக்கு பிரித்து வழங்கியுள்ளார் வியாசர்.
பாரதத்தை எப்படி உலகுக்கு அளிப்பது என வியாசர் சிந்தித்தார். பிரம்மனை தியானித்தார். பிரம்மன் நேரில் காட்சிக் கொடுத்ததும், அவரிடம் 'பகவானே.. இதை எழுதுகிறவர் பூமியில் யாரும் இல்லையே!' என்றார். பிரம்மனும் 'உம்முடைய நூலை எழுத கணபதியை தியானம் செய்யவும்' என்று கூறிச் சென்றார். வியாசர் கணபதியை தியானிக்க, கணபதி தோன்றினார். வியாசர் அவரிடம். “ பாரதத்தை நான் சொல்லச் சொல்ல நீர் எழுத வேண்டும்" என்ற வேண்டுகோளை வைத்தார்.
வினாயகரும் ஒப்புக்கொண்டு 'சரி, ஆனால் நான் எழுதும் போது என் எழுதுகோல் நிற்காது. எழுதிக்கொண்டே போகும். இதற்கு சம்மதித்தால் எழுதுகிறேன்' என்றார். இந்த நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட வியாசர் ' பொருளை உணர்ந்துக் கொண்டுதான் நீர் எழுத வேண்டும்' என்றார். வினாயகரும் சம்மதிக்க, வியாசர் சொல்ல ஆரம்பித்தார். ஆங்காங்கு பொருள் விளங்காமல் முடிச்சுகளை வைத்து அவர் சொல்லிக் கொண்டு போக, பொருள் அறிய கணேசன் தயங்கிய நேரத்தில் மற்ற ஸ்லோகங்களை மனதில் கொண்டு வந்து வியாசர் சொன்னார்.....
மகாபாரதத்தின் 18 பர்வங்கள்:
ஆதி பர்வம்: 1-19. நைமிசக் காட்டில் முனிவர்களுக்கு சௌதி மகாபாரதத்தைச் சொல்லியது பற்றியும், வைசம்பாயனரால் முன்னர் இக்கதை சனமேசயனுக்குச் சொல்லப்பட்டது பற்றியும் இந்த பர்வத்தில் விளக்கப்படுகிறது. பரத இனத்தின் வரலாறு பற்றி விளக்கமாகக் கூறும் இப்பர்வம், பிருகு இனத்தின் வரலாற்றையும் கூறுகிறது. குரு இளவரசர்களின் பிறப்பு, அவர்களது இளமைக்காலம் என்பனவும் இப் பர்வத்தில் கூறப்படுகிறது.
சபா பர்வம்: 20 - 28 . இந்திரப்பிரஸ்தத்தில் மயன் மாளிகை அமைத்தல், அரண்மனை வாழ்க்கை, தருமன் இராஜசூய யாகம் செய்தல் என்பன இப்பர்வத்தில் சொல்லப்படுகின்றன. அத்துடன், தருமன் சூதுவிளையாட்டில் ஈடுபட்டு இறுதியில் நாடிழந்து காட்டில் வாழச் செல்வதும் இப் பர்வத்தில் அடங்குகின்றன.
ஆரண்யக பர்வம்: 29 - 44. இது பாண்டவர்களின் 12 ஆண்டுக்காலக் காட்டு வாழ்கை பற்றிய விபரங்களைத் தருகிறது.
விராட பர்வம்: 45 - 48 பாண்டவர்கள் விராட நாட்டில் மறைந்து வாழ்ந்த ஓராண்டு கால நிகழ்வுகளைக் கூறுவது.
உத்யோக பர்வம்: 49 - 59. கௌரவர்களுக்கும் பாண்டவர்களுக்கும் இடையே அமைதி ஏற்படுத்த எடுத்த முயற்சிகளையும், அம்முயற்சிகள் தோல்வியுற்ற பின்னர் இடம்பெற்ற போருக்கான நடவடிக்கைகள் பற்றியும் கூறுவது.
பீஷ்ம பர்வம்: 60 - 64. பீஷ்மர் கௌரவர்களின் தளபதியாக இருந்து நடத்திய போரின் முதற்பகுதியையும், அவர் அம்புப் படுக்கையில் விழுவதையும் இது விவரிக்கிறது.
துரோண பர்வம்: 65 – 72. துரோணரின் தலைமையில் போர் தொடர்வதை இப்பர்வம் விவரிக்கின்றது. போரைப் பொறுத்தவரை இதுவே முக்கியமான பர்வமாகும். இரு பக்கங்களையும் சேர்ந்த பெரிய வீரர்கள் பலர் இப் பர்வத்தின் முடிவில் இறந்துவிடுகின்றனர்.
கர்ண பர்வம்: 73 ஆம் துணைப் பர்வத்தை மட்டும் கொண்ட இப் பர்வத்தில் கர்ணனைத் தளபதியாகக் கொண்டு போர் தொடர்வது விவரிக்கப்படுகின்றது.
சல்லிய பர்வம்: 74 - 77. சல்லியனைத் தளபதியாகக் கொண்டு இடம் பெற்ற இறுதிநாள் போர் இப்பர்வத்தில் கூறப்படுகின்றது. இதில் சரஸ்வதி நதிக்கரையில் பலராமனின் யாத்திரையையும், போரில் துரியோதனனுக்கும், வீமனுக்கும் இடையில் நடைபெற்ற இறுதிப் போரும் விளக்கப்படுகின்றது. வீமன் தனது கதாயுதத்தால் துரியோதனனின் தொடையில் அடித்து அவனைக் கொன்றான்.
சௌப்திக பர்வம்: 78 - 80. அசுவத்தாமனும், கிருபனும், கிருதவர்மனும், போரில் எஞ்சிய பாண்டவப் படைகளில் பலரை அவர்கள் தூக்கத்தில் இருந்தபோது கொன்றது, அசுவதாமனின் சாபம், பரிக்க்ஷிட் என்னும் கருவை கிருஷ்ணர் காப்பாற்றுவது பற்றி இப்பர்வத்தில் கூறப்பட்டுள்ளது.
ஸ்திரீ பர்வம்: 81 - 85. இப் பர்வத்தில் காந்தாரி, குந்தி முதலிய குரு மற்றும் பாண்டவர் பக்கங்களைச் சேர்ந்த பெண்கள் துயரப் படுவது கூறப்படுகின்றது.
சாந்தி பர்வம்: 86 - 88. அஸ்தினாபுரத்தின் அரசனாகத் தருமருக்கு முடிசூட்டுவதும், புதிய அரசனுக்கு சமூகம், பொருளியல், அரசியல் ஆகியவை தொடர்பில் பீஷ்மர் வழங்கிய அறிவுரைகளும் இப் பர்வத்தில் அடங்கியுள்ளன. மகாபாரதத்தின் மிகவும் நீளமான பர்வம் இது.
அனுசாசன பர்வம்: 89, 90 ஆகிய இரண்டு துணைப் பர்வங்களை அடக்கியது. பீஷ்மரின் இறுதி அறிவுரைகள்.
அசுவமேதிக பர்வம்: தருமர் அசுவமேத யாகம் செய்வதையும், அருச்சுனன் உலகைக் கைப்பற்றுவதையும் இது உள்ளடக்குகிறது. கண்ணனால் அருச்சுனனுக்குச் சொல்லப்பட்ட கீதையும் இதில் அடங்குகிறது.
ஆஸ்ரமவாசிக பர்வம்: 93 - 95. திருதராட்டிரன், காந்தாரி, குந்தி ஆகியோர் இமயமலையில் ஆச்சிரமத்தில் வாழ்ந்தபோது காட்டுத் தீக்கு இரையானது இப் பர்வத்தில் கூறப்படுகின்றது.
மௌசால பர்வம் : 96 ஆவது துணைப் பர்வம். யாதவர்கள் தங்களுக்குள் நிகழ்த்திய சண்டையில் அவர்கள் அழிந்துபோனதை இப் பர்வம் கூறுகிறது.
மகாபிரஸ்தானிக பர்வம்: 97 ஆவது பர்வம்: தருமரும் அவரது உடன்பிறந்தோரும் நாடுமுழுதும் பயணம் செய்து இறுதியில் இமயமலைக்குச் சென்றது, அங்கே தருமர் தவிர்ந்த ஏனையோர் இறந்து வீழ்வது ஆகிய நிகழ்ச்சிகள் இப் பர்வத்தில் இடம்பெறுகின்றன.
சுவர்க்காரோகண பர்வம்: 98 ஆவது துணைப் பர்வம். தருமரின் இறுதிப் பரீட்சையும், பாண்டவர்கள் சுவர்க்கம் செல்வதும் இதில் சொல்லப்படுகின்றன.
99, 100 ஆகிய துணைப் பர்வங்களை உள்ளடக்கிய அரிவம்ச பர்வம் எனப்படும் பர்வம் முற் கூறிய 18 பர்வங்களுள் அடங்குவதில்லை. இதில் முன் பர்வங்களில் கூறப்படாத, கண்ணனின் வாழ்க்கை நிகழ்வுகள் கூறப்படுகின்றன.
பீஷ்ம பர்வம், துரோண பர்வம், கர்ண பர்வம், சல்லிய பர்வம், சௌப்திக பர்வம், ஸ்திரீ பர்வம் போன்றவற்றை ஏற்கனவே குருக்ஷேர்த்ரத்தில் கடந்து விட்டோம்.
“குருக்ஷேத்திர போர்” என்னும் என் முந்தைய பதிப்பை, பாண்டவர்களின் வெற்றி, நூறு கௌரவர்களின் இறப்பு, பரந்தாமனுக்கு காந்தாரியின் சாபம், அசுவதாமனுக்கு ஏற்பட்ட சாபமும் அதன் காரணமும், பரீக்ஷித் பிறப்பு, அனைத்திலும் கிருஷ்ணனின் லீலைகள், பிதாமரின் அம்பு படுக்கை நிலை என்ற நிலையில் முடித்திருந்தேன். மீண்டும் அங்கிருந்தே தொடர்வோம்...
இனி சாந்தி பர்வம் :
போரில் வெற்றி பெற்றாலும் தருமர் இழப்புகளை கண்டு மிகவும் மனம் நொந்தார். ராஜ்யத்தை விட்டு, உண்ணா நோன்பு மேற்கொண்டு, துறவு வாழ்க்கை மேற்கொள்ள துணிந்தார். தடுத்த அனைவரிடமும் பெரும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். தருமரை சமாதானம் செய்ய அனைவரும் சிரமப்பட்டனர்.
தருமரின் முடி சூட்டு விழா.
பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன், திரௌபதி, வியாசர், கண்ணன், நாரதர், வியாசர், தேவ ரிஷிகள், ஆகியோரின் இடைவிடா அறிவுரைகளால் தருமர் துக்கத்திலிருந்து விடுபட்டார். தருமரின் முகத்தில் சோகம் அகன்று சாந்தம் தவழ்ந்தது. அவர் அஸ்தினாபுரம் செல்லப் புறப்பட்டார். பதினாறு வெள்ளைக் குதிரைகள் பூட்டப்பட்ட தேரில் ஏறினார். பீமன் தேரைச் செலுத்தினான். அர்ச்சுனன் வெண் கொற்றக் குடை பிடித்தான். நகுல, சகாதேவன் இருவரும் வெண் சாமரம் வீசினர். சகோதரர்கள் ஐவரும் ஒரு தேரில் செல்லும் காட்சி பஞ்ச பூதங்களையும் ஒரு சேரக் காண்பது போல இருந்தது. கண்ணனும், சாத்யகியும் ஒரு தேரில் சென்றனர். திருதிராட்டிரன் காந்தாரியுடன் ஒரு தேரில் ஏறிப் பின் தொடர்ந்தான். குந்தி, திரௌபதி, சுபத்திரை முதலானோர் விதுரரைத் தொடர்ந்து பலவித வாகனங்களில் சென்றனர். அலங்கரிக்கப்பட்ட யானைகளும், குதிரைகளும் தொடர்ந்து சென்றன. அலை அலையாகத் தொடர்ந்து சென்ற மக்கள் கூட்டம் கடலே எழுந்தது போல இருந்தது.
அஸ்தினாபுரத்து மக்கள் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கினர். நகரை நன்கு அலங்கரித்தனர். நகரம் கோலாகலமாகத் திகழ்ந்தது. தெருவெங்கும் மாலைகளும், தோரணங்களும் காட்சியளித்தன. சந்தனமும், கஸ்தூரியும் மலர் மாலைகளும் மணம் வீசி அனைவரையும் இன்பத்தில் ஆழ்த்தின. 'எங்கள் மாமன்னர் ஆயிரமாயிரம் ஆண்டுகள் வாழ்க' என்னும் வாழ்த்தொலிகளுக்கிடையே தருமர் அஸ்தினாபுரம் அடைந்தார்.
தருமர் உயர்ந்த பொற் பீடத்தில் கிழக்கு முகமாக அமர்ந்தார். அவருக்கு எதிரே அழகு மிக்க பொற் பீடத்தில் கண்ணன் அமர்ந்தார் .தருமர் நடுவில் இருக்க, பின்புறம் இருந்த பீடங்களில் பீமனும், அர்ச்சுனனும் அமர்ந்தனர். அழகான இருக்கையில் நகுலன், சகாதேவன், குந்தி ஆகியோர் அமர்ந்தனர். திருதிராட்டிரன் முதலான மற்றவர்கள் அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். தருமர் அருகில் திரௌபதியை அமரவைத்துத் தௌமியர் விதிப்படி ஓமம் செய்தார். கண்ணன் புனித கங்கை நீரால் தருமருக்கு அபிஷேகம் செய்து முடி சூட்டினார். எங்கும் துந்துபி முதலான மங்கள வாத்தியங்கள் முழங்கின. அந்தணர்கள் வாழ்த்தினர்.
தருமர் அவையினரை நோக்கி ' அவையோரே, எங்களது பெரிய தந்தை திருதிராட்டிர மாமன்னர் எங்களுக்கு தெய்வம் போன்றவர். என் நன்மையை விரும்பும் அனைவரும் அவரையும் போற்றுதல் வேண்டும்.உங்களுக்கும், எங்களுக்கும் அவரே அரசர். நீங்கள் அவருக்குச் செய்யும் நன்மையே எனக்குச் செய்யும் நன்மையாகும். எனது இந்த விருப்பத்தை நீங்கள் எப்போதும் மனதில் கொள்ளவேண்டும்.' என்று கூறினார். பிறகு அனைவரையும் அவரவர் இடத்திற்குச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் அரசியல் காரியம் தொடங்கியது. தருமர், பீமனுக்கு இளவரசு பட்டம் சூட்டினார். விதுரரை ஆலோசனைக் குழுத் தலைவராக நியமித்தார். சஞ்சயனை வரவு செலவுகளைக் கவனிக்கும் பதவியில் அமர்த்தினார். அர்ச்சுனனை படைத் தளபதியாக இருக்கச் செய்தார். நகுலனை படைகளைக் கவனிக்குமாறு கட்டளையிட்டார். சகாதேவனை எப்போதும் தன் அருகில் இருக்கப் பணித்தார். அரச புரோகிதராகத் தௌமியர் நியமிக்கப் பட்டார். பெரிய தந்தையைக் கண்ணும் கருத்துமாக அனைவரும் கவனித்துக் கொள்ள வேண்டும் என்பதை மீண்டும் வற்புறுத்தினார்.
தருமர் குருக்ஷேத்திர வெற்றிக்குக் காரணமாக இருந்த கண்ணனைக் கை கூப்பித் தொழுதார். கண்ணனை நூறு நாமங்களால் போற்றிப் புகழ்ந்தார். 'யதுகுலத் திலகமே..உம் அருளால் இந்த அரசு எனக்குக் கிடைத்தது. உலகம் உம் அருள் பார்வையால் நிலை பெற்றுள்ளது. உமக்குப் பலகோடி வணக்கம்' எனப் பணிவுடன் வணங்கினார்.
பின், துரியோதனின் மாளிகையைப் பீமனுக்கு வழங்கினார். துச்சாதனனின் மாளிகையை அர்ச்சுனனுக்கு அளித்தார். துர்மர்ஷனுடைய மாளிகையை நகுலனுக்கும், துர்முகனுடைய மாளிகையைச் சகாதேவனுக்கும் கொடுத்தார். ' என் அன்பு தம்பிகளே! என் பொருட்டு நீங்கள் இதுவரை எல்லையற்ற துன்பத்தை ஏற்றீர். இனி இன்பத்துடன் வாழ்வீர்' என்றார். பின், குடிமக்களை அழைத்து அறநெறியில் உறுதியாய் இருக்குமாறு கூறினார். இவ்வாறு நல்லாட்சிக்கு தருமர் அடித்தளம் இட்டார்.
இருப்பினும் தன் தாத்தா வாகிய பிதாமகரை அவரால் நினைக்காமல் இருக்க முடியவில்லை..... அவரால் மட்டும் அல்ல அவரின் தம்பிகளுக்கும் தான். பீஷ்மரால் இன்னும் ஒரு காரியம் நடக்க வேண்டும் என்பது கிருஷ்ணனின் விருப்பம்... மாய கண்ணன் தன் லீலையை மீண்டும் அரங்கேற்றினான்










அரசாட்சியை ஏற்ற தருமர், வியாசர், நாரதர், தேவ ரிஷிகள், தந்தை எம தர்மர், ஆகியோரின் ஆசியை பெற்றார். பின், நீல வண்ண கண்ணன் உறையும் இடம் சென்றார். தன் அவதாரத்தின் நோக்கத்தை முடித்த கண்ணன், அப்போது ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அது கண்டு வியந்த தருமர் “ மூவுலக நாயகனே...!!! உலக உயிர் அனைத்தும் உம்மை நோக்கி தியானம் செய்கையில், நீர் மட்டும் யாரை எண்ணி தியானிக்கிறீர்..? “ என வினவினார்.
தருமரை நோக்கி கிருஷ்ணர், தன் அடையாளமான மெல்லிய, சாந்தமான, என்றும் மாறாத புனகையுடன் “ யுதிஷ்டிரா! அம்பு படுக்கையில் இருக்கும் பீஷ்மர் என்னை நோக்கி தியானம் செய்துக் கொண்டிருக்கிறார். ஆகவே, எனது உள்ளமும் அவரிடம் சென்றிருந்தது. எவரது நாணொலிக் கேட்டு இந்திரனும் நடுங்குவானோ, அந்த பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது. முன்னொரு சமயம், மூன்று கன்னியர் பொருட்டு அரசர்கள் அனைவரையும் வீழ்த்தி வெற்றி கண்ட அந்த்ப் பீஷ்மரிடம் மனம் சென்றிருந்தது. தெய்வ மங்கை கங்கையின் மைந்தரும், வசிஷ்டரின் சீடருமான பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது. எவர் வேத வேதாங்கங்களையும் உணர்ந்தவரோ அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது. எவர் தேவகுருவிடம் அரச நீதியையும், பிரம புத்திரரான சனத்குமாரரிடம் ஆத்ம வித்தைகளையும், மார்க்கண்டேயரிடம் சந்நியாச தர்மத்தையும் அறிந்தவரோ, அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது. எவர் தனது மரணத்தைத் தடுத்து நிறுத்தும் தவ மேன்மை மிக்கவரோ, எவர் புதல்வனின்றியும் புண்ணியம் பெறத் தக்கவரோ அந்தப் பீஷ்மரிடம் என் மனம் சென்றிருந்தது. யுதிஷ்டிரா...!! அந்தப் பீஷ்மர் மறைந்தால் நல்லறங்களும் மறைந்து விடும். ஆகவே அவர் மரணம் அடைவதற்குள் அவரிடம் உள்ள ஞான நல்லறிவை அறிந்து கொள்வாயாக " என்றார் கண்ணன்.
பீஷ்மப் பிதாமகரின் பெருமையைக் கண்ணன் வாயால் சொல்லக் கேட்ட தருமர் உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டார். சிறு வயது நினைவுகளும், பிதாமகர் பீஷ்மருடன் தானும் தன் தம்பிகளும் விளையாடி கழித்த நகழ்ச்சிகளும் அவரை வாட்டியது. மனம் பீஷ்மரின் பால் லயித்தது. அவரை வெல்ல தான் மேற்கொண்ட யுக்தி தருமரை மேலும் வாட்டியது. பகவானை நோக்கி “ வஞ்சனையால் அவரை வதைக்கச் செய்த நான் எந்த முகத்துடன் அவரைக் காண்பேன்...? “ என நா தழுதழுக்க வினவினார். கிருஷ்ணரோ பீஷ்மரின் பிறப்பு ரகசியத்தையும், சிகண்டிகையின் சபதத்தையும் மீண்டும் ஒருமுறை கூறி தருமரை சாந்தப்படுத்தினார். பின்னர், கண்ணனும், பாண்டவர்களும் பீஷ்மரைக் காணத் தேரேறிக் குருக்ஷேத்திரம் சென்றனர்.
அங்கே அம்பு படுக்கையில் கங்கை மைந்தன் பரந்தாமனின் நாமங்களை ஜபித்தவாறே அவர்களின் வருகைக்காக காத்திருந்தார். ஆம். பாண்டவர்களும் கிருஷ்ண பரமாத்வாவும் நிச்சயம் வருவார்கள் என்று அவர் யூகித்திருந்தார். பீஷ்மரின் மனதிற்குள் தன் செல்ல பேரன்களை மீண்டும் ஒரு முறை சந்திக்க வேண்டும் என்ற ஆவல் இருந்தது. முக்கியமாக தன்னை வீழ்த்தி வில்லுக்கு விஜயன் என்ற பெயரை அடைந்த அர்ஜுனனை. (இந்த தருணத்தில் அர்ஜுனனின் அம்புகளை தன் மார்பில் தாங்கிய போது பீஷ்மர் “ வாழ்த்துக்கள் அர்ஜுனா..!!!! உன் குருவிற்கு பெருமை சேர்த்து விட்டாய்..!! “ என்று வாழ்த்திய அவரின் குரலை நினைவு கூறுகிறேன். இந்த பகுதியை நான் குருக்ஷேத்திர பதிவில் குறிப்பிடும் போது என் கண்கள் குளமாக மாறியதையும் இங்கு நினைவில் கொள்கிறேன். பீஷ்மரால் மிகவும் ஈர்க்கப்பட்டவன் நான்.)
கங்கை மைந்தனுடன் நெஞ்சை உருக்கும் சந்திப்பு:
குருக்ஷேத்திரம் நோக்கிச் சென்றவர்கள் ஓகவதி என்னும் நதிக் கரையில், அம்பு படுக்கையில் மாலை நேர சூரியன் போல இருந்த பீஷ்மரை கண்டனர். கண்ணனும், பாண்டவர்களும், கிருபரும் சிறிது தூரத்திலேயே பீஷ்மரைக் கண்டதும் வாகனங்களிலிருந்து இறங்கி நடந்து அவரை நோக்கிச் சென்றனர்.
அன்று அர்ஜுனன் ஏற்படுத்திய நீர் ஊற்று மூலம் தாய் கங்கா தேவி அவரின் தாகத்தை தனித்து கொண்டிருந்தாள். சோர்வுடன் காணப்பட்டார் வில்லின் வேந்தன். அவரின் நிலை கண்ட பாண்டவர்கள் துயரத்தின் உச்சிக்கே சென்றனர். மதிப்பிற்குரிய பீஷ்மரை இந்த நிலையில் ஆழ்த்திவிட்டு நாம் நாட்டை ஆள்வதா..? இது தர்மத்திற்கும், நீதிக்கும், சத்தியத்திற்கும் செய்யும் துரோகம் அல்லவா? வேண்டாம் இனி இந்த ராஜ்ஜியம். பீஷ்மர் உயிர்த்தெழ பரந்தாமனை வேண்டினார்கள். எல்லாம் உயிராகவும், உயிர்களின் செயலாகவும், அந்த செயல்களின் பாவ புண்ணிய விளைவாகவும் இருக்கும் கிருஷ்ணனோ மீண்டும் ஒரு முறை தன் சாந்த சிரிப்பை வெளிப்படுத்தி, பாண்டவர்களை அமைதி காக்க வைத்தான். அணையும் தீபம் போல் இருந்த பீஷ்மரைப் பார்த்து கண்ணன் வருத்தத்தோடு சொல்லத் தொடங்கினார்.
“ அறிவின் சிகரமே...!!!அம்புகளால் தாக்கப்பட்ட உங்கள் உடம்பு வலியின்றி இருக்கிறதா? உமது அறிவு தெளிவாக உள்ளதா? உம் தந்தையாகிய சந்தனு கொடுத்த வரத்தால் உங்கள் மரணத்தைத் தள்ளிப் போடும் ஆற்றல் பெற்றுள்ளீர். நீர் அனைத்தும் அறிந்தவர். சத்தியத்திலும், தவத்திலும், தானத்திலும் தனுர் வேதத்திலும், அறம் பொருள் இன்பங்களை உணர்ந்த மேன்மையிலும், உம்மைப் போன்ற ஒருவரை நான் மூவுலகிலும் காணவில்லை. தேவாசுரர்கள் அனைவரையும் நீர் ஒருவரே தனியாக நின்று போரிட்டு வெல்ல வல்லமை படைத்தவர் நீர். எட்டு வசுக்களின் அம்சங்களும் ஒன்று சேர்ந்த ஒன்பதாம் வசு என உலகம் உம்மைப் போற்றுவதை நான் அறிவேன். பூமியில் உள்ள மனிதர்களில் உமக்கு ஒப்பான ஒரு மாமனிதன் யாரும் இல்லை. இதிகாச புராணங்களில் உள்ள தரும சாத்திரங்கள் அனைத்தும் உம் உள்ளத்தில் நிலைப் பெற்றுள்ளன. இவ்வுலகில் தோன்றும் சந்தேகம் அனைத்தையும் உம்மால் தான் போக்க முடியும். மனித குல மாணிக்கமே..!!! தருமரின் மனதில் உதித்த சோகத்தையும், சந்தேகத்தையும் நீங்களே விலக்க வேண்டும். உங்களால் மட்டுமே அது முடியும் " என்று மூவுலகுக்கும் முதன்மையானவன் வேண்டினான்.
கண்ணனின் உரையைக் கேட்ட பீஷ்மர் கை கூப்பித் தொழுதார். மெல்லத் தலையை உயர்த்திச் சொன்னார் “ உலக உயிர்களின் பிறப்புக்கும், இறப்புக்கும் காரணமான நாயகரே.....!!! உம்மை நான் சரணடைந்தேன். உமது அருளால் உமது விசுவரூபத்தை நான் காணும் பேறு பெற்றேன். உமது திருமுடி ஆகாயத்தை அளாவியிருக்கிறது. உமது திருப்பாதங்கள் பூமியில் தங்கியிருக்கின்றன. திக்குகள் உமது கைகளாக விளங்குகின்றன. சூரியன் உமது கண் ஆவான். காயாம்பூ மேனி உடையவரே, மின்னல் போல் ஒளி வீசும் உமது மேனியைக் கண்டு வியப்படைகிறேன். தாமரைக்கண்ணனே....!! பக்தியுடன் உம்மைச் சரண் அடைந்த எனக்கு நற்கதியை அருள வேண்டும்'” எனத் துதிச் செய்தார்.
கண்ணபிரான், “ எம்மிடத்தில் உமக்கு மேலான பக்தி இருப்பதால் எனது விசுவரூபத்தைக் காட்டினேன். இன்று முதல் மேலும் 30 நாட்கள் நீங்கள் உயிருடன் இருக்கப் போகிறீர்கள். இந்த முப்பது நாட்களும் நூறு நாட்களுக்கு நிகரானவை. சூரியன் வடக்கு நோக்கிச் செல்லும் (உத்தராயணம்) காலத்தை எதிர்ப்பார்க்கும் உம்மைத் தேவர்கள் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். உமக்கு உயர்ந்த கதி கிடைக்கும். நீர் அழிவற்ற உலகத்தை அடைய போகிறீர் பீஷ்மரே...!! நீர் மேலுலகம் சென்றதும் இந்த உலகத்தில் உள்ள ஞானங்கள் எல்லாம் குறைந்து போகும். அதனால் யாவரும் தருமத்தை அறிந்துக் கொள்ள உம்மைச் சூழ்ந்து இருக்கின்றனர். தருமரின் சோகம் போக, அவர் சந்தேகம் அகல, சகல ஞானத்தையும் அவருக்கு உபதேசம் செய்வீராக. தருமர் உம்மிடம் பெறும் ஞானச் செல்வத்தை உலகுக்கு வாரி வழங்குவார்” என்று கூறினார்.
கண்ணன் கூறியதைக் கேட்ட பீஷ்மர் மகிழ்ந்தார். பின் கண்ணனை நோக்கி "கண்ணா....உமது சந்நிதானத்தில் நான் என்ன சொல்வேன் ? உமது வாக்கன்றோ வேத வாக்கு. என் அங்கமெல்லாம் அம்புகளால் துளைக்கப்பட்டு வேதனையில் துடித்துக் கொண்டிருக்கிறேன். எனது உள்ளத்திலும் தெளிவு இல்லை. இந்நிலையில் தருமங்களை என்னால் எப்படி எடுத்துரைக்க முடியும்? மன்னிக்க வேண்டும். உம் எதிரே நின்று பேசும் ஆற்றல் வியாழ பகவானுக்குக்கூட கிடையாதே. எனவே வேதங்களுக்கு வேதமாக விளங்கும் நீரே எல்லாத் தருமங்களையும் யுதிஷ்டருக்கு அருளவேண்டும்” என உரைத்தார்.
அது கேட்டு கண்ணன் “ கௌரவர்களில் சிறந்தவரே.....உமது தகுதிக்கு ஏற்ப நீர் பேசினீர். அம்புகளால் தாக்கப்பட்டு வேதனைப்படுவதாக உரைத்தீர். இதோ நான் அருள் புரிகிறேன். உமது உடலில் உள்ள எரிச்சலும், சோர்வும், தளர்வும் உடனே நீங்கிவிடும். உம்மிடம் உள்ள மயக்கமும் தொலையும். இனி நீர் தெளிந்த சிந்தனையுடன் அறநெறிகளை தருமருக்கு எடுத்துரைக்கலாம். உமக்கு ஞானவழியையும் காட்டுகிறேன். “ என்றார்.
அப்போது கங்கை மைந்தனை வியாசர் முதலான மகரிஷிகள் துதித்தனர். தேவர்கள் மலர் மாரி பொழிந்தனர். வனம் தூய்மையாக காட்சி அளித்தது. எங்கும் சாந்தி நிலவியது..











No comments:

Post a Comment