Saturday, April 5, 2014

பத்மநாபோ அமரப் பிரபு'

திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாபசுவாமியின் தீவிர பக்தர் ஒருவர், தினமும் 108 முறை ""பத்மநாபோ அமரப் பிரபு'' என்று சொல்வதற்கு பதிலாக, "பத்மநாபோ மரப்பிரபு' என்று சொல்லி வந்தார். "பத்மநாப சுவாமியான ஸ்ரீமந்நாராயணனே தேவர்களின் தலைவன்' என்பது இதன் பொருள். ஆனால், இந்த பக்தரோ, பத்மநாபன் "மரங்களுக்கு' தலைவனாக இருக்கிறான் என்று நினைத்துக் கொண்டு, ஆற்றங்கரையிலிருந்த அரசமரத்தைச் சுற்றியபடியே மந்திரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தார்.
ஒருநாள், ஆற்றங்கரையில் அமர்ந்திருந்த பண்டிதர் இதைக் கவனித்தார்.
""ஐயா! நீங்கள் உச்சரிப்பது தவறு. "பத்மநாபோ அமரப்பிரபு' என்று தான் உச்சரிக்க வேண்டும் என்று சொல்லி விளக்கம் அளித்தார். தவறாக உச்சரித்து விட்டதை எண்ணிய பக்தர் வருந்தினார். அதுமுதல், "பத்மநாபோ அமரப் பிரபு' என்று திருத்திச் சொல்லத் தொடங்கினார்.
அன்று இரவு பண்டிதரின் கனவில் வந்த பெருமாள்,"வனானி விஷ்ணு' (காடுகளில் உள்ள மரங்கள் அனைத்தும் விஷ்ணுவின் வடிவமே) என்று பராசரர் சொன்னதை நீர் அறியவில்லையா? மரங்களுக்கும் நானே தலைவன். பக்தியோடு ஆற்றங்கரை அரசமரத்தை பூஜித்த பக்தரின் மேன்மையை நீர் உணரவில்லையே,'' என்று கோபத்துடன் சொன்னார்.
தூய பக்தி மட்டும் இருந்து விட்டால், தவறாக இறைநாமங்களைச் சொன்னாலும் கூட, அதற்கும் ஒரு பொருள் கொடுத்து ஏற்றுக்கொள்வார் பகவான்.

No comments:

Post a Comment