Friday, April 4, 2014

திருமூலர் சொன்ன யானைக் கதை:

திருமூலர் சொன்ன யானைக் கதை:
திருமூலர் சொன்ன யானைக் கதை: தெரிந்த கதை, தெரியாத உண்மைகள்!
யானையும் ஆறு அந்தகர்களும் என்ற கதை எல்லோருக்கும் தெரிந்த கதை. இந்தக் கதையை புத்த மதம், சமண மதம், சூஃபி முஸ்லீம்கள், ஆங்கிலக் கவிஞன் ஆகியோர் பயன்படுத்தினர். ஆனால் இது திருமூலர் பாடிய திருமந்திரத்தில் இருந்து பல இடங்களுக்குப் பரவியது பலருக்கும் தெரியாது.
...
திருமூலர் பாடுகிறார்:
முதலொன்றாமான் ஆனை முதுகுடன் வாலும்
இதமுறு கொம்பு செவி துதிக்கை கான்
மதியுடன் அந்தகர் வகை வகை பார்த்தே
அதுகூறல் ஒக்கும் ஆறு சமயமே (திருமந்திரம்– 1507)
பொருள்: உறுப்பு, உறுப்பைத் தாங்கி இருக்கும் யானை முதல் ஒன்றாகும். அந்த யானையின் மலை போன்ற முதுகையும் துடைப்பம் போன்ற வாலையும், தண்டு போலும் உறுதியான தந்தத்தையும், முறம் போன்ற காதையும், உலக்கை போன்ற துதிக்கையையும், உரல் போன்ற காலினையும் கண்ணில்லாத அந்தகர் பலர் ஒவ்வொரு உறுப்பினையும் மட்டும் தடவிப் பார்த்துவிட்டு யானை என்பது மலையே, துடைப்பமே, தண்டே, முறமே, உலக்கையே, உரலே என்று கூறி அவர்களுக்குள் வாக்குவாதம் செய்தனர். இது போலத்தான் ஆறு சமயத்தவர்களும் தத்தம் சமயமே பெரிதென்று கூறி வாதிடுதல்.
ஒவ்வொரு உறுப்பை மட்டும் தடவிப் பார்க்கும் ஒவ்வொரு அந்தகனும்
மலை போன்ற முதுகு
முறம் போன்ற காது
துடைப்பம் போன்ற வால்
உரல் போன்ற கால்
உலக்கை போன்ற துதிக்கை
தண்டு போன்ற கொம்பு/தந்தம்
என்றனர். இவைகளை கையால் தடவி உணர்ந்த கண் பார்வையற்றோர் அந்தந்த உறுப்பு போன்றதே முழு யானையும் என்று நினைத்தனர்.
இதே கதை ஒவ்வொரு நூலிலும் சிறிது வேறுபட்டும் காணப்படும். எடுத்துக் காட்டாக தூண் போன்ற கால், மரக்கிளை போன்ற துதிக்கை, கயிறு போன்ற வால் என்று கொஞ்சம் கொஞ்சம் மாறுபடும். ஆனால் சொன்ன வந்த கருத்துக்கள் ஒன்றே.
அரைகுறை உண்மை முழு சித்திரத்தைக் காட்டாது. வெளித்தோற்றத்தை மட்டும் வைத்து முடிவுக்கு வரக்கூடாது. உண்மை என்பது மிகப் பெரியது. நாம் காண்பதெல்லாம் ஒரு சிறு பகுதியே. இதையே கடவுளுக்கும், சமயங்களுக்கும் பலர் உதாரணமாக, உவமையாகப் பயன்படுத்தினர்.

No comments:

Post a Comment