Saturday, April 5, 2014

அகலிகையை கௌதமர் மணந்த கதை!

அகலிகையை கௌதமர் மணந்த கதை!


கலிகை! பஞ்ச கன்னியருள் ஒருத்தியான இவள், மகரிஷி கௌதமரின் தர்மபத்தினி. இந்திரனால் கபடமாக வஞ்சிக்கப்பட்ட அகலிகையைக் கல்லாக மாறுவதற்கு கௌதமர் சாபமிட்டார். பின்பு ராமரால் சாப விமோசனம் பெற்று, அகலிகை மீண்டும் தன் கணவருடன் இணைந்தாள் என்பதை நாம் அறிவோம்.
தவ வலிமை வாய்ந்த கௌதமர் எப்படி அகலிகையைக் கரம் பற்றினார் என்பதைப் பார்ப்போம்.
தேவர்களும் அசுரர்களும் அமிர்தம் வேண்டி, பாற்கடலைக் கடைந்தபோது அதிலிருந்து வெளிப்பட்டது காமதேனு என்கிற தெய்வீகப் பசு. அதை மகரிஷிகள் எடுத்துக் கொண்டனர். அடுத்ததாகத் தோன்றிய உச்சைசிரவஸ் என்ற வெண்ணிறக் குதிரையை மஹாபலி சக்ரவர்த்தி கைக்கொண்டான். பிறகு வெளிவந்த ஐராவதம் என்ற வெள்ளை யானையையும் பாரிஜாத மரத்தையும் தேவேந்திரன் ஏற்றான். பின்னர், அப்ஸர ஸ்திரீகள் புடைசூழ மகாலட்சுமி தோன்றினாள். அவளையும் கௌஸ்துபம் என்ற ரத்தின ஹாரத்தையும் ஸ்ரீமந் நாராயணன் ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு மயக்கம் தரும் மதுவுக்குத் தலைவியான வாருணிதேவி தோன்றினாள். அவளை ஹரியின் அனுமதியுடன் அசுரர்கள் எடுத்துக் கொண்டனர்.

அதன் பின்னும் பாற்கடலைத் தொடர்ந்து கடைந்தபோது, திவ்யாலங்கார பூஷிதையாக அழகான கன்னியொருத்தி தோன்றினாள். மேகக் கூட்டத்தில் ஒளிரும் நட்சத்திரமாகப் பிரகாசித்த அவள்தான் அகலிகை! அவளுடைய அழகில் மதிமயங்கிய இந்திரன், அவளைத் தன்னுடையவள் ஆக்கிக் கொள்ள விரும்பினான். அதே நேரம் மகா தவசீலரான கௌதம முனிவரும் அகலிகையைத் தன் மனைவியாக்கிக் கொள்ள விரும்பினார்.
இந்த இருவரும் தங்கள் விருப்பத்தைப் பிரம்மதேவரிடம் தெரிவித்தனர். உடனே பிரம்மதேவர், 'ஒரு போட்டியின் மூலமே இதற்குத் தீர்வு காண முடியும்!’ என்று கருதி, இருவரையும் நோக்கி, ''மகத்தானவர்களே... உங்கள் ஆசை நியாயமானதே! ஆனால், உங்களில் ஒருவர் மட்டுமே இந்த கன்னியை அடைய முடியும். நான் கூறும் நிபந்தனையை ஏற்று, யார் அதை முதலில் நிறைவேற்றுகிறீர்களோ அவருக்கே இவள் உரியவள். உங்களில் யார் முன்னும் பின்னும் முகங்கொண்ட பசுவைக் கண்டு, அதை மும்முறை வலம் வந்து வணங்கி, முதலில் என்னிடம் வந்து தக்க ஆதாரத்துடன் கூறுகிறீர்களோ, அவரே இந்த அகலிகைக்கு மாலைசூட்டத் தகுதியானவர்!'' என்றார்.
அதைக் கேட்ட தேவேந்திரன், ''முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட பசுதானே... இதோ, இப்போதே புறப்படுகிறேன். மூவுலகிலும் அப்படிப்பட்ட பசு எங்கிருந்தாலும் அதைக் கண்டுபிடித்து, வணங்கி இந்த அழகியின் கரம் பற்றுகிறேன்!'' என்று கூறித் தனது மேக வாகனத்தில் ஏறி உலகங்களைச் சுற்றி வரப்புறப்பட்டான். கௌதமரோ பிரம்மனின் நிபந்தனையைக் கேட்டுச் சோர்வடைந்தார்.
'முன்புறமும் பின்புறமும் முகங்கொண்ட பசு எங்குள்ளது? அதை இதுவரை நான் கண்டதே இல்லை. நான் எப்படி அதைக் காண முடியும்?’ என்று எண்ணியவர், 'சரி! நம்மால் ஆவது எது? ஈசன் விட்ட வழி!’ என்று தீர்மானித்து ஈஸ்வர தியானத்தில் அமர்ந்தார்.
அப்போது நாரதர் அங்கே வந்தார். கௌதமர் அவரை வரவேற்று உபசரித்தார். அப்போது நாரதர், ''மகரிஷி! தங்கள் உள்ளத்தில் உள்ள ஆசையையும் பிரம்மதேவரின் நிபந்தனையையும் நான் அறிவேன், வாருங்கள். அருகில் ஒரு கோசாலை உள்ளது. அங்கே சென்று முன்னும் பின்னும் முகம் கொண்ட பசு உள்ளதா என பார்க்கலாம்!'' என்றார்.
இதைக் கேட்டு கௌதமர் சந்தோஷமடைந்தார். பசுக்கள் நிறைந்த அந்த கோசாலைக்கு இருவரும் சென்றனர். ஆனால் அங்கு அவர்கள் தேடிய பசு தென்படவில்லை. கௌதமர் மனம் சோர்ந்தார். நாரதரைப் பார்த்து, ''கர்ப்பத்தில் உண்டாகும் மாற்றங்களினால் அபூர்வமாக ஒன்றிரண்டு பசுக்கள் இரண்டு தலை கொண்ட கன்றை ஈனுவதைக் கண்டுள்ளேன். ஆனால், முன்னும் பின்னும் சிரங்கள் உள்ள பசுவை நான் கண்டதில்லை!'' என்றார் விரக்தியுடன்.
தான் விரும்பிய அகலிகை தனக்குக் கிடைப்பாளோ மாட்டாளோ என்ற ஆதங்கம் ஒரு புறம். போட்டியில் இந்திரன் வெற்றிகண்டால், அதனால் தான் அடையவிருக்கும் சிறுமை மறுபுறம். இதை எண்ணி பெரும் கலக்கத்தில் இருந்தார் கௌதமர்.
அப்போது, ''கௌதமரே! கவலைப்படாதீர். நான்முகன் கூற்று தவறாகாது. அதோ பாருங்கள், முன்னும் பின்னும் முகங்கள் கொண்ட கோமாதா!'' என்று குதூகலத்தோடு ஒலித்த நாரதரின் குரலைக் கேட்ட கௌதமர், அவர் சுட்டிக் காட்டிய திசையில் பார்த்தார்.
அங்கே பசு ஒன்று, கன்றை ஈன்று கொண்டிருந்தது. பசுவின் பின்புறம் வெளிப்பட்ட கன்றின் முகம் பார்ப்பதற்கு பரவசமாக இருந்தது. முன்னும் பின்னுமாக இரு பசு முகங்கள் தெரிவதுபோல் அந்தக் காட்சி சட்டென உணர்த்தியது.
அதைக் கண்டு உளம் பூரித்த கௌதமர், நாரதருக்கு நன்றி தெரிவித்துவிட்டு, விரைந்து சென்று அந்தப் பசுவை மும்முறை வலம் வந்து நமஸ்கரித்தார். பின்னர் நாரதர் உடன்வர, பிரம்மதேவரைச் சந்தித்து, முன்னும் பின்னும் முகம் கொண்ட பசுவைத் தான் பார்த்து வந்த விவரத்தைக் கூறினார். நாரதரும் கௌதமரின் கூற்றை ஆமோதித்தார். அதைக் கேட்டு மிகவும் திருப்தியடைந்த பிரம்மன், அகலிகையை கௌதமருக்கு வேதமுறைப்படி மணம் முடித்து வைத்தார்.
##~~##
அப்போது, மூவுலகைச் சுற்றி வந்தும் பிரம்மன் குறிப்பிட்ட பசுவைக் காண முடியாமல் மனச் சோர்வுடன், பிரம்மனது இருப்பிடத்தை இந்திரன் அடைந்தான். அங்கே கௌதமர், பிரம்மனின் நிபந்தனையைப் பூர்த்தி செய்து போட்டியில் வெற்றி பெற்று அகலிகையின் கரம் பற்றி ஆனந்தமாக இருப்பதைக் கண்டான்.
'எனக்குக் கிடைக்க வேண்டிய இந்த எழிலணங்கு போயும் போயும் மரவுரியணிந்து, தாடியும் மீசையுமாக ரோமக் காடாக இருக்கும் இந்த முனிவருக்கு மனைவியாகிவிட்டாளே! இது எந்த வகையில் நியாயமாகும்? இவள் இருக்க வேண்டியது தேவலோகமல்லவா?’ என்று பொருமினான்.
ஆயினும் அகலிகை மீது இந்திரன் கொண்ட வேட்கை சற்றும் தணியவில்லை. அது அவனுள் கனன்று எரிந்து கொண்டிருந்தது. அதன் விளைவுதான் பின்னர் ஒருநாள் அவன் அகலிகையின் இருப்பிடத்துக்குச் சென்று நெறிதவறி நடந்த அந்தச் செயல்!

No comments:

Post a Comment