Friday, April 4, 2014

சிறப்பான மன்னன் செய்ய வேண்டிய செயல்கள் எவை?

தருமர், பிதாமகாரிடம் “ சிறப்பான மன்னன் செய்ய வேண்டிய செயல்கள் எவை? கிராமங்களைக் காப்பதும், ஒற்றர்களை ஏவுவதும், குடிமக்களை அன்புடையவர்களாக இருக்குமாறு செய்வதும் எங்ஙனம்? “ என்று கேட்டார்.
பீஷ்மர் கூறத் தொடங்கினார் ” அரசன் முதலில் தன்னை வெல்ல வேண்டும். அதாவது ஐம்புல அடக்கம் வேண்டும். பிறகு பகைவரை வெற்றி கொள்ள வேண்டும். தன்னை வென்றவனே பகைவனை வென்றவன் ஆவான். கோட்டைகள், நாட்டின் எல்லை, மக்கள் கூடும் இடங்கள், சோலைகள், ரகசியமான இடங்கள், அரண்மனை ஆகியவற்றை பாதுகாக்க தகுதியுள்ள ஆட்களை நியமிக்க வேண்டும். நன்றாக சோதிக்கப்பட்டவர்களும், அறிவாளிகளும், பசி, தாகங்களை பொறுத்துக் கொள்ளும் இயல்புடையவர்களும், சமயத்தில் முட்டாளும், குருடனும், செவிடனும் போல நடிக்க தெரிந்தவர்களும் ஆகியவர்களையே ரகசிய ஒற்றர்களாக நியமிக்க வேண்டும். அரசன் எல்லா அமைச்சர்களிடத்தும், மூவகை நண்பர்களிடத்தும், மைந்தரிடத்திலும், நகரத்திலும், கிராமத்திலும், பிற மன்னர்களிடத்திலும் ஒருவரை ஒருவர் அறியா வண்ணம் ஒற்றர்களை இருக்கச் செய்ய வேண்டும்.
கடைகள், விளையாடும் இடங்கள், மக்கள் கூடும் இடங்கள், வீதிகள், தோட்டங்கள், பூங்காக்கள், கல்வி நிலையங்கள், நீதிமன்றங்கள், வேலைக்காரர்கள் இருக்கும் இடங்கள், செல்வந்தரின் வீடுகள் ஆகிய இடங்களில் பிற அரசர்களால் அனுப்பப்படும் ஒற்றர்களை தன் ஒற்றரைக் கொண்டு தேடி அறிந்து தண்டிக்க வேண்டும். ஒற்றரை தடுப்பதன் மூலம் தீமைகள் தடுக்கப் படும்.
பகை அரசன் தன்னை விடப் பலம் உள்ளவனாக இருந்தால் தூது அனுப்பி சமாதானம் செய்துக் கொள்ள வேண்டும். நூல் அறிவு மிக்க அந்தணர்களையும், க்ஷத்திரியர்களையும், வைசியர்களையும் அமைச்சர்களாக கொள்ள வேண்டும். பகைவர்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். தக்க காலம் வரும்போது அவர்களை விரைந்து கொல்ல வேண்டும். எப்போதும் மூர்க்கத்தனமாக போரை நாட கூடாது. சாமம், தானம், பேதம் ஆகிய மூன்று வழிகளில் பெற கூடிய பொருள்களை அடைய வேண்டும். குடிமக்களை காக்க வேண்டி அவர்களிடம் இருந்து ஆறில் ஒரு பங்கு வரி வசூல் செய்ய வேண்டும். குடிமக்களை தான் பெற்ற மக்களைப்போல் கருத வேண்டும். நீதி செலுத்துகையில் நண்பன் என்று பார்க்கக் கூடாது. நேர்மையும், நடுவு நிலை தவறாமையும் உள்ளவர்களை நீதிபதிகளாக அமர்த்த வேண்டும். இந்த குணங்கள் யாவும் மன்னனிடத்தில் எப்போதும் குடி கொண்டிருக்க வேண்டும்.
பலதுறை வல்லுநர்களை அரசன் எப்போதும் கலந்து ஆலோசிக்க வேண்டும். தங்கம், ரத்தினம் ஆகியவற்றை எடுக்கும் இடங்களிலும், உப்பளத்திலும், சுங்கச்சாவடிகளிலும், யானை கூட்டம் உள்ள இடத்திலும், அமைச்சர்கள் அல்லது நம்பிக்கை உள்ளவர்களை நியமிக்க வேன்டும். எப்போதும் தண்டநீதி செலுத்தும் அரசனை தருமம் வந்தடையும். தண்டநீதி என்பது அரசனுக்கு உத்தம தருமமாகும். அரசன் பகைவரிடத்து எப்போதும் விழிப்பாக இருக்க வேண்டும். அவர்கள் வரக்கூடிய பாலங்களை உடைக்க வேண்டும். வழியை அடைக்க வேண்டும். வெகு தொலைவில் இருந்து வரும் பகை படைகளை கண்காணிப்பதற்கு புற மதில்களில் அமைக்கப்பட்டுள்ள பிரகண்டி என்னும் இடங்களையும், மதில்மீது இருந்து அதை பற்ற வரும் பகைப்படை மீது அம்பு செலுத்தும் “அகாசஜநநீ” என்னும் இடங்களையும் நன்கு பாதுகாக்க வேண்டும். நால்வகை படைகளைப் பற்றிய ரகசியங்களை பகைவர் அறியாதவாறு பாதுகாக்க வேண்டும். ஏராளமான முதலைகளும், திமிங்கலங்களும் அகழியில் இருக்குமாறு செய்ய வேண்டும். நாடெங்கும் கிணறுகளை வெட்ட வேண்டும். முன்னோர்களால் வெட்டப்பட்ட கிணறுகளைச் சுத்தம் செய்ய வேண்டும். கற்களாலும், செங்கற்களாலும் வீடுகளை அமைக்க வேண்டும். தேவையான இடங்களில் தண்ணீர் சாலைகளையும் கடைகளையும் ஏற்படுத்த வேண்டும். சந்தர்ப்பவசத்தால் காரணமின்றி ஒருவரைச் சினம் கொண்டு தண்டித்திருந்தால் அவன் மகிழ்ச்சியடையும்படி நல்ல சொற்களை கூறி பொருளையும் கொடுத்து அவனது வெறுப்புணர்ச்சியை மாற்ற வேண்டும்
“ என்று விடையளித்தார். இவ்வாறு செய்தால் குடிமக்கள் அனைவரும் மகிழ்ச்சியோடு இருப்பது மட்டும் அல்லாமல், அரசனிடம் விசுவாசமாகவும் இருப்பார்கள் என்று உரைத்தார்.
அரசினிடம் இருக்கவேண்டிய முப்பத்தாறு குணங்கள் :
=================================================
“ தருமா....!!! அறம், பொருள், இன்பம், இம்மூன்றையும் காலத்திற்கு ஏற்றபடி போற்ற வேண்டும். காலம் அரசனுக்கு காரணமா, அல்லது அரசன் காலத்துக்கு காரணமா என்ற சந்தேகம் உனக்கு வரக்கூடாது. அரசன் தண்ட நீதியை நன்றாகச் செலுத்தி வந்தால், அச்சமயத்தில் கிருதயுகம் நடைபெறுவதாக உணர வேண்டும். அப்போது மக்கள் மனதிலும் தருமமே நிலைத்திருக்கும். அதர்மம் தலை காட்டாது. மக்கள் நோயின்றி நீடு வாழ்வர். மக்களின் குரலும், நிறமும், மனமும் தெளிவாக விளங்கும். அக்காலத்தில் பெண்கள் விதவைகளாக ஆவதில்லை. கொடிய மனிதர்கள் உண்டாக மாட்டார்கள். உழவு இன்றியே பூமி பயன் தரும். இவை கிருதயுக தருமம். அரசன் தண்ட நீதியின் ஒரு பாகத்தைத் தள்ளிவிட்டு மற்ற மூன்று பாகங்களையும் தொடர்ந்து செய்யும்போது திரேதாயுகம் நடைபெறும். அக்காலத்தில் தருமத்தில் மூன்று பாகமும் அதருமத்தில் ஒரு பாகமும் கலந்து நிற்கும். அந்தக் காலத்தில் உழுதால்தான் பூமி பயனைத் தரும்.
அரசன் தண்ட நீதியின் பாதி பாகத்தை நீக்கிவிட்டு பாதி பாகத்தை தொடர்ந்து நின்றால் துவாபாரயுகம் நடைபெறும். அக்காலத்தில் இரண்டு பாகம் புண்ணியமும், இரண்டு பாகம் பாவமும் கலந்து நடைபெறும். அப்போது உழுது பயிரிட்டாலும் பூமி பாதி பயனைத்தான் தரும். அரசன் தண்ட நீதியை முழுவதுமாகக் கைவிடின் கலியுகம் நடைபெறும். கலியுகத்தில் எங்கும் அதர்மமே தலை விரித்து ஆடும். தருமத்தை காண முடியாது. நான்கு வருண தருமங்கள் சிதறி போகும். வியாதிகள் பெருகும். ஆடவர் அகால மரணமடைவர். மகளிர் விதவை ஆவர். ஆகவே தருமா, நான்கு யுகங்களுக்கும் காரணம் என்ன என்பதை உணர்ந்து நாட்டை நன்கு காப்பாயாக ” என்றார் பீஷ்மர்.
** தருமர் “ இம்மையிலும் மறுமையிலும் அரசனுக்கு நன்மை தரக்கூடிய குணங்கள் யாவை? “ என்று பீஷ்மரிடம் கேட்க..
பீஷ்மர் சொல்கிறார் ஒரு மன்னன் 36 குணங்களை கடை பிடிக்க வேண்டும். அவை :
1. விருப்பு, வெறுப்பு இன்றி தர்மங்களை செய்தல்.
2. பரலோகத்தில் விருப்புடன் நட்பு பாராட்டுதல்.
3. அறவழியில் பொருளை ஈட்டுதல்.
4. அரப்பொருட்களுக்கு அழிவின்றி இன்பத்தை பெறுதல்.
5. யாருடனும் அன்புடன் பேசுதல்.
6. நல்லவர் அல்லாதார்க்கு தராத கொடையாளியாக இருத்தல்.
7. தற்புகழ்ச்சியின்றி இருத்தல்.
8. கருணையுடன் இருத்தல்.
9. கெட்டவர்களுடன் சேராது நல்லவர்களுடன் சேர்ந்திருத்தல்.
10. பகைவன் என தீர்மானித்து பின் போரிடல்.
11. நற்குணம் அற்றவரிடம் தூதர்களை சேராது இருத்தல்.
12. பிறர்க்கு துன்பம் தராது பணி புரிதல்.
13. சான்றோரிடம் பயனை அறிவித்தல்.
14. பிறரது குணங்களை மட்டுமே கூறுதல்.
15. துறவியர் அல்லாதாரிடம் கப்பம் வாங்குதல்.
16. தக்காரைச் சார்ந்திருத்தல்.
17. நன்கு ஆராயாமல் தண்டனை தராதிருத்தல்.
18. ரகசியத்தை வெளியிடாதிருத்தல்.
19. உலோபிகள் அல்லாதார்க்கு கொடுத்தல்.
20. தீங்கு செய்பவரை நம்பாதிருத்தல்.
21. அருவருப்படையாமல் மனைவியை காத்தல்.
22. தூய்மையுடன் இருத்தல்.
23. பல பெண்களுடன் சேராதிருத்தல்.
24. நலம் பயக்கும் சுவைகளை உண்ணுதல்.
25. வழிபட தக்கவர்களைக் கர்வம் இன்றி வழிபடல்.
26. வஞ்சனையின்றி பெரியோர்க்கு பணிவிடை செய்தல்.
27. ஆடம்பரமின்றி தெய்வ பூஜை செய்தல்.
28. பழிக்கு இடமில்லா பொருளை விரும்புதல்.
29. பணிவுடன் பணி புரிதல்.
30. காலம் அறிந்து செயல் படுவதில் வல்லவனாய் இருத்தல்.
31. பயனுள்ளவற்றையே பேசுதல்.
32. தடை சொல்லாது உதவி புரிதல்.
33. குற்றத்திற்கேற்ப சரியாக தண்டித்தல்.
34. பகைவரை கொன்றபின் வருந்தாதிருத்தல்.
35. காரணமின்றிச் சினம் கொள்ளாதிருத்தல்.
36. தீங்கு செய்தவரிடம் மென்மையாக இராமை.
ஆகியவையாகும்.. இவ்வாறு செய்யும் அரசன் இறந்த பின்பும், மக்களால் என்றும் மறவாமல் மிகவும் உயரிய மதிப்புடன் போற்றப்படுவான் என்று விடையளித்தார்.
மனக்கவலை மறைய
=====================
** தருமர் “ மனதில் கவலை அற்றிருக்கவும், அறநெறி பிறழாதிருக்கவும் வழி யாது? “ என வினவ பீஷ்மர் விடை அளிக்கிறார்....
தருமத்தில் நிலை பெற்றிருப்பவர்களையும், சாத்திரங்களை அறிந்தவர்களுமான சான்றோர்களை எங்கும் இருக்குமாறு செய்ய வேண்டும். மேன்மை மிக்க புரோகிதர்களை எங்கும் நியமிக்க வேண்டும். நாணயம் மிக்க அறிவாளிகளிடம் அதிகாரத்தை அளிக்க வேண்டும். மூர்க்கரிடம் அதிகாரத்தைக் கொடுத்தால் குடிகளை வருத்தி வரி வாங்குவார்கள். பசுவிடம் பாலை கறக்க விரும்பினால் புல்லும், நீரும் அளித்து பாலை கறக்க வேண்டும். ஒரேயடியாக மடியை அறுத்தால் பாலை பெற முடியாது. அதுபோல தக்க உதவிகளை செய்து குடி மக்களிடம் வரி வசூலிக்க வேண்டும். மக்களிடம் அதிக வரி சுமை இல்லாது பார்த்துக் கொள்ள வேண்டும். வரி வசூலிப்பதில் மாலை கட்டுபவனைப் போல் இருக்க வேண்டும். கரி வியாபாரி போல இருக்கக் கூடாது.(மாலை கட்டும் பூந்தோட்டக்காரன் செடி,கொடிகளைப் பக்குவமாக வளர்த்து இதமாக மலர்களை மட்டும் எடுப்பான். கரி வியாபாரி மரத்தையே வெட்டிச் சாய்த்து விடுவான்)
குடிகள் ஒவ்வொரு வினாடியும் மகிழ்ச்சியோடு இருக்குமாறு பாதுகாக்க வேண்டும். குடி மக்கள் ஒரு நாள் பயந்தாலும் அரசன் ஆயிரம் ஆண்டுகள் நரகத்தை அனுபவிக்க வேண்டி வரும். அறநெறி கெடாமல் குடிமக்களை காத்த அரசன் அமரர் உலகில் பதினாயிரம் ஆண்டுகள் அந்தப் புண்ணிய பயனை இன்பமாக அனுபவிப்பான். யாகம், தானம், தவம் ஆகியவற்றை செய்தவன் அடையும் நற்கதிகளை ஒரு கணம் நாட்டை பரிபாலித்த அரசன் அடைவான். இதனால் மன்னன் கவலை இல்லாதவனாக இருப்பான். தருமா....!!! நீயும் இத்தகைய ஆட்சியை மேற்கொண்டு கவலையற்று இரு” என்று பீஷ்மர் தன் பதிலை முடித்தார்.
பீஷ்மரின் உபதேசங்களை கேட்க கேட்க, கூடியிருந்தவர் அனைவரும் தங்களை மறந்து கண்ணீர் சிந்தினார்கள். இத்தகைய பொக்கிஷங்களை தன்னுள் அடக்கிவைத்து, இத்தனை காலமாய் அமைதி கடலாய் இருந்த பிதாமகரின் அடக்கத்தையும், ஞானத்தையும் நினைத்து வியந்தனர். அவர் இந்த உலகத்தை விட்டு பிரியப்போவதை எண்ணி வருந்தினார்கள். அர்ஜுனன் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரை நோக்கி “ இத்தனை மகத்துவம் வாய்ந்த இவரின் ஆயுளை நீடிக்க முடியாதா ? தயவு கூர்ந்து அருள் புரியுங்கள் மாதவா” என்று மன்றாடினான். கிருஷ்ணரின் தோளில் சாய்ந்து அவரை ஆரத்தழுவி கண்ணீர் விட்டான்.
சற்று நேரம் அவனை அணைத்து மௌன மொழி பேசிய பரந்தாமன், அர்ஜுனனை நோக்கி “ விஜயா...!! அனைத்தையும் அறிந்த நீ இப்படி நடக்கலாமா? பிதாமகரின் இறப்பு என்பது ஒரு நற்காரியமாகும். அவர் உங்கள் அனைவரையும் விட்டு பிரியபோவதாக எண்ணி நீ உணர்ச்சி வசப்படுகிறாய். ஆனால் உண்மையில் அவர் சாப விமோசனம் அடைகிறார் என்பதை நீ மறந்துவிட்டாய். அவரின் நற்கதியை நினைத்து, அமைதி காத்து, இந்த சூரியனை அஸ்தமிக்க விடு பார்த்தா..!!! ” என்றார். அர்ஜுனன் இயல்பு நிலைக்கு திரும்பினான். கங்கை மைந்தனின் பாதம் தொட்டு வணங்கினான்

No comments:

Post a Comment