Friday, April 4, 2014

நண்பன்..பகைவன்..சுற்றம்..

நண்பன்..பகைவன்..சுற்றம்..
===========================
** தருமர், பீஷ்மரிடம் “ கங்கை மைந்தா….!!! மனிதன் பிறரின் உதவியின்றி சிறிய செயலையும் செய்வது அரிதாக இருக்கிறது. அப்படியுள்ள போது பிறர் உதவியின்றி அரசாள்வது எப்படி?
அரசனுக்கு உதவி செய்யும் மனிதன் எத்தகைய ஒழுக்கம் உள்ளவனாக இருக்க வேண்டும்?
அரசன் எப்படி பட்டவனுடன் நம்பிக்கை வைக்கலாம்? எவன் நம்பத்தகாதவன் ? “ என்ற கேள்விகளை வினவினார்.
பீஷ்மர் சொல்கிறார் “ அரசர்களுக்கு சகார்த்தன் (இந்தச் செயலைச் செய்து இதன் பயனை இருவரும் அடைவோம்..என்று பேசிக்கொண்டு சேர்க்க பட்டவன்.) பஜமானன் (தகப்பன், பாட்டன் என பரம்பரை பரம்பரையாய் உதவி செய்பவன்), சகஜன் (உறவினன்), கிருத்திரிமன் (உதவி செய்து நண்பனாக ஏற்படுத்தப்பட்டவன்), என நான்கு வகை நண்பர்களுண்டு. நடுவு நிலைமை குன்றாதவன் ஐந்தாம் நண்பன். அவன் யார் பக்கமும் சாராமல் அறம் உள்ள இடத்தையே சார்ந்திருப்பான். தருமத்தை விரும்பும் அரசர் அவனை நாடலாம். ஆனால் அவனுக்கு தொடர்பில்லா விஷயத்தை அவனிடம் சொல்ல கூடாது. அரசன் வெற்றி ஒன்றையே குறிக்கோளாக உடையவன். அவன் சில நேரங்களில் அறம், மறம் இரண்டையுமே கை கொள்ள நேரிடும். நட்பு, பகை என்பவை எப்போதும் ஒருவனிடம் இயற்கையாக அமைந்தவை அல்ல. ஒருவன் உபகாரத்தால் நண்பன் ஆவதும், அபகாரத்தால் பகைவன் ஆவதும் இயல்பு. மேற்கூறிய நான்கு விதமான நண்பர்களில் இடையில் கூறிய பஜமானனும், சகஜனும் உத்தமர்கள். மற்ற இருவரும் சந்தேகத்திற்கு உரியவர்கள்.
அரசன் தானே நேரில் தன் பார்வையிலேயே நடத்தக்கூடிய செயலை மேற்சொன்ன ஐவரை நம்பி ஒப்படைக்கக் கூடாது. நண்பர்களிடம் அரசன் எப்போதும் எச்சரிகையுடன் இருக்க வேண்டும். கவனக் குறைவாக இருக்கும் அரசனை மக்கள் மதிக்க மாட்டார்கள். அவமதிப்பார்கள். மனிதன் எப்போதும் ஒரே குணமுடையவனாக இருக்க மாட்டான். நல்லவன் கெட்டவன் ஆகலாம், கெட்டவன் நல்லவனாகலாம். நண்பன் பகைவன் ஆகலாம், பகைவன் நண்பன் ஆகலாம்.இது உலக இயல்பு. ஆகவே, அரசன் எப்போதும் யாரிடமும் நம்பிக்கை வைக்கக் கூடாது. முழுமையாக ஒருவனையே நம்பினால் அறம், பொருள், இன்பம் அனைத்தும் நாசமாகும். ஆனால் நம்பிக்கை கொள்ளாமலும் இருக்கக் கூடாது. அவநம்பிக்கையும் ஆபத்தைத் தரும். எனவே நண்பர்கள் இயல்பை அறிந்து அவர்களின் ஆலோசனையை பெற வேண்டும்.
நல்ல தோற்றமும், அழகும், கம்பீர குரலும், பொறுமையும், நல் ஒழுக்கமும் உடையவன் முதல் அமைச்சனாகும் தகுதியுள்ளவன் ஆவான். தருமா...!!! அத்தகைய குணங்கள் உள்ளவனையே நீ முதல் அமைச்சனாக கொள்ள வேண்டும். நல்லறிவு படைத்தவர்களையும், நினைவாற்றல் மிக்கவர்களையும், நல்ல இயல்பு உள்ளவர்களையும், தனக்குரிய மரியாதை கிடைக்காவிட்டாலும் மன வருத்தம் அடையாதவர்களையும் ஆகிய மேலோர்களை நீ உனது அமைச்சரவையில் சேர்த்து கொள்ள வேண்டும்.
புகழ் நோக்கம் உடையவனும், நீதியை விரும்புபவனும், காமம், அச்சம், சினம் இல்லாதவனும், அதிகம் பேசாதவனும், தன்னைத் தானே புகழ்ந்து கொள்ளாதவனும் ஆகிய குணங்களை உடைய ஒருவனிடம் அமைச்சக பதவியைத் தர வேண்டும். அறம், பொருள் சிதறாமல் பாதுகாக்கும் உத்தமனை நீ தேர்ந்தெடுத்து உன் அருகில் அவனை இருக்க செய்ய வேண்டும்.ஒரு தந்தை மகனிடம் காட்டும் அன்பை நீ அவனிடம் செலுத்த வேண்டும். ஆனாலும், தருமா..ஒரு காரியத்திற்கு இரண்டு அல்லது மூவரை நியமிக்கக் கூடாது. அப்படி நியமித்தால் அவர்களுக்குள் பொறாமை தோன்றும். ஒற்றுமையுடன் செயல்பட மாட்டார்கள். அதனால் காரியம் நிறைவேறாது.
மரணத்திற்கு அஞ்சுவதுபோல் சுற்றத்தாரைக் கண்டு பயப்பட வேண்டும். அரசனின் பெருமை கண்டு சுற்றம் மகிழாது. சுற்றத்தாரால் துன்பமும் உண்டு. இன்பமும் உண்டு. சுற்றம் அல்லாதாரும் துன்பம் தருவர். ஆனால் மன்னனுக்கு அவமதிப்பு நேர்ந்தால், அவனைச் சார்ந்த சுற்றத்தார் பொறுத்து கொள்ள மாட்டார்கள். ஆதலால் சுற்றத்தாரிடம் குணம், குற்றம் இரண்டும் காணப்படுகின்றன.
சுற்றம் இல்லாதவன் மகிழ்ச்சியும், பெருமையும் அடைய மாட்டான். எனவே, சுற்றத்தாரை சொல்லாலும், செயலாலும் எப்போதும் கௌரவப்படுத்த வேண்டும். அவர்கள் விரும்புவதைச் செய்ய வேண்டுமேயன்றி வெறுப்பதை செய்ய கூடாது. அவர்களிடம் நம் உள்ளத்தில் நம்பிக்கையில்லாதிருந்தாலும் எப்போதும் நம்பிக்கை உள்ளவன் போல நடந்துக் கொள்ள வேண்டும். குணமோ, குற்றமோ உறுதியாக அவர்களிடம் தீர்மானிக்க முடியாது. இவ்விதம் பகைவர், நண்பன், சுற்றத்தார் ஆகியோரிடம் விழிப்புடன் நடந்துக் கொள்ளும் மன்னன் நீடு புகழ் பெற்று திகழ்வான் “ என்று உரைத்தார் பீஷ்மர்.
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
===================================
** தருமர் பீஷ்மரை நோக்கி “ ஒருவரோடொருவர் பொறாமை கொண்டுள்ள சுற்றத்தாரை தன் வசமாக்கி கொள்ளத்தக்க வழிகள் யாவை ? “ என வினவினார்.
அதற்கு பீஷ்மர், “ இந்த விஷயத்தில் நாரதருக்கும், வாசுதேவருக்கும் நடந்த உரையாடலைக் கூறுகிறேன்..கேள்..
கண்ணபிரான்..நாரதரை நோக்கி “ நாரதரே....!!! பண்டிதன் அல்லாத நண்பனும், பண்டிதனாக இருந்தும் அறிவற்ற பகைவனும், ரகசியத்தை அறிய தக்கவரல்லர். ஆதலால் உம் மேன்மையை அறிந்து கொண்ட நான் உம்மிடம் என் ரகசியத்தைத் தெரிவித்து சில உண்மைகளை தெரிந்து கொள்ள விரும்புகிறேன். நான் அரசன் என்ற பெயர் உள்ளவனாக இருந்தும் சகோதரர்களுக்கு அடிமைத் தொண்டு செய்து வருகிறேன். புசிக்க தக்கவற்றுள் பாதியை மட்டும் புசிக்கிறேன். மற்றொரு பாதியை சுற்றத்தாருக்கு தருகிறேன். அவர்கள் பேசும் சொற்கள் என்னை சுட்டு எரிக்கின்றன. எனக்கு துணை செய்வார் யாரும் இல்லை. அச் சுற்றத்தாரோடு சேர்ந்திருக்கவும் முடியவில்லை, விட்டு விலகியிருக்கவும் முடியவில்லை. தான் பெற்றெடுத்த மகன்கள் இருவரும் சூதாடுகையில் தாய் எந்த மகனின் வெற்றியை விரும்புவாள்? யாருடைய தோல்வியை அவள் விரும்புவாள்? அந்தத் தாய் இரு மகன்களிடையே செயலற்றுத் துன்புறுவது போல நான் துன்புறுகிறேன். இந்நிலையில் எனக்கும், என் சுற்றத்தாருக்கும் நன்மை தரத்தக்க ஒரு வழியைத் தெரிவிக்க வேண்டுகிறேன் ” என்று கேட்டுக் கொண்டார் .
நாரதர் " கண்ணா....!!! ஒருவனுக்கு இரண்டு வகையான துன்பங்கள் உண்டு. ஒன்று உட்பகை. மற்றது வெளிப்பகை. சுற்றத்தாரால் வருவது உட்பகை. மற்றோரால் வருவது வெளிப்பகை. வெளிப்பகையை விட கொடியது உட்பகை. நீர் உன் சுற்றத்தாரிடம் கொடுத்துவிட்ட நாட்டை திரும்ப பெற எண்ணுகிறீர். கொடுத்துவிட்ட ஒன்றை திரும்பப் பெறுவது உமிழ்ந்த உணவை மீண்டும் எடுத்து உண்ண விரும்புவதை போன்றது. ஆகவே அவர்களிடமிருந்து விரும் துன்பத்திலிருந்த் தப்பிக்க வழி, இழந்த நாட்டை திரும்பிக் கேட்காமல் இருப்பதே ஆகும். ஆனாலும் அவர்களின் கெட்ட உள்ளத்தை மாற்றும் ஆயுதம் ஒன்று உள்ளது. அது இரும்பினால் செய்யப்பட்டதல்ல. மென்மையானது. மென்மையானதாயினும் அவர்களை அடக்கி விடும்' “ என்றார்.
கண்ணன் நாரதரை பார்த்து “ இரும்பினால் செய்யப்படாத மென்மையான ஆயுதம் எது? “ என்று வினவ, நாரதர், “ கண்ணா, அந்த மென்மையான ஆயுதம்...இன்சொல் “ என்றார். “ இனிய சொற்கள் கூர்மையான அரத்தை போன்றவை. இனிய நன்மொழியால் சுற்றத்தாரிடம் இனிமையாகப் பேசி அவர்களை அணைத்துச் செல்ல வேண்டும். வேண்டிய பொருள்களை கொடுத்து அவர்களை திருப்திப்படுத்த வேண்டும்.
எப்போதும் சுற்றத்தாரை காப்பதன் மூலம் ஒருவருடைய பொருளும், புகழும், ஆயுளும் பெருகும். எனவே நீர் சுற்றத்தார்க்கு எவ்வித குறையும் நேராமல் பார்த்து கொள்ள வேண்டும். அனைவரும் உன்னை சார்ந்தே உள்ளனர். உயிர்கள் அனைத்துக்கும் நாதரே.....!!! .நீர் அறியாதது ஏதுமில்லை “ என்று முடித்தார். இதை எடுத்து உரைத்த பீஷ்மர், சுற்றந்தழுவுதலின் மேன்மையை தருமருக்கு உணர்த்தினார். இதன் மூலம் குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை என உலகிற்கு உணர்த்த பட்டது.
கடினமான துன்பங்களைக் கடக்கும் வழி
==========================================
** தருமர் “ கடினமான துன்பங்களை கடப்பது எப்படி? “ என பீஷ்மரிடம் வினவ, பீஷ்மர் விடை தருகிறார்.
“ யார் மன அடக்கமாய் அற நூலில் சொன்னபடி நடக்கிறாரோ, அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார். யார் தருமத்தை ஆடம்பரத்திற்காக செய்யாமல் தம் தேவையை குறைத்து கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார். யார் ஐம்புலன்களை அடக்கும் வல்லமை பெற்றவரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார்.
யார் தன்னை பிறர் நிந்தித்தாலும் மறுமொழி கூறாமல் இருக்கின்றாரோ, தமக்கு துன்பம் செய்தாலும், பிறர்க்கு துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ, யார் பிறருக்கு கொடுத்து கொண்டும், தான் யாரிடமும் யாசிக்காமலும் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார். யார் விருந்தினரை நன்கு உபசரிக்கின்றாரோ, யார் வேதம் ஓதுகின்றாரோ, யார் எதற்கும் அருவருப்பு அடையாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார். யார் தருமத்தை உணர்ந்து தாய், தந்தையை போற்றுகின்றாரோ யார் பகலில் உறங்காமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் மனத்தாலும் சொல்லாலும் செயலாலும் பாவத்தை செய்யாமல் இருக்கின்றாரோ, உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருக்கின்றாரோ, அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார். யார் பிறர் பொருளைக் கவராமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார். யார் தன் மனைவியிடம் மட்டும் உரிய காலத்தில் சேர்க்கைக் கொண்டு, பிறர் மனைவியை கனவிலும் கருதாமல் இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார்.
யார் மரணத்தைக் கண்டு அஞ்சாமல் பயத்தை விலக்கி, போர்க்களத்தில் வெற்றி பெற விரும்புகிறாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார். யார் உயிரே போனாலும் பொய் சொல்லாது உண்மையையே பேசுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார். யார் நிந்திக்கத் தகாத செயல்களை உடையவராக இருக்கின்றாரோ, யார் தம் பொருளைச் சாதுக்களுக்கு வழங்குகின்றாரோ, அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார். யார் இளமையில் பிரம்மச்சரியத்தை மேற்கொண்டு சுறுசுறுப்புடன் கல்வி கற்றுப் பல துறைகளிலும் தேர்ச்சி பெற்றவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார். யார் பிறரை அச்சுறுத்துவதில்லையோ, பிறர் அச்சுறுத்தலுக்கு பயப்படுவது இல்லையோ, யார் தம்மைப் போல பிறரையும் கருதுகின்றாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார்.
யார் தான் இன்புறுவது போல் பிறரும் இன்புற வேண்டும் என எண்ணுகிறாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் எல்லா தேவர்களையும் வழிபட்டு, எல்லாத் தருமங்களையும் கேட்டு அடக்கம் உடையவராக இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கிறார்.யார் தற்பெருமையை விரும்பாமல் பிறரைப் பெருமைப்படுத்திப் புகழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
யார் தம் முன்னோர்களுக்காக தூய மனத்துடன் ஒவ்வொரு திதியிலும் சிரார்த்தம் செய்கிறாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார். யார் தம் கோபத்தை அடக்கி, பிறரையும் கோபம் அடையாமல் இருக்க செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார்.
யார் மது, மாமிசம், மகளிர் போகம் இவற்றை விலக்குகின்றாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார். யார் உயிர் வாழ்வதற்காக மட்டுமே உணவு உட்கொண்டும், சந்ததிக்காகவே மனைவியுடன் கூடியும், உண்மை பேசுவதற்காக மட்டுமே பேச்சையும் கொண்டு வாழ்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார். யார் எல்லா உயிர்களுக்கும் நாதனாயிருப்பவரிடம் பக்தி செலுத்துகின்றாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார்.
யார் எல்லா கர்மங்களையும் கண்ணனிடம் அர்ப்பணம் செய்துவிட்டு அச்சமின்றி இருக்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார். யார் உலகங்களைப் படைத்தவரும் சாதுக்களுக்கு நாதரும் யாகங்களால் வழிபடத்தக்கவருமான பிரம்மனை பக்தியுடன் வழிபடுகிறாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார். யார் இந்திரனும், விஷ்ணுவும், ருத்திரரும் போற்றும் மாகாதேவரான சிவபெருமானை எப்போதும் துதி செய்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களை கடக்கின்றார். யார் கடினமான துன்பத்தை கடக்கத்தக்க இந்த உபதேசத்தை படிக்கின்றாரோ, யார் கேட்கின்றாரோ அவர் கடினமான துன்பங்களைக் கடக்கின்றார்.
தருமா! மனிதன் இவ்வுலகிலும், மேலுலகிலும் கொடுந்துன்பங்களைக் கடத்தற்காகச் செய்யத்தக்க செயல்களில் சிலவற்றை உனக்கு உபதேசித்தேன். நீயும் இவ்வாறு நடந்து துன்பங்களை களைவாயாக! " என்று ஆசி கூறி முடித்தார் பிதாமகன்.
இவற்றில் ஐந்தை கூட நாம் பின்பற்றுவது இல்லை என்பது கசப்பான உண்மை. முடிந்தவரை இன்றுமுதல் பின்பற்றுவோம்

No comments:

Post a Comment