Sunday, April 6, 2014

இறைவனிடம் வைக்கும் தீவிர நம்பிக்கையும், பரிபூரண சரணாகதியுமே, அனைத்து அற்புதங்களுக்கும் ஆதாரமாக விளங்குகின்றன

அழகான அந்த கிராமத்தில் பால் விற்கும் பெண் வாழ்ந்து வந்தாள். கிராமத்தின் அருகில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் மறுகரையில் வசிக்கும் தவமுனி ஒருவருக்கு தினமும் அதிகாலையில் பால் கொண்டு போய் கொடுப்பது, அந்தப் பெண்ணின் வழக்கமாகும். 

ஆற்றைக் கடக்க நிறுத்தப்பட்டிருக்கும் படகின் மூலமாகவே, தினமும் அந்தப் பெண், அக்கரையில் இருக்கும் தவமுனிவருக்கு, பால் கொண்டு போய் கொடுத்து வந்தாள். ஒரு சமயம், ஆற்றில் படகு ஓட்டும், ஓடக்காரன் வருவதற்கு தாமதமானது. 

இதனால் பால் விற்கும் பெண்ணால், சரியான நேரத்திற்கு தவமுனிவரிடம் பாலை கொண்டு போய் சேர்க்க முடியவில்லை. இவ்வாறு பல நாட்கள் நடந்த காரணத்தால், முனிவருக்கு சற்று கோபம் வந்து விட்டது. அவர் அந்த பெண்ணிடம், ‘பால் கொண்டு வருவதில் இப்போது ஏன் இவ்வளவு தாமதம் ஆகிறது?’ என்று கேட்டார். 

அதற்கு அந்தப் பெண்ணும் நடந்த சம்பவங்களைக் கூறினாள். ‘சுவாமி, நான் இதுநாள் வரை சரியான நேரத்தில் உங்களுக்கு பால் கொண்டு வந்து கொடுத்தேன். ஆனால் ஆற்றங்கரைக்கு நேரத்தோடு வந்தும், ஓடக்காரனுக்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கிறது. அதனால் தான் தாமதம்’ என்று எடுத்துரைத்தாள். 

அதைக் கேட்டதும் அந்த முனிவர், ‘பெண்ணே! பகவானுடைய திவ்ய திருநாமத்தை உச்சரிப்பதால் மக்கள் பிறவியாகிய பெருங்கடலையே கடந்து விடுகிறார்கள். உன்னால் இந்த சிறிய ஆற்றைக் கடக்க முடியவில்லையா?’ என்றார். கள்ளங்கபடம் அறியாத, தான் விற்கும் பால் போன்ற வெள்ளை மனம் படைத்த அந்தப் பெண், முனிவர் சொன்ன வார்த்தையை உயர்வாக எண்ணி, ஆற்றைக் கடப்பதற்கு உகந்த வழி கிடைத்துவிட்டது என்று பெரிதும் மகிழ்ந்து போனாள். 

மறுநாளில் இருந்து சரியான நேரத்திற்கும் முன்பாகவே அவள், பால் கொண்டு வந்து முனிவருக்கு கொடுத்தாள். இது தொடர்ந்து கொண்டே இருந்தது. முனிவருக்கு ஆச்சரியம் தாள முடியவில்லை. ‘பெண்ணே! ஓடக்காரன் இப்போது வெகு சீக்கிரமே வந்து விடுகிறானா?. 

முன்பை விட வெகு அதிகாலையிலேயே பால் கொண்டு வந்து விடுகிறாயே’ என்று கேட்டார் முனிவர். அதற்கு அந்தப் பெண், ‘சுவாமி! தாங்கள் கூறியபடியே பகவானின் திருநாமத்தை கூறியபடி ஆற்றைக் கடந்து வருகிறேன். இப்போதெல்லாம் ஓடக்காரனுக்காக காத்திருப்பதில்லை’ என்று பதிலளித்தாள். 

வியப்புற்ற முனிவர், ‘பெண்ணே! எந்த முறையில் நீ ஆற்றைக் கடந்து வருகிறாய் என்று எனக்கு காட்டு கிறாயா?’ என்று கேட்டார். பால்காரப் பெண் அதற்கு சம்மதித்து ஆற்றை நோக்கிச் சென்றாள். அங்கு சென்றதும், இறைவனின் நாமத்தை உச்சரித்தபடி ஆற்று நீரின் மேல் சர்வ சாதாரணமாக நடந்து சென்றாள். 

சிறிது தூரம் சென்றதும் திரும்பிப் பார்த்தால், முனிவர் தண்ணீரில் நடக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அவரது கை ஆடை நனையாமல் இருக்க தாங்கிக் கொண்டிருந்தது. ‘சுவாமி! என்ன இது? நீங்கள் எப்போதும் இறைவனின் நாமத்தை உச்சரித்து வருகிறீர்கள். 

ஆனால் நீங்கள் உடுத்தியிருக்கும் ஆடை நனையாமல் இருக்க கைகளால் அதை தூக்கிப் பிடித்திருக்கிறீர்கள். தங்களுக்கு இறைவனிடத்தில் பரிபூரண நம்பிக்கை இல்லைபோல் தெரிகிறதே!’ என்றாள் பால்க்காரப் பெண். முனிவரின் முகம் தொங்கிப் போய்விட்டது. 

இறைவனிடம் வைக்கும் தீவிர நம்பிக்கையும், பரிபூரண சரணாகதியுமே, அனைத்து அற்புதங்களுக்கும் ஆதாரமாக விளங்குகின்றன என்பதை இந்தக் கதை வலியுறுத்துகிறது.

No comments:

Post a Comment