Friday, April 4, 2014

மூடன் தரக்குறைவான வார்த்தையை கூறினால்....

மூடன் தரக்குறைவான வார்த்தையை கூறினால்....
** தருமர் பீஷ்மரைப் பார்த்து “ பிதாமகரே…! சாந்தமும் அறிவும் மிக்க ஒருவன், அவையில் மூடனும், அறிவற்றவனுமான ஒருவனால் நிந்திக்க பட்டால் என்ன செய்ய வேண்டும்? “ என வினவ பீஷ்மர் உரைக்கிறார்.
“ தருமரே...!! அறிவு மிக்கவன் எப்போதும் அற்ப புத்தியுள்ளவனின் தரம் கெட்ட சொற்களை பொறுத்து கொள்ள வேண்டும். ஆத்திரத்துடன் பழிக்கப்படும் மனிதன், பழிக்கும் மனிதனின் புண்ணியத்தை தான் அடைந்து, தனது பாவத்தை அவனுக்கு கொடுத்து, தன்னை தூய்மை செய்து கொள்கிறான். இகழ்ச்சி செய்பவனை பொருட்படுத்த கூடாது. அவன் உலகத்தில் பகையை பெற்று பயனற்ற கதியை அடைவான், போகும் இடமெல்லாம் " இவன் என்னால் இவ்வாறு சொல்லப்பட்டான். அதனால் வெட்கம் அடைந்து செயலற்றுக் கிடக்கிறான் " என தற்பெருமை பேசும் அற்பனை அடக்கம் உள்ளவன் அலட்சியம் செய்ய வேண்டும். அற்பன் பேசும் பேச்சுக்களை சகித்துக் கொள்ள வேண்டும்.
பிறரை பழித்து பேசி பழக்கப்பட்ட ஒருவன், மறைக்க வேண்டிய அந்தரங்க உறுப்பை மறைக்காமல் வெளிக்காட்டி ஆடும் வேசியை போல மகிழ்ச்சி அடைவான். பழி தூற்றும் பேதையிடம் நல்லவர்கள் பேச்சு கொடுக்க கூடாது. எவன் நேரில் புகழ்ந்து மறைவில் குறை கூறியும் பேசுகிரானோ, அவன் உலகில் ஆதரவற்ற நாய் போன்றவன் ஆவான். ஞானமும், கல்வியும், தருமமும் இழந்தவன் ஆவான். அவனிடம் இருக்கும் சில நல்ல குணங்களும் பிறர் மீது பழி கூறும் இயல்பால் நாசமடைகின்றன. ஆதலால், நல்லறிவுள்ளவன், பாப புத்தியுள்ளவனை, விலக்கத்தக்கவனுமான அவனை நாயின் மாமிசத்தை போல உடனே விலக்க வேண்டும்.
மக்கள் கூட்டத்தில் பிறர் குற்றத்தை சொல்பவன், பாம்பானது உயர்ந்த படத்தை வெளியிடுவது போலத் தன் குற்றங்களை தானே வெளியிடுபவன் ஆவான். அடக்கமின்றி பிறர் பழி கூறி திரியும் அவனை மதம் கொண்டு திரியும் யானையை போலவும், தெரு தெருவாகச் சுற்றி அலையும் நாயை போலவும் கருதி விலக்க வேண்டும். நாவடக்கம் இன்றி பேசித் திரியும் பழிகாரரை வெறுத்து ஒதுக்க வேண்டும். உறுதியான மனம் படைத்த சான்றோர், உயர்ந்தோர் ஆகியோர் தாழ்ந்தோருடன் கூடுவதை தவிர்க்க வேண்டும். பிறர் பழி கூறும் மூர்க்கர்கள் கோபம் கொண்டால் அடிப்பார்கள், கடிப்பார்கள், புழுதி வாரி இறைப்பார்கள், பல்லை காட்டி பயமுறுத்துவார்கள். கெட்ட புத்தியுள்ளவன் அவையில் என்னதான் பழித்துப் பேசினாலும் அவனை பொறுத்து கொள்பவர்கள் மலையென கலங்கா மனம் படைத்தவர்கள் என போற்றப்படுவார்கள். ஏசுபவன் பழியேந்தி செல்வான், பொறுத்துக் கொள்பவன் புகழுடன் திகழ்வான். தருமா....!! நீ அற்பர் சொல்லை பொறுத்துக் கொண்டு புகழ் பெறுவாயாக “ என்று அறிவுரை வழங்கினார் பீஷ்மர்.
அரசர்கள் திறம்பட ஆட்சி செய்வது எப்படி?
============================================
** தருமர் பீஷ்மரை நோக்கி “ வேலைக்காரர்கள் எவ்வாறு இருக்க வேண்டும்? அரசன் தனக்கு துணையாக யாரைக் கொள்ள வேண்டும்? “ என வினவ பீஷ்மர் கூறலானார்.
உலகியல் அறிவும் நூலறிவும் மிக்க வேலக்காரர்களை பெற்றிருக்கும் அரசன் மேன்மையுற்றவன் ஆவான். அரசனது நன்மையை விரும்பும் அமைச்சர்கள் அரசனுக்கு நல்வழி காட்டுபவர்களாக இருக்க வேண்டும். லஞ்சம் முதலானவற்றால் நெறி கெடாதவராக இருக்க வேண்டும். எந்த அரசர் வருங்காலத்தை உணர்ந்து செயல்படக்கூடிய அமைச்சர்களை பெற்றிருக்கிறாரோ அந்த அரசர் சிறந்த அரசராகத் திகழ்வார். அரசனுக்கு துணையாக அமைபவர்கள் இன்ப துன்பங்களை சமமாக கருத தக்க மனப்பக்குவம் உடையவர்களாக இருக்க வேண்டும். நாட்டின் பொருளை பெருக்குவதில் கண்ணும் கருத்துமாய் செயல் பட வேண்டும். ஓர் அரசன் செழிப்புடன் திகழ வேண்டுமாயின் அண்டை நாடுகளும் அமைதியுடன் இருக்க வேண்டும். நாட்டில் பொக்கிஷம் நிறைந்திருக்க வேண்டும். நாணயம் மிக்கவர்களால் அது நன்கு காப்பாற்றப்படுமாயின் மன்னனின் உள்ளத்தில் மகிழ்ச்சி பொங்கி நிற்கும். அரசு அதிகாரிகளாக நியமிக்கப் படுபவர்கள் பொருளாசை அற்றவராக இருக்க வேண்டும். எந்த அரசன் அரசு தருமங்களை நன்குணர்ந்து அரச காரியங்களில் வல்லவர்களை நியமித்து ஆறில் ஒரு பங்கை வரியாகப் பெற்று கொள்கிறானோ அந்த அரசன் தருமத்தின் பயனை அடைந்தவன் ஆவான் “ என்றார்.
மன்னன் மயில் போல் இருக்க வேண்டும்
===========================================
** மன்னருக்கு உரிய பண்புகள் பற்றி மேலும் அறிய விரும்புவதாக தருமர் கூற பீஷ்மர் உரைக்கலானார்..
“ தருமா....!!! எல்லா உயிரினங்களையும் காக்க வேண்டியது மன்னனது கடமை ஆகும். மன்னன் மயிலைப் போல திகழ வேண்டும். மயில் தன் பல வண்ண தோகையை எவ்விதம் அமைத்துக் கொள்கிறதோ அவ்விதம் தருமம் அறிந்த மன்னன் பலவிதமான வடிவங்களை அமைத்து கொள்ள வேண்டும். வரி வசூலிக்கும் போது சத்தியத்தையும், நேர்மையையும் மேற்கொண்டு நடுவு நிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். தண்டனை தரும் போது கடுமையாகவும், உதவி செய்யும் போது அன்புடனும் தோன்ற வேண்டும். மயில் சரத் காலத்தில் ஒலி எழுப்பாது இருப்பதைப் போல அரசன் மந்திராலோசனையை வெளியிடாமல் காக்க வேண்டும். மன்னன் மயிலை போல இனிய குரலும், மென்மையான தோற்றமும் தன் செயலில் ஆற்றலும் உள்ளவனாகத் திகழ வேண்டும்.
மயில் நீரருவிகளில் நாட்டம் உள்ளதாக இருப்பதை போல மன்னன் வரவு செலவுகளில் கவனமாக இருக்க வேண்டும். மயில் மலையில் உள்ள மழை நீரை விரும்பியிருப்பதை போல மன்னன் ஆன்றோரைச் சார்ந்திருக்க வேண்டும். மயில் தன் தலையில் உள்ள சிகையை எப்போதும் தூக்கி வைத்திருப்பதை போல மன்னன் தரும கொடி கட்டி அடையாளம் காட்ட வேண்டும். மயில் தன்னை பாதுகாத்து கொண்டு பாம்பு முதலியவற்றை தாக்க எப்போதும் விழிப்புடன் இருப்பதைப் போல மன்னன் தண்ட நீதி வழங்குவதில் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
மயில் தான் இருக்கும் மரத்திலிருந்து செழுமையான மற்றொரு மரத்துக்கு செல்வது போல, மன்னன் வரவு செலவுகளைக் கண்டு, வரவு அதிகமாகவும், செலவு குறைவாகவும் உள்ள செயல்களில் ஈடுபட வேண்டும். மயில் தன் தோற்றத்தினாலேயே காக்கை முதலான பறவைகளுக்கு குறை தோன்றுமாறு இருப்பது போல, மன்னன் தன் நேர்மையினாலேயே பகை மன்னர்களின் குறைகள் வெளிப்படுமாறு இருத்தல் வேண்டும். மயில் உயர்ந்த வளமான மலையை நாடுவது போல, மன்னன் தன்னைவிட உயர்ந்த மன்னர்களுடன் நல்லுறவு கொள்ள வேண்டும். மயில் களைத்த போது நிழலை விரும்புவது போல, தளர்ந்த காலத்தில் சுற்றத்தாரிடம் விரும்பி செல்ல வேண்டும்.
மயில் வேனிற்காலத்தில் மரத்தில் மறைந்திருப்பது போல அரசன் ரகசியமான இடங்களை சார்ந்து இருக்க வேண்டும். மயில் மழைக்காலத்தில் மகிழ்ந்து இருப்பது போல மன்னன் மக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் தனிமையில் மகிழ்ந்து இருத்தல் வேண்டும். மயில் தான் சஞ்சரிக்கும் இடங்களில் தன்னைப் பிடிக்க அமைத்த வலைகளை விலக்கி தப்பித்து கொள்வது போல, மன்னன் பகைவர் விரித்த வலைகளை ஒற்றர்கள் மூலம் அறிந்து அவற்றிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும். மயில் நச்சு தன்மை வாய்ந்த பாம்புகளைக் கொல்வது போல அரசன் வஞ்சக மன்னர்களை கொல்ல வேண்டும்.
மயில் புழு முதலியவற்றை வெறுக்காது இருப்பது போல, மன்னன் தாழ்ந்தவரைக் கண்டு அருவருப்பு அடைய கூடாது. மயில் உறுதியான சிறகுகளைக் கொண்டிருப்பதைப் போல, மன்னன் உறுதி மிக்க அமைச்சர்களைப் பெற்றிருக்க வேண்டும். மயில் தன் சிறகுகளை விருப்பப்படி விரிப்பது போல, மன்னன் தன் சுற்றத்தாரிடம் விரிந்து பரந்த மனதுடன் இருக்க வேண்டும். எல்லா இடங்களில் இருந்தும் நல்லறிவைப் பெற்று நாட்டை நன்கு ஆட்சி புரிய வேண்டும் ” என்றார் பீஷ்மர்.
தருமங்களின் மூலக் காரணம் சீலம்
========================================
** தருமர், பீஷ்மரைப் பார்த்து “ எல்லா தருமங்களுக்கும் மூல காரணமான சீலத்தைப் பற்றி கூறவும். சீலம் என்பது என்ன? அதனை எப்படி பெறுவது? “ என வினவினார். சீலத்தை பற்றி பீஷ்மர் உரைக்கலானார்...
திரிதிராஷ்டிரன் சொன்ன இந்திரனுக்கும் பிரகலாதனுக்கும் நடைபெற்ற உரையாடலை எடுத்துரைத்தார்..
பீஷ்மர், “ தருமா...!! நீ கண்டிப்பாக அறிந்துக் கொள்ள வேண்டியது இது. முன்பு நீ நடத்திய ராஜசூய யாகத்தில் உனது செல்வத்தை கண்டு பொறாமை கொண்ட துரியோதனன் தந்தையிடம் சென்று புலம்பினான். அப்போது திருதிராஷ்டிரன் " மகனே! எதற்காக இப்படி சோர்ந்து காணப்படுகிராய் ? உனக்கு நேர்ந்த துன்பம் என்ன? " என வினவினான்.
அதற்கு துரியோதனன் “ தந்தையே...! தருமனது அரண்மனையில் கல்வியிற் சிறந்த பதினாயிரம் பேர் தங்க பாத்திரத்தில் உணவு உட்கொள்கின்றனர். இந்திரப் பிரஸ்தம் இருக்கிறது. அது கண்டு மனம் புழுங்குகிறது “ என்றான். அவன் மன வருத்தத்தை உணர்ந்த திருதிராட்டிரன். “ மகனே நீ சீலத்தை போற்றுவாயாக. அதனைப் போற்றினால், மூவுலக ஆட்சியை கூட நீ பெறலாம். சீலம் உள்ளவர்களால் உலகில் பெறமுடியாதது ஏதும் இல்லை. மாந்தாதா ஒரே இரவிலும், ஜனமேஜயர் மூன்று நாட்களிலும், நாபகர் ஏழு நாட்களிலும் பூமியை பெற்றார்கள். இவர்கள் சீலத்தைப் போற்றியதால் மாபெரும் புகழையும் அடைந்தார்கள்.
சீலம் என்பது பிற உயிர்க்கு நன்மை செய்தல், கருணை, தானம் இம்மூன்றும் சேர்ந்த நற்குணம் ஆகும். இதைப் பற்றி நீ நன்கு உணர்ந்து கொள்ள முன்னர் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைக் கூறுகிறேன் கேள். முன்னொரு காலத்தில் நாரதரால் சொல்லப்பட்ட சீலத்தை மேற்கொண்ட பிரகலாதன் இந்திர உலகம் முதலான மூன்று உலகங்களையும் பெற்றான்.
நாட்டை பறிகொடுத்த இந்திரன், பிரகஸ்பதியை(வியாழ பகவான்) அடைந்து உய்யும் வழியை அருளும்படி வேண்டி கொண்டான். பிரகஸ்பதி மோட்ச மார்க்கத்திற்கு காரணமான ஞானத்தை பற்றிக் கூறினார். இந்திரன் “ இதை விட மேலானது இருக்கிறதா ? இவ்வளவுதானா ? “ என வினவினான். “ இதைப் பற்றி மேலும் அறிய விரும்பினால் சுக்கிராச்சாரியாரிடம் (வெள்ளி பகவான்) செல்க ” என்றார் பிரகஸ்பதி. இந்திரன் அவ்வாறே சுக்கிராச்சாரியாரிடம் சென்று வினவ, அவர் ஆத்ம ஞானத்தை பற்றி விரிவாக எடுத்துரைத்தார். அதிலும் மன நிறைவு பெறாத இந்திரன் “ இன்னமும் இதை பற்றி அறிய விரும்புகிறேன் “ என்றான். “ அப்படியானால் மகா மேதாவியான பிரகலாதனைத்தான் நீ சென்று பார்க்க வேண்டும் “ என்றார்.
இந்திரன் அந்தண வடிவத்தோடு பிரகலாதனிடம் சென்றார். மேன்மைக்குரிய வழியைத் தனக்கு உபதேசிக்குமாறு வேண்டி கொண்டார். அவனோ, தான் மூவுலகிற்கும் வேந்தனான அரச காரியங்களில் ஈடுபட்டிருப்பதால் ஞான உபதேசம் செய்ய நேரமில்லை என்றான். அந்தணனோ “ தங்களுக்கு நேரம் இருக்கையில் உபதேசியுங்கள் “ என்று கூற, பிரகலாதனும் ஒப்பு கொண்டான்.
பின்னர் ஒரு நாள், அவன் பணிவிடையை கண்டு மகிழ்ந்த பிரகலாதன் “ நீ வேண்டும் வரம் யாது? “ என்றான்.
“ உம்மிடம் உள்ள சீலத்தை வரமாக தர வேண்டுகிறேன் “ எனக் கூற, பிரகலாதன் திடுக்கிட்டான். ஆயினும் கொடுத்த வரத்தை மீற முடியாதவனாக ஆகி “ அப்படியே ஆகட்டும். நீ கேட்ட வரத்தைத் தந்தேன் “ என்றான். உடன் அந்தணன் மறைந்தான். பிரகலாதன் தான் வஞ்சிக்கப் பட்டதை எண்ணி வருந்தினான்.
அப்போது பிரகலாதனிடமிருந்து ஒளிமயமான ஒரு உருவம் வெளிப்பட்டது. “ நீ யார்? “ என அவன் வினவ “ நான்தான் சீலம். உன்னால் விடப்பட்டு செல்கிறேன். எங்கே போகிறேன் தெரியுமா ? உன்னிடம் ஏவல் புரிந்த அநதணனிடம் “ என்று கூறி மறைந்து இந்திரனிடம் சென்றது.
பிரகலாதன் மேனியிலிருந்த் மீண்டும் ஒரு ஒளி “ நீ யார் ? “ என்றான். “ நான் தருமம். சீலம் எங்கு இருக்கிறதோ, அங்கு நான் இருப்பேன். ஆகவே நானும் அந்த அந்தணனை நாடி செல்கிறேன் “ என உரைத்து போனது.
பிரகலாதன் உடலிலிருந்து மீண்டும் ஒரு ஒளி. இம்முறை சத்தியம். எங்கே தருமம் உள்ளதோ, அங்கே நான் இருப்பேன் என தருமத்தை தொடர்ந்தது.
மீண்டும் ஒரு ஒளி. அது பலம். சத்தியம் இருக்குமிடத்திதான் நானும் இருப்பேன் எனக் கூறி சத்தியத்தை பலம் பின் தொடர்ந்தது.
பின் பிரகலாதன் மேனியிலிருந்து ஒரு தெய்வ மகள் தோன்றினாள். “ நீ யார்? “ என்றான் பிரகலாதன்.
அதற்கு அந்த மகள் “ நான் லட்சுமி..எங்கே பலம் இருக்கிறதோ..அங்கு நான் இருப்பேன். இப்போது உன்னிடம் பலம் நீங்கி சென்றுவிட்டது. எனவே நான் அந்த் பலத்தை நாடி செல்கிறேன். நான் நாடி செல்லும் பலம் அந்தணனிடம் உள்ளது." என்றாள்.
“ யார் அந்த அந்தணன் “ என்றான் பிரகலாதன்.
“ அவன் தேவேந்திரன். அந்தண வேடம் தாங்கி உனக்கு பணி புரிந்தான். நீ சீலம் என்னும் நல்லொழுக்கத்தால் மூவுலகை ஆண்டாய். இதனை உணர்ந்து அவன் உன்னிடம் இருந்த சீலத்தை யாசித்து சென்றான். சீலம் உன்னைவிட்டு பிரிந்து சென்றபின் அதனைத் தொடர்ந்து தருமம், சத்தியம், பலம் ஆகியவை உன்னை விட்டு நீங்கின. இறுதியாக நானும் செல்கிறேன் “ என்று கூறிவிட்டு லட்சுமி மறைந்தாள்.
ஆகவே துரியோதனா, சீலம் உள்ள இடத்தில் தான் எல்லா நன்மைகளும் தங்கி இருக்கும் என்பதை உணர் “ என திருதிராஷ்டிரன் தன் மகனை நோக்கி கூறினார்.
பின் பீஷ்மர் “ இதை கேட்க தவறியதால் துரியோதனின் முடிவு இப்படி ஆகிவிட்டது. ஆகவே தருமா நீ சீலத்தை போற்றி அதன் பயன் அடைவாயாக ” என தருமருக்கு சீலத்தின் பெருமையை உரைத்தார்.
“ சீலம் “ என்ற வார்த்தை அநேகமாவர்களுக்கு புதிய வார்த்தையாய் தோன்றுகிறதா? பீஷ்மரின் வாயிலாக தெரிந்து கொண்ட இந்த வார்த்தையின் அர்த்தத்தை அறிந்த நாம் நம்மால் இயன்றவரை சீலத்தை போற்றுவோம்

No comments:

Post a Comment