Saturday, April 5, 2014

யாரையும் வஞ்சித்து சம்பாதிக்கக் கூடாது

திருடன் ஒருவன் ஒரு வீட்டில் புகுந்து நகை திருடிய குற்றத்திற்காக கைது செய்யப்பட்டான். அவனை அடையாளம் கண்டு கொண்ட, அந்த வீட்டுத்தலைவி நீதிமன்றத்திற்கு சாட்சி சொல்ல வந்தாள். கூண்டில் நிற்பவனே திருடன் என அடித்துச் சொன்னாள். திருடனோ மறுத்தான்.
நீதிபதி அவனிடம் கீதை புத்தகத்தைக் கொடுத்து, ""நீ திருடவில்லையென்றால், இதைச் சொன்ன கிருஷ்ணர் மீது ஆணையிடு, உன்னை விடுவித்து விடுகிறேன்,'' என்றார்.
திருடனோ நாத்திகவாதி.
இந்த சாதாரண புத்தகம் என்ன செய்து விடப்போகிறது என்று எண்ணியவன்,""நீதிபதி அவர்களே! நான் திருடனே அல்ல! எனக்கும் இந்த திருட்டுக்கும் சம்பந்தமே இல்லை,'' என்று அதன் மீது கை வைத்து சத்தியம் செய்தான்.
நீதிபதியும் அவனது வாக்குமூலத்தை ஏற்று விடுவித்து விட்டார்.
பாற்கடலில் திருமாலுடன் இருந்த லட்சுமி தாயார், இதைக் கவனித்துக் கொண்டிருந்தாள்
""பெருமாளே! இது என்ன அநியாயம்! நீங்கள் சொன்ன கீதை மீது பொய் சத்தியம் செய்தானே! இவனுக்கு பாடம் புகட்ட மாட்டீர்களா?'' என்றாள்.
திருமால் அர்த்தபுஷ்டியுடன் சிரித்தார்.
திருடன் மகிழ்வுடன் ஊர் திரும்பினான்.
அப்போது, அவனது நண்பன் வந்தான்.
""நண்பா! நீதிமன்றத்தையே கலக்கி விட்டாய் போல் இருக்கிறதே! அதிருக்கட்டும்! நீ வாங்கிய லாட்டரி சீட்டுக்கு பத்து லட்சம் பரிசு விழுந்திருப்பதாக கடைக்காரர் சொன்னார். உன்னைக் காணாமல் தேடிக் கொண்டிருக்கிறார். உடனே அங்கே போ!''என்றான்.
அதிர்ஷ்ட தேவதையின் முழு பார்வையும் தன் மீது விழுந்திருக்கிறது என்று மகிழ்ந்த திருடன் கடைக்கு ஓடினான்.
தன்னிடமிருந்த சீட்டை நீட்டி, ""பரிசுக்கு ஏற்பாடு செய்யுங்கள்,'' என்றான்.
கடைக்காரர் சிரித்தார்.
""உனக்கு பரிசு விழுந்திருக்கிறது என்று யாரப்பா சொன்னது? அது மளிகைக்கடை செட்டியாருக்கல்லவா விழுந்து இருக்கிறது! உன்னை யாரோ ஏமாற்றியிருக்கிறார்கள்!'' என்றார்.
திருடன் கோபத்துடன் நண்பனைத் தேடிப் போனான்... அவனை உதைப்பதற்காக!
இப்போது பெருமாள், லட்சுமியைப் பார்த்தார்.
""லட்சுமி! பார்த்தாயா வேடிக்கையை! நீதிமன்றத்தில், அந்த திருடன், திருடிய உண்மையை பொய்யாக்கினான். அவனது நண்பன், பதிலுக்கு ஒரு பொய்யால் அவனை மடையனாக்கி விட்டான். நகையை இழந்த பெண், அதை இன்னொரு பெண்ணிடம் அடமானத்திற்கு பிடித்து, அவளுக்கு கொடுக்காமல் ஏமாற்றினாள். அதனால், அதை இவன் மூலமாக இழந்தாள். இவனோ, கீதை சொன்ன என்னையே ஏமாற்றினான். அதனால், தன் நண்பனால் ஏமாற்றப்பட்டான். திருடிய இந்தப் பொருளும் எதிர்காலத்தில் அவனிடம் தங்காது,'' என்றார்.
அந்த மாயக்கண்ணனின் லீலா விநோதத்தை எண்ணி லட்சுமி சிரித்தாள்.

No comments:

Post a Comment