Saturday, April 5, 2014

பசியை நீக்க நீளும் கைதான் ஆண்டவனுக்கு மிக அருகில் செல்லும் கை.


நீலகண்ட பிரம்மச்சாரி என்கிற தேசபக்தர் பாரதியாரின் வீட்டுக்கு வந்திருந்தார். ‘பாரதி, சாப்பிட ஏதாவது இருக்கா?’ என்றார் கம்மிய குரலில். ‘ஓய் நீலகண்ட பிரம்மச்சாரி, என்ன ஆச்சு?’ என்று பதறினார் பாரதியார். ‘சாப்பிட்டு நாலு நாள் ஆச்சு’ என்று பதில் வந்தது. வீட்டில் இருந்த சாப்பாட்டை உடனே பரிமாறச் செய்து, நீலகண்ட பிரம்மச்சாரி கண்ணீருடன் உண்ணும்போது நெஞ்சு வெடிக்க பாரதி எழுதிய பாடல்தான் -
‘இனியொரு விதி செய்வோம் - அதை
எந்த நாளும் காப்போம்
தனி ஒருவனுக்கு உணவில்லையெனில்
ஜகத்தினை அழித்திடுவோம்.’
பசியை ‘அன்னை இட்ட அடிவயிற்றுத் தீ’ என்றார் பட்டினத்தார். பசியை இன்னும் உயர்த்தி, ‘அது தேவியின் வடிவம்’ என்கிறது, தேவி மகாத்மியம்.
‘எந்தத் தேவி எல்லா உயிர்களிலும்
பசியின் வடிவில் உறைகிறாளோ...
அவளுக்கு நமஸ்காரம்
அவளுக்கு நமஸ்காரம்
அவளுக்கே நமஸ்காரம்..’
என் அத்தையின் நினைவு நாளில் சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நானும் என் அக்காக்களும் தயிர்சாதம் விநியோகம் செய்வோம். தொன்னையில் தயிர் சாதத்தை வாங்கிக்கொண்டு சில பேர் கை கூப்புவர், சிலர் தலையசைப்பார்கள், சிலர் கைகொடுப்பார்கள். வார்த்தைகள் ஏதும் அங்கே வராது. ஆனால் அங்கே சொல்லாமல் சொல்லப்படுவது ஒன்றுதான் - ‘உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே,’ என்ற வாழ்த்து, ‘அன்னதாதா... சுகிபவ’ என்ற உயிர் நெஞ்சார்ந்த நன்றி. நம் கோயில்கள், எத்தனை தலைமுறையாக எரியும் பசித்தீயை அணைத்திருக்கின்றன என்று பார்த்தால், அவை தவச்சாலைகளாக மட்டுமல்ல அறச்சாலைகளாயும் இருந்தது நமக்குப் புரியும். பற்பல கோயில்களின் நைவேத்யப் பட்டியலே படு சுவாரஸ்யமானது. திருமாலிருஞ்சோலை (அழகர் கோயில், மதுரை) அழகருக்கு அக்கார அடிசில் எனும் சர்க்கரைப் பொங்கல். இந்த அழகருக்குத்தான் ஆயிரம் அண்டா நிறைய அக்கார அடிசில் படைப்பதாய்க் கனவு கண்டாள் ஏழை பட்டர் வீட்டு ஆண்டாள். ஆண்டாளுக்கு எத்தனையோ ஆண்டுகள் பின் பிறந்த ஸ்ரீராமானுஜர், குட்டித் தங்கையின் ஆசையை நிறைவேற்றும் பொறுப்புள்ள அண்ணன்போல, அழகருக்கு ஆயிரம் அண்டா நிறைய அக்கார அடிசில் சமர்ப்பித்து
ஆண்டாளின் அன்பின் அண்ணன் ஆனார்.
ஸ்ரீமுஷ்ணத்தில் இருக்கும் பூவராக ஸ்வாமி கோயிலில் கோரைக்கிழங்கே நைவேத்யம். குற்றாலத்தின் குறும்பலா ஈசனுக்கு சுக்குக் காப்பியே சுகம். பின்னே? ஓயாமல் அருவிச் சாரலில் நனைந்து சளி பிடித்தால் என்ன செய்வதாம்? காஞ்சி வரதராஜப் பெருமாளுக்கு இட்லி; மல்லை ஸ்தல சயனப்பெருமாளுக்கு தயிர்சாதம்; உப்பிலியப்பன் கோயிலில் உப்பில்லா புளியோதரையின் சுண்டும் ருசி! உப்பிலியப்பப் பெருமாள், சிறு பெண்ணான பூமிதேவியை மார்க்கண்ட மஹரிஷியிடம் பெண் கேட்டாராம். ‘சின்னப் பெண். சமைக்கத் தெரியாது. சமைத்தாலும் உப்பிருக்காது’ என்று பதில் சொன்னார் பாசக்கார அப்பா. ‘உப்பில்லாமல் சாப்பிட்டா போச்சு’ என்று உடனே கல்யாணம் செய்து கொண்டாராம் பெருமாள். நம் வீட்டு ஆண்களுக்கெல்லாம் இந்த பெருந்தன்மை இருந்தால் எத்தனை நன்றாக இருக்கும்?
இளையான்குடி என்னும் ஊர், பரமக்குடி பக்கத்தில் இருக்கிறது. அந்த ஈசனுக்கு கைக்குத்தல் அரிசிச் சாதமும் கீரையும்தான் அவ்வப்போது படைக்கப்படும் நைவேத்யம். 63 நாயன்மார்களில் ஒருவரான இளையான்குடி மாறனார், ஈசனுக்குப் படைத்ததே அதைத்தானே! ஏழையான மாறனார் வீட்டில் ஒரு கைப்பிடி அரிசிகூட கிடையாது. மழை கொட்டிய ஓர் இரவில் வழக்கம்போல் சோதனை கொடுக்க சிவபெருமான் வந்து விட்டார் - ஒரு பசித்த சிவனடியார் வேடத்தில். கூரையின் மூங்கிலைப் பிடுங்கி விறகாக்கி, விதைத்த நெல்லை எடுத்து வந்து அரிசியாக்கி, தோட்டத்து கீரையை சமைத்து சிவனடியாருக்கு சோறு போட்டாராம் மாறனார். இத்தனைக்கும் பக்கபலமாய் உதவிய அவர் மனைவியின் பெயர் எங்கும் பதியப்படவில்லை. என்னைக் கேட்டால் சரித்திரத்தில் பெயரில்லாது உறைந்து போன அந்த மனைவியைத்தான் முதல் நாயன்மாராக அறிவித்திருக்க வேண்டும் என்பேன்.
உண்மையில் நம் 63 நாயன்மார்களின் வரலாறுகளில் பாதிக்கு மேல் பசித்தவருக்கு உணவளிக்கும் தர்மத்தைச் செய்து, அதனால் ஆண்டவனை தரிசிக்கும் பாக்கியம் பெற்ற தாத்பரியமே சொல்லப்படுகிறது. ‘செருப்புத் தைக்கும் மார்டின்’ என்ற கதையில் டால்ஸ்டாய் சொல்வதும் இதே சிந்தனையைத்தான். பரமபிதா தன்னைப் பார்க்க வருவதாய் கனவில் சேதி வர, காத்திருக்கிறான் மார்டின். அவருக்காக உணவை சமைத்து வைத்து, பசியோடு வந்த சிலருக்கு அந்த உணவை பங்கிட்டுத் தந்து விடுகிறான். ‘பரமபிதா ஏன் வரவில்லை?’ என்ற கேள்வியோடு தூங்கிப்போகும் அவனுக்கு, கனவில் தேவகுமாரன் சொல்கிறான், ‘பசியோடு வந்தவர்கள் வடிவத்தில் நான் வந்தேன்.’ இந்தத் தத்துவம் இல்லாத எந்த ஒரு மதத்தையும் உலகில் நீங்கள் காட்டிவிட முடியாது. அத்தனை சமயங்களும் சொல்லும் ஆன்மிகச் சிந்தனையின் உச்சமே, பகிர்ந்துண்ணல்தான். பசித்த வயிற்றில் விழும் சோறு, பகவான் மேல் சாற்றப்படும் புஷ்பங்களை விட புனிதமானது.
அப்படி போடப்படும் உணவும் ‘நான் உணவளிக்கிறேன்’ என்ற கர்வமில்லாது கொடுக்கப்பட வேண்டும். ரமண மஹரிஷியின் ஆசிரமத்தில் ஒரு முறை, உணவுவேளையில் ஆசிரம வாயிலில் குவிந்த பரதேசிகளை ஒழுங்குபடுத்த வேண்டி, ஆசிரமப் பணியாளர்கள், ‘முதல் பந்தி பக்தர்களுக்குதான்; பரதேசிகள் வெளியே போய் நில்லுங்கள்’ என்றார்களாம். எல்லாப் பரதேசிகளும் வெளியே போய் நின்றனர். கொஞ்ச நேரம் கழித்துத்தான் பகவான் ரமணரைக் காணவில்லை என்று பணியாளர்கள் உணர்ந்தனர். ‘பகவான் எங்கே?’ என்று தேடியலைந்தால் வெளியே நின்ற பரதேசிகளின் பின்னால் உட்கார்ந்து இருந்தாராம். ‘பரதேசிகளை வெளியே நிற்கச் சொன்னீர்களே, நானும் அவர்களில் ஒன்றுதானே. அதுதான் வெளியே நிற்கிறேன்,’ என்றாராம். சிப்பந்திகள் கண்ணீர் மல்க, அவரையும் மற்ற பரதேசிகளையும் உள்ளே அழைத்துப்போய் உணவளித்தனர்.
எந்தப் பந்தியிலும் முதலிடம் கொடுக்கப்பட வேண்டியது
பட்டுக்கரைகளைவிட பசியெடுத்த வயிறுகளுக்குத்தான். எழுத்தாளர் அமரர் தி.ஜானகிராமனின் ‘பரதேசி வந்தான்’ என்ற கதை இன்று படித்தாலும் சிலிர்க்கச் செய்யும் ஒரு காவியம். பணக்கார வக்கீல் ஒருவர், ஏக பந்தாக்களோடு ஒரே மகனுக்கு கல்யாணம் செய்கிறார். முதல் பந்தி பொறுக்கியெடுத்த பந்தி. எல்லாரும் பெரிய மனிதர்கள். இதற்கு நடுவில் ஒரு பிச்சைக்காரன் எப்படியோ நுழைந்து விடுகிறான். ஒரு வாய் சாப்பாடும் உள்ளே போய்விட்டது. வக்கீல் பார்த்து விட்டார். அவரது அகந்தை சும்மா இருக்குமோ? பிடித்து வெளியே தள்ளி விடுகிறார். தூண்டப்பட்ட பசித்தீயின் வெம்மையில் பரதேசி சாபமிடுகிறான்: ‘இன்னும் பதினைஞ்சு நாள்ல நீர் அழுதுகிட்டே போடற சாப்பாட்டை சாப்பிட வருவேன்.’ அதுபோலத்தான் நடந்தது. ஜம்மென்று இருந்த கல்யாண மாப்பிள்ளை, வக்கீலின் ஒரே பிள்ளை, அகால மரணமெய்தி விடுகிறான். சொன்னபடி பரதேசி வந்தான். ‘சாபமிட்டு என் பிள்ளையை பரிச்சிட்டியே...’ என்று வக்கீல் விம்முகிறார். ‘நானா சாபமிட்டேன்? என் பசி சாபமிட்டது’ என்கிறான் பரதேசி.
பசித்த உயிருக்குச் சோறிடல் நம் பாரம்பரியத்தின் பெரும் தரிசனம். வாசல் அரிசிமாவுக் கோலத்தில் எறும்புகளும் முற்றத்தில் உலர்த்தும் தானியத்தில் குருவிகளும் பசியாறின. காகங்களுக்கும்கூட பசியாற்றிய அறத்தைச் சார்ந்தே, நம் முன்னோர்களின் வாழ்வு அமைந்திருந்தது.
அடுத்த முறை நம் வீட்டுக் குழந்தைகள் தட்டில் சோற்றை மீதம் வைக்க, அதை குப்பைத்தொட்டியில் கொட்டும்போது சோமாலியாவில் அன்றாடம் பட்டினியில் சாகும் குழந்தைகளைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள். ஏனென்றால் மானிடத்தின் மிக உக்கிரமான நெருப்பு பசிதான். அதை அணைக்க நீளும் கைதான் ஆண்டவனுக்கு மிக அருகில் செல்லும் கை.

No comments:

Post a Comment