Saturday, April 5, 2014

சின்னமஸ்தா

சின்னமஸ்தா
தசமஹா வித்யாக்களில் ஆறாவது வித்யையாக பிரகாசிக்கும் தேவி, சின்னமஸ்தா. யாராவது தன் தலையைத் தானே துண்டித்துக் கொள்வார்களா? இத்தேவி தன் தோழியர்க்காக தன் தலையையே துண்டித்துக் கொண்டு அருளியவள்! பதினேழு அட்சரங்கள் கொண்டது இவளின் மூலமந்திரம். இவள் சூரியனைப் பழிக்கும் ஒளியை தன் உடலில் கொண்டருள்பவள். காளியினும் பயங்கர வடிவம் கொண்ட தேவி இவள். பகைவர்களை ஜெயிக்க சின்னமஸ்தா எனும் நாமத்தைக் கூற வேண்டும். யார் நாமத்தை மனதில் நினைத்த மாத்திரத்தில் சத்ரு நாசம், காரிய ஜெயம் ஏற்படுமோ, அந்த நாமத்தின் வடிவாக விளங்குபவள் சின்னமஸ்தா. செவ்வாய்க்கிழமை, சதுர்த்தசி, மக நட்சத்திரம் சேர்ந்த ராத்திரி, வீரராத்திரி எனப்படுகிறது. அந்த வீரராத்திரி தினத்தன்று அவதரித்த சின்னமஸ்தா தேவியை ஆராதிக்க திக் நியமம், கால நியமம், ஆஸன நியமம் என்று எதுவுமே கிடையாது. எந்த இடத்திலும் அமர்ந்து இத்தேவியை தியானிக்கலாம்.
இந்த அம்பிகையைத் தியானிக்கும்போது அவள் தோழிகளான வர்ணினீ, டாகினீ இருவரையும் சேர்த்தே தியானிக்க வேண்டும் என்பது விதி. கிருதயுகத்தில் ஒரு நாள் பரமேஸ்வரனுடன் இணைந்து மகிழ்ந்திருந்த மஹாமாயா தேவியின் உடலிலிருந்து இரண்டு சக்திகள் தோன்றினர். வர்ணினீ, டாகினீ என்ற அவ்விருவரும் அம்பிகையின் தோழிகளாகி அவளுக்கு வலப்புறமும் இடப்புறமும் அவளுடனேயே தொடர்ந்து சென்றனர். சின்னமஸ்தா தேவி செம்பருத்திப்பூவைப் போன்ற சிவந்த நிறம் கொண்டவள். தன் தலை முடியையே ஆடையாகக் கொண்டவள். திகம்பரி. எப்போதும் 16 வயதுடைய பருவக்குமரியின் தோற்றப் பொலிவைக் கொண்டவள். நீலோத்பல மலர்களால் ஆக்கப்பட்ட மாலையணிவதில் பிரியமுள்ளவள்.
பாம்பை பூணூலாகவும், மண்டையோடுகளை ஆபரணமாவும் அணிபவள். சின்னமஸ்தா தந்திரம் எனும் நூல் இவள் புகழ் பாடுகிறது. தன் காலடியில் ரதி-மன்மதனை மிதிக்கும் திருக்கோலம் காமக் குரோதாதிகளை அடக்கி ஆள்பவள் என்பதைக் குறிக்கிறது. எனவே இவள் ‘யோகிநி’ என்றும் ‘மதனாதுரா’ என்றும் போற்றப்படுகிறாள். இத்தேவியின் உருவ அமைப்பு குண்டலினி யோகத்தை எழுப்பும் நிலையைக் குறிக்கும் வண்ணம் உள்ளது. தன் காலடியிலுள்ள மன்மத-ரதி தேவியர் மூலாதாரத்தில் உள்ள சக்கரத்தை தூண்ட குண்டலினியானது நடுவிலுள்ள சுழுமுனை வழியே மேலே ஸஹஸ்ராரத்திற்குச் சென்று தலையைப் பிளந்து கொண்டு ப்ரம்ஹக்ரந்தி, விஷ்ணுக்ரந்தி, ருத்ரக்ரந்தி போன்ற முடிச்சுகளை அறுத்தெறிந்து வெளிக்கிளம்பி அமிர்தத்தை டாகினீ, வர்ணினீக்கு வழங்குவதைக் குறிக்கிறது.
சின்னமஸ்தா சுழுமுனை எனில் டாகினீயும். வர்ணினீயும் இடகலை, பிங்கலை வடிவமாய் அருள்வதைக் குறிக்கிறது. வர்ணினீ தேவி வெண்ணிறம் கொண்டவள். அலையலையான கேசம் கொண்டவள். கத்திரிக்கோல், கபாலம், இவற்றைக் கையில் தரித்தவள். தேவியின் ரஜோகுணத்தினின்றும் உதித்தவள். கழுத்து வெட்டப்பட்ட சின்னமஸ்தா தேவியின் உடலிலிருந்து எழும் ரத்த தாரையை மகிழ்வுடன் பருகுபவள். திகம் பரீ. தேவர்களாலும் மந்திரம் அறிந்தவர்களாலும் தியானிக்கப்படுபவள். டாகினீ தேவி, சின்னமஸ்தா தேவியின் உடலிலிருந்து எழும் ரத்தத்தை சந்தோஷத்துடன் பருகுபவள். பக்தர்களுக்கு வேண்டிய ஐஸ்வர்யத்தை அருள்பவள். தேவியின் தாமஸ குணத்திலிருந்து உதித்தவள். பராசக்தி. பகவதீ. மலர்ந்த முகத்தினள். மஹாமாயா என்ற அந்த சண்டீ தேவி, விடியற்காலையில் புஷ்பா நதியில் தன் தோழியருடன் நீராடச் சென்றாள்.
வெகுநேரம் நீராடி களைப்பெய்தியபோது, தோழியர் இருவரும் மிகவும் பசிக்குள்ளாயினர். தோழியரின் பசியைப் போக்க கத்தியினால் தன் சிரத்தை வெட்டி கையில் ஏந்திக் கொண்டாள் அம்பிகை. கழுத்து வெட்டப்பட்டதும் அதன் இடது நாடியினின்று பெருகிய ரத்தத்தை டாகினீயும், வலது நாடியினின்று பெருகிய ரத்தத்தை வர்ணினீயும் பருகி பசியாறினர். இந்த்ரியங்கள் அடங்கினாலும் அகங்காரம் இருக்கும். அதையும் துண்டிக்க வேண்டும் என உணர்த்த, மத்திய நாடியான கழுத்தின் நடுவிலிருந்து பெருகி வந்த அம்ருதமாகிய ரத்தத்தை தன்னுடைய சிரமே பருகுமாறு செய்தாள் அம்பிகை. இடி மின்னல் என்ற அடையாளங்களைக் காட்டி ஒலி, ஒளி என்ற இரு சக்திகளை இறைத் தன்மையிலிருந்து பேதப்படுத்தி வெளிக்கொணரும் மகாசக்தி இவள். இந்த ஒலி ஒளியோடு ஞானமாகவும் புகுகிறாள்.
இம்மூன்று நாடிகள் மூலமாக, அதையே இந்த மூவரின் ரத்த பானம் சித்தரிக்கிறது. மீண்டும் மூலத்தில் தோய வேண்டுமாயின் ஜீவ (உயிர்)முடிச்சை வெட்ட வேண்டும். அதனால் தான் இவள் தன் திருக்கரத்தில் கத்தியை ஏந்தியுள்ளாள். இவளது உருவம் பயங்கரமாக இருப்பினும் செயல் மட்டும் மிகவும் மதுரமாக இனிமையாக இருக்கிறது. எனவேதான் அபய வரத கரங்களை தரித்துள்ளாள் தேவி. மனிதனின் முதுகெலும்பில்தான் மின்சக்தி ஓடுகிறது. இடை, பிங்களை, சுழுமுனை என்ற மூன்று நாடிகளும் கூடும் புருவ மத்தியில்தான் யோகிகள் மின்சக்தி பாய்வதை உணர்வர். அந்த மின் சக்தியையே சின்னமஸ்தா என தேவி வழிபாடு போற்றுகிறது. அந்த மின் சக்தி சிரசின் ஸஹஸ்ராரத்தில் முட்டினால் அங்கிருந்து அம்ருதப் பிரவாகம் சகல நாடிகளிலும் பாயும். சுஷும்னா நாடியில் பெருகும் அம்ருத தாரையைப் பருகுபவர்களுக்கு மரணமே இல்லை. இதை குண்டலினி யோக சித்தி என்பர்.
இதை விளக்கவே தோழிகள் தாகம் தீர்க்க இத்தேவி தானே தன் சிரசைக் கொய்தாலும் சுஷும்னா நாடியினின்று பெருகும் அம்ருத தாரையைப் பருகி மறுபடியும் வெட்டப்பட்ட சிரசை தன் கழுத்தில் வைத்துக் கொண்டு பராசக்தியாய் பிரகாசித்து, தோழியருடன் மீண்டும் பரமேஸ்வரனிடம் வந்தாள். உடலில் உள்ள ரத்தம் வெளியேறியதால் நிறம் மாறி வெளுத்திருந்த தேவியிடம் பரமன் காரணம் கேட்க, தேவி நடந்ததைக் கூறினாள். இந்த தேவியே சின்னமஸ்தா என வணங்கப்படுகிறாள். இவளை தியானிக்கும் உபாசகன் சதாசிவனாகவே ஆகி விடுகிறான். சின்ன எனில் துண்டித்த என்றும் மஸ்தா எனில் தலையினள் என்றும் பொருள்படும். இன்றும் மக்களின் உயிர்காக்க ரத்ததானம் செய்யும் அடியவர்களுக்கு இத்தேவி சகல செல்வங்களையும் வழங்குகிறாள். இந்திரியங்களுக்கு அதிதேவதை இந்திரன். அவன் வஜ்ராயுதத்தால் மேகத்தை முட்ட அமுத நீர் பொழிகிறது.
மின்னலையே ஜடையாகக் கொண்டு காலாக்னி போல் ஜ்வாஜ்வல்யமாக ஜ்வலிக்கிறாள். இந்திரிய நிக்ரக வடிவம் சின்னமஸ்தா. அதனால்தான் ரதி-மன்மதன் மேல் தன் திருப்பாதங்களை வைத்து பக்தர்களுக்கு சிற்றின்ப சுகங்கள் அநித்தியமானது என உணர்த்துகிறாள் தேவி. கண், வாய், செவி, மூக்கு, மேனி ஆகிய பஞ்சேந்திரியங்களோடு, மனம் முதலான ஆறு புலன்களையும் அடக்குவதால் இவள் சஷ்டி தேவீ என்றும் போற்றப்படுகிறாள். மேலும் பரசுராமர் வெட்டிய அவரின் தாயின் தலையே ரேணுகா என்பர். பரசுராமர் ஆறாவது அவதாரம். இவள் அருள் பெற்றவர்களுக்கு சகல தேவதா சித்திகளும் குண்டலினி சித்தி உட்பட விளையாட்டு போல சுலபமாக சித்திக்கும். பெண்கள் இவள் மந்திரத்தை ஜபித்தால் அவர்கள் குடும்பத்தை விட்டு விலகி யோகினிகளாக மாறுவர் என்று கூறப்பட்டுள்ளது.
சக்தி சங்கம மந்திரம் எனும் நூலில் இத்தேவியை வாமாசார மார்க்கத்தில் வழிபடும் முறைகள் பற்றி குறிப்பிட்டுள்ளது. சாக்த ப்ரமோதத்திலும் இந்த சின்னமஸ்தாவின் பெருமைகள் கூறப்பட்டுள்ளது. பௌத்தர்கள் சின்னமஸ்தாவை வணங்குகின்றனர். சின்னமுண்டா, வஜ்ரயோகினி, ஸர்வபுத்தர் எனும் பெயர்களில் திபேத்தில் சின்னமஸ்தா வணங்கப்படுகிறாள். இவளின் தோழிகளை வஜ்ரவைரோசனீ, வஜ்ரவர்ணிநீ என்றும் கூறுவர். ஹிமாசலப்பிரதேசத்தில் உள்ள சிந்தாபூரணியில் சின்னமஸ்தாவிற்கு ஆலயம் உள்ளது. வாரணாசியில் உள்ள ராம் நகரிலும் இத்தேவி ஆலயம் கொண்டருள்கிறாள். அஸ்ஸாம் காமாக்யா ஆலயத்திலும் மேற்கு வங்கம் விஷ்ணுபுரத்திலும் சின்னமஸ்தாவுக்கு ஆலயங்கள் உண்டு. நேபாளத்தில் உள்ள காட்மண்டு படுகைக்கு அருகே உள்ள சங்கு நாராயணா கோயில் அருகேயும் இத்தேவி ஆலயம் கொண்டருள்கிறாள்.
இந்த தேவியை ப்ரசண்ட சண்டிகா என்றும் பக்தர்கள் ஆராதிக்கின்றனர். இப்பெயராலேயே ‘ஸ்ரீவித்யார்ணவ தந்த்ரம்’ இவள் படலத்தைத் துவக்குகிறது. இச்சக்தியின் புருஷர் ‘விகராளிகர்’ என மந்த்ர சாஸ்திரம் கூறுகிறது. இவளை உபாசிக்க அறம், பொருள், இன்பம், வீடு எனும் சதுர்வித புருஷார்த்தங்களும் சித்திக்கும். முக்தி அளிக்கும் மந்திரம் மூவுலக வசிய மந்திரம் என பல மந்திர பேதங்கள் இந்த தேவிக்குரிய மந்திரங்களில் உண்டு. கோரிய வரங்களை பக்தர்களுக்கு அருளும் பரம கருணாமூர்த்தினி இவள். புத்திரன் இல்லாதவன் புத்திரனையும் வறுமையில் வாடுபவன் தனத்தையும் பெறுவான்.
சின்னக்க்ரீவா, சின்னமஸ்தா, சின்னமுண்டதரா, அக்ஷதா, க்ஷோதக்ஷேமகரீ, ஸ்வக்ஷா, க்ஷோணீசாச்சாதனக்ஷமா, வைரோசனீ, வரோரோஹா, பலிதானப்ரஹர்ஷிதா, பலிபூஜித பாதாப்ஜா, வாஸுதேவப்ரபூஜிதா எனும் நாமங்களால் இவளை அர்ச்சிக்க, வேண்டிய வரங்கள் உடனே கிட்டிடும்.
இத்தேவியின் ஏகாக்ஷர மந்திரமான ‘ஹூம்’ மாபெரும் சக்தி கொண்ட பீஜாக்ஷரமாகும். சின்னமஸ்தா வழிபாட்டால் சத்ரு நாசம் உண்டாகும். சத்புத்திரர்கள், மிகுந்த ஐஸ்வர்யம், கவித்துவம், பாண்டித்யம், சாஸ்த்ர ஞானம், பாவநாசம், ஸர்வசௌபாக்யங்கள் போன்றவை கிட்டும்.
சின்னமஸ்தா தியானம்
பாஸ்வன் மண்டல மத்யகாம் நிஜசிர: சின்னம் விகீர்ணாலகம்
ஸ்பாராஸ்யாம் ப்ரபிபத் களாத்ஸ்வருதிரம் வாமே கரே பிப்ரதீம்
யாபாஸக்த ரதிஸ்மரோபரிகதாம் ஸ்க்யௌ நிஜே டாகிணீ
வர்ணின்யௌ ப்ரித்ருச்ய மோதகலிதாம் ஸ்ரீசின்ன மஸ்தாம் பஜே!
சூர்ய மண்டலத்தின் மத்தியில் இருப்பவளும் அங்கங்கள் பரந்து விரிந்தவளும் திறந்த வாயையுடையதும் தன் கழுத்திலிருந்து பெருகுகின்ற ரத்தத்தைக் குடிக்கின்றதுமான துண்டிக்கப்பட்ட தலையை இடது கையில் பிடித்திருப்பவளும் ரதியோடு இணைந்திருக்கும் மன்மதன் மேல் இருப்பவளும் டாகினீ, வர்ணினீ ஆகிய இரு தோழியரோடு மகிழ்ந்திருப்பவளுமான ஸ்ரீசின்னமஸ்தா தேவியை தியானிக்கிறேன்.
வர்ணினீ தேவி தியானம்
தக்ஷே சாதிஸிதா விமுக்த சிகுரா கர்த்ரீம் ததா கர்பரம்
ஹஸ்தாப்யாம் தததீ ரஜோகுணபவா நாம்னாபி ஸா வர்ணினீ
தேவ்யா: சின்னகபந்தத: பததஸ்ருக்தாரம் பிபந்தீ முதா
நாகாபத்த சிரோமணிர் மனுவிதா த்யேயா ஸதா ஸா ஸுரை:
தேவியின் வலதுபக்கம் இருப்பவளும் வெண்ணிறத்தினளும் அவிழ்ந்த கூந்தலையும் கத்திரிக்கோல், கபாலம் இவற்றை கரங்களில் ஏந்தியிருப்பவளும் ரஜோ குணமுடையவளும் சின்னமஸ்தா தேவியின் வெட்டப்பட்ட கழுத்திலிருந்து பெருகி வரும் ரத்தமாகிய அமிர்தத்தை மகிழ்வுடன்
குடிப்பவளும் நாகத்தால் கட்டப்பட்ட சிரோ ரத்னத்தைக் கொண்டவளும் மந்திரம் அறிந்தவர்களாலும் தேவர்களாலும் துதிக்கப்படும் வர்ணினீ தேவியைத் தியானிக்கிறேன்.
டாகினீ தேவி தியானம்
ப்ரத்யாலீடபதா கபந்த விகளத்ரக்தம் பிபந்தீ முதா
ஸைஷா யா ப்ரளயே ஸமஸ்த புவனம் போக்தும் க்ஷமா தாமஸீ சக்தி: ஸாபி பராத்பரா பகவதீ நாம்னா பரா டாகினீ த்யேயா த்யானபரை: ஸதா ஸவியைம் பக்தேஷ்டபூதிப்ரதா
இடது, வலது கால்களை முன்னும் பின்னுமாக வைத்துக்கொண்டு தேவியின் வெட்டப்பட்ட கழுத்திலிருந்து பெருகிவரும் ரத்தத்தை அருந்துபவளும் ப்ரளய காலத்தில் எல்லாவற்றையும் உண்ணும் சக்தி மிக்கவளும் பக்தர்களுக்கு அருள்பவளும் தாமஸ குணத்தில் உதித்தவளுமான டாகினீ தேவி பக்தியுடன் தியானிப்பவர்களால் தியானிக்கப் படத்தக்கவளாய் இருக்கிறாள்.
சின்னமஸ்தா காயத்ரீ ஓம் விரோசின்யை வித்மஹே சின்ன மஸ்தாயை தீமஹி தன்னோ தேவி: ப்ரசோதயாத்.

No comments:

Post a Comment