Friday, April 4, 2014

அரசர்கள், மற்றும் அரசாட்சி தோன்றிய வரலாறு

** அரசர்கள், மற்றும் அரசாட்சி தோன்றிய வரலாற்றை விளக்கும்படிக் கேட்டார். “ இன்பம் துன்பம், பசி தாகம், பிறப்பு இறப்பு முதலியவை மனிதர்கள் அனைவருக்கும் பொதுவானவை. அப்படி இருக்கையில் எப்படி ஒருவன் மட்டும் அவர்களுக்கு தலைவனாக இருக்கக்கூடும்? அறிவு ஜீவிகள் பலர் இருக்க அது எப்படி ஒருவன் மட்டும் ஆளத்தக்கவன் ஆவான்? இதற்கான காரணம் சாதாரணமாய் இராது. ஆகவே அது பற்றி விளக்க வேண்டும் ” என்றார்.
பீஷ்மர் புன்னகைத்தார். தருமரை நோக்கி நிச்சயமாக அரசனான அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது இது. தருமருக்கு ஆசி வழங்கி, பதிலை கூறத் தொடங்கினார்.
“ ஆதி காலத்தில், கிருத யுகத்தில் மக்கள் யாவரும் தரும நெறியை பின் பற்றி வாழ்ந்தனர். ஒழுக்கம் தவறாத அக்காலத்தில் மன்னனும் இல்லை, தண்டனையும் இல்லை. காலம் செல்லச் செல்ல தரும நெறி குன்றியது. அறிவின் குறைவால் ஆசை வயப்பட்ட மனிதர் தம்மிடம் இல்லாது, பிறரிடம் உள்ள பொருளைப் பெற விரும்பினர். அதனால் திருட்டு, கொலை, சூது, சினம் முதலிய கெட்ட குணங்கள் தலைவிரித்து ஆட தொடங்கின. எதை செய்வது, எதை செய்யக்கூடாது என வரைமுறை இன்றி போயிற்று. காமம் மிகுந்தது, மாதரின் ஒழுக்க நெறியும் குறைந்தது. வேத நெறி பாழ்பட்டது. தரும நெறி சிதைந்தது. இது கண்டு தேவர்கள் கவலையுற்றனர். பிரம்ம தேவனிடம் சென்று “ பகவானே..!!! அருள் புரியுங்கள். உலகில் தருமம் கெட்டது. அதர்மம் சூழ்ந்துள்ளது. நெறி கெட்ட உலகை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும் ” என முறையிட்டனர்.
பிரம தேவர் ஒரு லட்சம் அத்தியாயங்கள் கொண்ட நீதி சாத்திரத்தை இயற்றினார். அதில் அவர் விரிவாக அறம், பொருள், இன்பம் மூன்றையும் விளக்கினார். இம் மூன்றைக் காட்டிலும் மோட்சம் என்பது வேறானது என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் அதில் சத்துவம், ராஜசம், தாமதம் ஆகியவை பற்றியும், தேசம், காலம், முயற்சியின் பயன், ஞானம், கருமம், மந்திர ஆலோசனை, அரசன், அமைச்சன், தூதன், ஒற்றன் ஆகியோர் இயல்பு பற்றியும், சந்திவிக்கிரகம், வெற்றிக்குரிய வழிகள், நால் வகை படையின் இயல்புகள், பெற முடியாத பொருளைப் பெறும் உபாயம், பெற்றதைக் காக்கும் முறை, குற்றங்களுக்கு ஏற்ற தண்டனை ஆகியவை பற்றியும் விரிவாக இந்த தண்டனை நூலில் விளக்கப்பட்டுள்ளன.
பிரமதேவர் இயற்றிய இந்த நீதி சாஸ்திரத்தை சிவன், மக்கள் ஆயுள் வரவரக் குறைந்து வருவதைக் கண்டு பத்தாயிரம் அத்தியாயங்களாக அமைத்து அதற்கு “வைசாலட்சம்” என்று பெயரிட்டார். இந்திரன் இதனை இன்னும் சுருக்கி “பாஹூதந்தகம்” எனப் பெயரிட்டார். அதனைப் பிரகஸ்பதி மூவாயிரம் அத்தியாயங்களாக்கி 'பாரஹஸ் பத்தியம்' என்று பெயரிட்டார். சுக்கிரர் அதனை ஆயிரம் அத்தியாயங்களாகச் சுருக்கினார். இவ்விதம் மக்கள் ஆயுள் குறைவைக் கருதி இந்த நீதி சாஸ்திரம் மாமுனிவர்களால் சுருக்கமாகக் கூறப்பட்டுள்ளது. இந்த நூலை பின்பற்றி ஒருவன் மக்களிடம் நல்ல நெறிகளை புகுத்தமுடியும். அத்தகைய ஒருவனே அரசன் என்பவன்.
அரச பரம்பரை தோற்றம்:
========================
தேவர்கள் திருமாலிடம் சென்று மக்களை அடக்கி ஆளத்தக்க பெருமை மிக்க ஒருவனை தருமாறு வேண்டினர். திருமால் 'விஜரஸ்' என்னும் புத்திரனை உண்டாக்கினார். ஆனால் விஜரஸ் மன்னாக விரும்பவில்லை. துறவியானார். அவருக்கு மகனாகப் பிறந்த கீர்த்திமான் என்பவரும் துறவுக் கோலம் பூண்டார். அவருக்கு மகனாகக் கர்த்தமர் என்பவர் பிறந்தார். அவருக்கு மைந்தனாக அனங்கன் பிறந்தார். அவர் தண்ட நீதியில் வல்லவராக ஆட்சி புரிந்தார். அனங்கனுக்குப் புதல்வனாக அதிபலன் என்பவன் பிறந்து சிறந்த முறையில் ஆண்டான். அவன் தருமதேவரின் மகளான சுந்தியை மணந்து காம வயப்பட்டு அவளிடம் மயங்கிக் கிடந்தான்.
அவர்களுக்கு வேனன் பிறந்தான். அவன் கொடுங்கோலனாகத் திகழ்ந்தான். தரும நெறி தவறிய அவனை தவ முனிவர்கள் கொன்றனர். வேனனுக்கு பிறந்த முதல் மகன் நிஷதன் ஆவான். குள்ளமாகவும், கொடூரனாகவும் காணப்பட்ட அவனிடமிருந்து குரூரமான நிஷாதர்கள் தோன்றினர். அவர்கள் விந்திய மலையை இருப்பிடமாகக் கொண்டனர். அவர்கள் மிலேச்சர்கள் எனப்பட்டனர்.
வேனனின் இரண்டாவது மகன் பெயர் பிருது. அவன் இந்திரனுக்கு நிகரானவன். தனுர் வேதத்தில் சிறந்தவன். உலகிற்கு நன்மை புரிந்து ஆட்சி செய்ததால் உத்தமன் என போற்றப்பட்டவன். “ ஆசை, கோபம், ஆணவம் இன்றி விருப்பு, வெறுப்பு இல்லாமல் ஆட்சி புரிய வேண்டும் என்றும் தருமம் தவறியவர்களை தண்டிக்கத் தயங்கக் கூடாது “ என்று சான்றோர் அவனுக்கு அறிவுரை கூறினர். அவனும் அவ்வாறே ஆண்டதால், ஆட்சி பெருமை மிக்கதாய் இருந்தது. உழவுத்தொழில் சிறந்தது. காட்டைத் திருத்தி நாடாக்கினான். மலைகளை உடைத்து பூமியை சமமாக்கினான்.
பூமிதேவி ரத்தினங்களை அளித்து, பிருது மன்னனை வாழ்த்தினாள். அவன் காலத்தில் நாடே மகிழ்ச்சியாய் இருந்தது. பஞ்சம் எங்கும் இல்லை. வளம் கொழித்தது. கள்வர் பயம் இல்லை. கொடிய விலங்குகள் பற்றிய அச்சமும் மக்களிடம் இல்லை. விஷ்ணு, விரஜஸ், கீர்த்திமான், கர்த்தமன், அனங்கன், அதிபலன், வேனன், பிருது என்ற வரிசைப் படி விஷ்ணுவின் எட்டாவது சந்ததி பிருது மன்னன். அவனால் தரும நெறி எங்கும் தழைத்தோங்கியது. இவ்வாறு அரச பரம்பரை தோன்றியது. அவன் திருமாலின் அம்சமாகவே கருதப்பட்டான். உலக பாலர் உருவாய் நின்று உலகம் காத்தலின் இறைவன் என்றும் அழைக்கப்பட்டான். இவ்வாறு அரச பரம்பரை தோன்றியது ” என்று பிதாமகர் கூறி முடித்தார். ஐயம் தீர்ந்து மகிழ்ந்தார் தருமர்.
** தனது அடுத்த கேள்வியை தருமர் கேட்டார் “ நான்கு குலங்களுக்கும் உள்ள பொதுவான தர்மங்கள் யாவை? சிறப்பானவை யாவை? “
பீஷ்மர் சொல்கிறார் “ சினம் இன்மையும், சத்தியமும், நேர்மையும், தானமும், ஒழுக்கமும் எல்லா குலங்களுக்கும் உள்ள பொது தர்மங்களாகும். அடக்கம், வேதம் ஓதுதல், ஓதுவித்தல், வேள்வி செய்தல், செய்வித்தல், தானத்தையும், யாகத்தையும் செய்வதுடன் கிடைத்ததைக் கொண்டு வாழ்தல், தனக்கென வாழாது, நாளைக்கு என சேமித்து வைக்காது இருத்தல் ஆகியவை அந்தணர்க்குரிய தருமங்கள் ஆகும்.
யாகம் செய்தல், வேதம் ஓதுதல், ஈதல், திருடர்களை ஒழித்தல், விடா முயற்சி, போர்க்களத்தில் வீரத்துடன் போர் புரிதல், தீயவர்களை தண்டித்தல், நல்லவர்களை காத்தல் ஆகியவை க்ஷத்திரியர்களின் தருமங்கள் ஆகும்.
நாணயமான முறையில் பொருள் சேர்த்தல், தானம் புரிதல், பசுக்களைப் பாதுகாத்தல் முதலியவை வைசியரின் தருமங்களாகும்
மேற்கூறிய மூவகை வருணத்தார்க்கும் தொண்டு செய்வது நான்காம் வருணத்தாரின் தருமமாகும். தங்களுக்கு தொண்டு செய்பவரை என்றும் துன்பத்தில் ஆழ்த்தாமல், அவர்களை பாதுகாத்து, சமத்துவத்தை வளர்ப்பது மற்ற மூன்று வர்ணத்தாரின் முக்கிய பனி.” என்றார்.
மேலும் பேச தொடங்கிய தருமர் சிறந்தது அரச தருமம் எது ? என்று தன் அடுத்த கேள்வியை தொடுத்தார்.
பிரமசர்யம் - குருவின் கட்டளைக்கு அடங்கி நடக்க வேண்டும். அவருக்கு பணிவிடை செய்ய வேண்டும். வேதம் ஓத வேண்டும். அடக்கம், சுறுசுறுப்பு இவை பிரமசர்யம் ஆகும்
கிரகஸ்தம் - இல்லற தருமத்தில் தலையாயது விருந்தோம்பல். மனைவியுடன் கூடி தான தருமத்துடன் வாழ்தல் இல்லற தருமமாகும். மனைவி மற்றும் மக்களை வறுமையில் இருந்தும், பினி மற்றும் ஆபத்துகளில் இருந்து காப்பது இல்லற தருமமாகும்.
சன்யாசம் - துறவு மேற்கொண்டு பற்றற்று இருப்பது சன்யாசம். உயிர் வாழ சிறிதே உண்பர் துறவிகள். ஒரு நாளைக்கு ஒரு வேளை, அதுவும் எட்டுக் கவளமே உண்பர். ஒரு நாள் தங்கிய ஊரில் மறுநாள் தங்குவதில்லை. புலன் ஐந்தும் அடங்கும் வகையில் தியானம், தவம் ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பது சன்யாச தர்மமாகும்.
யாவற்றினும் சிறந்தது அரச தருமம் - யானையின் அடியில் மற்ற விலங்குகளின் அடிகள் அடங்கி விடுவது போல, அரச தருமத்தில் அனைத்து தருமங்களும் அடக்கம். எந்த நாட்டில் அரச தருமம் குன்றுகிறதோ அந்த நாட்டில் அனைத்துத் தருமங்களும் சிதைந்து போகும். வேதம் ஓதுதல், ஓதுவித்தல், தானம், தருமம் ஆகிய அனைத்து தருமங்களும் அரச தருமத்தையே ஆதாரமாகக் கொண்டுள்ளன. ஆதலால் அரச தருமத்தை விட மேலானதாக எந்தத் தருமமும் இல்லை.
மாந்தாதா என்ற மன்னன் அரச தருமங்களை விளக்குமாறு திருமாலிடம் முறையிட வேள்வி செய்தான். திருமால் இந்திரன் வடிவில் வந்து அரச தருமங்களை விளக்கினார். “ நல்லாட்சி நடத்தும் அரசர்களை தேவர்களும் பாராட்டுவர். உலகில் நடைபெறும் நிகழ்ச்சிகளை கூர்ந்து கவனித்து நாடாளும் மன்னன் எல்லோராலும் போற்றப்படுவான். “ என்றார். “ எனவே அரச தருமத்திற்கு மேலான தருமம் எங்கும், எக்காலத்தும் கிடையாது. எனவே தருமா, நீயும் அரச தருமத்தில் உறுதியோடு இருப்பாயாக
“ தருமா..பகை நட்பு இன்றி அனைவரையும் சம நிலமையில் வைத்து அரசாளும் அரசன் துறவிகள் பெறும் மேலான கதியை அடைவான். போர்க்களத்தில் வெற்றி அல்லது வீர மரணம் என கடைசி வரை போராடும் மன்னன் துறவிக்கு நிகரானவன். நீதி தவறாது நாடாளும் அரசனை நாட்டில் இருக்கும் மக்கள் செய்யும் தருமங்களின் புண்ணிய பலனில் நான்கில் ஒரு பாகம் வந்தடையும். அதேபோன்று கொடுங்கோல் ஆட்சி புரியும் மன்னனை, நாட்டில் வாழும் மக்கள் செய்யும் பாவத்தில் நான்கில் ஒரு பாகம் வந்து சேரும். கானகம் சென்று கடுந்தவம் செய்யும் முனிவர்களை விட நாட்டை நன்கு பரிபாலிக்கும் அரசன் நூறு மடங்கு தருமத்தை அடைவான். நாட்டில் நல்லாட்சி இல்லையெனில் நீர் நிலைகளில் பெரிய மீன் சிறு மீன்களை விழுங்குவதைப்போல வலியோர் மெலியோரை விழுங்கி விடுவர். “
முற்காலத்தில் நாட்டில் அரசன் இல்லாததால் எங்கும் அராஜகம் நிலவியது. மக்கள் பிரமனிடம் சென்று “ நாட்டில் எங்கும் குழப்பம் நிலவுகிறது. நாட்டை நல்வழிப் படுத்தி நல்லாட்சி அமைய ஒரு அரசரை அளித்தால் அவரை வழிப்படுவோம்' “ என முறையிட்டனர். பிரம தேவர் மனுவை அரசனாக இருக்கச் சொன்னார். நாட்டாட்சி என்பது கடினமான செயல் என மனு தயங்க, மக்கள் ஒத்துழைப்பதாக வாக்களித்தனர். நல்லாட்சியை மக்களுக்கு மனு வழங்கி, யாவரும் போற்றத்தக்க மேலான கதியை அடைந்தான்.
முன்னொரு சமயம் வசுமனஸ் என்னும் அரசன் தேவ குருவான பிரகஸ்பதியிடம் சென்று தனக்கு ராஜநீதியை அருளும்படி கேட்டான். அவர் “ உலகில் தருமம் நிலைத்திருக்க வேண்டுமானால் நல்ல அரசன் இருக்க வேண்டும். அரசனிடம் கொண்ட அச்சம் காரணமாகத்தான் மக்கள் ஒருவரை ஒருவர் வஞ்சிக்காமல் இருக்கின்றனர். சூரியனும், சந்திரனும் இல்லையெனில் உலகம் இருளில் மூழ்கிவிடும். அது போல அரசன் இல்லா நாடும் கெடும். ஒழுங்காக நாட்டை ஆளும் அரசன் இல்லையெனில் மேய்ப்பவன் இல்லா பசு மந்தைப் போல நாடு சிதறிப் போகும். தண்ட நீதியில்லை எனில் நாட்டில் திருடர் பயம் அதிகரிக்கும். அப்பாவிகள், தருமவான்கள் ஆகியோரை அடித்துத் துன்புறுத்தி பொருளை கவர்ந்து செல்வர். உத்தமர் ஆட்சியில் மக்கள் கதவைத் திறந்து வைத்து உறங்குவர். விலை உயர்ந்த அணிகளை அணிந்து மகளிர்..ஆடவர் துணையின்றி அச்சமின்றி வெளியில் சென்று வருவர். ஒரு நாட்டில் பெண்கள் பயமின்றி வாழ்கிறார்கள் எனில் அது அந்த நாட்டில் நல்லாட்சி நிலவுகிறது என்பதற்கான அடையாளமாகும்.
மன்னன் முறையே அக்கினி, சூரியன், மிருத்யு, குபேரன், யமன் ஆகிய ஐந்து தேவர்களின் வடிவமாவான். எனவே அரசனை பெருந்தெய்வமாக வணங்க வேண்டும். உடன் பிறந்தவனாயினும், மகனாயினும், நண்பனாகினும் அரசனுக்கு துரோகம் இழைத்தால் கடுமையாக தண்டிக்கப்படுவான். அரசனின் சினத் தீயிலிருந்து யாரும் தப்ப முடியாது. நாடாளும் மன்னன் போஜன், விராட், சாம்ராட், க்ஷத்திரியன், பூபதி என்றெல்லாம் புகழப்படுகிறான். அரசன் அறிவு மிக்கவரை அமைச்சராக வைத்துக் கொள்ள வேண்டும். நாட்டு மக்களை காப்பது அவனது தலையாய கடமை” என்று கூறினார் பீஷ்மர்.
இவ்வாறு அரச நீதியை பற்றி கூறி முடித்தார். இதை கேட்டுகொண்டிருந்த அணைத்து அரசரும், வியப்பில் ஆழ்ந்து பீஷ்மருக்கு நன்றி தெரிவித்தனர். தருமர் பீஷ்மரிடம் தாமும் அவ்வாரே ஆட்சி புரிவதாக வாக்களித்தார். மனம் மகிழ்ந்த கங்கையின் புத்திரன் கண்ணீர் பெருக ஆசி வழங்கினார்

No comments:

Post a Comment