Thursday, April 3, 2014

மந்திர ரகசியம்

மந்திர ரகசியம்
உயர்நிலையை, முக்தியை, அதாவது, மீண்டும் பிறவாத நிலையை அடைய வேண்டும். அடைவதற்கு முயற்சியைச் செய்ய வேண்டும். நம்முடைய ஞான நூல்கள் பலவும் சொல்லக்கூடிய தகவல்தான் இது. நாம் முயற்சி செய்யாமலேயே, தெய்வம் நமக்கு முக்தி அளிப்பதற்கு வருவதாக வைத்துக்கொள்வோம். தெய்வம் நம்மிடம் வந்து, ‘‘பக்தா! உன் பக்திக்கு மெச்சினேன். வா என்னுடன். நான் உனக்கு முக்தி தருகிறேன்’’ என்று சொன்னால், ‘ஆகா! தெய்வமே வந்து முக்தி தருகிறது’ என்று குதூகலித்து, எத்தனை பேர் இறைவனுடன் போவோம்? ‘‘அடுத்த வீட்டுக்காரனுக்கு முக்தி கொடு! எதிர்த்த வீட்டுக்காரனுக்கு முக்தி கொடு! அவர்களைக் கூட்டிக்கொண்டு போ! என்னை விடு! நான் பின்னால் வருகிறேன்’’ என்றல்லவா சொல்வோம்?
ஒருக்காலும் போக மாட்டோம். மற்றவர்கள் நிலை எப்படியோ? இக்கட்டுரையை எழுதும் அடியேன், ‘‘ஆ! சுவாமி முக்தி தருகிறார். இதோ! புறப்பட்டு விட்டேன்’’ என்று ஒருக்காலும் போகமாட்டேன். அப்படியென்றால், அந்த ஞானநூல்கள் எல்லாம் எதற்காக அப்படிக் கூற வேண்டும்? நாம் இங்கு இருக்கும்போதே, அமைதியாக, நிம்மதியாக, சந்தோஷமாக வாழவேண்டும் என்பதற்காகவே, அந்த ஞானநூல்கள் அவ்வாறு கூறின. அதற்கு உண்டான நல்வழிகளைத் திருமூலர் எளிமையாகக் கூறுகிறார்.
‘‘இறைவனுடைய அருளைப் பெறுவதற்கு அந்த வழியா, இந்த வழியா, எந்த வழியில் செல்வது என்று தடுமாறாதீர்கள்! அஷ்டாங்க யோகமாகிய தவ வழியிலே சென்று, தன்னை மறந்த சமாதி நிலையிலே நில்லுங்கள்! நன்மை தரும் இந்த வழியிலே செல்பவர்களுக்கு, ஞானயோக நிலை கைகூடும். அவ்வாறு ஞானயோக நிலையை அடைந்தவர்களுக்கு மீண்டும் பிறவி இல் லை. முக்தி அடைவார்கள் அவர்கள்’’ என்கிறார், திருமூலர்.
அந்நெறி இந்நெறி என்னாது
அட்டாங்கத்து
அந்நெறி சென்று சமாதியிலே நின்
மின்
நன்னெறி செல்வார்க்கு ஞானத்தில்
ஏகலாம்
புன்னெறி ஆகத்தில் போக்கில்லை
ஆகுமே
(திருமந்திரம் - 551)
தடுமாற்றம் வேண்டாம், இது தான் வழி என்று சொன்ன திருமூலர், மேலும் சில விவரங்களைக் கூறுகிறார். ஓர் ஊருக்குச் செல்ல வேண்டுமென்றால், முன்னேற்பாடுகள், வழியில் உள்ள சௌகரியங்கள் முதலானவைகளைப் பார்க்கிறோமல்லவா? அதுபோல, யோகநிலைக்கு உண்டான வழிமுறைகளை விரிவாகவே கூறுகிறார் திருமூலர். எட்டு வகை யோகங்கள் என்று பொதுப்படையாகச் சொன்ன திருமூலர், அந்த அஷ்டாங்க (8) யோகங்கள் எவையெவை எனவும் கூறுகிறார். இயமம், நியமம், பலவிதமான ஆசனங்கள், நலமிக்க பிராணாயாமம், பிரத்தியாகாரம், வெற்றிமிக்க தாரணை, தியானம், சமாதி என்னும்
எட்டுவிதமான யோகங் களும் முக்தியை
அளிக்கும் என்கிறது திருமூலரின் பாடல்,
இயமம் நியமமே எண்ணிலா ஆதனம்
நயமுறு பிராணாயாமம் பிரத்தியாகாரம்
சயமிகு தாரணை தியானம் சமாதி
அயமுறும் அட்டாங்கம் ஆவதும் ஆமே!
(திருமந்திரம் - 552)
இப்பாடலில் உள்ள ஒருசில அடைமொழிகளைக் கவனிக்க வேண்டும். பிராணாயாமம் ஆயுள் விருத்திக்கும் காரணம். அதனால், அதை ‘நயமுறும் பிராணாயாமம்’ என்றார். அடுத்து, சமாதி-தியானம்-தாரணை ஆகியவை வெற்றி தரும். ஆதலால் அவற்றிற்கு ‘சயமிகு’ என அடைமொழி கொடுத்தார்.
இவ்வாறு அஷ்டாங்க யோகங்களில் பெயர்களைக் கூறிய திருமூலர், அடுத்து அவை ஒவ்வொன்றைப் பற்றியும் விவரிக்கிறார். முதலில் இயமம் - கொலை செய்யாதவன், பொய் சொல்லாதவன், திருட்டுக்குணம் இல்லாதவன், மதிக்கும்படியான நற்குணங்கள் வாய்க்கப் பெற்றவன், நல்லவன், அடக்கம் உடையவன், நடுநிலையாளன், கிடைத்ததைப் பிறருக்கும் பங்கிட்டுக் கொடுத்து உண்பவன், குற்றம் அற்றவன், கள் குடிக் காதவன், காமவேட்கை அற்றவன் (மாற்றான் மனைவியை விரும்பாதவன்) எவனோ, அவனே இயமம் என்னும் பயிற்சியில் நின்றவன் ஆவான். அதாவது, மேற்கண்ட குணங்களைக் கடைபிடித்து ஒழுகுவதே - இயமம் என்பது கருத்து.
கொல்லான் பொற்கூறான் களவிலான் எண்
குணன்
நல்லான் அடக்கம் உடையான் நடுச்செய்ய
வல்லான் பகுத்து உண்பான் மாசிலான் கள்
காமம்
இல்லான் இயமத்திடையில் நின்றானே!
(திருமந்திரம் - 554)
இயமத்திற்கு இவ்வாறு சொன்னவர், அடுத்து நியமத்திற்கு உண்டானவைகளை விவரிக்கிறார். அதில் பத்துவிதமான தகவல்கள் விவரிக்கப்பட்டுள்ளன.
தூய்மையான மனம், கருணை காட்டும் உள்ளம், குறைந்த அளவு உண்பது, பொறுமை, நேர்மை, உண்மையே பேசுதல், நடு நிலைமை தவறாது இருத்தல், பெண்பித்து, திருட்டு, கொலை ஆகிய தீயவைகளை நீக்குதல் என்னும் பத்துவிதமான பண்புகளையும் கடைப்பிடிக்க வேண்டும். அப்படிக் கடைப்பிடிப்பவனே நியமத்தன் எனப்படுவான்.
தூய்மை அருள் ஊன்சுருக்கம் பொறை
செவ்வை
வாய்மை நிலைமை வளர்த்தலே மற்றும்
இவை
காமம் களவு கொலை எனக் காண்பவை
நேமி ஈர்ஐந்து நியமத்தன் ஆமே!
(திருமந்திரம் - 556)
இதற்கு அடுத்ததாகத் திருமூலர், நூற்று இருபத்தாறு ஆசனங்கள் என்று சொல்லி, அதற்கு மேலும் ஆசனங்கள் உண்டு எனக்கூறி இருக்கிறார். இவ்வாறு, ஒவ்வொன்றின் அடிப்படை உண்மையையும் உணர்ந்து செயல்பட்டால், சிவனருள் நமக்குப் பரிபூரணமாகக் கிடைக்கும் என்று சொல்லிக் கொண்டு வந்த திருமூலர், நம்மை அனுபவசாலியாகவும் ஆகச் சொல்கிறார். அனுபவத்தில் வராதவரை, எதுவாக இருந்தாலும் சரி! அது பயன்படாது. உதாரணமாக, கல்லூரியில் ஒருவர், ‘ஆட்டோமொபைல்’ பற்றி விரிவாகப் படித்தவர், அதில் முதல் வகுப்பில் தேறியவர். சந்தேகமே இல்லை.
ஆனால், சில ஆண்டுகள் கல்லூரியில் படித்த அவரைவிட, ஓர் ஆட்டோ மொபைல் ஒர்க் ஷாப்பில் வேலை செய்யும் சிறுவன், பழக்கத்தின் மூலமாக ஒரு வண்டியை முழுவதுமாகப் பிரித்துப் போட்டு, அதிவிரைவில் மறுபடியும் பூட்டி விடுவான். அனுபவம் அந்தச் சிறுவனுக்குக் கை கொடுக்கும். அதே நேரம், அந்தச் சிறுவனுக்கு நூலறிவும் (படிப்பறிவும்) இருந்திருந்தால், அவனே ஒரு முதலாளியாக ஆகியிருக்க மாட்டானா? ஆகையால், வள்ளுவர் கூறியதைப்போல, நூலறிவும் வாலறிவும் (அனுபவ அறிவும்) மிகவும் தேவையானவை. ஞான நூல்களில் சொல்லப்பட்டிருப்பனவற்றை முதலில் அறிய வேண்டும். அவை எந்தக் காரணத்திற்காகச் சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை உணர வேண்டும். அவற்றில் சொல்லப்பட்டவை அனுபவத்தில் கொண்டு வரவேண்டும்.
‘‘அதை விடுத்து, ஞான நூல்களில் சொல்லப்பட்டிருப்பனவற்றை உண்மைகளை உணராமல், அதைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருந்தால், அவன் மூடன்’’ என்கிறார், திருமூலர். இதற்காக அவர், நமக்குத் தெரிந்த கதையை ஒரு சில வார்த்தைகளில் சொல்லி, அக்கதையின் உண்மைப் பொருளை விரிவாகவே சொல்கிறார். தாரகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்ற மூன்று அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் இறைவனை வேண்டி வரம் பெற்றிருந்தார்கள். அதாவது, அவர்களுக்குத் தங்கக் கோட்டை, வெள்ளிக்கோட்டை, இரும்புக்கோட்டை என்று மூன்று கோட்டைகள் இருந்தன.
அவற்றில் ஏறி, அவர்கள் நினைத்த இடத்திற்கு அப்படியே பறந்து செல்வார்கள். நினைத்த இடத்தில் அப்படியே கோட்டையுடன் கீழே இறங்குவார்கள். அப்படி இறங்கும் கோட்டைகளின் அடியில் அகப்பட்டு, ஏராளமானோர் உயிர் துறப்பார்கள். அதைக்கண்டு, அசுரர்கள் மூவரும் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த மூன்று கோட்டைகளும் ஒன்று சேரும்போது, சிவபெருமானால் அழிக்கப்பட வேண்டும். மற்ற யாராலும் அழிவு வரக்கூடாது என்று அந்த அசுரர்கள் வரமும் பெற்றிருந்தார்கள்.
இது கதை! அப்படியே இருக்கட்டும்! அக்கதையில் சொல்லப்பட்ட அந்த மூன்று அசுரர்கள் யார், அவர்கள் எங்கே இருக்கிறார்கள், எங்காவது கோட்டைகள் போய், அப்படியே பறந்து சென்று ஏராளமானோர் மேல் விழுந்து அழிக்குமா என்றெல்லாம் கேள்விகள் வருகிறதல்லவா? இவற்றிற்கெல்லாம் திருமூலர் விடை சொல்கிறார். அக்கதையில் சொல்லப்பட்ட அசுரர்கள் நாம்தான்! அந்த மூன்று கோட்டைகள் - ஆணவம், கன்மம், மாயை. மூன்று கோட்டைகள் அப்படியே பறந்து போய், நினைத்த இடத்தில் இறங்க, அதனடியில் சிக்கி ஏராளமானோர் உயிர் துறக்கிறார்கள் என்பது, அந்த மூன்று தீய குணங்களின் வசப்பட்ட நாம், நினைத்த மாத்திரத்தில் கன்னாபின்னாவென்று, முறைகேடான காரியங்களைச் செய்கிறோம்.
அதன் காரணமாக ஏராளமானோர் துயரப்படுகிறார்கள் என்பதைக் குறிக்கிறது. அதைக்கண்டு அசுரர்கள் மகிழ்ந்தார்கள் என்பது, அடுத்தவர்களைத் துயரப்படுத்தி அதில் நாம் ஆனந்தம் கண்டுகொண்டிருக்கி றோம் என்பதைக் குறிக்கிறது. முப்புரங்களையும் சிவபெருமான் அழித்தார் என்பது, நம்மிடம் உள்ள ஆணவம்-கன்மம்-மாயை ஆகியவற்றை நீக்கி சிவ பெருமான் நமக்கு அருள்புரிகிறார் என்பதை உணர்த்துகிறது. இதுவே ‘திரிபுர சங்கார உண்மை’. இதை உணராமல் கதையை மட்டும் படித்துக் கொண்டிருந்தால், அவர்கள் மூடர்கள் எனத் திருமூலர் இடித்து ரைக்கிறார்.
அப்பணி செஞ்சடை ஆதி புராதனன்
முப்புரம் செற்றனன் என்பர்கள் மூடர்கள்
முப்புரம் என்பது மும்மல காரியம்
அப்புறம் எய்தமை யாரறிவாரே!
(திருமந்திரம் - 343)
இந்தப் பாடலில், எல்லோருக்கும் தெரிந்த ஒரு மிகப்பெரும் கதையை ஒருசில வார்த்தைகளில் சொல்லி, அதன் உட்பொருளை, உண்மையை எடுத் துரைத்து, இறைவன் அருள்செய்த விவரத்தையும் கூறியிருக்கிறார் திருமூலர். ‘‘இறைவன் அருள், அந்த ஆனந்த அனுபவம் யாருக்குத் தெரியும்?’’ என்று கேள்விக் குறியோடு ‘‘ஆரறிவாரே’’ என்று முடித்திருக்கிறார். ஞானிகள் அவ்வாறு, தொட்டுக்காட்டி சுட்டிக்காட்டி இருப்பதைப் புரிந்துகொண்டு அவ்வழியில் உழைத்து, அனுபவ ஆனந்தத்தை அடைய வேண்டியது நமது கடமை.

No comments:

Post a Comment