Thursday, July 17, 2014

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 10 ---15

ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 10

உட்கார், குளி, நில், சாப்பிடு, தூங்கு ஆகியவற்றை செய் என்றும் சொல்லவில்லை, செய்யாதே என்றும் சொல்லவில்லை. இதில், வேடிக்கை என்னவென்றால் "குளி' என்று கூட சொல்லாதது தான். இதுபோல்,"சாப்பிடு' என்றும் சொல்லவில்லை. 

காரணம் என்ன!

வேதம் சொல்லாமலேயே, தினமும் மூன்று வேளை சாப்பிடுகிறோம். "சாப்பிடு' என்று சொன்னால், இன்னும் அதிகமாக சாப்பிடுவோம். அதேநேரம், "பட்டினி கிட' என்று வேதம் கட்டளையிடுகிறது. சாப்பாட்டைக் குறைத்தால் புத்தி வளரும் என்கிறது. 

குளி என்று கட்டளையிடாத வேதம், "குளிக்காமல் சாப்பிடாதே' என்று வேறுமாதிரியாகச் சொல்கிறது. குளிக்காமல் சமைக்கவும் கூடாது. அடுப்பு மூட்டி, காய்கறியை நறுக்கி வைத்து விட்டு குளிக்கப் போகிறேனே என்றால், அதுவும் கூடாது. இந்தச் செயல்களையும் குளித்த பிறகே செய்ய வேண்டும். "குளம் வெட்டு' என்று வேதம் சொல்கிறது. அது புண்ணியச் செயல். புண்ணியம் என்றால் என்ன? "நமக்கும் ஊருக்கும் நன்மை தருவது' என்று பொருள். குளம் வெட்டினால் வெட்டியவனுக்கும் நல்லது, ஊருக்கும் நல்லது. ஆக, புண்ணியம் என்றால், நன்மை கொடுக்கும் செயல்.

அந்தணர்கள் அதற்குரிய நேரத்தில் சந்தியாவந்தனம் செய்ய வேண்டும், செய்தால் புண்ணியம், செய்யாவிட்டால் பாவம். பாவம் என்றால் தீமை தரும் செயல். ""சரி...இவ்வளவு நல்லது கெட்டதைச் சொல்கிறீர்களே! இதை வேதம் சொல்லித்தான் தெரிந்து கொள்ள வேண்டுமா! நானே இதை உணர்ந்து தெரிந்து கொள்ளக்கூடாதா,'' என்று ஒருவர் கேட்கலாம்.

அதற்கும் பதில் சொல்கிறேன்.

சில கர்மங்களுக்கு (செயல்கள்) செய்தவுடன் பலன் கிடைக்கும். உதாரணமாக, விளக்கைத் தொட்டால் சுடும் என்பது எனக்குத் தெரியும். இதை யாரும் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தண்ணீர் குடித்தால் தாகம்தீரும் என்பதும் நாமே தெரிந்து கொண்ட விஷயம் தான். ஆனால், தினமும் உடற்பயிற்சி செய் என்று அம்மா சொல்கிறாள். அப்படி செய்தால், பிற்காலத்துக்கு நல்லது என்பது நமக்கும் தெரியும். ஆனாலும், செய்வதில்லை. 25 வருடம் கழித்த பிறகு, அங்கே இங்கே உடம்பில் வலிக்கும். கால்,கை சுளுக்கும். அம்மா சொன்னதைக் கேட்காததால் 25 வருஷம் கழித்து தான் பலன் கிடைக்கிறது. 

இதுபோல, அன்றன்று செய்த புண்ணிய, பாவத்திற்கேற்ப பலன்கள் உடனடியாகவோ, தாமதமாகவோ கிடைத்து விடும்.

சரி...இந்தப் பிறவியே முடிந்து விட்டது. ஒருவருக்கு 69 வயது 364 நாள் முடிந்து, 70 பிறக்கும் போது, அவர் போய் விடுகிறார். அதோடு, அவரது செயல்களுக்கான பாவ புண்ணியம் தீர்ந்து போகுமா?
நிச்சயமாகக் கிடையாது. பாவம், புண்ணியம் என்ற மூட்டை ஏற இறங்க இருந்து கொண்டே தான் இருக்கும். 250 வருஷம் ஆனாலும் தொடரத்தான் செய்யும். அதாவது, இறந்து போனவர், மறுபிறவியில் தன் செயல்களுக்குரிய பலனை அனுபவிக்க ஆரம்பித்து விடுவார். நாம் செய்கிற வினைகளே நம் பிறவிக்கு காரணம்.

சரி...குழந்தைகள் ஏதாவது கர்மங்கள் செய்கிறார்களே! அது அவர்களைப் பாதிக்குமா!
குழந்தைகள் 12 வயது வரை செய்யும் கர்மங்கள் அவர்களைப் பாதிப்பதில்லை. அதன்பிறகே, கணக்கு துவங்கும். சில பாவங்களுக்கு ஆயிரம் வருடம் வரை பலன் உண்டு. அதை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். அதனால் தான் "பாவம் செய்யாதே...பாவம் செய்யாதே' என்று திரும்பத் திரும்பக் கூறுகிறது வேதம்.
"சாலையில் மஞ்சள் கோட்டைத் தாண்டாதே! அது ஆபத்து' என்று காவலர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். தாண்டினால் ஐநூறு ரூபாய் அபராதம் போடுவார்கள். அதே நேரம், நாம் தாண்டுகிற இடத்தில் காவலர் இல்லை என வைத்துக் கொள்வோம். கோட்டைத் தாண்டி எப்படியோ போய் விடும். 

அதாவது தட்டிக்கேட்கிறவர் அந்த இடத்தில் இல்லை. அவர் இல்லை என்பதற்காக, நாம் செய்தது சரியாகி விடாது. அது தவறு தான்! அதுபோல, கண்டிக்கிற பகவான் கண்ணுக்கு தெரியவில்லை என்பதற்காக, நாம் அவனுக்கு தெரியாமல் தானே செய்தோம், இது எங்கே கணக்கில் ஏறப்போகிறது என நம் இஷ்டத்துக்கு பாவங்களைச் செய்ய முடியாது. 

நாம் இறந்து விட்டோம். பிறவி விட்டு பிறவி மாறுகிறோம். அப்போது, எதை எடுத்துப் போவோம்! கட்டியிருக்கிற காஞ்சிபுரம் வேஷ்டியை எடுத்துப் போக முடியுமா! குடியிருக்கிற வீடு, வாசலைத் தூக்கிப் போக முடியுமா! எல்லாவற்றையும் விடவைத்து விடுவான் பகவான்! ஆனாலும், நம் கூட ஒன்றே ஒன்று வரும்! அது என்ன! 

கர்மவாசனா ருசியை (முன் செய்த பாவ, புண்ணிய பலன்) மட்டும் எடுத்துப் போவோம். அதைத் தொடர்ந்து அனுபவிப்போம்.

நமது தவறுகள், புண்ணியச்செயல்கள் இங்கே இருக்கிறவர்கள் பார்வையில் படாமல் போகலாம். ஆனால், பெருமானின் உள்ளத்தில் அது பதிவு செய்யப்பட்டு விடும். அது மிகப்பெரிய கணிப்பொறி.
இவை பற்றி அங்கே விசாரணை செய்யப்படும். செய்த தவறுக்கு சாட்சிகள் வேண்டாமா என்றால் அவர்களும் இருக்கிறார்கள். 

அவர்கள் தான் சூரியன். சந்திரன், நிருதி என்று பலபேர். அவர்கள் நாம் இன்னின்ன செய்தோம் என்று சாட்சி சொல்வார்கள்.

சரி...இந்த பாவ புண்ணியத்தை வேறு யார் கணக்கிற்காவது மாற்றி விடலாமா என்றால், அதுவும் முடியாது. ஒருவர் செய்த பாவம், அவரையே சாப்பிட்டு விடும். புண்ணியம் எல்லாரையும் சாப்பிட விடும். இதனால் தான், நமக்கு ஏதாவது கஷ்டம் வந்தால் "என்ன கர்மமோ தெரியலே' என்று தலையில் அடித்துக் கொள்கிறோம்.
இந்த சிரமம் நம்மை அணுகாமல் தடுக்க வேண்டுமானால், தினப்படி கர்மங்களை விடாமல் செய்ய வேண்டும். அதாவது, கோயில் தீர்த்த யாத்திரை செய்தல், "நான்' என்ற அகங்காரத்தை விடுதல்...இன்னும் சிலவற்றின் மூலம் தடுக்கலாம். 

இப்படி கொஞ்சம் கொஞ்சமாக நம் பாவமூட்டையைக் கரைத்தால் மோட்சத்துக்கே போகலாம். கர்மங்களில் மூவகை உண்டு. அவை என்னவென்று பார்ப்போமா!







ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 11

நித்ய கர்மம், நைமித்திக கர்மம், காம்யகர்மம் என்ற மூன்றாக கர்மங்களைப் பிரிக்கலாம்.

நித்ய கர்மம் என்றால் அன்றாட வழிபாடு. சந்தியாவந்தனம், தினசரி பூஜை போன்றவை இதில் அடங்கும். நைமித்திக கர்மம்என்பது, ஏதாவது காரணம் கருதி செய்யப்படுவது. உதாரணமாக, சூரிய கிரகணம் வருமானால் தர்ப்பணம் முதலானவை செய்கிறோமே! அதுவே நைமித்திகத்தில் அடங்கும். காம்யகர்மம் என்றால் ஆசைகளை, தேவைகளை நிறைவேற்ற செய்வது. செல்வம் வேண்டுமா! அதற்கென ஒரு யாகம். புகழ் வேண்டுமா! அதற்கு தனி யாகம், எதிரிகளை அழிக்க வேண்டுமா! அதற்கு சேன யாகம்..குழந்தை வேண்டுமா! புத்திர காமேஷ்டி யாகம்...இன்னும் வாஜபேயி யாகம், ராஜசூய யாகம், அஸ்வமேத யாகம் முதலானவை.

இந்த கர்மங்களை நாம் நிச்சயம் செய்தாக வேண்டுமா! செய்தால் என்ன லாபம், செய்யாவிட்டால் என்ன விளைவு...!

இவற்றில் நம்மால் செய்ய முடிந்த எளிய கர்மம் நித்யகர்மம். நித்யகர்மத்தை பண்ணினால் புண்ணியம். செய்யாவிட்டால் பாவம்...வேலைக்குப் போனால் சம்பளம்..போகாவிட்டால் இல்லை...சம்பளம் இல்லாமல் குடும்பம் இயங்காது..அது மாதிரி நித்யகர்மாக்களைச் செய்தால் தான் உலகம் இயங்க முடியும்.

இங்கே ஒரு கேள்வி எழுகிறது.

என்ன தான் கர்மாக்களைச் செய்தாலும் "விதி', "தலையெழுத்து' என்றெல்லாம் இருக்கிறதாமே! அவற்றை வெல்ல முடியாது...அவை இயக்கும் பாதையில் தான் நாம் செல்வோம் என்கிறார்களே! அது சரியானது தானா?

ஒரு கர்மா செய்தால், அதற்குரிய புண்ணியம் உடனே கிடைத்து விடும் என்பதில்லை. சிலவற்றுக்கு பத்து வருடம் கழித்து கூட கிடைக்கும். சிலருக்கு உடனே கிடைக்கும். தசரதர் புத்திரகாமேஷ்டி யாகம் செய்தார். 

அவருக்கு கிடைத்த பாயாசக்குடம் மூலம், 12 மாதங்களில் புத்திர பாக்கியம் கிடைத்து விட்டது.

ஒருவர் கோயில் கட்டிக் கொண்டிருக்கிறார். கட்டும்போதே இறந்து விட்டார். உடனே என்ன சொல்வோம்? "கோயில் கட்டிய புண்ணியம் கூட கிடைக்காமல் போய்விட்டான்' என்று.

சரி...நம் கர்மாக்களுக்கு புண்ணியத்தை இவ்வாறு மறைவாக நின்று தருவது யார்?

இதை "அபூர்வம்' என்பார்கள். "அபூர்வம்' என்றால் "நம் முன்னால் இல்லாதது' என்றும், "எப்போதும் நிலைத்து நிற்கக்கூடியது' என்றும் பொருள். இந்த அபூர்வமே நமக்குரிய பாவ புண்ணியங்களை வழங்கும். மற்றபடி "பிரும்மலிபி' "லிகித ரேகா' எனப்படும் தலையெழுத்து என்றெல்லாம் எந்த எழுத்தும் கிடையாது.

அப்படியானால் விதி என்ற சொல்லுக்கு பொருளே கிடையாதா? உண்டு...

சொல்கிறேன் கேளுங்கள்.

""பாவத்தைச் செய்தவுடன் பெருமானின் திருஉள்ளத்தில் கோபம் உண்டாகிறது. புண்ணியம் செய்ததும் அனுக்கிரகம் உண்டாகிறது.

இதற்குப் பெயர் தான் விதி''.

""சரி...நான் ஒளிந்து மறைந்து யாருக்கும் தெரியாமல் பாவம் செய்தேன். அது எங்கோ இருக்கும் அந்த பகவானுக்கு தெரியவா போகிறது!'' என்று ஒருவர் கேட்கலாம்.

மறைப்பதென்பதோ, செய்ததை அழிப்பதென்பதோ அவன் விஷயத்தில் நடக்காத காரியம். அவருக்கு மறதியே கிடையாது.

ஆனால், ""இனிமேல் இந்த பாவத்தைச் செய்யமாட்டேன், நீயே என்னைக் காக்க வேண்டும்,'' என்று சரணாகதி அடைந்துவிட்டால், உடனே அதை அழித்து விடுவார்.

கூரத்தாழ்வான் இதை எளிமையான வார்த்தைகளில் சொல்கிறார்.

""எதெது பகவானுக்கு பிடித்ததோ அது புண்ணியம். எதெது பிடிக்காதோ அது பாவம்,'' என்று. எனவே அவருக்கு பிடிக்காததைச் செய்யக்கூடாது.

பகவான் கிருஷ்ணர் கீதை 18ம் அத்தியாயம், 66வது ஸ்லோகத்தில், தன்னையே தர்மமாக ஸ்தாபித்துக் கொள்கிறார். ""என்னையே தர்மமாய் பற்று,'' என்கிறார் அவர். பகவானே தர்மமாக விளங்குகிறார்.
நான்காவது அத்தியாயத்தில் "ஸம்பவாமி யுகே யுகே' என்கிறார். தர்மத்தை நிலைநாட்டதான் பிறப்பதாகவும் அவர் சொல்கிறார்.

புண்ணியத்தைச் செய்து விட்டால் நாம் அவரை அடைந்து விடலாமா என்று ஒருவர் கேட்டால், ""அதுவே இறுதியானது,'' என்று சொல்லிவிட முடியாது. அந்த புண்ணியத்தையும் பகவானிடமே அர்ப்பணித்து விட வேண்டும். அப்போது தான் அவரை அடைய முடியும்.

பட்டினி கிடந்து விரதமிருந்தாலும், அதற்குரிய பலனை அவரிடமே சமர்ப்பித்து விட வேண்டும். அதனால் தான் "ஸர்வம் ஸ்ரீகிருஷ்ணார்ப்பணம்' என்பார்கள்.

""வாயால், மனதால்...எதனால் தர்மகாரியம் செய்திருந்தாலும், அனைத்தையும் பகவானுக்கு சமர்ப்பிக்கிறேன்'' என்று சொல்ல வேண்டும்.

சரி....பாவ, புண்ணியம் பற்றி இவ்வளவு சொல்கிறீர்களே! தர்மகாரியம் செய்வதால் புண்ணியம் உண்டா என்றால் இல்லை என்று தான் சொல்வேன். "இதென்ன புதுக்குழப்பம்' என்பவர்கள் சற்று பொறுங்கள்.
குளம் வெட்டுவது புண்ணியம் தான் என்றாலும், தர்மத்தை எப்படி செய்யவேண்டும் என நூல்கள் சொல்லியுள்ளதோ அதன்படி தர்மம் செய்தால் தான் புண்ணியம் கிடைக்கும்.

இதை இன்னும் விபரமாக விளக்க, திருப்பாவையில் ஆண்டாள் சொல்வதை உதாரணமாக எடுத்துக் கொள்வோம்.

திருப்பாவை 28ம் பாட்டு, "கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்'. இந்த பாசுரத்தில், "கண்ணா! எனக்கென்று ஒரு புண்ணியமும் கிடையாது. மாடு மேய்ப்பேன், சாப்பிடுவேன், விரதம் இருக்கும் அறிவெல்லாம் என்னிடம் இல்லை,'' என்கிறாள் ஆண்டாள்.

உடனே கண்ணன் சொன்னானாம்...""அப்படியா! எப்போது, உன்னிடத்தில் ஒரு புண்ணியமும் இல்லையோ, அப்போது நானும் நீ கேட்பதைக் கொடுப்பதற்கில்லை,'' என்று கையை விரித்து விட்டான்.

உடனே ஆண்டாள், ""பொறு! பொறு! நான் இன்னும் பாட்டை முடிக்கவில்லை...

""உன்றன்னை பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம் குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது'' என்றாள்.

அதாவது, நாங்களாக முயற்சி எடுத்து புண்ணியம் செய்யவில்லையே ஒழிய, நீ எங்கள் இடையர் குலத்தில் வந்து பிறந்தாயே! அதுவே நாங்கள் செய்த புண்ணியமல்லவா!''என்று ஒரு போடு போட்டாளே பார்க்கலாம். கண்ணன் பேசவில்லை.

""எங்களைத் தேடி வந்த புண்ணியம் நீயல்லவா கண்ணா!'' என்றாள் ஆண்டாள்.

இப்படித்தான் பகவான் நம்மைத்தேடியும் வருவான். தனக்கு யார் மீது விருப்பமோ அவர்களைத் தேடி வருவான்.









ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 12

யதுகுலத்தை தேடி வந்த பகவான், நம்மைத் தேடி வருவானா! நிச்சயமாக! தனக்கு விருப்பமிருப்பவர்களை நோக்கி அவன் வருவான். விதுரனின் குடிசைக்கு வந்தான். பிரகலாதன் தூணை நோக்கி கை காட்டியபோது, அங்கே வந்தான். இப்படி, அவன் நம்மையும் நோக்கி வரவேண்டுமானால், நமக்கு என்ன தகுதி வேண்டும்?

மற்றதில் வெறுப்பு, பகவானிடத்தில் விருப்பம் வேண்டும். இதைத்தான் "விருப்பு வெறுப்பு' என்கிறார்கள். திருப்பாணாழ்வாரின் கண்களுக்குள் அவனது திருவடிகள் வந்து புகுந்தன. காரணம், அவன் மீதான விருப்பம். அந்த விருப்பம் நமக்கும் வேண்டும்.

பகவானுக்கு விருப்பமானது என்ன?

மரம் நடு, பசுக்களுக்கு பாதுகாப்பு கொடு, தானம் செய், உபவாசம் இரு...இப்படி சில. இந்த தர்மங்களை அவன் சார்பில் நாமே செய்ய வேண்டும். அதன் பலனையும் அவனிடமே சமர்ப்பிக்க வேண்டும். இதை விட்டு, தர்மத்தை கடைபிடிக்கிறோம் என்ற பெயரில், பெயருக்கு ஜபம் முதலானவற்றைச் செய்யக்கூடாது.

சனாதன தர்மம் (இந்துமதம்) என்பது அனாதியானது (தோன்றிய காலம் தெரியாதது). ராமனையும், கிருஷ்ணனையுமே சனாதன தர்மம் என்று சொல்லலாம். சிலருக்கு சனாதன தர்மத்தின் மீது சில சந்தேகங்கள்...

"கிருஷ்ணன் பொய் சொன்னாரே! ராசக்கிரீடை (பெண்களுடன் நடனம்) பண்ணினாரே! 16001 பேரை திருமணம் செய்தாரே!' என்று.

வேதவியாசர் இதற்கு பதிலளிக்கிறார். அவன் திருடினால் நம் பாவங்கள் திருடப்படும். கர்மங்கள் என்ற பாவம் அவரைத் தீண்டாது. அவரது உலகில் வசிக்கும் நித்யசூரிகளுக்கும் (பகவானுடன் கலந்தவர்கள்) பாவம் அண்டாது.

சுகப்பிரம்மரிடம் பரிட்சித்து மன்னன் இந்த சந்தேகங்களைக் கேட்டான். அதற்கு சுகர், "ஆத்மா பரமாத்மா' சம்பந்தம் பற்றி எடுத்துச் சொன்னார். 16001 பேரை திருமணம் செய்கிறார் என்றால், அவர்களுக்குள் உடல் ரீதியான தொடர்பு கிடையாது. ஜீவனுக்கும், பரமாத்மாவுக்கும் உள்ள தொடர்பே அது. ஜீவனுக்கு உருவம் உண்டா...உயிர் போய்விட்டது என்கிறோம். ஆனால், அந்த ஜீவனை உடலுக்குள் இருக்கும்போதோ, அது போய்விடும் போதோ பார்க்க முடியுமா! அது மட்டுமல்ல!

அன்றைக்கு கண்ணனுக்கு வயது எட்டு. கோபியருக்கு வயது 6. பத்து வயதிலேயே அவர் ஆயர்பாடியிலிருந்து மதுராபுரி வந்து விட்டார். அவர்களுக்குள் என்ன உறவு இருக்க முடியும்! இதுபோன்ற சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ள, புத்தகங்களை சரியாகப் படிக்க வேண்டும். குற்றம் கண்டுபிடிக்க வேண்டும் என்றே இதுபோன்ற புகார்களை சனாதன தர்மத்தின் மீது சுமத்துகிறார்கள். ஆக, முட்டாள்கள் நாம் தான்! பெருமாள் மீது குற்றம் சொல்லக்கூடாது. ஒருசமயம் துஷ்யந்தன் மக்களைப் பார்த்து சொன்னான்..என்ன தெரியுமா?

""பிரஜைகளே! யார் வீட்டிலாவது தாய், தந்தை, பெண், குழந்தை என யார் இறந்தாலும், நானே அதுவாகிறேன், சாஸ்திரம் சம்மதித்த உறவாக இருக்கிறேன். கணவன் மனைவி உறவைத் தவிர..'' என்று. அப்படி அவன் சொன்னான் என்பதற்காக, அவன் நிஜத்தந்தை, நிஜத்தாய், நிஜத்தங்கை ஆகிவிடுவானா! மக்கள் மீது கொண்ட, அன்பின் காரணமாக, அந்த உறவை நிரப்ப நான் வருகிறேன் என்கிறான். ஆனால், கண்ணன் கோபியரிடம் பழகியதன் மூலம் கணவன், மனைவி உறவாகவும் இருக்கிறான். திருக்குறுங்குடிக்கு போய், பெருமாள் சிலையைப் பார்க்கும் ஒரு பெண், ""பெருமாள் எவ்வளவு அழகாக இருக்கிறார்?'' என்றால், அவளது கணவன் அவளைப் பார்த்து சந்தேகப்பட முடியுமா! ஏனெனில், எம்பெருமான் தானே எல்லாருக்குள்ளும் நீக்கமற நிறைந்துள்ளான்.

நமக்கு தான் பாவ, புண்ணியம் பிடிக்கும். பகவானின் கோபம் என்பது பாவம், விருப்பம் என்பது புண்ணியம். பகவானுக்கு பாவம், தோஷம் என்பதெல்லாம் கிடையாது. அதனால் தான் "குறையொன்றுமில்லாத கோவிந்தா' என்கிறோம். கண்ணனின் அருள் நமக்கு நிறைய கிடைத்து விட்டால் குறையொன்றுமில்லை. மேடு பள்ளம் என்பது என்ன தெரியுமா? கண்ணன் மேடு, நாம் பள்ளம். நம் பள்ளத்தை சரி செய்துவிட்டால், பகவானுடன் இணைந்து வைகுண்டத்தில் இன்பமாக வாழலாம். சரி...எப்படியோ பாவங்களைச் செய்து விட்டோம். அதற்கு பிராயச்சித்தம் இருக்கிறதா?

பிராயச்சித்தம் என்பதன் பொருள் நமக்கு தெரிய வேண்டும். பிராயம் என்றால் "பாவம்'. "சித்தம்' என்றால் "மாற்று'. பாவத்துக்கு மாற்று. இப்படி பாவத்துக்குரிய மாற்றைச் செய்யும் போதும் அதில் பாவம் தொற்றி விடக்கூடாது. தர்மம் செய்யும்போது, அதர்மம் வந்துவிடக்கூடாது. உதாரணத்துக்கு, தர்மம் செய்யும்போது, பேசிக்கொண்டே கொடுக்கக்கூடாது. இதுபோல் சில விதிமுறைகளைத் தெரிந்து கொள்ள வேண்டும். தவளை இரண்டடி ஏறும், மூன்றடி விழும் என்பது போல, பிராயச்சித்தம் பண்ணப்போக மீண்டும் பாவத்தில் விழக்கூடாது.

பிராயச்சித்தத்தில் சிறந்தது பசு, காளைகளை பாதுகாப்பது. குறிப்பாக, அதுவரை பால் தந்து, கறவை நின்று போன மாடுகளைப் பாதுகாப்பது. இதையெல்லாம் விட சிறந்த பிராயச்சித்தம் என்ன தெரியுமா!

"பகவானே! உன் திருவடிகளைப் பற்றி விட்டேன்,'' என்று சொல்லிவிட்டால் போதும். பாவம் முழுமையாகத் தீர்ந்து விடும். இதைத்தான் "குறையொன்றுமில்லை'' என்கிறாள் ஆண்டாள்.

""நாங்களோ அறிவிலிகள், எங்களிடம் சீறியருளாதே,'' என்று உருகுகிறாள். எத்தனை பாவம் செய்தாலும், ஆண்டாளைப் போல் அவனைச் சரணடைந்து விட்டால் பாவங்களைத் தொலைத்து விட முடியும்.

"நான் நித்தமும் கீதை படிப்பேன், ஆனால், விடாமல் கவலைப்படுவேன்,'' என்று சொல்லக்கூடாது. கீதையைப் படித்த பிறகு கவலையையும் வரவழைத்துக் கொண்டால், அவனிடம் நம்பிக்கை இல்லை என்று தானே அர்த்தம். பகவானை நாம் விசுவாசிக்க வேண்டும், அவன் சொன்ன வார்த்தைகளில் நம்பிக்கை வைக்க வேண்டும்.

புண்ணியம், பாவம் என்றெல்லாம் சொல்கிறோமே! நாம் செய்யும் செயல்களை பாவம், புண்ணியம் என்று எப்படி அடையாளம் தெரிந்து கொள்வது! வேதம் படிக்கணும், கவுதமரின் போதாயான சூத்ரம் படிக்கணும், மனு ஸ்மிருதியைப் படிக்கணும்... இப்படியெல்லாம் செய்தால் புண்ணியம் சேரும் என்கிறார்களே!

இதுபற்றியெல்லாம் எனக்கு ஒன்றுமே தெரியாதே! அப்படியானால் பாவ, புண்ணியம் என்பதை நிர்ணயித்துக் கொள்வது எப்படி!

இந்தக் கேள்விக்கு பதில் ரொம்ப சுலபம்... பகவானுக்கு பிடித்தால் அது புண்ணியம், பிடிக்காவிட்டால் அது பாவம்.









ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 13

விதுரர் திருதராஷ்டிரரிடம் கேட்கிறார். ""உன்னை 13 வருஷம் காட்டுக்கு அனுப்பினால் சம்மதிப்பாயா? ஆனால், பாண்டவரை அனுப்புகிறாயே! அவர்களுக்கு நாட்டில் பாதியைக் கொடுப்பது தானே தர்மம்,'' என்று.

ஆம்..நம்முடைய சுகம் பிறருக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது தானே தர்மம்! அதுதானே புண்ணியம்! 

திருதராஷ்டிரன் செய்தது பாவமல்லவா! 

பிராணிகளை இம்சை செய்வது, நகம் கிள்ளுவது, ஜமுக்காளத்தை பிய்ப்பது, பாயைக் குச்சியாக்குவது, புழு, பூச்சிகளைக் கிள்ளுவது இதெல்லாம் பாவம் என்கிறது சாஸ்திரம். புழு, பூச்சிகளைக் குத்தும்போது அவற்றுக்கு வலிக்குமே...இதே போல நம்மைக் குத்தினால் எப்படியிருக்கும் என்று எண்ணுவது பாவம்.

"எல்லாமே பகவான் செயல் என்றால், பகவானே இப்படி மனிதனை பாவச்செயல்களை எல்லாம் செய்ய வைக்கிறாரா?' என்று ஒரு சந்தேகம் பலருக்கும் இருக்கிறது. நிச்சயமாக இல்லை. இது பகவத் சங்கல்பம் அல்ல. மனித சங்கல்பம் தான். பகவானே நேரடியாக வந்து "இப்படி இப்படி செய்யாதே' என்று சொல்லமாட்டார். அதற்காகத்தான் சாஸ்திர புத்தகங்கள் நம்மிடம் உள்ளன. அவை என்னென்ன செய்ய வேண்டும் என்று போதிக்கின்றன. 

""நீ கல்லா கட்டையா ஆடா மாடா..நீ தப்பு செய்யக்கூடாது,'' என்று தானே புத்தகம் போட்டிருக்கிறேன். நீ தான் திருந்த வேண்டும்,'' என்று தான் பகவான் சொல்வார். அது மட்டுமல்ல! ஆச்சார்யர்களை அனுப்பி, அவர்கள் மூலம் நமக்கு நல்லதைப் போதிக்கிறார். சில சமயங்களில் அவரே பிறக்கிறார். அவர்களைத் திருத்தவே அவர் பிறக்கிறாரே தவிர, மேய்ப்பதற்காக அல்ல. 
"நம் தவறுகளுக்கு காரணம் என்னைப் படைத்த அந்தக் கடவுள்' என்று சொல்லி, தப்ப முடியாது. "உடலை அவர் கொடுத்துள்ளார். அதைப் பயன்படுத்தும் அறிவையும் கொடுத் துள்ளார். இந்த இரண்டையும் நல்வழியில் பயன்படுத்தினால், செயல்கள் நன்றாக அமையும்.

நம்மிடம் நல்ல நிலம் இருக்கிறது. அதில் விதை போட்டால் மரம் வளரும். நிலம் என்பது பழைய கர்மம், விதை என்பது சரீரம், மரம் என்பது காரியம். நல்ல விதை போட்டால் நல்ல மரம், இல்லாவிட்டால் முள் மரம். உடலைப் பயன்படுத்தி நல்வினை புரிந்தால் நற்கதி, இல்லாவிட்டால் பாவமூட்டை. இந்த நாடகத்தில் பகவானும் ஒரு பாத்திரமாக உள்ளான். ஒருவன் செய்த பாவ புண்ணியங்களை, நடுவஸ்தனாக இருந்து ஆனந்தமாக வேடிக்கை பார்க்கிறான். பாவம் செய்தால், இழுத்து பிடித்து வந்து தண்டனை கொடுப்பான்.

ஒரு ஆற்றில், "இந்த இடத்தில் குளிக்காதே' என்று பலகையில் எழுதி எச்சரிக்கை செய்துள்ளனர். நாம் அந்த இடத்தில் போய் இறங்கி விட்டு, "பலகையே என்னைக் காப்பாற்று' என்று கத்தினால் காப்பாற்றுமா! பலகை என்பது நமக்கு ஏற்கனவே நல்ல வழியைக் காட்டி விட்டது. அங்கே நாம் இறங்கியிருக்கக் கூடாது. என்ன வந்து விடும் என எச்சரிக்கையை மீறி இறங்கும் போது, உயிருக்கு ஆபத்தாகி விடுகிறது. அதுபோல், கடவுள் சாஸ்திர புத்தகங்கள் மூலம் நம்மை எச்சரிக்கிறான். அதை மீறி நடந்து, "வேதமே என்னைக் காப்பாற்று' என்றால் அது வருமா? "எச்சரிக்கை பலகை ஒரு பக்கம் இருக்கட்டும், நீயே வந்து என்னைக் காப்பாற்ற வேண்டியது தானே!' என்று பகவானைக் கேட்க முடியுமா? செய்யக்கூடாதது என தெரிந்தும், அதைச் செய்து பாவமூட்டையைச் சம்பாதித்து, "எல்லாம் இவனால் வந்தது' என்று பகவானை எப்படி குற்றம் சொல்ல முடியும்!

சரி...வேதம், புத்தகம், எச்சரிக்கை பலகை இதையெல்லாம் எனக்கு படிக்கத்தெரியாது. நான் இறங்கி விட்டேன் என்று சொல்பவன், பாவத்தில் விழாமல் தப்பிக்க வேண்டுமானால் ஒரு வழி இருக்கிறது. நீயே கதி என்று அவனைச் சரணடைந்து விட்டால், அவன் காப்பாற்றுவான்.

நமது கர்மங்களே நமக்கு ஜென்மத்தைத் தருகின்றன. ஜென்மம் எடுத்தால் துன்பம் வருகிறது. அந்தத் துன்பம் எந்தப் பிறவியில் செய்த கர்மத்தால் வந்தது என்று ஆராய முடியுமா என்றால், அந்த ஆராய்ச்சியே தேவையில்லை. துன்பத்தால் ஏற்படும் துக்கத்தைப் போக்கிக் கொள்ள வேண்டும் என்பது பற்றி தான் சிந்திக்க வேண்டும். அதற்கு என்ன வழி? "நாராயணா' என்று சொல்லு. நீ காட்டில் சிக்கிக் கொண்டது போலவும், நெருப்பின் நடுவில் நிற்பது போலவும், நோய்வாய்பட்டும் கஷ்டங்களை அனுபவிக்கலாம். அப்போது, "நாராயணா' என்றால், உன் பாவத்தின் தாக்கம் குறையும். அதற்காக செய்த பாவம் போய் விடாது. அதன் விளைவை கடைசி வரை அனுபவித்தே தீர வேண்டும். "உடம்பு' என்ற ஒன்று கிடைத்த பிறகு நடக்கும் நிகழ்வுகளுக்கு அவரவரே பொறுப்பு. உடல் நல்லநிலையில் இருப்பதற்கும், நோய்வாய்ப்படுவதற்கும் காரணம் நாம் செய்த செயல்கள் தான்.

இன்னொரு சந்தேகம் நமக்குள் இருக்கிறது.

அது என்ன! ஒரு விமானம் விபத்துக்குள்ளாகி 150 பேர் இறந்து விடுகிறார்கள். பூகம்பம் ஏற்பட்டு ஒன்றரை லட்சம் பேர் மடிகிறார்கள், சுனாமியில் சிக்கி 2 லட்சம் பேர் மாள்கிறார்கள். அப்படியானால், இவர்கள் அத்தனை பேரும் ஒரே மாதிரியான கர்மம் செய்தவர்களா என்று ஒரு கேள்வி.

இதற்கு ராமானுஜர் ஸ்ரீபாஷ்யத்தில், ""கண்ணுக்குத் தெரியாத காரணங்களைத் தேடி ஓடாதே,'' என்று பதிலளிக்கிறார். விமானத்தில் பழுது ஏற்பட்டு விட்டது, அதனால் விபத்து நிகழ்ந்தது என்பது நமக்குத் தெரிந்த காரணம். அந்த அளவோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். தெரியாத காரணங்களைத் தேடி ஓடக்கூடாது. 

இப்படி ஒரு பதில் ஏற்றுக்கொள்ளக்கூடியதா என்று கேட்கலாம். முடிவுகள் என்பவை நம்மால் எடுக்கப்படுபவை. அதன்படியே செயல்பட்டோம். இந்த செயலுக்குரிய விடை ஆயிரம் ஆண்டுகள் கழித்துக் கூட கிடைக்கலாம், உடனேயும் கிடைக்கலாம். கஜேந்திரன் யானை, மடுவில் இறங்கியது அதுவாக எடுத்த முடிவு. 

அதை முதலை பற்றிக்கொண்டது. ஆயிரம் ஆண்டுகள் போர் நடந்தது. வேறு வழியில்லை என்ற போது "ஆதிமூலமே' என்று கதறிய நிலையில், பகவான் லட்சுமியோடு கருடன் மீது வந்து விட்டார். அதுவரை பட்ட துன்பத்துக்கு விடிவு கிடைக்க ஆயிரம் ஆண்டுகள் தேவைப்பட்டது. அதே போல், இதுபோன்ற கேள்விளுக்குரிய விடைக்காகவும் நாம் காத்திருக்கத்தான் வேண்டும்.

சில சமயங்களில் உடனே முடிவு கிடைக்கிறது. 

பிரகலாதன் அழைத்தவுடனேயே யாரும் இல்லாமல் தனியாகவே வர முடிவெடுத்தான் பகவான். இப்படி முடிவெடுப்பவன் அவனே! 

அதில் யாரும் தலையிட முடியாது.







ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 14

சிலர் உயர்ந்த குலத்தில் பிறக்கிறார்கள். சிலர் கல்வியில் சிறந்து விளங்குகிறார்கள். சிலர் பணக்காரராக இருக்கிறார்கள். இவை இல்லாதவர்கள், அவர்களைப் பார்த்து அவர்களுக்கு மட்டும் ஏன் இந்த நிலைமை என்று ஆச்சரியப்படுகிறார்கள், நமக்கு இல்லையே என்று வருத்தமும் படுகிறார்கள். "ரமணீயம்' எனப்படும் உயர்ந்த பிறவிக்கு காரணம் மிக எளிமையானது.

""நான் எப்படி நடக்கிறேனோ அதன்படியே இவ்வாறான உயர்பிறவியை அடைகிறேன்,'' என்பதே இதற்குரிய பதில்.

ஆம்...கர்மங்களே நம் பிறப்பையும், வாழ்வு முறையை யும் தீர்மானிக்கிறது. அவை நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் தான் கர்மங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறோம். ஆனால், பகவான் நினைத்தால் இந்த கர்மங்களின் விளைவை மாற்றவோ, திருத்தவோ செய்து விடுவான்.

இந்த கர்மங்களை நாம் கழித்தாக வேண்டுமே என்றால் அது கழிந்து கொண்டு தான் இருக்கிறது. ஒரு இன்பகரமான நிகழ்வு நடந்தால், ஒரு கர்மம் தீர்கிறது. அதேபோல, ஒரு துன்பகரமான நிகழ்வு நடந்தாலும் ஒரு கர்மம் தீர்கிறது. அதனால் தான் பண்டிதர்கள் ரொம்பவுமே சிரமப்பட்டார்கள். ஆனாலும், அதை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டனர். ராமானுஜர், சங்கரசாச்சாரியார் போன்றவர்களெல்லாம், துன்பப்பட்டாலும் சிரித்தனர். 

கர்மங்களும் அநாதி, பகவானும் அநாதியானவர். அதாவது, அவற்றுக்கு காலநிர்ணயம் இல்லை. எத்தனையோ பிறவிகளாக கர்மத்தின் பிடியில் சிக்கியிருக்கிறோம். பகவானுக்கும் பிறப்பு என்பது இல்லை. 

ஏன் இந்த பகவான், நம்மை இப்படியெல்லாம் பிறவியெடுக்கச் செய்து, கர்மத்தின் பிடியில் சிக்க வைக்க வேண்டும்? இதுபோன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கும் வகையில் அவர் நம் வசப்படமாட்டார்.

நேர்நோடுகள் போய்க்கொண்டே இருக்கும். அது சந்திக்காது. அதுபோல் தான் பகவானும். அவரை நாம் அறிந்து கொள்ள முடியாது. எத்தனை மைல் போனாலும் இதே நிலை தான். மனிதன், தேவன், மரம், செடி, கொடி, விலங்கினம், பறப்பன, ஊர்வன என்று உயிர்கள் எத்தனையோ விதமாய் பிறக்கின்றன. இவற்றில் மனிதனாய் பிறந்தவன் தான், கடந்த பிறவிகளில், நிறைய புண்ணிய கர்மங்கள் பண்ணியிருக்க வேண்டும். 

ஒரு சிலர் சொல்கிறார்கள்... கடவுளாவது கர்மமாவது! கடவுள் என்ற ஒருவனே இல்லை என்கிறார்கள். அப்படியே இருந்தாலும், என்னை இவ்வாறு படைத்த அவன் குற்றவாளி என்கிறார்கள். கடவுளே இல்லை என்று சொன்னபிறகு, இல்லாத ஒருவனை குற்றவாளி என்று எப்படி பழி சுமத்த முடியும்!
வேதம் மட்டுமே கடவுளை நிரூபிக்கிற பிரமாணம். அவன் உறுதியாக இருக்கிறான். அவரை இல்லை என்பவர்கள் "அவித்யா' என்னும் அறிவின்மை உடையவர்களே. மனிதனுக்கு சில வாசனைகள் மறப்பதே இல்லை. வாசனை என்றால் பல பிறவிகளிலும் பழகியது என்று பொருள். ஒருவன் புலியாகப் பிறந்தாலும், முன்பிருந்த பிறவிகளில் இருந்த குணம் தான் அவனிடம் நீடிக்கும். இதை "துக்கச்சுழலை' என்பர்.

இந்த புத்தியிலிருந்து அவன் மீளமுடியுமா? திருந்த முடியுமா என்றால்... நிச்சயமாக முடியும்.
எப்படி முடியும்?

ஒரு ஸ்தாபனம் இருக்கிறது என்றால், அங்குள்ள பிரச்னை பற்றி முதலாளியிடம் தான் கேட்க முடியும். அதுபோல், மனிதன் தனது பிரச்னை பற்றி கடவுளிடம் தான் சொல்ல முடியும். கடவுளால் தான் அதைத் தீர்க்க முடியும்.

உதாரணத்துக்கு சில சம்பவங்கள்.

பாரதப்போர் முடிந்த பிறகும் கூட, திருதராஷ்டிரன் பாண்டவர்கள் மீது வெறுப்பாக இருந்தான். தன் பிள்ளைகளைக் கொன்ற பீமனை அழிக்க அவன் மனம் துடித்தது. பாண்டவர்கள் அவனை பார்க்க வந்த போது, பீமனை அணைக்கிற சாக்கில், தன் சக்தியை எல்லாம் திரட்டி, அவனை நொறுக்க முயற்சித்தான். அது அவனால் முடியவும் செய்யும். ஆனால், அங்கே கண்ணன் குறுக்கே வந்தான். பீமனைப் போன்ற ஒரு பொம்மையை அவன் முன் நிறுத்த, அதை அணைத்து நொறுக்கி விட்டான் திருதராஷ்டிரன். பிறகு காந்தாரியுடன் கானகம் போய், வானப்பிரஸ்தம் செய்து சொர்க்கமடைந்தான். பாவம் செய்தாலும், கடவுளால் பரிகாரம் கிடைத்தது.

கண்டாகர்ணன் என்பவன், தன் காதில் மணி கட்டியிருப்பான். அது அசைந்தபடியே ஒலி எழுப்பிக் கொண்டே இருக்கும். கடவுளை அவனுக்குப் பிடிக்காது. யாராவது கடவுள் நாமம் சொன்னால், அது அவன் காதுக்கு கேட்டு விடக்கூடாதாம்! அதற்காக மணியைக் கட்டி, அதன் ஒலி மட்டுமே தன் காதுக்கு கேட்கும்படி செய்து கொண்டான். அவனைக் கூட பகவான் மோட்சத்துக்கு 
அனுப்பினான். பகவானை நிந்தித்த சிசுபாலன் மோட்சமடைந்தான்.

அப்படியானால், தவறே செய்தாலும் கூட, கடவுள் நினைத்தால் சிலருக்கு மோட்சம் கிடைக்கிறது. இந்த அடிப்படையில் தான் கூரத்தாழ்வார்,""என்னிடம் பாவம் இருக்கிறது. உன் தயை இருந்தால் பரவாயில்லை,'' என்று கேட்டார். அவரைப் போலத்தான் நாமும் பெருமாளிடம் கேட்டாக வேண்டும். நமக்காக மகாலட்சுமி அவரிடம் சிபாரிசு செய்வாள். தன் குழந்தைகளுக்காக மன்றாடுவாள். அவளது கோரிக்கையை ஏற்று அவனும் நம்மை மன்னிப்பான். நாமும் மோட்சம் போய்விடுவோம்.

மோட்சம் செல்ல இன்னொரு வழியும் இருக்கிறது. 

"பாவங்களையே செய்து செய்து மீண்டும் மீண்டும் பிறக்கிறோமே' என்ற கவலை நம் மனதில் வந்தாலே போதும். பிறவியிலிருந்து மீண்டு விடுவோம்.

இன்னொரு பிரச்னையிலும், நாம் தீர்வு தெரியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறோம். அதாவது, உலகத்தில் நல்லது செய்பவனெல்லாம் துன்பத்தை அனுபவிக்கிறான். கெட்டதைச் செய்பவனெல்லாம் இன்பமாக இருக்கிறான். ஏன் இந்த பாரபட்சம் என்பது கேள்வி.

இதற்கு பதில் இருக்கிறது.

நல்லவர்களும் தீயவர்கள் இருக்குமிடத்தில் இருப்பதால், தீயவற்றின் பலனை அனுபவித்து தான் ஆக வேண்டியுள்ளது. விஷஜுரம் ஊருக்குள் பரவுகிறது என்றால், நல்லவன் என்றோ கெட்டவன் என்றோ பார்த்து வருவதில்லை. எல்லாரையும் ஆட்டி விடுகிறது. அதுபோல், கெட்டவர்கள் உலகில் இருக்கும்வரை நல்லவர்கள் அவர்களோடு சேர்ந்து சிரமத்தை அனுபவித்து தான் ஆக வேண்டும்.
கங்கையில் போய் குளித்தால் பாவம் தீர்ந்து விடுமா...மோட்சம் கிடைத்திடுமா என்றால், கங்கை என்பது பெருமாளின் பாதம் பட்டு வருவது. கங்கை என்றாலே புண்ணியம் தான். இதில் நீராடுவது பாவத்தை தீர்க்கும். ஆனால், பொய் சொல்லாதே, திருடாதே, ஜீவ இம்சை செய்யாதே, மதுபானம் அருந்தாதே, பிறத்தியார் சொத்துக்கு ஆசைப்படாதே, கோயில் சொத்தை உனதாக்கிக் கொள்ளாதே, ஏழைக்கு உதவு, தண்ணீரில் குப்பை கிடந்தால் அதை எடுத்து வெளியே போடு! குளிக்கும் ஆறு, குளத்தில் மலஜலம் கழிக்காதே! குளிக்கும்போது இடுப்பில் துண்டைக் கட்டிக்கொள் என்பது போன்ற கடமைகளையும் சரிவரச் செய்தால் தான் பாவம் தீரும். அப்போது தான் ஆனந்தம் பிறக்கும்.







ஆனந்தம் இன்று ஆரம்பம் - வேளுக்குடி கிருஷ்ணன் - 15

பாவமன்னிப்பைப் பற்றி சில விஷயங்கள் பேசுவோம்.

ஒரு பிறவியில் செய்த பாவத்திற்கு உடனடியாக பாவமன்னிப்பு கிடைக்காது. மரணத்திற்கு பிறகே கிடைக்கும். நாம் "சஞ்சித கர்மா' என்னும் பாவமூட்டையை சுமந்து கொண்டிருக்கிறோம். "சஞ்சித' என்றால் "சேமிக்கப்பட்ட' என்று பொருள்.

அரை விநாடி நேரத்தில் கூட ஒரு பாவச்செயல் நிகழ்ந்து விடும். ஆனால், அதன் பலனை அனுபவித்து தீர்க்க கல்பகோடி காலமாகி விடும். எனவே, நமது பிறவி நீண்டு கொண்டேதான் போகும். சஞ்சித கர்மா, "பிராரப்த கர்மா'வாக மாறும், "பிராரப்தம்' என்றால் "தொடக்கம்'. அதாவது, நம்மால் சேமிக்கப்படும் பாவங்கள், அனுபவிக்க அனுபவிக்க தான் தீரும். இடையில் முடிய ஏதாவது வழியிருக்கிறதா என்றால் "சரணம்' என்று பகவானைச் சரணடைந்தால், அது முடியும். 
அவ்வாறு சரணடையும் போது, ""இனிமேல், முன்பு போல் பாவங்களைச் செய்யமாட்டேன்,'' என்று மனதார உறுதியளிக்க வேண்டும். அவ்வாறு உறுதியளித்த பிறகு, பாவங்களைச் செய்ய ஆரம்பித்து விட்டால், மீண்டும் பிறவித்துன்பத்தில் உழன்றாக வேண்டும். சில பாவங்கள் தெரியாமல் செய்யப்படுபவை, நாம் நடந்து செல்லும்போது, பல ஜீவன்கள் நம் காலடியில் பட்டு உயிரிழக்கலாம், அவதிப்படலாம். இதுபோன்றவை தெரியமால் செய்பவை. இதுபோன்ற பாவங்களின் பலன்களில் இருந்து பகவானைச் சரணடைபவர்கள், வெட்டி விடப்படுவார்கள். ஆனால், தெரிந்தே உயிர்வதை செய்தால், இதர பாவங்களைச் செய்தால், கடுமையான துக்கத்தைத் தந்து அதன்பிறகே முக்தியளிப்பார்.

இன்னொரு தகவலை எல்லாரும் அறிய விருப்பமாக இருப்பீர்கள்.

""என் அப்பா, அம்மா எனக்கிடும் சாபங்களின் பலனை நான் அனுபவிப்பேனா!'' என்று கேட்பவர்கள் உண்டு. அவர்களுக்கு இது தான் பதில்... நமது பெற்றோர் மறைந்து சொர்க்கம் போய்விட்டால், அவர்கள் பிள்ளைகளைச் சபிக்க மாட்டார்கள். நரகத்திற்கு போனவர்களால் சபிக்க முடியாது. ஏனெனில், அவரே பாவம் செய்தவர். எனவே, சபிக்க அருகதையற்றவர் ஆகிவிடுகிறார். ஆனால், பிதுர் லோகத்தில் உள்ளவர்களுக்கு நம்மை சபிக்க அதிகாரம் உண்டு. காரணம், அவர்களுக்குரிய கடமையை நாம் செய்யாமல் இருப்பதால்! 

சரி...அவ்வாறு சாபம் பெறாமல் இருக்க, பிண்ட பிரதானத்தால் அவர்களை மோட்சத்துக்கு அனுப்ப முடியுமா என்ற கேள்வி எழும். ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் இறந்து போனால், அவர் தனது பாவபுண்ணியக்கணக்கை தீர்த்த பிறகு தான் மோட்சத்தை அடைய முடியும். 
அப்படியானால், பிண்ட பிரதானத்தால் என்ன புண்ணியம் என்று கேட்பீர்கள். அது நீங்கள் ஒழுங்காக சொர்க்கம் போய் சேருவதற்குத் தானே தவிர, கிளம்பிப் போனவருக்காக அல்ல! நாம் நமது பெற்றோருக்குரிய கடமையை இங்கே சரிவர செய்தால் தான், அங்கே நமக்கு சொர்க்கம் கிடைக்கும்.
இன்னொரு சந்தேகமும் உண்டு. ஒருவரது தந்தை இறந்து விட்டார். அவருக்காக மகன் இங்கே கவ்யம் கொடுக்கிறான். அவரோ, அதற்குள் மறுபிறவி எடுத்து விட்டார். அப்படியானால், அது எப்படி அவரைச் சேரும்! பிதுர்லோகத்தில் இருந்தால் அது அவரைச் சேர்ந்து விடும் என நம்பலாம். மறுபிறவி, எடுத்த பின் எப்படி அவரை அடையும் என்பீர்கள். 

இதற்காகத் தான் தேவதைகள் இருக்கிறார்கள். அவர்கள் அதை அவ்யமாக (பிதுர்களுக்குரிய உணவாக) மாற்றி அவர்களிடம் சேர்த்து விடுவார்கள். அவ்வாறு நாம் கொடுக்காவிட்டால், பிதுர்லோகத்தில் உள்ளவர்கள், நம் பிள்ளைகள் நமக்கு சாஸ்திரப்படி கொடுக்கவில்லையே என கோபிப்பார்கள். இதைத் தான் "பிதுர் சாபம்' என்கிறோம்.

இவ்வாறு சாபம் பெற்றுவிட்டால் பிராயச்சித்தம் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது. பிராயச்சித்தம் என்பதற்கு இரண்டு வித அர்த்தம். ஒன்று "பாவத்திற்கு மாற்று'. இன்னொன்று "பிராயம்' என்றால் "இளவயது'. இளவயதில் சாஸ்திரம் விதித்த கடமைகளைச் செய்யாமல் போனதற்கு மாற்று வழி.

சில வீடுகளில் அகால மரணம் நிகழ்கிறது. கண் பார்வையற்றவர்களாக, பிற ஊனங்கள் உடையவர்களாகப் பிறக்கிறார்கள். இதற்கு காரணம் சாபம் அல்ல. சாஸ்திரம் விதித்த தர்ம காரியங்களில் இருந்து தவறியதே. எனவே, பாவமே செய்யாமல் இருந்து, தர்ம காரியங்களை சரிவர செய்தால் தான் மோட்சம். பகவானைத் தான் சரணடைந்து விட்டோமே! இனிமேல், ஒன்றிரண்டு பாவம் செய்தால் தெரியவா போகிறது என்று நினைத்தால், இன்னும் பல பிறவிகளைக் கொடுத்து மோட்சத்தை தள்ளிப் போட்டு விடுவார். பகவானின் கோபமே பாவம். விருப்பமே புண்ணியம்.
ஆளவந்தார் சொல்வது போல, ஒரு தடவை பகவானை நோக்கி கைகூப்புங்கள். அவனைச் சரணாகதி அடையுங்கள். செய்த பாவமெல்லாம் மாறும். எத்தனை பாவம் செய்திருந்தாலும் மாறும்.




















No comments:

Post a Comment