Thursday, July 3, 2014

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 38

கண்ணன் நாமம் சொல்லும் கதைகள் - வேளுக்குடி கிருஷ்ணன் - 38

நாயகனாக, தலைவனாக, முதல்வனாக ஒருவரை வரித்துக்கொண்டு வாழ்வதற்கு ஆழ்ந்த மனோபலம் வேண்டும். குறிப்பாக, நாயகன் எனும் தகுதிக்கு உரியவராக அவர் இருக்கவேண்டும். தலைவன் என்பதற்குத் தக்கபடி, தலைமைப் பண்பு அவரிடத்திலே அமைந்திருக்கவேண்டும். முதல்வன் என்கிற சொல்லுக்கு ஏற்ப, சகல வித்தைகளிலும் ஞானத்திலும் முதல்வனாக, முதன்மையானவனாகத் திகழ வேண்டும். இவை அனைத்தையும் ஒருங்கே பெற்றவர் பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா.

பகவான் ஸ்ரீகண்ணபிரானை, நாயகன் எனப் போற்றுகிறோம். ஏனென்றால், அவர் நம்மை வழிநடத்துகிறார். மகாபாரத யுத்தத்தில், ஐவரையும் வழிநடத்திச் சென்றார் அல்லவா? இத்தனைக்கும் யுத்தத்தில் ஆயுதம் ஏந்துவதுதானே மரபு? ஆனால் அவரோ எந்த ஆயுதத்தையும் கையில் ஏந்தவில்லை.
ஆயுதம் ஏந்தாமல், வெல்ல வைத்தவர் ஸ்ரீகிருஷ்ணன். அவர்கள் ஜெயித்ததாகச் சொன்னாலும், உண்மையில் வென்றது கிருஷ்ணன்தான். ஏனென்றால், உலகின் நாயகனும், யுத்தத்தின் நாயகனும் அவரே!

சரி… அப்படியெனில் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தன் திருக்கரத்தில் என்னதான் வைத்திருந்தார் என்று கேட்கிறீர்களா?

ஒரேயொரு கோல் வைத்திருந்தார். அதைக் கொண்டே ஐவரையும் ரட்சித்து அருளினார். இதோ… சென்னை திருவல்லிக்கேணியில் ஸ்ரீபார்த்தசாரதியாக சேவை சாதிக்கும் பெருமாள், தன் திருக்கரத்தில் கோலுடன் காட்சி தரும் அழகைக் கண்டு சிலிர்க்கலாம்.

உபந்யாச நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால், நாற்காலி வேண்டும்; மேடை அவசியம்; மைக் மிக முக்கியம். ஆனால் அதேநேரத்தில், மேடை- நாற்காலிகள் இல்லையென்றாலோ, மைக்செட் வசதிகள் வைக்காமல் இருந்துவிட்டாலோ உபந்யாசம் நடக்காமல் போய்விடுமா? பகவான் ஸ்ரீகிருஷ்ணருக்கும் அப்படித்தான்… ஆயுதங்கள் ஏதும் தேவையில்லை. உலகை உய்விக்க சாதாரண கோல் ஒன்றே போதும்!

‘இவர் இல்லையென்றால் இந்த விஷயம் நடக்கவே நடக்காது’ என்று எவரைப் பார்த்துச் சொல்கிறோமோ, அவரே நாயக லட்சணங்களுக்குச் சொந்தக்காரர். நாயகன் என்பவன் வழிநடத்திச் செல்பவன். அதனால்தான் அவன் முன்னே நடக்கிறான். அதுமட்டுமா… ஆபத்பாந்தவனாக இருந்து நம்மைக் காத்தருள்பவன்.

ஆபத்து காலங்களில் நம்மைக் காப்பதில் மட்டுமா நாயகனாகத் திகழ்கிறான்? சிருங்கார சாதகன் அல்லவா ஸ்ரீகண்ணன்! காதலிலும் கைத்தலம் பற்றுவதிலும்கூட அவர் நாயகனாயிற்றே!

கண்ணபிரானின் சிருங்கார சாதகத்தை, ஸ்ரீஆண்டாளிடம் கேட்கவேண்டும். அன்பு ததும்பத் ததும்பச் சொல்லித் தீர்த்திருக்கிறாள் அவள். நம்மாழ்வாரிடம் பகவானின் சிருங்காரத்தைக் கேட்டால், சிலிர்ப்பும் சிரிப்பும் மாறாமல் எவ்வளவு பாசுரங்களில் பாடியிருக்கிறார் என்பது புரியும். திருமங்கை ஆழ்வாரும் கண்ணனின் சிருங்காரத்தை சிலாகித்திருக்கிறார்.

உலகின் சிருங்கார விஷயத்தில், காதலாகி, கைத்தலம் பற்றுகிற விஷயத்தில் நாயகனாகத் திகழ்கிறார் பகவான் கிருஷ்ணன்.

‘மைத்துனன் நம்பி மதுசூதனன்’ என்று அழகாகப் பாடியிருக்கிறாள் ஸ்ரீஆண்டாள். கணவரின் தம்பியை மைத்துனன் என்று இந்தக் காலத்தில் சொல்கிறோம். ஆனால், கணவனையே மைத்துனன் என்று அந்தக் காலத்தில் அழைத்தார்கள். இங்கே, ஸ்ரீகிருஷ்ணரை, தன் அன்புக் காதலரை
மைத்துனன் என்று அழைக்கிறாள் ஸ்ரீஆண்டாள். அடுத்து ‘நம்பி’ என்று சொல்கிறாள். அது, அவரது குணங்களைப் போற்றிச் சொல்வதற்காக அவள் பயன்படுத்திய மிக எளிய, சிறிய வார்த்தை. தவிர, நற்குணங்களும் புனிதமும் கொண்டு மதிப்புக்குரிய உறவைக் கொண்டவர் என்று அர்த்தம்.

இந்த இடத்தில் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். ‘அவர் ரொம்ப நல்லவருங்க’ என்று சொல்லி, ஒருவர் மீது மரியாதை செலுத்துகிறோம். ஆனால் ஒருகட்டத்தில், சில சந்தர்ப்ப சூழ்நிலைகளால், அவரிடம் இருந்த நல்ல குணங்கள் விலகிவிட்டன என்றால், உடனே நாம் அவரை வெறுத்து, ஒதுக்கிவிடுவோம். ”ஹூம்…

ஒருகாலத்துல மனுஷன் ரொம்பத் தங்கமானவராத்தான் இருந்தாரு. இப்ப புத்தி பிசகி, இப்படி ஆயிட்டாரு!” என்று எள்ளி நகையாடுவோம்.

உண்மையில், காலையில் இருப்பது போல் மதியத்திலோ, மதியம் இருப்பது மாதிரி மாலையிலோ நம் குணங்கள் இருப்பது இல்லை. எனவே, ஒருவரிடம் மதிக்கத்தக்கவர் என்பதற்கான குணங்கள் இருப்பின், அவரை எந்தச் சூழலிலும் எக்காரணத்தைக் கொண்டும் மதிக்காமல் இருப்பது மாபெரும் தவறு.

நூறு சதவிகிதம் நல்லவர் என்று இந்த உலகில் எவரையேனும் காட்டிவிடமுடியுமா நம்மால்? ‘அவர் நல்லவர்’ என்று இந்தப் பக்கம் பத்துப் பேர் சொல்வார்கள். அந்தப் பக்கம் இருப்பவர்களோ ‘ரொம்பக் கெட்டவர்’ என்பார்கள். ‘அய்யய்யோ… அவர் மேல இருக்கிற நம்பிக்கையே போயிடுச்சு. அவர் சொல்றது எல்லாமே பொய்’ என்று விமரிசிப்பார்கள்.

ஆனால் பொய்யும் சொல்லி, மெய்யும் சொல்லி, மெய்யே ஜெயிக்கும் என்று நிலைநிறுத்தியவர் பகவான் ஸ்ரீகிருஷ்ணன். பொய் சொல்வதில் தப்பு இல்லை. அந்தப் பொய்யால், எவருக்கேனும் நன்மை கிடைக்கும் என்றால், எவரையேனும் ஆபத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என்றால், தாராளமாகப் பொய் சொல்லலாம். இதைத்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர், தன் அவதாரத்தின் மூலம் வாழ்ந்து காட்டி அருளியிருக்கிறார்.

எத்தனை பொய்கள் சொன்னாலும், எவ்வளவு வஞ்சகமான சூழ்ச்சிகளும் நாடகங்களும் போட்டாலும் கண்ணனைக் குறைத்து மதிப்பிடுகிறோமா, என்ன? எப்போதும் எல்லோராலும் மதிக்கத்தக்கதான நாயக குணங்களைக் கொண்டவர் ஸ்ரீகிருஷ்ணன்.

அதேபோல், இந்த உலகில் ஒரேயொரு குணம் கொண்டவரை எவரும் மதிப்பதும் இல்லை; ஸ்நேகிதமாகப் பழகுவதும் இல்லை. அது எந்தக் குணம் தெரியுமா? தற்பெருமை. எதற்கெடுத்தாலும் தன்னைத் தானே புகழ்ந்து பெருமை பீற்றிக் கொள்பவரை உலகில் எவருமே விரும்புவது இல்லை. 

தற்பெருமை, கர்வம், அலட்டல் என்பவையெல்லாம் அழிவுக்கான அறிகுறிகள்; மிகக் கொடிய விஷக்கிருமிகள். கண்ண பரமாத்மா ஒருபோதும் தன்னைப் பற்றிப் பெருமையாகப் பேசிக்கொண்டதே இல்லை.

ஆனால், மிகத் தேவையான தருணத்தில், மிகச் சரியான சந்தர்ப்பத்தில் பெருமை பேசாமல் இருப்பதும் தவறு. அப்படியொரு சந்தர்ப்பம் கிடைக்க… பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மா அர்ஜுனனிடம் பேசினார். அதுதான் கீதை எனும் வாழ்வியல் தத்துவம்!

No comments:

Post a Comment