Saturday, July 12, 2014

யார் அந்த 4 பேர்

உலகில் நிறத்தின் அடிப்படையில் மனிதர்களை நான்காக பார்க்கிறார்கள் (பகுத்தறிவாளர்கள் சொல்லும் வர்ணங்கள் வேறு) கருப்பு, வெளுப்பு, மஞ்சள்,சிகப்பு என்று. மனிதனின் குணாதிசயங்களை அல்லது அவனது வாழ்க்கை முறைகளையும் கூட நான்காக பார்க்கலாம். பல மனிதர்களை பார்த்து பழகி பிறகு எடுத்த ஒரு முடிவின் தொகுப்பு இது என்று கூட வைத்து கொள்ளலாம். இந்த எனது கருத்தில் மாறுபடுபவர்கள்- தங்கள் கருத்துகளை பிறகு முன் வைக்கலாம்.
நான் பார்க்கும் அந்த நான்கு மனிதர்கள். முதலாவது. நீங்கள் சிலரை பார்த்து இருப்பீர்கள். எல்லா விஷயத்திலும் மிகச் சரியாக இருக்கும் மனிதர்களை. அவர்கள் தாங்கள் மட்டும் சரியாக இருப்பதோடு மட்டுமல்லாமல், பிறரும் சரியாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பவர்கள். "நா கரெக்டா இருக்கேன்ல நீயும் கரெக்டா இருக்கணும்" என்கிற கொள்கையோடு எல்லோரையும் அணுகுபவர்கள். உலகில் மிகச்சரியாக இருப்பவர்கள் மிக சொற்பமானவர்களே.
"ஒண்ணாந்தேதியாச்சுன்னா சம்பள காசை அப்படியே தர்றேன். சோறாக்க வலிக்குதா" என்று மனைவியின் ஒரு நாள் தாமத சமையலுக்கு கோபப்பட்டு தட்டை வீசுபவர்கள். அவருக்கு கீழே பணி புரிபவர் ஒரு நாள் விடுமுறை போட்டால் போதும். அப்படியே டென்ஷனாகி "காசு மட்டும் வாங்க தெரியுது. வேலை பார்க்கணும்னா உடம்பு வலிக்குதா" என்று கத்தி தீர்ப்பார்கள். இவர்களுக்கு எல்லாவிதமான ப்ரஷ்ஷர்களும் வரும.
"நா கரெக்டா தானே இருக்கேன். அடுத்தவனும் கரெக்டா இருக்கிறது தானே நியாயம். எனக்கு மட்டும் ஏன் இப்படியாகுது" என்று கேட்பார்கள். அவர்களின் கேள்வி நியாயமானது தான். ஆனால் உலகில் எல்லோராலும் அப்படி இருக்க முடியாது. சரியாக ஒண்ணாம் தேதி கரண்ட் பில் கட்டுபவர்களும் இருக்கிறார்கள். அதே நேரம் கரண்ட் பில் கட்டலன்னு பீஸை புடுக்க வரும் போது கட்டுபவர்களும் இருக்கிறார்கள்.
தான் பணிபுரியும் நிறுவனத்திற்காக உயிரை கொடுத்து வேலை பார்ப்பார்கள். ஒண்ணாம் தேதி ஒழுங்காக முதலாளி சம்பளத்தை தரா விட்டால் அவரையே அடித்தாலும் அடித்து விடுவார்கள். அவர்கள் நியாயமாய் இருக்கிறார்கள். நியாயத்தை எதிர்பார்க்கிறார்கள். நடக்காமல் போனால் மிகப்பெரிய மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். பணம் செலவழித்து பிள்ளைகளை படிக்க வைப்பார்கள். மார்க் மட்டும் கம்மியாக வாங்கி விட்டால் பிள்ளையின் கதி அதோ கதி தான்"நான் சரியா இருக்கேன். கண்டிப்பா நீயும் சரியா இருக்கணும்"
"வாழ்க்கைன்னா முன்னப்பின்ன தாங்க இருக்க முடியும். எப்படிங்க எல்லா நேரத்துலயும் கரெக்டா இருக்க முடியும்" என்று யாராவது கேட்டால், "நா கரெக்டா இருக்கேன்ல" என்று பதில் வரும். "நா கரெக்டா இருக்கேன். நீயும் கரெக்டா இருந்தே ஆகணும். அது தான் நியாயம்" இது தான் முதல் ரக மனிதர்களின் குணாதிசயம்.
அடுத்து... இரண்டாம் ரக மனிதர்கள் யார் என்று பார்ப்போமா... இவர்கள் பாதி யளவு முதலாம் ரக மனிதர்களின் குணாதிசயத்தை கொண்டவர்கள். "என் வரையில் நான் மிகச் சரியாக இருப்பேன். நீ எப்படி வேண்டுமானால் இருந்து கொள். கரெக்டாக இருந்தால் உனக்கு நல்லது. இல்லையெல் எனக்கொன்றும் இல்லை. உனக்கு தான் கஷ்டமும், நஷ்டமும்" என்கிற மனோ நிலையில் வாழ்கிறவர்கள்.
யோசிக்கையில் உலகில் இவர்கள் தான் மிக மிக சந்தோஷமாய் மன. மற்றும் உடல் ஆரோக்யத்துடன் டென்ஷன் இன்றி இருப்பதாக தோன்றுகிறது. வெற்றி பெற்ற பல மனிதர்களின் அடிப்படை குணாதிசயம், இந்த ரகத்தை சார்நததாகவே உள்ளது. கடமையை செய், பலனை எதிர்பார்க்காதே... இது சில நேரம் முறையற்ற கருத்தாக இருந்தாலும்- நம் கடமையை நாம் ஒழுங்காக செய்ய வேண்டும் என்கிற அடிப்படை உள்ளதே.
சம்பளம் கொடுக்காத முதலாளிகளை பார்த்து இவர்கள் கோபிப்பதில்லை. "என்னை வேலைக்கு வைச்சுகிட்டா உனக்கு தான் நல்லது. வேணாம்மா. இன்னொரு இடம் பார்த்துகிறேன்" என்று போய் கொண்டே இருப்பார்கள். வாழ்க்கை துணையே கூட சரியாக அமையா விட்டால் கூட கவலையே படமாட்டார்கள். வாழ்க்கை துணை பற்றியே கவலை படாதவர்கள், வாழ்க்கை துணையின் சமையல் குறித்தா கவலைப் படுவார்கள்.
தன்னிடம் பணிபுரிபவன் சரியாக இல்லை என்றால், நான்கு தடவை சொல்லி பார்ப்பார்கள், பிறகு இடத்தை காலி பண்ணுங்க சார் என்று நோகாமல் பேசி அனுப்பி விடுவார்கள். இந்த மனோபாவம் கொண்ட மனிதர்களை வாழ்க்கை துணையாக அமைய பெற்றவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இவருக்கு பெற்றோராய் இருப்பவர்கள், இவருக்கு பிள்ளைகளாய் பிறந்தவர்கள் பாக்யசாலிகள். இவர்களால் பிறருக்கு இடைஞ்சல் இருப்பதில்லை. பிறரிடம் இருந்து இடைஞ்சல் வருவதையும் இவர்கள் விரும்புவதில்லை. இவரை நண்பராக பெற்றவர்களும் அதிர்ஷ்டசாலிகளே.
மூன்றாம் ரக மனிதர்களை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால், "நரகத்திற்கு போவதும், இவரோடு சேர்ந்து வாழுவதும் ஒன்று" எந்தவொரு விஷயத்திலும் இவர்கள் சரியாக இருக்க மாட்டார்கள். ஆனால் மற்றவர்கள் மட்டும் சரியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.
இரண்டாம் ரக மனிதர்களுக்கு முற்றிலும் நேர்மாறாக இருப்பவர்கள்...
இவர்கள். திருவிளையாடல் படத்தில் நாகேஷ் இப்படி சொல்வார்."பாட்டெழுதி
பெயர் வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள். குற்றம் கண்டுபிடித்து பேர்
வாங்கும் புலவர்களும் இருக்கிறார்கள்" என்று. மூன்றாம் ரகத்தவர் இந்த ரக
மனிதர்கள். நல்ல குடும்பத்தலைவராக இருக்க மாட்டார்கள். ஆனால் மனைவி
சிறப்பானவளாய் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். தங்கள் தகுதியை
மறந்து ஆகாசத்தில் கோட்டை கட்டுவார்கள். இவர்களுக்கு மனைவியாக
அமைந்தவர்கள் அல்லது கணவனாக அமைந்தவர்களின் வாழ்வு திண்டாட்டம் தான்.
இவர்களோடு வாழவே முடியாது. விவாகரத்து வழக்குகளில் முக்கால்வாசி இவர்களுடையதாகவோ அல்லது இவர்களை வாழ்க்கை துணையாக பெற்றவர்களுடையதாகவோ இருக்கும். பனிரெண்டு மணி நேர உழைப்பை வேலையாளிடம் உறிஞ்சி விட்டு, பத்து ரூபாய் கொடுக்க ஆயிரம் கேள்வி கேட்பார்கள். இவர்களிடம் எவராலும் பணி செய்ய முடியாது. இவர்களாலும் யாரிடமும் பணி செய்ய முடியாது. யாரும் இவரை வேலைக்கு வைத்து கொள்ளவும் மாட்டார்கள். நிறைகள் தெரியாது. குறைகள் மாத்திரமே தெரியும். இவர்களுக்கு பிள்ளைகளாக இருப்பதும் சிரமம். இவர்களுக்கு அப்பா, அம்மாவாக இருப்பதும் சிரமம்.
நான்காவது ரகத்தவர்கள் நகைசுவை உணர்வு கொண்டவர்கள். எதைப்பற்றியும் கவலை இல்லாதவர்கள். இவர்களின் இந்த கவலை இல்லாத சுபாவமே, இவர்களை சார்ந்துள்ளவர்களுக்கு கவலையை தரும். இப்படி குடும்ப கஷ்டமோ, கவலையோ தெரியாம்ம இருக்காரே என்று. யாரிடமும் வாங்கிய பத்து ரூபாயை கொடுக்க மாட்டார்கள். அதே சமயம் பிறருக்கு கொடுத்த பத்து ரூபாயை கேட்கவும் மாட்டார்கள்.
இவரை புத்திசாலி என்பதா அல்லது ஞானக்கிறுக்கன் என்பதா. பிறருக்கு குழப்பமாக இருக்கும். அதாவது அவரும் சரியாக இருக்க மாட்டார். பிறரும் சரியாக இல்லா விட்டால் வருத்தப் பட மாட்டார். மார்க் சரியாக பிள்ளைகள் வாங்கவில்லை என்றால்"விடுடா அடுத்த பரிட்சை நல்லா எழுது" என்பார்கள். மனைவி சமையல் குறித்து அதிகம் அலட்டி கொள்ள மாட்டார்கள். இதே சுபாவம் பெண்ணுக்கு இருப்பின், கணவனின் குறைகளை பெரிசு படுத்த மாட்டாள்.
எதிர்பார்ப்பு அதிகம் இல்லாதவர்களாய் இருப்பார்கள். வறுமை சூழல் நிலவினாலும, அதற்காக பெரிசாக அலட்டி கொள்ள மாட்டார்கள். முதலாம் ரக மற்றும் மூன்றாம் ரக மனிதர்களை பார்த்தால் இவர்களுக்கு வேடிக்கையாக இருக்கும். மன உளைச்சல் அற்றவர்களாக இருப்பார்கள். எவ்வளவு பெரிய கஷ்டம் வந்தாலும், அதை கஷ்டமாக நினைக்காதவர்கள். இவர்களை வேலைக்கு வைத்து கொள்வதில் சில நன்மைகளும் உள்ளன... சில தீமைகளும் உள்ளன. சம்பளம் சரியாக தராவிட்டாலும் முகம் சுளிக்காமல் வேலை பார்ப்பார்கள். ஆனால் எப்போது வேண்டுமானாலும் காலை வாரி விட்டு விடுவார்கள். இவர்களோடு மிகச் சரியாக வாழும் மன நிலை கொண்டவர்கள் வாழுவது சிரமம் தான். ஆனால் வாழ்ந்து விடுவார்கள். பிறர் மதிக்க வேண்டும் என்று நினைக்கமாட்டார்கள்.
பிறரை மதிக்க வேண்டுமே என்றும் நினைக்கமாட்டார்கள். யாருக்கும் தீங்கு நினைக்காதவர்கள். குதர்க்க புத்தி இல்லாதவர்கள்.
ஆக நான்கு வகை மனிதர்களின் குணாதிசய சாரம்சம் இவை தான்.
நான் எடுத்து வைத்துள்ள மையக் கருத்து சரி தானே.
நன்றி : தமிழ் உதயம்

No comments:

Post a Comment