Friday, July 11, 2014

ஏன் எதிர்க்கவில்லை கோசலை?

ஏன் எதிர்க்கவில்லை கோசலை?

உள்ளம் முழுவதும் உவகையால் நிரம்பியிருந்தது. தன் மகன் நாடாளப் போகிறான்! ஆம், ராமன் அயோத்திக்கு அரசனாகப் போகிறான். நாளை மகுடாபிஷேகம்... கோசலையின் மனம் மகிழ்ச்சியில் துள்ளியது.

ராமன் தன் மகன் என்பதால் மட்டும் ஏற்பட்ட சந்தோஷமல்ல அது. அவன் தரணி ஆளத் தகுதியானவன்தான் என்ற பொதுக் கருத்தும்தான் காரணம். அவன்தான் எல்லோருக்கும் நல்லவனாக இருக்கிறானே! யாரைக் கேட்டாலும் அவனைப் போன்ற ஒரு உத்தமன் காணுதற்கரிது என்றல்லவா சொல்கிறார்கள்! காட்சிக்கு எளியனாய், இன்சொல் உடையவனாய், பழகுதற்கு தளிர் போன்றவனாய் அனைவர் மனதையும் அவன்தான் எப்படிக் கவர்ந்துவிட்டான்! அயோத்தி மாநகரமே அதனைக் கொண்டாடுவதிலிருந்து அவன் மீதான மக்கள் மதிப்பைப் பரிபூரணமாக உணர முடிகிறதே! ஒவ்வொரு வீட்டினரும் தத்தமது குடும்பத்து மூத்த மகனே அரசனாவதைப் போலக் கருதி களி நடனம் புரிகிறார்களே.

கோசலை காத்திருந்தாள். தன் கணவர் தசரதன் வருவார், தன்னுடன் அந்த சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வார். மைந்தன் ராமனை அவயத்து முந்தியிருக்கச் செய்யும் தன் கடமை சரிவர நிறைவேறி வரும் நற்செய்தியை, பலவாறாக மகிழ்ச்சி முகிழ்க்க, சொல்வார்...

கணவர் சரி, தன் சக்களத்திகளும் இந்த விவரத்தை எவ்வளவு ஆவலுடன் எதிர்பார்ப்பார்கள்! அவர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியை மேலும் பகிர்ந்து கொள்ளலாம்.

முதலில் கைகேயி. ராமனைத் தன் பிள்ளைப் போலவே பார்த்துக் கொண்ட அவளு டைய நேர்த்தி இன்னும் தன் கண்களில் நிலைத்து நிற்கிறதே. தசரதனும்தான், தனக்குப் பிறந்த ராமனை முதலில் கைகேயியிடம் கொடுத்து, அவளே முதல் கொஞ்சல் புரியட்டும் என்றவர் அல்லவா?
அதற்கும் ஓர் அற்புதமான காரணத்தை விளக்கமாகக் கணவர் சொன்னாரே! கைகேயி அரச வம்சத்தவள். கைகேய நாட்டின் இளவரசி. அவளுக்கு அரண்மனை சுகபோகங்கள், அதிகாரங்கள், ஆனந்தங்கள் எல்லாமே அத்துப்படி. ஆனால், கோசலையோ எளிமையான குடும்பத்தில் பிறந்தவள். அவளுடைய எதிர்பார்ப்புகளும், தேவைகளும், இயலாமை எல்லைக்குள் அமைதிபட்டுக் கொள்ள வேண்டியவை. ஓர் அரசனுக்குப் பட்டத்து ராணியாக ஆனபிறகும் தன் குடும்ப எளிமை, பணிவு, அடக்கம் எல்லாம் தொடர்ந்து அவளிடம் நீடித்தன. ஆனால், கைகேயி அப்படியில்லை.

தனக்கு அடிமை செய்ய தன் அரண் மனையிலிருந்தே தனக்கு அதுவரை பணிபுரிந்து கொண்டிருந்த சேடிப் பெண்ணை உடன் அழைத்து வந்தது முதல், தன் அரச தோரணையிலிருந்து சிறிதும் இறங்கா திருந்தாள் அவள்.

அதேசமயம் வெளியே இருந்த பகட்டின் அளவுக்கு உள்ளே மென்மையும் அவளிடம் குடி கொண்டிருந்தது. வெளியே தெரிந்த அதிகாரத் தோரணை, மன இரக்கத்தை நீறு பூத்த நெருப்பாகத்தான் மூடியிருந்தது. பேச்சில் கம்பீரம் இருந்தாலும், எதிரே இருப்பவரின் வயது, பதவியை அனுசரித்துதான் வார்த்தைகள் வெளியே வந்தன.

இதையெல்லாம் கருத்தில் கொண்டுதான் தசரதன் தன் குழந்தையை முதலில் அவள் மடியில் தவழவிட்டிருக்கிறான். பின்னால் நாடாளப் போகும் குழந்தை, ஏற்கெனவே ஒரு நாட்டின் இளவரசியாக வாழ்ந்தவள், இப்போது ராஜ மகிஷியாக இருப்பவள் பொறுப்பில் வளருமானால் அதுதானே பொருத்தமாக இருக்க முடியும்? ஆக, ராமனுக்கு பட்டாபிஷேகம் என்பதில் தன்னைவிட கைகேயிதான் மட்டற்ற மகிழ்ச்சியடைபவளாக இருப்பாள் என்றே கருதினாள் கோசலை.

அடுத்து இரண்டாவது சக்களத்தி சுமித்திரை. இவளுடைய தியாகத்திற்குதான் எல்லை ஏது? இரண்டு மகன்கள் இவளுக்கு - லட்சுமணன், சத்ருக்னன். இருவரையும் மூத்தாள்கள் பிள்ளைகளுடனேயே ஒன்றியிருக்கும்படி பழக்கி வளர்த்தவளல்லவோ அவள்! தன் மகன் ராமனுடன் லட்சுமணனையும், கைகேயி மகன் பரதனுடன் சத்ருக்னனையும் இணைத்தவள் அவள். தானும் கைகேயியும் ஆளுக்கு ஒரு பாகம் அவிர்பாக பாயசத்தைக் கொடுத்ததால், அதனால் தனக்குப் பிறந்த குழந்தைகளை ஒரு நன்றியறிதலாக இப்படி மூத்தாள் குழந்தைகளுடன் பழக விட்டிருப்பாளோ? அவர்களும் தாயின் விருப்பம் போலவே ராமனுடனும், பரதனுடனும் ஒன்றிப் போய்விட்டார்களே. ஆக, சுமித்திரையும்தான் ராம பட்டாபிஷேகத்தில் பேரார்வம் கொண்டிருப்பாள்.

முதலில் கைகேயியைப் பார்க்கப் போவோம்... கோசலை புறப்பட்டாள். கைகேயியின் அரண்மனையை அடைந்தாள். அவளது அந்தப்புரத்தில் கைகேயி, அரண்மனை பிரதான ஜோதிடரிடம் பேசிக் கொண்டிருப்பதை கவனித்தாள். அவர்களுக்கிடையே புக விரும்பாதவளாகச் சற்றுத் தொலைவிலிருந்தபடியே அவர்களை கவனித்தாள்.

கவலை தோய்ந்த முகத்தினராக ஜோதிடர் சொல்லிக் கொண்டிருக்க, அவரைவிட அதிகம் கவலையுடன் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்தாள் கைகேயி. அவர்கள் பேச்சில் ராமன், பரதன் பெயர்கள் அடிபடுவதும் புரிந்தது. சரி, ராம பட்டாபிஷேக சந்தோஷத்தைப் பிறகு பகிர்ந்து கொள்ளலாம் என்று முடிவெடுத்து, அங்கிருந்து நகர்ந்தாள். ஆனாலும், மனசுக்குள் குறுகுறுப்பு. ராமனைப் பற்றி ஜோதிடரிடம் கேட்பதற்கு இப்போது என்ன அவசியம் வந்தது? அதுதான் அவனுக்கு பட்டாபிஷேகம் என்று முடிவாகிவிட்டதே... ஜோதிடர் கைகேயியைக் குழப்புகிறாரா அல்லது கைகேயிதான் ஏதாவது திட்டம் தீட்டுகிறாளா?

அன்றிரவு யோசனையாலும், குழப்பத்தாலும் தவித்து தூக்கம் தொலைத்த கோசலை, மறுநாள் பொழுது விடிந்ததும் செய்த முதல் வேலை, அரண்மனை தலைமை ஜோதிடரை தன் இருப்பிடத்துக்கு வரச்சொன்னதுதான். நாசுக்காகத்தான் கேட்டாள். அதற்குள் ஜோதிடருக்கு வியர்த்துக் கொட்டிவிட்டது. ஆனாலும், தன்னுடைய ஜோதிடக் கணிப்புகளை அவளுக்கும் விரிவாக எடுத்துக் கூறினார்.

அதைக் கேட்டதும் அப்படியே இடி விழுந்த பச்சை மரம் போல சாய்ந்துவிட்டாள் கோசலை. அவள் கண்முன் உலகமே சுழன்றது. ஜோதிடம் பலிக்கும். அப்படியானால்தான், அது குறிக்கும் இழப்புக்கும் தயாராக இருத்தல் வேண்டும். எப்படிப்பட்ட இழப்பு அது?

அவள் எதிர்பார்த்தது போல தீவினைகள் நடக்கத்தான் செய்தன. ராமன் காட்டிற்குச் சென்றான். அவனது பிரிவைத் தாங்காத தசரதன் உயிர் நீத்தான். ஆனால், தன் சீரிய ஆட்சி மூலம் அயோத்தியைப் பரிபாலனம் செய்ய வேண்டியவன், ராவணனை வதைத்து உலகத்துக்கே நல்வழிகாட்டினானே, ராமன், அந்தப் பேராண்மைக்குதான் ஏது மதிப்பீடு?

சிற்றன்னை கைகேயியை அண்ணன் ராமன் சிறிதளவாவது கடிந்து கொள்வான் என்று எதிர்பார்த்திருந்த லட்சுமணனுக்கு ஏமாற்றமாகவே இருந்தது. நாடாள வேண்டிய தன்னை அநியாயமாகக் காட்டிற்கு அனுப்பிவிட்டு, பரதனை அரியணை ஏற்றும் தன்னுடைய ஆசையும் நிராசையாகிவிட்ட கைகேயிக்கு இன்னும் மரியாதை கொடுத்துக் கொண்டிருக்கிறாரே...

சரி, கைகேயிதான் தன் மகன் பரதனுக்காக சதிவலை பின்னியிருக்கிறாள். ஆனால், ராமனின் சொந்தத் தாய், கோசலை, எப்படி இந்த ஏற்பாட்டுக்கு சம்மதித்தாள்? ஏன் எந்த எதிர்ப்பையும் அவள் காட்டவில்லை? தன் மகனுடைய மகுடம் பறிக்கப்பட்ட தில் அவளுக்கு வருத்தம் இல்லையா? வாரிசு உரிமைப்படி, நியாயப்படி, சட்டபூர்வமாகவே கிடைக்க வேண்டிய உரிமை கைநழுவிப் போனதற்காக அவள் ஏன் கோபப்படவில்லை? கைகேயி வரம் கேட்டிருந்தால், அதன் பாதிப்பு தன்னையும் தன் மகனையும் தாக்குவதை கோசலை எப்படி அனுமதித்தாள்? என்னதான் கணவன் ஆணை என்றாலும், சிறு அளவில்கூட தன் மன பாதிப்பை அவள் வெளிக்காட்டாதது ஏன்? கைகேயி அரச வம்சத்தவள், தான் அவ்வாறில்லை என்ற தாழ்வு மனப்பான்மை காரணமா?

அப்படியே இருந்தாலும், தசரத மகா சக்கரவர்த்தியின் முதல் மனைவி என்ற அந்தஸ்து பெரியதில்லையா? அந்த உரிமையில் அவள் கைகேயியின் ஆணவக் கோரிக்கை நிறைவேறாதபடி செய்திருக்க முடியாதா? தசரதன் அவளுக்கு வரம் கொடுத்திருந்தான் என்றால், அதன் மூலம் பரதன் முடிசூட வேண்டும் என்று அவள் வலியுறுத்தினாள் என்றால், தனக்கொப்பாக ராமனை சக்கரவர்த்தியாக்கி, பரதனை ஒரு சிற்றரசனாக ஆக்கியிருக்கலாமே? இந்த சமரச சிந்தனை கோசலைக்குத் தோன்றவில்லையா? தோன்றியிருந்தால் அதை அவள் தசரதனிடம் தெரிவித்திருக்கலாமே.

இந்தத் திட்டத்திற்கு தசரதன் நிச்சயம் உடன்பட்டிருப்பான். கைகேயிகூட இந்த ஏற்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கக் கூடும். ஆனால், சிறிதளவுகூட தன் கோபத்தை கோசலை காட்டாதது ஏன்? அல்லது பரதனை நாடாள சம்மதித்துவிட்டு, ராமன் காட்டிற்குப் போகவேண்டாம் என்றாவது அவள் கேட்டிருக்கலாம். இந்தச் சலுகையினாலாவது ராமன் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் மேற்கொண்டு துன்பங்களை அனுபவிக்காதபடி தவிர்த்திருக்கலாமே. ஒரு தாயாக இருந்து கொண்டு, தன் மகனுடைய நல்வாழ்க்கை தன்னெதிரிலேயே சீரழிவதை எப்படி சும்மா பார்த்துக் கொண்டு இருந்திருக்க முடிந்தது? ஒருவேளை அயோத்தி மக்களின் ஏகோபித்த தேர்வாக ராமன் அமைந்துவிட்டதால் அவனிருக்க பரதனுக்கு முடிசூட்டினால், பின்னால் மக்கள் கொதித்தெழ, நாட்டில் பிரச்னைகள் பெருகுமே என்ற அச்சம் காரணமாக இருந்திருக்குமோ? அல்லது பரதன் அரசாள, ராமன் உடன் இருப்பது அயோத்தி அரசியலில் விரும்பத்தகாத சூழ்நிலைகளை உருவாக்கும் என்று கருதினாளோ?

எதுவாக இருந்தாலும் சரி, ஒரு தாய் என்ற வகையில் அந்த ஏற்பாட்டுக்கு கோசலை உடன்பட்டது சரியல்ல, முறையல்ல, தாய்க்குலத்துக்கே அது ஒரு சாபக்கேடு என்ற ரீதியில் தனக்குள்ளேயே கொதித்துக் கொண்டிருந்தான் லட்சுமணன். எல்லாம் போகட்டும், ராமன் தன் தாயைப் பார்த்து உரிமையுடன் கேட்க மாட்டானா? “ஏனம்மா, தந்தையார் சொன்னார் என்பதற்காக என்னைக் காட்டுக்கு அனுப்பியதை அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தீர்களே, கைகேயிக்கு வரம் கொடுத்தீர்கள் என்பதற்காக என் மகன் தண்டிக்கப்படுவது என்ன நியாயம் என்று ஏனம்மா ஒரு வார்த்தை நீங்கள் கேட்கவில்லை? சிற்றன்னையைப் போல இல்லாவிட்டாலும், ஓரளவுக்காவது அழுது, புலம்பி, தடுக்க ஏன் அம்மா நீங்கள் முயற்சிக்கவில்லை? இவ்வளவையும் மீறி என்னைக்கூட ஒரு வார்த்தை கேட்கவில்லை. தசரதன்-கைகேயி-நான் ஆகிய மூவர் மட்டுமே அரசாளுவதும் காடாள்வதுமான பிரச்னையில் உழன்று கொண்டிருந்தபோது, தாயாகிய நீங்கள் ஏன் அம்மா ஒதுங்கி நின்று கொண்டீர்கள்? ஓரமாய் நின்று வேடிக்கை பார்த்த உங்கள் கண்களிலிருந்து பெருகிய ஆறுக்கு ஆற்றலிருந்திருந்தால் அதுகூட என்னைத் தடுத்திருக்கும்.

ஆனால், நீங்கள் செய்யவில்லை. என்னவோ உங்களுக்குச் சிறிதும் சம்பந்தமில்லாதது போல, யாரோ மூன்றாம் நபருக்கு நிகழும் சோகம் போல அந்த களத்திலிருந்து விலகித் தனியே போய் நின்று கொண்டீர்களே, ஏனம்மா..?”-என்றெல்லாம் ராமன் கேட்க மாட்டானா?

லட்சுமணன் தவித்தான். அந்தத் தவிப்பினூடே ராமனுடன் தான் கோசலை இருந்த பகுதிக்கு வந்துவிட்டதை உணர்ந்தான். ராமன் என்ன செய்யப் போகிறான்? அவனை கோசலை எப்படி எதிர்கொள்வாள்? ராமன் கேட்கக் கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலாமல் தலைகுனிந்து தயங்குவாளா? தவிப்பாளா? தன் உரிமையை நிலைநாட்டாமல் விட்டதை எண்ணி இப்போது வேதனையால் வெதும்புவாளா?

“ராமா...”ஓடிவந்து மகனை அணைத்துக் கொண்டாள் கோசலை. “வந்தாயா என் செல்வமே, உன்னை எதிர்பார்த்து என் கண்கள் பூத்துப் போயின அப்பா...” வெள்ளமாய் பெருகிய கண்ணீரில் அதுநாள் வரையிலான ஏக்கம், பாசம் எல்லாம் கரைந்தோடின.

ராமன் தாயின் கால்களில் வீழ்ந்து வணங்கினான். அருகில் நின்றிருந்த லட்சுமணனின் முகத்தில் தெரிந்த வெறுப்பைக் கண்டாள் கோசலை. ராமனைத் தூக்கி நிறுத்திய அவள் லட்சுமணனைப் பார்த்தாள். “உனக்கு என் மீது கோபமா அப்பா?” என்று கேட்டாள்.

“ஆமாம்,”வெடுக்கென்று கூறினான் லட்சுமணன். “நீங்கள் ஒரு வார்த்தை சொல்லி அண்ணனைத் தடுத்திருந்தால் இந்தப் பதினான்கு ஆண்டுகள் உங்களுக்கு நரக வேதனையைத் தந்திருக்காது...”

“ஆனால், நான் என் மகனை முற்றிலுமாக இழந்திருப்பேன். அந்த ரகசியம் தெரியுமா உனக்கு?”என்று கோசலை கேட்டபோது லட்சுமணன் மட்டுமல்ல, ராமனும் திடுக்கிட்டான்.

“ஆமப்பா. கைகேயி உனக்கு நல்லதைத்தான் செய்திருக்கிறாள். அவள் உத்தமி. தன் மாங்கல்யம் போனாலும் என் மகனான உனக்கு எந்த ஊறும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டிருந்திருக்கிறாள்...”

கோசலையின் பதில், சகோதரர்களை திகைக்க வைத்தது.

“ஆமாம். நம் அரண்மனை தலைமை ஜோதிடர் சொன்ன தகவலால்தான் கைகேயி அப்படி நடந்து கொண்டாள். ராமா, உனக்கு முடிசூட்டும் சமயத்தில் கைகேயியின் ஜாதகத்தில் சனி ஐந்தாம் இடத்தில் இருந்ததாகவும், அதனால் நாட்டிற்கே பெரும் கேடு என்றும், குறிப்பாக அரியணையில் அமர்பவருக்கு ஆயுள் முடியும் என்றும் அவர் சொன்னதைக் கேட்டு வேதனையுற்றாள் கைகேயி. அதாவது, அப்போதைக்கு யார் அரசராக இருக்கிறாரோ அவருடைய உயிருக்கு ஆபத்து. அந்த வகையில் தசரதன் அரியாசனத்திலிருந்து இறங்கி, ராமன் சிம்மாதனம் ஏறினால் பாதிப்பு யாருக்கு? ராமனுக்குதானே? அதை அவள் விரும்பவில்லை. ராமன் நாடாளாவிட்டாலும் போகிறது. அவன் நல்லபடியாக இருக்க வேண்டும். பதினான்கு ஆண்டுகள் கழித்து, சனி பாதிப்பு முற்றிலுமாக போனபிறகு அவன் மீண்டும் அயோத்திக்குத் திரும்புவான், முடிசூடுவான் என்பதாலேயே அந்த விபரீத முடிவை அவள் எடுத்தாள்.

என் குழந்தையின் பொருட்டு என்னுடைய சக்களத்தி எடுத்த இந்த முடிவை அறிந்து நானும் அதிர்ந்துதான் போனேன். ஆனாலும், நான் யாருக்காகப் பேசுவது? புது வாழ்வு துவங்கப்போகும் என் மகன் ஆயுள் நிலைப்பது முக்கியமா? ஆண்டு அனுபவித்து, தன் பொறுப்புகளை அளித்து மகனை அரசனாக்கத் தயாராக இருக்கும் என் கணவர் நிலைப்பது முக்கியமா? யோசித்ததில், கைகேயியின் திட்டம்தான் சரியென எனக்கும் பட்டது. அதனால்தான் நான் எந்த எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை.

ஜோதிட சாஸ்திரப்படி அந்த காலகட்டத்தில் அரியணையில் அமர்பவர் மரிப்பார் என்ற உண்மைக்கு, கணவரை விட மகனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதே சரியென எனக்குப் பட்டது. அதோடு கைகேயிக்கு உன் தந்தையார் கொடுத்திருந்த வரங்களும் என்றாவது ஒருநாள் நிறைவேற்றப்பட வேண்டியதுதானே? அவ்வாறு அவர் நிறைவேற்ற நானும் மறைமுகமாக துணையிருந்திருக்கிறேன்... ஜோதிடர் சொன்னதைக் கேட்ட நாளிலிருந்து இன்றுவரை நான் மவுனம் காத்ததற்கு அதுதான் காரணம்...”

கோசலையின் கால்களில் இப்போது ராமனுடன் லட்சுமணனும் விழுந்து அழுதான்.

No comments:

Post a Comment