Monday, July 21, 2014

சாபத்தால் ராமரை சந்தித்த குகன்

கங்கையின் புனிதம் சொல்லில் அடங்காதது. அது பகீரத முனிவரின் அரும் தவத்தால் விண்ணில் இருந்து மண்ணிற்கு வந்தது. இந்த கங்கை நதிக்கரையில் ஓர் அந்தண முனிவர் குடில் அமைத்து தவம் செய்து கொண்டிருந்தார். அவருக்கு ஒரு புதல்வன் இருந்தான்.

ஏழு ஆண்டுகளே நிரம்ப பெற்றவன் என்றாலும், வேதங்களில் சிறந்த தேர்ச்சி பெற்றவன். அன்பும், அடக்கமும், பண்பும் பணிவும் கொண்டவனாக திகழ்ந்தான். ஒரு நாள் முனிவரை நோக்கி அவரது மைந்தன், ‘தந்தையே! தெய்வங்களுள் சிறப்புடையது எது?’ என்றான். அதற்கு முனிவர், ‘மகனே! தெய்வங்களின் தனிப் பெரும் தலைவர் முருகப் பெருமான்.

அதனால் தான் அவர் தெய்வசிகாமணி என்று அழைக்கப்படுகிறார். தேவாதி தேவர்களும் போற்றும் முழுமுதற் கடவுள். மறைகள் போற்றும் மகாதேவன். முருகப்பெருமானை வழிபட்டால், அனைத்து தெய்வங்களையும் வணங்கியதற்கு சமமாகும்.

முருகனை வழிபாடு செய்வோர் பிறவிப் பெருங்கடலைக் கடப்பார்கள். முக்தி நலம் பெறுவார்கள்’ என்று கூறினார். சிறிது காலம் கழித்து முனிவர், புனித யாத்திரை புறப்பட்டுச் சென்றார். குடிலில் சிறுவன் மட்டுமே இருந்து இறைவனை நோக்கி தவம் செய்து வந்தான்.

இந்நிலையில் கங்கை நதிக்கரையோரம் இருந்த காட்டில் வேட்டையாட மன்னன் ஒருவன் வந்தான். அவன் ஒரு விலங்கின் மீது வைத்த குறி, தவறிப்போய் அங்கு தவம் செய்து கொண்டிருந்த முனிவரின் மீது பட்டு, அவர் மாய்ந்து போனார். இதனால் அந்த மன்னனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

அதன் பிடியில் இருந்து விடுபட கங்கை நதிக்கரையில் உள்ள ஆசிரமம் நோக்கி வந்தான் மன்னன். ஆனால் ஆசிரமத்தில் முனிவர் இல்லை. அவர் யாத்திரை சென்றுள்ளார் என்பதை அறிந்ததும் அவன் மன வருத்தத்துடன் அங்கிருந்து புறப்பட தயாரானான்.

ஆனால் முனிவரின் மகன், மன்னனை தடுத்து நிறுத்தினான். ‘வேந்தனே! நீ என்ன காரணமாக வந்தாய்? உமக்கு என்ன கவலை?. என்னை சிறுவன் என்று எண்ண வேண்டாம். இருள் சூழ்ந்த வீட்டிற்குள், சிறுவன் விளக்கை எடுத்துச் சென்றாலும் இருள் விலகும்தானே!. ஆகையால் என்னை அலட்சியப்படுத்தாமல், உன் குறையைக் கூறு.

உன் கவலை விலக என்னால் வழிகாட்ட முடியும்’ என்றான் அந்த சிறுவன். மன்னன் மனம் மகிழ்ந்து, தான் வந்ததன் நோக்கம் குறித்து அந்த சிறுவனிடம் எடுத்துரைத்தான். முனிவர் மகனோ, ‘மன்னா! கவலைப்பாடாதீர். இந்த புனித கங்கையில் மூழ்கி, வடதிசை நோக்கி நின்று, மூன்று முறை உள்ளம் உருகி ‘ஓம் முருகா’ என்று கூறு.

பிரம்மஹத்தி அகன்று விடும்’ என்று விமோசனம் கூறினான். மன்னனும் அவ்வாறே செய்தான். அவன் பிரம்மஹத்தி தோஷம் விலகியது. அவன் மகிழ்வுடன் நாடு திரும்பினான். அதற்கடுத்த சில தினங்களில் யாத்திரை சென்ற முனிவர், ஆசிரமம் திரும்பினார்.

மகனை மகிழ்வுடன் தழுவி ஆசி கூறியவரின் கண்ணில் தேர் வந்ததற்கான அறிகுறி தென்பட்டது. ‘மகனே! இங்கு தேர் சக்கரத்தின் சுவடு காணப்படுகிறதே. யார் வந்தார்கள்?’ என்று கேட்டார். மகனும், மன்னன் வந்ததையும், அவனுக்கு தான் பரிகாரமாக ‘ஓம் முருகா’ என்ற மந்திரத்தை மும்முறை கூறும்படியும் அருளியதை ஒன்றுவிடாமல் சொல்லி முடித்தான்.

முனிவருக்கு கோபம் எல்லைகடந்தது. ‘முட்டாளே! நீ என் மகனா?. உனக்கு முருகனின் பெருமை தெரியவில்லையே. என்ன காரியம் செய்து விட்டாய்?. ஒரு முறை முருகா என்று கூறினாலே, ஆயிரம் பிரம்மஹத்தி தோஷம் விலகுமே.

அதைவிடுத்து மும்முறை கூறச்சொல்லி முருகனின் பெருமையை சிறுமைபடுத்தி விட்டாயே. முருகன் பெருமையை அறியாத நீ, வேடனாக பிறப்பாயாக’ என்று சாபம் கொடுத்தார். சிறுவன், தந்தையை வணங்கி பிழையை பொறுக்குமாறு வேண்டினான்.

முனிவர் சினம் தணிந்து, ‘மகனே! நீ கங்கைக் கரையிலேயே பிறப்பாய். வேடனாக பிறந்தாலும், முருகன் நாமமே உனக்கு பெயராக விளங்கும். நற்குண சீலனாக திகழ்வாய். அந்த பிறவியில் உனக்கு ராமபிரான் நண்பனாகும் நலம்பெறுவாய்’ என்று அருள் புரிந்தார்.

சாபத்தின் காரணமாக மறுபிறப்பில் கங்கைக் கரையில் வேடனாக பிறந்த அவன், குகன் என்று அழைக்கப்பட்டான். அயோத்தியில் இருந்து காட்டிற்கு வனவாசம் வந்தபோது, ராமபிரான் குகனை சந்தித்தார். முனிவர் தன் மகனுக்கு கொடுத்தது சாபம்தான் என்றாலும், அந்த சாபமே, ராமபிரானை சந்திக்கும் வரத்தை அவனுக்கு அளித்தது. 

No comments:

Post a Comment