Friday, July 11, 2014

தந்தையும் தனயனும்.

தந்தையும் தனயனும்.
புத்தபெருமான் ஞானோதயம் பெற்ற பின் தன ஊருக்கு வருகிறார். அவருடைய தந்தைக்கு அடக்க முடியாத கோபம். ஒரே மகன் விட்டுவிட்டு போய் விட்டானே! அவருக்கும் வயதாகி விட்டது. பெரிய ராச்சியத்தை கட்டிக் காத்தாயிற்று. ஏகப்பட்ட கவலை. "யாருக்கு இது? யார் இதை ஆளப் போகிறார்கள்? என் மகன் மடையன், தப்பித்து கொண்டான்." புத்தரைத் தம் பழைய வாழ்க்கைக்குத் திரும்பி வர வைக்க ஏகப்பட்ட முயற்சிகள் செய்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. ஞானம் பெற்ற பின் தானாகத் திரும்பி வந்தார். சந்தித்துக் கொண்ட அந்த நிகழ்ச்சி மனித வரலாற்றில் மிகச் சிறந்த நிகழ்ச்சியாகும்.
புத்தருடைய வயதான தந்தைக்கு கோபத்தால் கண்ணில் நீர் வழிகிறது. கத்துகிறார் கதறுகிறார். திட்டித் தீர்க்கிறார். புத்தர் அசையாமல் நிற்கிறார். அமைதியாக நிற்கிறார். தன்னைச் சுற்றி எதுவுமே நடக்கவில்லை என்கிறவரைப் போல் நிற்கிறார். ஓர் அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் இருக்கலாம். தந்தை வயதானவர். களைத்துப் போனார். அப்போது தான் மகன் ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை என்பது அவருக்கு உறைக்கிறது. " இவனென்ன இப்படி நிக்கிறான். செவிடனாகி விட்டானா? பைத்தியம் பிடித்து விட்டதோ ? ஏன் பதிலே சொல்லாமல் நிற்கிறாய்?" என்றார். புத்தர் சொன்னார் உங்களை விட்டுப் போனவன் இப்போது இல்லாமல் போய்விட்டான். நீங்கள் என்னோடு பேசவில்லை. உங்களுடைய மகனோடு பேசிக்கொண்டு இருக்கிறீர்கள். அவனோ இல்லாமல் போய்விட்டான். அவன் போனதற்குப் பின் வெகுவாகத்தான் நீர் கங்கையில் வழிந்து போய் விட்டது. பன்னிரண்டு வருடங்கள் ஓடிப் போய் விட்டன. நான் அவன் அல்ல " என்கிறார்.
"நான் அதே பிரக்ஞையோடு இருக்கவில்லை. அதே புத்தியோடு இருக்கவில்லை. என்னுடைய எண்ணங்களைக் கழித்துவிட்டேன். என்னுடைய விருப்பு வெறுப்புக்களைக் கழித்து விட்டேன். நான் இப்போது ஒரு புத்தம் புதியவன். எனக்கு நான் யார் என்பது தெரியும். அப்போது நான் அஞ்ஞானியாக இருந்தேன். இப்போது எனக்குள் ஒளி வெள்ளம் புகுந்து விட்டது. அதனால் நான் அவனல்ல" என்றார்.
தந்தைக்கு பெரும் கோபம். " என்ன சொல்கிறாய்? என்னுடைய மகனை எனக்குத் தெரியாதா? உன்னை எனக்குத் தெரியாதா? உன்னைப் பெற்றவன். என் உதிரம் உனக்குள் ஓடுகிறது. என்னுடைய ரத்தமும் சதையுமானவன் நீ. எனக்கு உன்னைத் திரியாது என்கிறாயா? துணிச்சல் தான் உனக்கு" என்கிறார்.
புத்தர் மறுபடியும், "மன்னிக்க வேண்டும். என் உடல் உங்களுடைய ஒரு பகுதியாக இருக்கலாம். ஆனால் நான் இல்லை. நான் என் உடல் அல்ல. என் மனம் அல்ல என்பது எனக்குத் தெரியும். நான் யாரென்பது எனக்குத் இப்போதுதெரியும். என்னுடைய இருப்புக்கும் உங்களுக்கும் எந்த சகாப்தமும் கிடையாது. என்னுடைய ஜீவனை நீங்கள் பெற்றெடுக்க முடியாது. என் பிறப்புக்கு முன்பே இருந்திருக்கிரவன் நான். என் பிறப்புக்குப் பின்னும் இருக்கப் போகிறவன் நான். தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். எரிச்சல் படாதீர்கள். உளைச்சல் பட்டுக் கொள்ளாதீர்கள்.
என்றார் புத்தபெருமான்.
ஆனால் பெற்றோர் தம் மக்களைத் தம்முடையவர் என்று நினைக்கிறார்கள். குழந்தைகளும் தம் பெற்றோரைத் தம்முடையவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த உலகில் உள்ள ஜீவிதம் அற்புதத் தன்மையில் இருக்கிறது. இன்பத்தைப் பகிர்ந்து கொள்ளலாம் தான், ஆனால் உரிமை கொண்டாட முடியாது. அஞ்ஞானிக்குத்தான் சொந்தங்கள் உண்டு. ஞானிக்கு சொந்தமானது எதுவுமில்லை.

No comments:

Post a Comment