Saturday, July 5, 2014

மெய்ஞானம் கூறும் விஞ்ஞானம்

மெய்ஞானம் கூறும் விஞ்ஞானம்
ஆன்மீகச் சந்தையில் தற்போது கிடைக்கும் மலிவு விலைச் சரக்கு என்ன தெரியுமா?
"குண்டலினி"
மாறிவரும் ஆன்மீகச் சந்தையில் "குண்டலினி கிலோ என்ன விலை?" எனும் பாணியில் விற்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
பாரதப் பாரம்பரியத்தில் தன்னையுணர, சாங்கியம், யோகம், நியாயம், வைசேஷிகம், பூர்வமீமாம்சம், உத்தரமீமாம்சம், எனும் ஆறுவிதமான பாதைகள் உண்டு. அதில் ஒன்று யோகப் பாதை. யோகத்தின் பாதையில் பல்வேறு படிநிலைகள் உண்டு. ஞான யோகம், பக்தி யோகம், ஜப யோகம், கர்மயோகம் மற்றும் ராஜ யோகம் என பல பிரிவுகள் யோகத்தில் உண்டு.
பதஞ்சலியின் யோக சூத்திரம் என்ற நூல் ராஜ யோகத்திற்கு ஆதாரமாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. உண்மையில் பதஞ்சலி நேரடியாகக் குண்டலினியைப் பற்றி ஏதும் கூறவில்லை...!
ஹடயோக பிரதீபிகா, சிவயோக சம்கிதா போன்ற நூல்களில் "குண்டலினி" பற்றிக் கூறப்பட்டுள்ளது.
சிவராஜ யோகம் என்ற யோகப் பாதையின் உட்பிரிவில் குண்டலினி மற்றும் ஏழு சக்கரங்கள் உண்டு. உண்மையில் குண்டலினி என்பது மூலப்பிராண சக்தியே, இதனை பயிற்சி முறைகளால் விழிப்படையச் செய்தால் ஞானம் ஏற்படும் என்பதை யோக நூல்கள் விவரிக்கிறது.
நம் மூலாதாரத்தில் மூன்றரைச் சுற்றுகளாகக் குண்டலினிச் சக்தி படுத்து உறங்குகிறது. மூலாதாரத்தில் இருக்கும் சக்தியைப் பிராணாயாமத்தால் விழிக்கச் செய்து தலையின் உச்சியில் இருக்கும் சகஸ்ராரம் என்ற சக்கரத்திற்கு உயர்த்தினால் ஞானம் பிறக்கும் என்பது ராஜயோகத்தின் அடிப்படை.
காஞ்சி ஸ்ரீகாமாட்சியம்மன் கோவிலின் மூன்றரைச்சுற்றுப் பிரகாரம். ஸ்ரீரங்கநாதர் பள்ளிகொண்டுள்ள மூன்றரைச் சுற்று பாம்பணை, ஸ்ரீரங்கத்தின் ஏழு பிரகாரங்கள், திருப்பதியின் ஏழு மலைகள், ஆகியவை இந்த குண்டலினி சக்தி மற்றும் ஏழு ஆதாரங்களைத்தான் குறிக்கின்றன.
ஔவையார் தனது விநாயகர் அகவலில்,
“குண்டலினி அதனில் கூடிய அசபை
விண்டெழு மந்திரம் வெளிப்பட உரைத்து
மூலாதாரத்தின் மூண்டெழு கனலை
காலால் எழுப்பும் கருத்தறிவித்தே.”
என்று பாடுகிறார்
யோகக் கலாசாரத்தில் சிவராஜயோகத்தை பயில விரும்புபவர்கள் குருவை நாடி, தங்கள் முயற்சியை ரகசியமாக மேற்கொள்வார்கள். யோகத்திற்கெல்லாம் முதன்மையானது தலையானது என்பதாலும் ,ரகசியமாக பயிற்றுவிக்கப் பட்டதாலும் இது சிவராஜயோகம் என பெயர் பெற்றது. 
குண்டலினி சக்தி என்பது உண்மை, அதனால் ஏற்படும் அனுபவங்களும் உண்மை. ஆனால் அதற்காகத் தற்சமயம் கொடுக்கும் பயிற்சிகளே போலியானது. உண்மையான குண்டலினி அனுபவங்கள் பெற நீங்கள் உங்களின் வாழ்க்கை முறை, உணவு பழக்கம் மற்றும் மன நிலையில் மாற்றம் செய்ய வேண்டும். இம்மாற்றம் நிகழாமல் குண்டலினி மட்டுமல்ல வேறு எந்த மாற்றமும் நிகழாது.
சில யோகப் பள்ளிகள் தலைமைக்கானக் குண்டலினி யோகம், குடும்ப பெண்களுக்கானக் குண்டலினி யோகம், குழந்தைகளுக்கானக் குண்டலினி யோகம், என நடத்துகிறார்கள். இன்னர் மெடிக்கல், எஞ்சினியரிங் , லா என்றல்லாம் பயிற்சிகள் குண்டலினியின் பெயரால் நடக்கிறது. இதில் கலந்துகொள்பவர்கள் யார் தெரியுமா?
தினமும் வீட்டிலும், வாரம் தவறாமல் கம்பெனியின் பார்டியில் மது அருந்துபவர்களும், தினமும் புகைப்பிடிப்பவர்களும், தங்களின் உடலை சிறிது கூட அசைக்காமல் ஏஸி அறையில் வைத்திருக்கும் கார்ப்பிரேட் அதிகாரிகளும். இவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு ஏழு நாளில் குண்டலினியை உயர்த்திகாட்டுகிறார்களாம்.
இது போன்ற குண்டலினி பயிற்சி பெறும் பலர் தங்களுக்கு அவ்வனுபவம் ஏற்படவில்லை என ஒருபோதும் கூறுவதில்லை. பயிற்சியில் என் சக்கரங்கள் அப்படி ஆனது இப்படி ஆனது என்பதுடன், வலது புறமாக சுற்றியது இடது புறமாக சுற்றியது என்றெல்லாம் கூறுகிறார்கள். இது எப்படி நிகழ முடியும்????????????????

ஒரு "பியுஷ் கேரியரில்" இத்தனை வாட் மின்சாரம் தான் செலுத்த முடியும் என வரையறுக்கப் பட்டிருக்கிறது. அதையும் மீறி அதிக மின்சாரத்தை செலுத்தினால் ஏற்படும் விளைவுகள் என்ன என்பதைத் தெரிந்திருக்கிறோம். அதுபோல குண்டலினி என்பது உயர் அழுத்த மின்சாரம் போன்றது, உடலைப் பக்குவப் படுத்தாமல் குண்டலினியை எழுச்சி பெறச் செய்வதால் உடல் நோய்கள் மட்டுமல்லாது மன நோய்களையும் சந்திக்க வேண்டியதிருக்கும்.
அடியேன் பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு துறவி. அவர் தினமும் புகைக்கும் பழக்கம் மற்றும் அப்பப்ப அசைவ உணவு உண்பவர். அந்த பழக்கங்களை விடாமலே தனது குண்டலினியை ஏற்ற முயற்சித்து அதனால் அவர் உயிர் பிரிந்தது.
இன்றைய சூழலில் சிலருக்கு யோகப் பயிற்சிகள் செய்யவும் விருப்பமில்லை, ஆனால் குண்டலினியும் ஏற வேண்டும்.(இவர்கள் எதற்காகக் குண்டலினியை ஏற்ற நினைக்கிறார்கள் என்பதற்கு ஒரு தனிப் பதிவே போட வேண்டும்) பணம் கொடுத்து "பீசா" வாங்குவது போல, குண்டலினியையும் வாங்க நினைப்பதால்தான் தகுதியுள்ள குருமார்கள் மறைந்து கொள்கிறார்களோ??????

1 comment:

  1. நிச்சயாமாக இது அக்கறையான ஒரு பதிவு .ஆனால் பல நல்லவர்களின் ஏக்கம் வெற்றி பெறும்போது தானாகவே இம்மாதிரி மாய அவதாரமெல்லம் மறைந்து போகும் .

    ReplyDelete