Monday, July 21, 2014

திருநீறு பூசுவதன் மகிமை

ஏழை நெசவாளி ஒருவன், தன் ஊருக்கு வந்திருந்த துறவியிடம் வாழ்வில் இன்பமுற சுலபமாக உபதேசம் செய்யுங்கள் என்று கேட்டான். அதற்கு அந்த துறவி, ‘திருநீறு பூசிய திருமுகத்தைப் பார்த்த பிறகுதான் ஆகாரம் சாப்பிடுவது என்ற ஒரு கொள்கையை வைத்துக் கொள்’ என்று உபதேசம் செய்தருளினார்.

நெசவாளியும் சரி என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றான். அவனது பக்கத்து வீட்டில் உள்ள குயவன், ஒரு சிவபக்தன். அவன் எப்போதும் நெற்றியில் திருநீறு அணிந்து காட்சியளிப்பான். அடிக்கடி நெசவாளியின் வீட்டு வழியாகத்தான் குயவன் செல்வான்.

அப்போது அவனது நெற்றியில் உள்ள திருநீற்றை கண்டபின்பு ஆகாரம் சாப்பிடுவதை வழக்கமாக்கிக் கொண்டான் நெசவாளி. ஒரு நாள் குயவன், நெசவாளியின் வீட்டு பக்கம் வரவில்லை. நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. உணவு உண்பதற்காக நேரம் கடந்து செல்லும் நிலையிலும் கூட குயவன் அந்தப் பக்கம் வரவில்லை.

கடும் பசி ஏற்பட்டு விட்ட காரணத்தால், குயவனை அவன் வீட்டிற்கே சென்று பார்த்து விட்டு வருவது என்று முடிவு செய்தான் நெசவாளி. வீட்டிற்கு சென்று விசாரித்தபோது, களிமண் எடுப்பதற்காக ஏரிக்கு சென்றிருப்பதாக அவன் வீட்டார் தெரிவித்தனர்.

இதையடுத்து ஏரியை நோக்கிச் சென்றான் ஏழை நெசவாளி. ஏரிக்கரையில் பெரிய பள்ளத்தில் மண் வெட்டிக் கொண்டிருந்தான் குயவன். அப்போது மண்ணுக்கு அடியில் ஏதோ சத்தம் கேட்க தோண்டி பார்த்தபோது, இரண்டு பானைகளில் தங்கக் காசுகள் இருந்தன.

குயவன் மகிழ்ச்சியில் திளைத்தான். அப்போது அங்கு வந்த நெசவாளி, குயவனின் நெற்றியில் இருந்த திருநீற்றை பார்த்து விட்டு, ‘நான் பார்த்து விட்டேன், நான் பார்த்து விட்டேன்’ என்று மகிழ்ச்சி ஆரவாரத்தில், உணவருந்துவதற்காக வீட்டிற்கு புறப்பட்டான்.

அவன் பார்த்தது விபூதி அணிந்த தன் முகத்தைத்தான் என்பதை அறியாத குயவன், பதறிப்போனான். ஊருக்குள் சென்று கூறிவிட்டால், கிடைத்தது பறிபோய்விடுமே என்று எண்ணியவன், பதற்றத்தோடு நெசவாளியை அழைத்தான். ‘நீயும், நானும் ஏழை. ஆகவே எனக்கு கிடைத்த புதையலில் ஒரு பானையை நான் வைத்துக் கொள்கிறேன்.

மற்றொன்றை நீ வைத்துக் கொள்’ என்று கூறி நெசவாளியிடம் ஒரு புதையல் பானையை கொடுத்தான். ஒன்றும் புரியாத நிலையில் அதை பெற்று வீடு திரும்பினான் நெசவாளி. வீட்டிற்கு வந்ததும் அவனுக்கு ஒன்று தோன்றியது.

‘திருநீறு அணிந்த முகத்தைப் பார்த்ததற்கே இவ்வளவு பலன் என்றால், நாமே திருநீறு அணிந்து இறைவனை வழிபட்டால் எவ்வளவு பலன் கிடைக்கும்’ என்று கருதிய நெசவாளி அன்று முதல், உடலில் திருநீறு தரித்து இறைவனை அன்பொழுக வழிபடத் தொடங்கினான். 

No comments:

Post a Comment