Thursday, July 10, 2014

கோயில் திருவிழாக்களில் ஆடம்பரத்தைக் குறையுங்கள். அந்தப் பணத்தை பொதுப்பணிகளுக்கு செலவிடுங்கள்.

வேதம் படித்த ஒரு பாகவதர், கேட்போர் உருகும்படியாக அருமையாக ஆன்மிக சொற்பொழிவாற்றுவார். அவரிடம் நாவல்பழம் அளவுக்கு ஒரு சாளக்கிராமம் இருந்தது. நேபாளத்திலுள்ள கண்டகி நதியில் இந்த வகைக் கற்கள் கிடைக்கும். புனிதமான அந்தக்கற்களை விஷ்ணுவாகக் கருதி வழிபடுவார்கள். அதை ஒரு சின்ன வெற்றிலை பெட்டியில் போட்டு "சந்தான கோபாலன்' என்று அதற்கு பெயரும் வைத்து விட்டார். அதற்கு தன்னால் இயன்ற அளவு பால், பழம், தயிர்சாதம், பாயாசம்... என நைவேத்யம் செய்வார்.
ஒருநாள், சுவாமிக்கு பஞ்சாமிர்த நைவேத்யம் செய்தார். அப்போது தற்செயலாக அவரிடமிருந்த நாவல்பழ அளவுள்ள சாளக்கிராமம் பிரசாதத்துக்குள் விழுந்து விட்டது.
பஞ்சாமிர்தத்தில் கருப்பு திராட்சைகளும் கிடந்ததால், பிரசாதம் வினியோகிக்கும் போது, அடையாளம் கண்டு பிடிக்க இயலாமல் சாளக்கிராமத்தையும் சேர்த்து யாருக்கோ கொடுத்து விட்டார்.
எல்லாரும் சென்றதும், சாளக்கிராமத்தை எடுத்து பெட்டியில் வைப்பதற்காக வைத்த இடத்தில் பார்த்த போது, அதைக் காணவில்லை. அதிர்ந்தவர், ""கோபாலனுக்கு நம் மேல் என்ன கோபமோ? பூஜையில் ஏதாவது தவறு செய்து விட்டேனோ? ஓடிவிட்டானே!'' என்று வருத்தத்தில் ஆழ்ந்தார்.
ஆனால், பிரசாதம் வாங்கிச் சென்ற ஒருவர் இரண்டு நாள் கழித்து வந்து, தனக்கு தந்த பிரசாதத்துடன் சாளக்கிராமம் இருந்ததைச் சொல்லி திருப்பிக் கொடுத்து விட்டார்.
அடுத்த நாள், ஒரு இடத்தில் உபன்யாசம்.
இவர் பாக்கு போடும் போது, பாக்கு என நினைத்து சாளகிராமத்தையும் சேர்த்து வாயில் போட்டு விட்டார். அன்று, வேதம் சரமாய் பொழிந்தது மேடையிலே. "இப்படிக்கூட பேச முடியுமா!' என்று கூட்டத்தினருக்கு ஆச்சரியம்.
திடீரென வாயில் ஏதோ கடிபட, பதறிப்போய் பார்த்தார். வாயில் பகவான் கிடக்கிறான். அதை உமிழ்ந்தார். நன்றாக கழுவி, சுத்தி பூஜையெல்லாம் செய்து பெட்டியில் வைக்கப் போனார்.
உபன்யாசத்திற்கு வந்த ஒரு பணக்காரர் இதைக் கவனித்து விட்டார். பாகவதரிடம் வந்தவர், ""சுவாமியை இப்படி வெற்றிலை பெட்டியில் போட்டு வைத்துள்ளீரே! என்னிடம் கொடுத்தால், தங்கப்பேழை செய்து
அதில் வைத்தல்லவா பூஜை செய்வேன்,'' என்றார்.
பகவானைத் தேடி தங்கம் வருகிறது. "எத்தனை நாள் தான் இந்த சின்னப் பெட்டிக்குள் அடைபட்டு கோபாலன் சிரமப்படுவான். இன்று வாய்க்குள் வேறு போய்விட்டான்,'' என்று நினைத்த பாகவதர் அவரிடமே கொடுத்து விட்டார்.
பணக்காரர் வீட்டுக்குப் போன சந்தான கோபாலன், தங்கப் பேழைக்குள் சிறைபட்டு விட்டான். மறுநாள் நைவேத்யம். விதம் விதமாக, அண்டா அண்டாவாக... பேழையைத் திறந்தார் பணக்காரர். கோபாலன் உள்ளே வருத்தத்தில் இருந்தான்.
""ஏனப்பா வருத்தப்படுகிறாய்? தங்கப் பெட்டி... வகை வகையாய் சாப்பாடு... வடையே பத்து தினுசு! உனக்கென்ன குறை,'' என்றார் பணக்காரர்.
""இங்கே வேதசப்தம் கேட்கவில்லையே! பாகவதர் வாய்க்குள் என்னை அடக்கி, எச்சிலுக்குள் ஊறப் போட்டாலும், காதால் வேதம் கேட்டேனே!'' என்றான் பகவான்.
பார்த்தீர்களா!எளிய பக்தியையே இறைவன் விரும்புகிறான். கோயில் திருவிழாக்களில் ஆடம்பரத்தைக் குறையுங்கள். அந்தப் பணத்தை பொதுப்பணிகளுக்கு செலவிடுங்கள்

No comments:

Post a Comment