Saturday, July 5, 2014

நைஷ்டிக பிரம்மச்சாரி

நைஷ்டிக பிரம்மச்சாரி
பிரம்ம லோகத்தில் பிரம்மனும் நாரதரும் உரையாடிக் கொண்டிருந்தனர். மூவுலகிலும் சிறந்த நைஷ்டிக பிரம்மச்சாரி யார் என்பதைப் பற்றி இருவரிடையே ஒரு கேள்வி எழுந்தது. ராம நாமத்தை ஜபித்துக் கொண்டு, திருமணம் செய்து கொள்ளாமல் திரிலோக சஞ்சாரியாகத் திகழும் தன்னையே நைஷ்டிக பிரம்மச்சாரி என்று பிரம்மா கூறுவார் என நாரதர் நினைத்தார். பூலோகத்தில் மானிட அவதாரம் எடுத்து கோகுலத்திலும், பிருந்தாவனத்திலும் கோபிகைகளுடன் லீலைகள் புரிந்து கொண்டிருக்கும் கிருஷ்ணர் தான் நைஷ்டிக பிரம்மச்சாரி என்று பிரம்மா கூறினார். சதா சர்வகாலமும் கோபியருடன் ஆடிப்பாடி ராசலீலைகள் புரியும் கிருஷ்ணனா நைஷ்டிக பிரம்மச்சாரி? என்று கூறிச் சிரித்தார் நாரதர். உனக்குச் சந்தேகமாயிருந்தால் நித்திய உபவாசியான துர்வாசரைக் கேள். உனக்கு அதற்கான விளக்கம் தருவார் என்றார் பிரம்மா. துர்வாசர் நித்ய உபவாசி என்று பிரம்மா கூறியதைக் கேட்டு கிருஷ்ணர் நைஷ்டிக பிரம்மச்சாரி என்று கூறியதைவிட இது மிகவும் வேடிக்கையாக இருக்கிறதே என்று கூறிவிட்டு மேலும் பலமாகச் சிரித்தார் நாரதர். துர்வாசர் பசி பொறுக்காதவர். ஒரு நாளைக்குப் பலவேளை உண்பவர். அவர் நித்திய உபவாசி என்கிறீர்களே, எப்படி? என்று நாரதர் பிரம்மாவிடம் கேட்டார். நாரதா, திருமணம் செய்து கொள்ளாமல் உன் போல் தபஸ்விகளாக இருப்பவர்கள் தான் நைஷ்டிக பிரம்மச்சாரிகள் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாய். அதுபோல உணவும், நீரும் துறந்து புற்று வளரும் வரை தவமியற்றும் முனிவர்களே உபவாசிகள் என்றும் எண்ணுகிறாய். உன் எண்ணம் தவறானது.
நித்ய உபவாசி யார் என்று கிருஷ்ணரிடம் கேள். அவர் உனக்கு அதற்கான காரணத்தை விளக்குவார். அதுபோல நைஷ்டிக பிரம்மச்சாரி யார் என்று துர்வாசரிடம் கேள். அவர் அதற்கான விளக்கம் கூறுவார். அதன்பிறகு உண்மையை அறிந்து நீ தெளிவடைவாய்.. என்று பிரம்மா நாரதரிடம் கூறினார். நாரதர் முதலில் கிருஷ்ணரைச் சந்திக்க பிருந்தாவனம் சென்றார். கிருஷ்ணர் அஷ்டசகிகளைத் திருமணம் செய்வதற்கு முந்தைய காலம் அது. கோகுலத்தில் பசுக்களை மேய்த்து, கோபியருடன் ராசலீலைகள் புரிந்த இளம் பருவம். கோகுலம் சென்ற நாரதர் ஒவ்வொரு வீடாகச் சென்று கிருஷ்ணரைத் தேடினார். எல்லா வீடுகளிலும் ஒவ்வொரு கோபிகைக்கும் தோழனாக ஒவ்வொரு கிருஷ்ணர் வியாபித்திருந்தார். எந்த வீட்டில் இருப்பவர் உண்மையான கிருஷ்ணராக இருக்கும் என்ற குழப்பம் நாரதருக்கு ஏற்பட்டது. கிருஷ்ணருடன் தனியாகப் பேச வேண்டும் என்ற நாரதர் எண்ணியதால் கிருஷ்ணனுக்காக ஒரு மரத்தடியில் காத்திருந்தார். விடியற்காலம் ஆயிற்று. நாம் வந்திருப்பது கிருஷ்ணனுக்குத் தெரியாமலா இருக்கும்? அவர் வருகிறபோது வரட்டும் என்று நாரதர் மனதில் எண்ணிய போது கிருஷ்ணர் நாரதர் முன் தோன்றினார். கிருஷ்ணன் முகம் சற்று வாட்டத்துடன் வேதனையில் இருப்பது போல் காணப்பட்டது. கிருஷ்ணரைக் கண்ட நாரதர், சுவாமி, நான் தங்களைக் காணவே வந்தேன். வழக்கமாக மகிழ்ச்சியுடன் காணப்படும் தாங்கள் சற்று வாட்டமாகக் காணப்படுகிறீர்களே? என்று கேட்டார். துர்வாச மகரிஷி இன்று அதிகமாகச் சாப்பிட்டு விட்டார். அதனால் எனக்கு வயிற்று வலியாக இருக்கிறது என்று கூறினார் கிருஷ்ணர்.
துர்வாசர் அதிகமாகச் சாப்பிட்டால் கிருஷ்ணருக்கு எப்படி வயிற்று வலி வரும்? என்று நாரதர் குழம்பினார். நாரதா, உன் குழப்பம் புரிகிறது. துர்வாசர் எது சாப்பிட்டாலும் தனக்காகச் சாப்பிட மாட்டார். சாப்பிடும் முன்பும், பின்பும் கிருஷ்ணார்ப்பணம் என்று ஜபித்து தண்ணீர் அருந்தி விடுவார். அவர் உண்பது அனைத்தும் என்னையே வந்தடையும். அவர் நித்ய உபவாசி என்றார் கிருஷ்ணர். உணவு மட்டுமல்ல. அவர் சுவாசிக்கும் காற்று, கோபதாபங்கள் என அனைத்தையுமே கிருஷ்ணார்ப்பணம் செய்து தன்னைக் கிருஷ்ணனுக்கே அர்ப்பணம் செய்து வாழும் தபஸ்வி அவர் என்று கூறினார். கிருஷ்ணர் கூறியதைக் கேட்டதும் நாரதருக்கு உண்மை விளங்கியது. துர்வாசர் நித்ய உபவாசி என்பதற்கான விளக்கம் கிடைத்த மகிழ்ச்சியில் துர்வாசரிடம் சென்று நைஷ்டிக பிரம்மச்சாரி கிருஷ்ணர் தான் என்பதற்கான காரணத்தை அறிய துர்வாசர் இருக்குமிடம் நோக்கிப் புறப்பட்டுச் சென்றார். துர்வாசர் நாரதரை வரவேற்று அவர் தன்னிடம் வந்திருப்பதற்கான காரணத்தைக் கேட்டார். பிரம்மலோகத்தில் தனக்கும் பிரம்ம தேவனுக்கும் இடையே நடந்த விவாதத்தைப் பற்றிக்கூறி மூவுலகிலும் நைஷ்டிக பிரம்மச்சாரி யார் என்று தெரிந்து கொள்ள வந்திருப்பதாகக் கூறி அதனை விளக்கிக் கூறுமாறும் கேட்டார்.
கிருஷ்ணர் தான் நைஷ்டிக பிரம்மச்சாரி என்பதில் உனக்குச் சந்தேகம் வேண்டாம். பெண்களே இல்லாத இடத்தில் வாழ்பவனும், பெண்கள் தன்னை அணுகாமல் தவிர்த்து வாழ்பவனும் பிரம்மச்சாரி அல்ல. பதினாயிரம் கோபிகைகளுடன் ராசலீலை புரியும் கிருஷ்ணர் அவர்களுடன் நெருக்கமாக வாழ்ந்து அவர்கள் எவரிடமும் ஈடுபாடு கொள்ளாமல் அவர்கள் பாசத்திற்கும், பிரேமைக்கும் ஆளாகிய போதிலும் மனத்தாலும், வாக்காலும், காயத்தாலும் அவர்கள் மீது இச்சை கொள்ளாமல் வாழும் கிருஷ்ணரே நைஷ்டிக பிரம்மச்சாரி என்று கூறினார் துர்வாசர். துர்வாசர் நாரதரிடம் மேலும் சில விளக்கங்களையும் கூறினார். திரேதாயுகத்தில் விஷ்ணுபகவான் ஸ்ரீராமனாக அவதரித்து தந்தையின் வாக்கைக் காப்பாற்ற வனவாசம் மேற்கொண்டார். வனவாசத்தின் போது வனத்திலிருந்த ஆயிரக்கணக்கான மஹரிஷிகளும் தவ முனிவர்களும், ஸ்ரீராமன் மீதுள்ள பிரேமையினால் ஸ்ரீராமன் தங்களுடனே வாசம் செய்ய வேண்டும் என விரும்பினர். அவர்கள் ஸ்ரீராமனின் அன்புக்காகவும், ஆலிங்கனத்துக்காகவும் ஏங்கினர். வனவாசத்தின் போது ஸ்ரீராமருக்கு மகரிஷிகள் விருப்பத்தை நிறைவேற்ற இயலாமல் போயிற்று. அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றவே விஷ்ணு பகவான் அடுத்த யுகத்தில் கிருஷ்ணாவதாரம் எடுத்து மகரிஷிகளையும், முனிவர்களையும் கோபிகைகளாகப் பிறக்கச் செய்து அவர்களைத் தன் பிரேமையால் ஆட்கொண்டிருக்கிறான். அவனது பிரேமை பவித்ரமானது. அதில் காமத்துக்கு இடமில்லை என்று துர்வாசர் கூறினார். துர்வாசர் கூறிய விளக்கங்களைக் கேட்டு உண்மை அறிந்து தெளிவடைந்த நாரதர் தன் தந்தை பிரம்ம தேவனிடம் தான் கிருஷ்ணரையும், துர்வாசரையும் சந்தித்து தன் சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றதைக் கூற பிரம்மலோகம் சென்றார்.

No comments:

Post a Comment