Thursday, July 3, 2014

ரத்ன மணிமாலை

ரத்ன மணிமாலை

ஓம் நமோ பகவதே ஸ்ரீ லஹரி கிருஷ்ணாய!
இறையே அபயம்! யாவும் இறையின் உபயம்!

ஆதி சங்கரர் பரச்னோத்தர ரத்ன மாலிகா, என்று ஒரு நூல் எழுதி இருக்கிறார். தமிழில் அதை ரத்ன மணிமாலை என்று சொல்லலாம். அவற்றில் சில ரத்தினங்கள்.

தீமையில் முடிவடைவது எது? 
அகந்தை

மகிழ்ச்சியைத் தருவது எது? 
நல்லவர்களின் நட்பு

துயரங்கள் அனைத்தையும் அழிக்க வல்லவர் யார்? 
அனைத்தையும் துறக்க வல்லவர்

மரணத்தைக் காட்டிலும் கொடியது எது? 
வஞ்சகம்

விலை மதிப்பிட முடியாதது எது?
தேவைப்படும் நேரத்தில் செய்யப்படும் உதவி

மரணம் வரை நெஞ்சில் முள்ளாக குத்துவது எது? 
யாருக்கும் தெரியாமல் மறைமுகமாகச் செய்த பாவச்செயல்

முயற்சி செய்து பெற வேண்டியவை எவை?
கல்வி, தகுந்த மருந்து, ஒழுக்கத்துக்காகப் பெறும் பரிசு

எவைகளை அலட்சியம் செய்ய வேண்டும்? 
தீயோர், மாற்றானின் மனைவி, பிறர் உடைமை

யார் முன்னால் தெய்வங்களும் பணிந்து நிற்கும்?
ஜீவகாருண்யம் உள்ளவர்களிடம்

வாழுகின்ற உயிர்களை யார் யாரால் கட்டுப்படுத்த முடியும்? 
உண்மையையே பேசுபவர்கள், இனிமையாகப் பேசுபவர்கள், அடக்கத்துடன் பேசுபவர்கள்

யார் ஊமை? 
இடம் அறிந்தும், திறன் அறிந்தும் தகுந்த சொற்களைப் பேசத் தெரியாதவர்கள்

இந்த உலகையே வெல்ல வல்லவர் யார்? 
சத்தியமும், பொறுமையும் கொண்டவனே உலகை வெல்பவன்

கண்ணுக்குத் தெரிகின்ற கனிகளும், தெரியாத கனிகளும் பெறுவதற்கு ஒருவர் எப்படி வாழ வேண்டும்? 
நேர்மையான வழியில் வாழ வேண்டும்

பார்வையற்றவர் யார்? 
கற்று அறிந்துகொண்ட பிறகும், தீமைகளிலேயே உழன்று கொண்டிருப்பவன்

செவிடன் யார்? 
நல்லவற்றையே கேட்காதவன் செவிடன்

கொடை என்று எதைச் சொல்லலாம்? 
கேட்காமலேயே கொடுக்கப்படுவதை கொடை என்று சொல்லலாம்

யார் நண்பன்? 
தீயச்செயல்களிலிருந்து நம்மைத் தடுப்பவன்

பேச்சுக்கு அழகு தருவது எது? 
சத்தியம்

மகிழ்ச்சியில் திளைக்க வைப்பது எது? 
நல்ல நடத்தை

நம் நெஞ்சில் அல்லும் பகலும் அகலாது இருக்க வேண்டியது எது?
வாழ்க்கைத் துணைவியைச் சுற்றி நடைபெறுகிற இல்லற வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்கம்

மகிழ்ச்சியால் ஆற்றய வேண்டிய பணிகள் எவை? 
நலிந்தோர்பால் இரக்கம் கொள்வது மற்றும் நல்ல நடத்தையுள்ள நண்பர்களுடன் பழகுவதும்தான்

No comments:

Post a Comment