Tuesday, July 1, 2014

நவகுண்டம்---திருமந்திரம்


திருமந்திரம்-தந்திரம்04: பதிகம்:04/1. நவகுண்டம் (பாடல்கள்:01-15/30)பாகம் I

பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.  
================================================================== 
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030

நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ....பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை........................பாடல்கள்: 012

நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.....................பாடல்கள்: 012

நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்....................பாடல்கள்: 030
========================================================(131+030=161)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:04. நவகுண்டம்.
(பாடல்கள்:01-15/30)பகுதி-I

பாடல் எண் : 1

நவகுண்ட மானவை நானுரை செய்யின்
நவகுண்டத் துள்எழும் நற்றீபந் தானும்
நவகுண்டத் துள்எழும் நன்மைகள் எல்லாம்
நவகுண்ட மானவை நானுரைப் பேனே.

 

பொழிப்புரை :  அழலோம்புதற்குரிய குண்டங்கள் ஒன்பது வகையின. அவற்றின் சிறப்பை நான் சொல்லுமிடத்து, சிவபெருமானது சிறந்த உருவமாகிய ஒளிப்பிழம்பு ஓங்கி விளங்குவது அக்குண்டங்களிலேதான். அதனால், அப்பெருமானை அம்முறையில் வழிபடும் வழிபாட்டினால் எல்லா நன்மைகளும் விளையும். அது பற்றி அவற்றின் முறையை நான் இங்குக் கூறுகின்றேன்.

=============================================

பாடல் எண் : 2

உரைத்திடுங் குண்டத்தி னுள்ளேமுக் காலும்
வகைத்தெழு நாற்கோண நன்மைகள் ஐந்தும்
பகைத்திடு முப்புரம் பார் அங்கி யோடே
மிகைத்தெழு கண்டங்கள் மேலறி யோமே.

 

பொழிப்புரை :  மேற் சொல்லப்பட்ட குண்டங்களிலே முக்காலங்களையும், ஐம்பெரும் பூதங்களையும், மும்மல நீக்கத்தையும் `அக்கினி` என்ற ஒன்றன் வழியாகவே காணுதல் கூடும். ஆதலின், அக்குண்டங்கட்கு மேலான தெய்வ இடங்களாக நான் வேறொன்றை அறிந்திலேன்.

=============================================

பாடல் எண் : 3

மேலறிந் துள்ளே வெளிசெய்த அப்பொருள்
காலறிந் துள்ளே கருத்துற்ற செஞ்சுடர்
பாரறிந் தண்டம் சிறகற நின்றது
நானறிந் துள்ளுளே நாடிக்கண் டேனே.

 

பொழிப்புரை :  பிராணாயாம முறையை அறிந்து அதன்வழியே தியானிக்கப்பட்ட சிவந்த ஒளிப்பிழம்பே புறத்திலும் குண்டத்தின் அழலாய் அறியப்பட்டுக் காட்சிப்பட நின்ற பொருளாய், நிலவுலகத்தாரல் நன்கறியப்பட்டு, அண்டங்களின் திசைவரம்பைக் கடந்த பெரும் பொருளாய் நிற்கும். அவ்வுண்மையை நான் நன்கறிந்திருத்தலால். அப்பொருளை அகத்தே தியானத்தினாலும், புறத்தே அழலோம்பலாலும் பெற்றேன்.

=============================================

பாடல் எண் : 4

கொண்டஇக் குண்டத்தினுள்ளெழு சோதியால்
அண்டங்கள் ஈரேழும் ஆக்கி அழிக்கலாம்
பண்டையுள் வேதம் பரந்த பரப்பெலாம்
இன்றுசொல் நூலாய் எடுத்துரைத் தேனே.

 

பொழிப்புரை :  நான் மெய்ப்பொருளைப் பெற்ற வகைகளுள் ஒன்றாகிய குண்டத்தீயால் பதினான்கு உலகங்களை ஆக்கவும் முடியும்; பழமையாய் அவற்றுப் பரந்து கிடந்த மறைகளின் விரிந்த பொருள்களை நான் இன்று செய்கின்ற இந்தச் சிறிய ஒரு நூலின் பகுதியிலே எடுத்துக் கூறினேன்.

=============================================

பாடல் எண் : 5

எடுத்தஅக் குண்டத் திடம்பதி னாறில்
பதித்த கலைகளும் பாலித்து நிற்கும்
கதித்தனல் உள்ளெழக் கண்டுகொள் வார்க்கே
கொதித்தெழும் வல்வினை கூடகி லாவே.

 

பொழிப்புரை :  புறத்தே அமைக்கப்பட்ட குண்டத்தினில் எழுகின்ற தீயினிடத்தும் உடம்பில் சொல்லப்பட்ட பதினாறு இடங்களைக் கற்பித்து வழிபட அவ்விடங்களில் உள்ளே தியானிக்கப்பட்ட பிராசாத கலைகள் பதினாறும் இனிது அருள் வழங்கி நிற்கும். இவ்வாறு அகவழி பாட்டோடு ஒன்றி நிற்கும் வகையில் குண்டத் தீயைக் காண்பவர் களுக்கே அவர்கள் மேல் சீற்றங்கொண்டு எழுகின்ற வினைகள் அவரைச் சாரமாட்டாவாய் ஒழியும்.

=============================================

பாடல் எண் : 6

கூடமுக் கூடத்தி னுள்ளெழு குண்டத்துள்
ஆடிய ஐந்தும் அகம்புற மாய்நிற்கும்
பாடிய பன்னீ ரிராசியும் அங்கெழ
நாடிக்கொள் வார்கட்கு நற்சுடர் தானே.

 

பொழிப்புரை :  ஒன்பது வகைக் குண்டங்களுள் அறுகோணமாய் அமைந்த குண்டத்தில் ஐம்பெரும் பூதங்களும் அக்குண்டத் தீயின் அகமாயும், அதன் புறமாயும் நிற்கும். அதனையும் நினைந்து நிலவுலகத்தின் பகுதிகளாகிய மேடம் முதலிய பன்னிரண்டு ராசிகளையும் அக்குண்டத்திலே பாவித்து வழிபடுவார்க்கு அதனின்றும் எழுகின்ற தீ எல்லாத் தேவரையும், கோள்களையும் மகிழ்விக்கின்ற நல்ல தீயாய் அமையும்.

=============================================

பாடல் எண் : 7

நற்சுட ராகும் சிரம் முக வட்டமாம்
கைச்சுட ராகும் கருத்துற்ற கைகளில்
பைச்சுடர் மேனி பதைப்பற்ற லிங்கமும்
நற்சுடர் ராய்எழும் நல்லதென் றாளே.

 

பொழிப்புரை :  அங்கியங் கடவுட்குச் சிரசும், முகமும், கொழுந்தாகிய சுடர்களாம். பக்கங்களில் படர்ந்து தாவுகின்ற சுடர்கள் கைகளாம், கீழ்நின்று பசிய நிறத்தை உள்ளே உடையதாய் எழுகின்ற இடை ஒளிப் பிழம்பே மேனியாம், இவ்வாறாதலின் வேள்வித் தீயே சிவனது வடிவமாகவும் எண்ணப்படுகின்ற நன்மையை உடையதாகின்றது என்று சிவசக்தி கூறினாள்.

=============================================

பாடல் எண் : 8

நல்லதென் றாளே நமக் குற்ற நாயகம்
சொல்லதென் றாளே சுடர்முடி பாதமா
மெல்லநின் றாளை வினவகில் லாதவர்
கல்லதன் தாளையும் கற்றும்வின் னாளே.

 

பொழிப்புரை :  வேள்வித் தீயினது சிறப்பைக் கூறிய அந்தச் சிவ சக்தியே, `நம்மைச் செலுத்தி நிற்பன மந்திரங்களே` என அருளிச் செய்தாள். அம் மந்திரங்களையே தனக்கு முடி முதல் அடிவரையும் உள்ள உறுப்புக்களாகக் கொண்டு அருளோடு நிற்கின்ற அவளது உண்மையை உணராதவர்கள், எல்லாக் கல்விகளையும் அடி தொடங்கி முறையாகக் கற்றும் அக்கல்விகள் பகலில் காணப்படுகின்ற வான வில்போல வெறுந்தோற்ற மாத்திரையாய்ப் பயன்படாதொழியும்.

=============================================

பாடல் எண் : 9

வின்னா இளம்பிறை மேவியகுண்டத்துச்
சொன்னா இரண்டும் சுடர்நாகம் திக்கெங்கும்
பன்னாலு நாகம் பரந்த பரஞ்சுடர்
என்னாகத் துள்ளே இடங்கொண்ட வாறே.

 

பொழிப்புரை :  வில்லின் நுனி போன்ற இரண்டு நுனிகளுடன் விளங்கும் இளம்பிறை வடிவாகப் பொருந்திய குண்டத்தில் அந்த இரு நுனிகளிலும் எழுகின்ற தீ இரண்டு பாம்புகளாய் எங்கும் ஒளி வீசும். அவை ஒவ்வொன்றிற்கும் உள்ள பற்கள் நான்கு. இந்த நாகங்களுடன் பரந்தெழுகின்ற தீ எனது உடம்பினுள்ளும் இடங் கொண்டிருத்தல் வியப்பு.

=============================================

பாடல் எண் : 10

இடங் கொண்ட பாதம் எழிற்சுட ராக
நடங்கொண்ட பாதம்நன் னீராம் அவற்குச்
சகங்கொண்ட கைஇரண் டாறும் தழைப்ப
முகங்கொண்ட செஞ்சுடர் முக்கண னார்க்கே.

 

பொழிப்புரை :  சிவபிரானது அகத்தொளி வடிவில் ஊன்றிய திருவடி அக்கினி மண்டலமாகிய மூலாதாரமும், சுவாதிட்டானமும் ஆம். தூக்கியாடுந் திருவடி நீர் மண்டலமாகிய மணிபூரகமும், அனாகதமுமாகும். திசைகளை அளக்கும் எட்டுக் கைகள் உடலகம் எங்கு மாகும். முகமும், அதன்கண் உள்ள முச்சுடர்களாகிய மூன்று கண்களும் விசுத்தியும், ஆஞ்ஞையுமாகிய இடங்களாகும்.

=============================================

பாடல் எண் : 11

முக்கணன் றானே முழுச்சுட ராயவன்
அக்கணன் றானே அகிலமும் உண்டவன்
திக்கண னாகி திசைஎட்டும் கண்டவன்
எக்கணன் றன்னுக்கும் எந்தை பிரானே.

 

பொழிப்புரை :  மூன்று கண்களை உடையவனாகிய சிவபெருமானே அனைத்துத் தேவர்க்கும் வாயிலாகும் நிறைவான ஓமாக்கினி. அஃது எவ்வாறெனில், மண்ணை உண்டு உமிழும் அந்த மாயோனும், உலகங்களைப் படைக்கும் எண்கணனாகிய பிரமனும் தானேயாய் நிற்றலால். இதனானே, எங்கு யாவன் ஒருவன் தேவன் இருப்பினும் அவனுக்குப் பற்றுக்கோடாகின்றவன் சிவனே என்பது விளங்கும்.

=============================================

பாடல் எண் : 12

எந்தை பிரானுக் கிருமூன்று வட்டமாய்த்
தந்தைதன் முன்னமே சண்முகன் தோன்றலால்
கந்தன் சுவாமி கலந்தங் கிருத்தலால்
மைந்தன் இவனென்று மாட்டுக்கொள் ளீரே.

 

பொழிப்புரை :  சிவபிரானுக்கு இயல்பாகவே ஆறுமுகம் இருப்பினும் அவற்றுள் அதோமுகம் தோன்றாதிருக்க அதுவும் கூடி ஆறுமுகம் வெளிப்படையாய்த் தோன்றும்படி முருகன் உமையிடத்து உதியாது சிவபிரானது, முகங்களினின்றே தோன்றினமையாலும், பின்னும் சிவனும், சத்தியுமாகிய தந்தை தாயரது இடையிலே முருகன் குழவியாய் என்றும் நீங்காதிருத்தலாலும் `மைந்தன் தந்தையின் மறுவடிவமே` என்னும் ஒற்றுமை பற்றி, மேற்கூறிய ஓமாக்கினியை, `சிவாக்கினி` என்றலேயன்றி, `குகாக்கினி` எனவும் ஆகமங்கள் கூறுதலின் பொருத்தத்தை உணர்ந்து கொள்ளுங்கள்.

=============================================

பாடல் எண் : 13

மாட்டிய குண்டத்தி னுள்எழு வேதத்துள்
ஆட்டி கால்ஒன் றிரண்டும் அலர்ந்திடும்
வாட்டிய கையிரண் டொன்று பதைத்தெழ
நாட்டுஞ் சுரர்இவர் நல்லொளி யானே.

 

பொழிப்புரை :  அகமும், புறமும் ஒற்றுமைப்படக் காட்டிய குண்டங்களில் எழுகின்ற தீயினுள்ளே, `காற்று` என்னும் ஒன்று, `இடைகலை, பிங்கலை` என இரண்டாய் இயங்கும். அவ் இயக்கத்திற்கு உரிய வழி மூன்றில் இரண்டு தடுக்கப்பட, ஒன்றில் மட்டுமே இயங்கச் செய்வோர் மேற்கூறிய ஒளியால் தேவராக மதிக்கப்படுவர்.

=============================================

பாடல் எண் : 14

நல்லொளி யாக நடந்துல கெங்கும்
கல்லொளி யாகக் கலந்துள் இருந்திடும்
சொல்லொளி யாகத் தொடர்ந்த உயிர்க்கெலாம்
கல்லொளி கண்ணுளு மாகிநின் றானே.

 

பொழிப்புரை :  மொழியையே அறிவாகப் பெற்று இயங்கிவரும் மக்களுயிர்க்கெல்லாம் மாணிக்க ஒளிபோல உள்நின்று, கண்மணி போல உதவி வருகின்ற சிவன், இவ்வுலக முழுதிலும் வேள்வித் தீயாக விளங்கியே திருக்கோயிற் படிமங்களில் உள்ளொளியாய்க் கலந்து நிற்கின்றான்.

=============================================

பாடல் எண் : 15

நின்றஇக் குண்ட நிலைஆறு கோணமாய்ப்
பண்டையில் வட்டம் பதைத்தெழும் ஆறாறுங்
கொண்டஇத் தத்துவம் உள்ளே கலந்தெழ
விண்ணுளும் என்ன விடுக்கலும் ஆமே.

 

பொழிப்புரை :  மேற் கூறியவாறு சிவன் திருக்கோயிலில் விளங்கி நிற்றற்கு உரியது, சிறப்பாக அறுகோணக் குண்டமே. அவற்றோடு முன்னே சொன்ன பிறவும் இருத்தல் சிறப்பே இதனுள், விளங்குகின்ற சிவாக்கினியையும், தம்மையும் முன்போல யோகியராகச் செய்தலேயன்றி, முப்பத்தாறாய தத்துவ ரூபிகளாகவும் செய்தால், எவ் வுலகத்தில் உள்ளார்க்கும், எப்பொருளையும் அவன் வாயிலாகக் கொடுத்தல் கூடும்

திருமந்திரம்-தந்திரம்04: பதிகம்:04/2. நவகுண்டம் (பாடல்கள்:16-30/30)பாகம் II

 

பத்தாம் திருமுறை - திருமூலர் - திருமந்திரம் - 237 பதிகங்கள் - 3000  பாடல்கள்.
பொழிப்புரை,குறிப்புரை: முனைவர். சி.அருணை வடிவேல் முதலியார்.  
================================================================== 
நான்காம் தந்திரம்:பதிக எண்:01: அசபை ............................பாடல்கள்: 030

நான்காம் தந்திரம்:பதிக எண்:02: திருவம்பலச் சக்கரம் ....பாடல்கள்: 089
நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை........................பாடல்கள்: 012

நான்காம் தந்திரம்:பதிக எண்:03: அருச்சனை.....................பாடல்கள்: 012

நான்காம் தந்திரம்:பதிக எண்:04: நவகுண்டம்....................பாடல்கள்: 030
========================================================(131+030=161)
நான்காம் தந்திரம்-பதிகம் எண்:04. நவகுண்டம் (பாடல்கள்:16-30/30)பகுதி-II

பாடல் எண் : 16

எடுக்கின்ற பாதங்கள் மூன்ற(து) எழுத்தைக்
கடுத்த முகம் இரண் டாறுகண் ணாகப்
படித்தெண்ணும் நாஏழு கொம்பொரு நாலு
அடுத்தெழு கையான தந்தமி லாற்கே.

 

பொழிப்புரை :  குண்டத்தில் தீயாய் விளங்கும் சிவனுக்கு, (சிவாக்கினிக்கு) நடக்கின்ற பாதங்கள் மூன்று; `` என்னும் எழுத்தின் வடிவை ஒத்த முகம் இரண்டு; அம்முகங்களில் உள்ள கண்கள் ஆறு; நாக்கு ஏழு; தலையிரண்டிலும் கொம்புகள் நான்கு; கை ஏழு; இவ்வாறு அமைந்துள்ளன.

=============================================

பாடல் எண் : 17

அந்தமி லானுக் ககலிடந் தானில்லை
அந்தமி லானை அளப்பவர் தாமில்லை
அந்தமி லானுக் கடுத்தசொல் தானில்லை
அந்தமி லானை அறிந்துகொள் பத்தே.

 

பொழிப்புரை :  அழிவில்லாத சிவாக்கினியைத் தன்னுள் வியாப் பியமாகக் கொள்வதோர் இடமில்லை. (அவனே எல்லாவற்றிலும் வியா பகன்.) அவனுக்குத் தோற்றமும், முடிவுமாகிய கால எல்லையும் இல்லை. (என்றும் உள்ளவன்.) அவனது இயல்பை முற்றக் கூறச் சொல்லில்லை. ஆகவே, அவனைத் திருவைந்தெழுந்துள் யகர வாச்சியமாகிய ஆன்மாவினுள்ளே காண்பதே அறிவுடைமையாம்.

=============================================

பாடல் எண் : 18

பத்திட்டங் கெட்டிட்டு ஆறிட்டு நாலிட்டு
மட்டிட்ட குண்டம் மலர்ந்தெழு தாமரை
கட்டிட்டு நின்று கலந்தமெய் ஆகமும்
பட்டிட்டு நின்றது பார்ப்பதி பாலே.

 

பொழிப்புரை :  பத்தும், எட்டும், ஆறும், நான்குமாகிய கோணங்களால் வரையறுக்கப்பட்ட குண்டமாகிய பொய்கையில் வளர்ந்து மலர்கின்ற தீயாகிய தாமரை மலரில் அடங்கிக் கலந்து நிற்கின்ற முப்பத்தாறு தத்துவங்களும், அவற்றின் காரியமாகிய உடம்பும் சத்தியிடமே அடங்கிநிற்பனவாம்.

=============================================

பாடல் எண் : 19

பார்ப்பதி பாகன் பரந்தகை நாலஞ்சு
காற்பதி பத்து முகம்பத்துக் கண்களும்
பூப்பதி பாதம் இரண்டு சுடர்முடி
நாற்பது சோத்திர நல்லிருப் பத்தஞ்சே.

 

பொழிப்புரை :  மேற் கூறிய கமலாசனத்தில் எழுந்தருளியிருப்பவ ராகிய, மனோன்மனி மணாளராகிய சதாசிவ மூர்த்திக்கு முகம் ஐந்தாகலின், உச்சி முகம் நீங்க ஏனைய நாற்றிசையில் உள்ள நான்கு முகங்கட்கும் முகம் ஒன்றிற்கு நான்காகக் கைகள் இருபதும், எல்லா முகங்கட்குமாக வாய் ஐந்தும், கண்கள் ஐம்மூன்று பதினைந்தும், காதுகள் பத்துமாய் உள்ளன.

=============================================

பாடல் எண் : 20

அஞ்சிட்ட கோலம் அளப்பன ஐயைந்தும்
மஞ்சிட்ட குண்டம் மலர்ந்தங் கிருத்தலால்
பஞ்சிட்ட சோதி பரந்த பரஞ்சுடர்
கொஞ்சிட்ட வன்னியைக் கூடுதல் முத்தியே.

 

பொழிப்புரை :  ஐந்து முகங்களால் ஐந்து வேறுபட்ட நிலைகள் போலக் காணப்படுகின்ற சதாசிவரால் அளவிட்டறிந்து ஆளப்படும் மகேசுவரரது நிலைகள் இருபத்தைந்தும் புகை பொருந்திய ஓம குண்டத்தில் பொருத்தி விளங்குதலால், சதாசிவர் முதல் ஐவராக விரிந்து நிற்கின்ற சிவன் மகிழ்ந்து தோன்றுகின்ற ஓமாக்கினியை நல்ல வகையில் ஓம்பி வாழ்தலே முத்தி நிலையாகும்.

=============================================

பாடல் எண் : 21

முத்திநற் சோதி முழுச்சுட ராயவன்
கற்றற்று நின்றார் கருத்துள் இருந்திடும்
பற்றற்று நாடிப் பரந்தொளி யூடுபோய்ச்
செற்றற் றிருந்தவர் சேர்ந்திருந் தாரே.

 

பொழிப்புரை :  வீடு பேற்றைத் தருகின்ற ஞானவடிவினனும், வேள்வியில் நிறைவுடைய தீயாய் நிற்பவனுமாகிய சிவன், வேதங்களைக் கற்று அவ்வொழுக்க நெறியில் குற்றமின்றி நிற்பவரது உள்ளத்திலே விளங்கி நிற்பான். உலகப் பற்றுக்களைவிடுத்து அவனையே நாடி, படர்ந்து எரிகின்ற அத்தீயிடமாக அவனை அணுகி வெகுளி முதலிய குற்றம் நீங்கி நின்றவர் அவனைப் பெற்று நின்றார்கள்.

=============================================

பாடல் எண் : 22

சேர்ந்த கலைகளும் சேரும்இக் குண்டமும்
ஆர்ந்த திசைகளும் அங்கே அமர்ந்திடும்
பாய்ந்தஐம் பூதமும் பார்க்கின்ற வன்னியைக்
காய்ந்தவர் என்றும் கலந்தவர் தாமே.

 

பொழிப்புரை :  எல்லாவற்றையும் வியாபித்து நிற்கின்ற நிவிர்த்தியாதி பஞ்சகலைகளும், ஓமத் தீயும் ஒன்றாய் இயைந்து நிற்கும், அதனால், எல்லா உலகங்களும் அத்தீயினிடத்து அடங்கி நிற்பனவாம். ஆகையால், அந்தத் தீயை நிவிர்த்திக்குமேல் பிரதிட்டையில் சிறிது எல்லையளவிலே நிற்கின்ற ஐம்பூதங்களின் ஒன்றாகிய தீயாக எண்ணும் எண்ணத்தை வெறுத்தவரே மேற் சொல்லியவாறு சிவனோடு என்றும் இரண்டறக் கலந்து நிற்கும் நிலையைப் பெற்றவராவர்.

=============================================

பாடல் எண் : 23

மெய்கண்ட மாம்விரி நீர்உல கேழையும்
உய்கண்டஞ் செய்த ஒருவனைச் சேருமின்
செய்கண்ட ஞானம் திருந்திய தேவர்கள்
பொய்கண்ட மில்லாப் பொருள்கலந் தாரே.

 

பொழிப்புரை :  கடல் சூழ்ந்த நிலவுலகின் ஏழு பொழில்களையும் (தீவுகளையும்) உயிர் உய்தி பெறுதற்கு உரிய உலகமாக அமைத்த ஒருவனாகிய சிவனை அவ்விடங்களில் பிறந்துள்ள நீங்கள் வழிபாட்டினால் அடையுங்கள், அவனால் படைக்கப்பட்ட அவ்வுலகம் முழுதையும் அறியும் அறிவைப் பெற்ற தேவர்களும் அதன்கண் சென்று அவனை வழிபட்டே மெய்ப் பொருளைப் பெற்றார்கள் ஆதலால்.

=============================================

பாடல் எண் : 24

கலந்திரு பாதம் இருகர மாகும்
அலர்ந்திரு குண்டம் அகாரத்தோர் மூக்கு
மலர்ந்தெழு செம்முகம் மற்றைக்கண் நெற்றி
உலர்ந்திருங் குஞ்சி அங் குத்தம னார்க்கே.

 

பொழிப்புரை :  சிவாக்கினியது உருவத்தை மேல் ``எடுக்கின்ற பாதம்` (1013) என்னும் மந்திரத்திலும், ``பார்ப்பதி பாகன்`` (1016) என்ற மந்திரத்திலும் கூறியவாறன்றி வேள்வி வேட்பார் தம் வடிவு போன்ற வடிவமாகவும் தியானிக்கலாம். அவ்விடத்திடல் நெற்றிக்கண் ஒன்று மட்டுமே சிறப்புருவமாகக் கொள்ளத்தக்கது.

=============================================

பாடல் எண் : 25

உத்தமன் சோதி உளன்ஒரு பாலனாய்
மத்திம னாகி மலர்ந்தங் கிருந்திடும்
பச்சிம திக்கும் பரந்து குழிந்தன
சத்திமா னாகத் தழைத்த கொடியே.

 

பொழிப்புரை :  சிவபெருமான் வாகீசுவரிக்கு நாயகனாய் இன்புற்று மகிழ்ந்ததனால் உண்டாகிய ஓமத்தீ குண்டத்தின் கீழ்ப்பாதியோடு நில்லாமல் மேற்பாதியிலும் பரத்தலால், அங்கு உள்ள இடங்களும் வேறுபடும். அந்நிலையில் அச்சிவனே அந்தத் தீயுருவில் முதலிலே குழவிப் பருவத்தனாயும், பின்பு காளைப் பருவத்தனாயும் இருப்பான்.

=============================================

பாடல் எண் : 26

கொடிஆறு சென்று குலாவிய குண்டம்
அடிஇரு கோணமாய் அந்தமும் ஒக்கும்
படிஏ ழுலகும் பரந்த சுடரை
மடியாது கண்டவர் மாதன மாமே.

 

பொழிப்புரை :  மேற்கூறியவாறு நிற்கும் சிவாக்கினிக்கு இரு முக்கோணங்களை ஒன்றன்மேல் ஒன்றாய் இட்டது போல அமைக்கும் அறுகோண குண்டமே சிறந்தது. அதன் கண் சிவசோதியை அவியாதவாறு கண்டவர்க்குப் பெரிய செல்வம் உண்டாகும்.

=============================================

பாடல் எண் : 27

மாதன மாக வளர்கின்ற வன்னியைச்
சாதனமாகச் சமைந்த குருஎன்றும்
போதன மாகப் பொருந்த உலகாளும்
பாதன மாகப் பிரிந்தது பார்த்தே.

 

பொழிப்புரை :  தன்னைக் காண்பவர்க்குப் பெரிய செல்வமாய் வளர்கின்ற ஓமத்தீயைத் தனக்குப் பயன் தரும் சாதனமாகக் கொண்ட ஆசாரியன், எப்பொழுதும் மாணவர்களது சத்திநிபாத வகையைத் தெரிந்து, அதற்கேற்ப அவர்களுக்கு அதனை அறிவித்தலை மேற் கொள்வானாயின், அவன் உலகம் முழுதிற்கும் குருவாய்ப் பலரை ஆட்கொள்ள வல்லவனாவன்.

=============================================

பாடல் எண் : 28

பார்த்திடம் எங்கும் பரந்தெழு சோதியை
ஆத்தம தாகவே ஆய்ந்தறி வார்இல்லை
காத்துட லுள்ளே கருதி யிருந்தவர்
மூத்துடல் கோடி யுகங்கண்ட வாறே.

 

பொழிப்புரை :  உருவத்தால் ஓம குண்டத்தளவிலே நின்றதாயினும், ஆற்றலால் எவ்விடத்தும் நிறைந்து நிற்கும் ஓமாக்கினியைத் தமக்கு எல்லா நலனையுந்தரும் அருந்துணையாக ஆராய்ந்தறிபவர் ஒருவரும் இல்லை, அவ்வாறு அறிந்து அதனை முறைப்படி ஓம்பி, மனத்திலும் தியானிப்பவர் உடல், ஆண்டுகள் பல சென்றாலும் அழிவின்றிப் பல யுகங்களைக் கண்டு கொண்டிருந்தவாறு பல இடங்களில் கேட்கப்படுகின்றது.

=============================================

பாடல் எண் : 29

உகங்கண்ட ஒன்பது குண்டமும் ஒக்க
அகங்கண்ட யோகிஉள் நாடி எழுப்பும்
பகங்கண்டு கொண்டஅப் பாய்கரு ஒப்பச்
சகங்கண்டு கொண்டது சாதன மாமே.

 

பொழிப்புரை :  அக வழிபாடாகிய யோகத்தை நன்கறிந்த யோகி, மேற்கூறியவாறு பல யுகங்கள் அழியாதிருத்தற்கு ஏதுவாகிய நவகுண்ட வேள்வியையும் ஒருங்கே தன் உடலகத்துள் முறையறிந்து வளர்ப்பான். தாய் வயிற்றினுள் தங்கிப் பிறக்கின்ற கருவிற்கு அவளது குறிபோல எல்லாப் பயன்களது விளைவிற்கும் இன்றியமையாச் சாதனமாக உலகம் கண்டது வேள்வியே.

=============================================

பாடல் எண் : 30

சாதனை நாலு தழல் மூன்று வில்வயம்
வேதனை வட்டம் விளைவாறு பூநிலை
போதனை போ(து) அஞ்சு பொற்கய வாரணம்
நாதனை நாடும் நவகோடி தானே.

 

பொழிப்புரை :  பயன்களில் சரியை முதலிய நான்கிற்கும் நாற்கோண குண்டமும், வேள்விக் கடன் முற்றுதற்கு முக்கோண குண்டமும், வெற்றிக்கு வில்லை ஒத்த பிறைக் குண்டமும், துன்ப நீக்கத்திற்கு விருத்த குண்டமும், எல்லாப் பயன்கட்கும் அறுகோண குண்டமும், நிலைபேற்றிற்கு அட்டகோண குண்டமும், ஆசிரியத் தன்மைக்குப் பதும குண்டமும், அழகிய கையையுடைய யானைமேற் செல்லும் அரசச் செல்வத்திற்குப் பஞ்சகோண குண்டமும் சிறப்பாக உரியனவாம். நவகுண்டங்களை இவ்வாறு பெரும்பான்மை பகுத்துணர்ந்து கொள்க.

 

No comments:

Post a Comment