Thursday, July 17, 2014

மகாலட்சுமி வாசம் என்றால்/லக்ஷ்மி கடாக்ஷம் என்றால்

மகாலட்சுமி வாசம் என்றால்/லக்ஷ்மி கடாக்ஷம் என்றால்

மகாலட்சுமி வாசம் என்றால் ஏதோ காசு பணத்தோடு மட்டும் முடிச்சு போட்டு பார்க்காதீர்கள். அது எல்லாவற்றுக்கும் மேலான ஒன்று...!
பாவச்செயல்களை கூசாமல் செய்துகொண்டு உலாவரும் எத்தனையோ பணக்காரர்களை நான் பார்க்கிறேனே என்று நீங்கள் சொன்னால்… அது உங்கள் அறியாமையே அன்றி வேறில்ல. காரணம்… செல்வம் என்பது வேறு… !
லக்ஷ்மி கடாக்ஷம் என்பது வேறு...!
ஒருவன் செல்வந்தனாக இருப்பது அவன் பிராரப்த கர்மாக்களில் ஒன்று. அவ்வளவு தான். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் என்பது இறைவன் தரும் பரிசு...!
வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி
தொகுத்தார்க்கு துய்த்தல் அரிது. (குறள் 377)
என்பது வள்ளுவர் வாக்கு.
கோடிப்பொருள் சேர்ந்திருந்தாலும் , இறைவன் விதித்த விதிப்படிதான் நாம் அதை அனுபவிக்க முடியுமே தவிர, 
நம் விருப்பப்படி அனுபவிப்பது கடினம்..!.
செல்வந்தர்களால் நிம்மதியாக ஒரு வேளை கூட சாப்பிட முடியாத அளவிற்கு உடலில் நோய்களின் ராஜ்ஜியம் இருக்கும். ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்கள் செல்வத்தோடு நோய்நொடியின்றி ஆரோக்கியமாக இருப்பார்கள்...!
ஒருவேளை செல்வந்தர்கள் உடல் ஆரோக்கியமாக இருந்தால் புத்திரர்கள் நன்றாக இருக்கமாட்டாகள். பெற்றோர் பெயரை கெடுக்கும் பிள்ளைகளாக இருப்பார்கள்...!
ஆனால் லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்களின் பிள்ளைகள் பெற்றோரின் பெயரை காப்பாற்றி அவர்கள் குடும்பத்திற்கே பெருமை சேர்ப்பார்கள்...!
செல்வந்தர்கள் இல்லம் பெரிதாக இருந்தாலும் அதில் நிறைவு இருக்காது. லக்ஷ்மி கடாக்ஷம் உள்ளவர்களின் இல்லம் உண்மையில் திருமகளின் வீடு போல இருக்கும்...!
லக்ஷ்மி கடாக்ஷம் என்பது பரந்து விரிந்த பொருளை கொண்டது. புகழ், கல்வி, வலிமை, வெற்றி, நன்மக்கள், பொன், நெல், நல்வினை, நுகர்ச்சி, அறிவு, அழகு, பொறுமை, இளமை, துணிவு, ஆரோக்கியம், நீண்ட ஆயுள் போன்ற 16 பேறுகளை குறிப்பது லக்ஷ்மி கடாக்ஷம்...!
‘அதிர்ஷ்டம்’ யாருக்கு வேண்டுமானாலும் அடிக்கலாம்...! ஆனால் ‘லக்ஷ்மி கடாக்ஷம்’ எல்லாருக்கும் கிடைக்காது...!
இப்போது சொல்லுங்கள்… நீங்கள் பார்க்கும் செல்வந்தர்கள் எத்தனை பேரிடம் லக்ஷ்மி கடாக்ஷம் இருக்கிறது...???

No comments:

Post a Comment