Thursday, July 3, 2014

படிப்பும் குற்றமும்!

ருள்வாக்கு - படிப்பும் குற்றமும்!

பொதுவாக லோகம் முழுக்கப் படிப்புமுறை இருக்கும் நிலையில் எங்கே படிப்பு ஜாஸ்தியோ அந்த ஊரில், அந்த நாட்டில்தான் குற்றமும் ஜாஸ்தி நடக்கிறதென்று தெரியும். ஹைஸ்கூல், டிகிரி தரும் காலேஜ், டாக்டரேட் தருகிற உயர்ந்த ஸென்டர்கள் என்று ஒன்றுக்குமேல் ஒன்றாக வளர்ந்து கொண்டிருக்கிற நாடுகளில்தான் குற்றங்களும் வளர்ந்து கொண்டிருப்பது தெரியும். எழுத்தறிவில்லாத காட்டுக்குடிகளும் மலைவாஸிகளும் உள்ள இடங்களில்தான் போலீஸுக்கு ரொம்பவும் வேலை குறைச்சல், வக்கீல்களுக்குத் தேவை இல்லை என்று தெரியும்.

படிப்பு ஜாஸ்தியாக ஆக நூதன நூதனமாக ஏமாற்று வித்தைகள் செய்கிற ஸாமர்த்யங்களும் வளர்கின்றன. தொழில்கள் நடத்துகிறவர்களும் அரசியல்வாதிகளும் செய்கிற பேற்று மாற்று, எங்கே போனாலும் ரஹஸ்யத்தில் நடக்கும் லஞ்சம் முதலான அநேகக் குற்றங்கள் இந்த ஸாமர்த்தியத்தில் கோர்ட் வரை வராமலே போகின்றன. அதனால் போர்டு போட்டாலும்கூட அதில் கால்வாசிக் குற்றங்களைத்தான் காட்ட முடியும்! முக்கால்வாசிக் குற்றங்கள் நீதி ஸ்தலத்துக்கும், போலீஸுக்கும் வராமலே போயிருக்கும். படிப்பினால் புத்தி ஸாமர்த்யம் அதிகரிப்பதில் ஸிவில் குற்றங்கள் மாத்ரம்தான் அதிகரித்திருக்கின்றன என்றில்லை. பெரிதான பாங்குக் கொள்ளை, ஒரு மந்த்ரி ஸபையையே சுட்டுக் கொன்றுவிடுவது, கோஷ்டி கோஷ்டியாகத் தகாத கார்யத்துக்காகப் பெண்களைக் கடத்திப் போவது மாதிரி க்ரிமினல் குற்றங்களும், ராஜாங்கத்தையே வெறும் பௌதிக பலத்தால் புரட்டிவிடும் ‘கூ’(Coup) முதலியனவும், படிப்பு ஸாமர்த்யத்தாலேயே நன்றாக ஜோடித்துத் திட்டம் போட்டு நடத்தப்படுகின்றன. இதெல்லாம் போக நேராகவே அடிதடி, பிஸ்டலைக் காட்டுவது, சுடுவது முதலானவையும் படிப்பாளிகள் உள்ள நாடுகளில் ஏறிக்கொண்டே போகின்றன. யூனிவர்ஸிட்டி லெக்சரர்கள்கூட ஸெனட்டில் நடக்கும் மீட்டிங்குகளில் கல்லெறிவது, நாற்காலிகளைத் தூக்கி அடித்துக் கொள்வது என்று போகிற அளவுக்கு நிலைமை முற்றியிருக்கிறது.

படிக்கத் தெரியாத ஆதிவாஸிகள் குடும்பச் சண்டை, கோஷ்டிச் சண்டை என்று எப்போதாவது ஒருத்தர் தலையை ஒருத்தர் சீவிக்கொள்வதாயிருக்கலாம். அது ஏதோ ஆத்திர, க்ஷாத்திரத்தில் ஒரு வேகம் வந்த ஸமயத்தில் செய்வதாகத்தான் இருக்கும். மற்றபடி இத்தனை தினுஸு தினுஸான குற்றங்கள் அவர்களுக்குத் தெரியாது. ஃபோர்ஜரியில் ஆரம்பித்து ப்ளான் போட்டு செய்யப்படும் ஏமாற்றுக் குற்றங்களும், Organised- ஆகச் செய்யப்படும் திருட்டுப் புரட்டுகளும் படிக்கத் தெரியாத பழங்குடி மக்களுக்குத் தெரியாது.

ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்

No comments:

Post a Comment