Saturday, July 5, 2014

ராமர் தெய்வமா? மனிதரா?

ராமர் தெய்வமா? மனிதரா?
என் அம்மா ராமரைத் தெய்வமாக வணங்கி ஏகாதசி விரதம் இருக்கிறார். அப்பாவோ பட்டிமன்றங்களில் பங்கேற்று ராமரைப் பலவாறு விமர்சிக்கிறார். எனக்கு ஒரு குழப்பம். ராமர் தெய்வமா? மனிதரா?
பதில்: ராமர் தெய்வமா? மனிதரா? என்பதைச் சில இலக்கியவாதிகள் பட்டிமன்றங்களில் சிந்திப்பதுபோல் நாம் சிந்திக்க வேண்டாம்.
ராமர் தெய்வமா? என்பது பற்றி நீ அறியுமுன் அவர் ஒரு முழு மாமனிதர் என்பதை நீ அறியத்தான் வேண்டும்.
அயோத்யா ராமன், ராஜாராமன், தசரதராமன், சீதாராமன், கோதண்டராமன்… போன்றவை யாவும் ராமரே வைத்துக் கொண்ட பெயர்கள் அல்ல. அவை அவரது பண்புக்கு ஏற்றாற்போல் மக்களால் வழங்கப்பட்டவை.
தசரத ராமன் : தந்தை மீதிருந்த பக்தியால் அவர் கூறியதை நிறைவேற்றத் தம் வாழ்க்கையையே அர்ப்பணித்தவர் ராமர்.
கோசல ராமன் : தந்தையிடம் எப்படியோ, அதே போல் தாயிடமும் மிகுந்த அன்பும் பக்தியும் கொண்டவர்.
சீதாராமன் : பொதுவாக, பெற்றோருக்கு நல்ல பிள்ளைகள் மனைவியிடம் நற்பெயர் வாங்குவது அரிது. ஆனால் ராமர் சீதாதேவியை நேசித்தது காவியங்களில் கூறப்படும் ஒன்று. வஜ்ரம் போல் வலிமையுடைய ராமர், சீதையிடம் மலரைவிட மென்மையாக விளங்குவார்.
கோதண்டராமன் : ராமரின் வில் கோதண்டம். வில்வித்தையில் அவருக்கு ஈடு இணையில்லை. ராம பாணத்தின் மகிமையால் அரக்கர் கூட்டம் இரங்கத்தக்க நிலைக்கு வந்தது.
அயோத்யா ராமன்: ராமர் நாட்டின் மீது பற்றைத் துறந்தவர். மண்ணாசையும் பெண்ணாசையும் சிறிதுமின்றி மிகச் சிறப்பாக அயோத்தியை ஆண்டு ‘ராம ராஜ்யம்’ படைத்தார்.
சாப்பாட்டு ராமன்: அதிகம் சாப்பிடுபவரை நாம் ‘சாப்பாட்டு ராமன்’ என்கிறோம். அப்படியெனில் ராமர் பெருந்தீனிப் பிரியரா? இல்லை.
ராமர் அரண்மனை அறுசுவை உணவு உண்டாலும் சரி, காட்டில் காய், கிழங்குகள் உண்டாலும் சரி, அவற்றை தெய்வப் பிரசாதமாகவே ஏற்று உண்டார். அதோடு, அவர் சமைப்பதிலும் வல்லவர் என்பதைக் குறிக்கவே சாப்பாட்டு ராமர் என்ற பெயர் வந்ததாகத் தோன்றுகிறது.
ராஜாராமன்: தன்னைச் சரணடைந்த அனைத்து மக்களுக்கும் உயிர்களுக்கும் ராமர் அபயமளித்து அடைக்கலம் தந்தார். அவர்களைக் காப்பது தாம் மேற்கொண்ட விரதம் என்றே முழங்கினார்.
ஆனந்தராமன்: பொதுவாக நம்மில் பலர் சனி, ஞாயிறுகளில்தான் ஆனந்தமாக இருப்போம். ஆனால் ராமர் வெளியில் துக்கம் போன்ற உணர்ச்சிகளைக் காட்டினாலும் மனதில் சிறிதும் சலனமற்றுத் தம்முள் ஆனந்தமாகவே இருந்தவர். ஏனெனில் அவர் தம் ஆத்மாவில் நிலைத்து நின்று ‘ஆத்மாராமன்’ என்ற பெயர் பெற்றவர்.
ராமர் யாரிடம் பழகினாலும் அவர்களிடம் முழு அன்புடன் பழகினார். எந்த வித்தையைக் கற்றாலும் அதில் மிகச் சிறந்து விளங்கினார்.
இப்பண்புகளை நம் இளைஞர்கள் ராமரிடமிருந்து கற்க வேண்டாமா? வீட்டில் சிறந்த மகனாகவும் பள்ளியில் பெருமைமிகு மாணவனாகவும் சமுதாயம் போற்றுபவனாகவும் விளங்குவதற்கு, ராமரது நடத்தையையும் குண நலன்களையும் அறிய வேண்டியது மிக அவசியம்.
எதைச் செய்தாலும் முழு ஈடுபாட்டுடன் செய்து அதில் மிகச் சிறப்பாக விளங்கிய ஒருவரிடம் பக்தர்கள் ஈடுபடுவது தவறா?
நாம் ராமரிடம் ஈடுபடும்போது அவர் நம்மை நல்ல விஷயங்களில், நல்ல மக்களுடனான உறவுகளில், நல்ல வளமையில் நம்மை ஈடுபடுத்துவார். அப்படி அருள்வதால் கல்யாணராமன் என்றும் ஸ்ரீராமன் என்றும் அவர் போற்றப்படுகிறார்.
அப்படிப்பட்ட வெற்றிகரமான ஒரு நல்ல வாழ்க்கை, உனக்கும் அமைய அந்த ஜெயராமன் அருளட்டும்.
ஜெய் ஸ்ரீராம்!!! ஜெய் ஸ்ரீ ராம்!!!
நன்றி:- ஸ்ரீ ராமகிருஷ்ண விஜயம்....

No comments:

Post a Comment