Sunday, August 17, 2014

கௌசல்யா சுப்ரஜா... கௌசல்யா சுப்ரஜா.

இந்த உலகில் உள்ள மனிதர்களுக்கு ஈடு இணையற்ற மிகப் பெரிய சொத்து என்பது அவர்களின் வாரிசுதானே?!
கங்கைக் கரையில், ராம லட்சுமணர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். அவர்களை அழைத்துக் கொண்டு வந்தவர், விஸ்வாமித்திரர். அவர் அதிகாலைப் பொழுதில் எழுந்து, கங்கையில் நீராடி, ஜப தபங்களையெல்லாம் முடித்துவிட்டு, ராம- லட்சுணர்களை எழுப்புகிறார். நாலரை மணிக்கு எழுப்பத் தொடங்கியவர், ஆறரை மணி வரைக்கும் எழுப்பிக் கொண்டே இருக்கிறாராம்! ம்ஹூம்... இரண்டு பேரும் எழுந்திருக்கவே இல்லை.
சரி... அவர் எப்படி அவர்களை எழுப்பினார் தெரியுமா? 'கௌசல்யா சுப்ரஜா... கௌசல்யா சுப்ரஜா...’ என்று சொல்லிக் கொண்டே எழுப்பினாராம்.
பகவான் ஸ்ரீராமபிரானை எழுப்புவதற்கு, 'கௌசல்யா சுப்ரஜா’என்று ஏன் சொல்லிக்கொண்டே இருக்க வேண்டும்? என்ன அர்த்தம் இதற்கு?
அதாவது, 'இப்பேர்ப்பட்ட மகிமை மிக்க ராமபிரானைப் பெற்றெடுத்த கௌசல்யையே! நீ என்ன விரதம் மேற்கொண்டு, இந்த வரத்தை பெற்றாயோ...’ என்று ஸ்ரீராமபிரானின் புகழை மற்றும் அவனுடைய தாயாரை வாயார, மனதாரப் புகழ்கிறார் விஸ்வாமித்திரர்.
இந்த உலகின் சுவாரஸ்யங்களில், மிக முக்கியமானது இதுதான்! தாயும் தகப்பனுமாகக் கைகோத்து, ஒருவனைப் படிக்க வைத்து, ஆளாக்கியிருந்தாலும்கூட, 'அடடா... ஒரு மாணிக்கத்தைத்தாம்பா அவ பெத்தெடுத்திருக்கா!’ என்று தாயாரை மட்டும் புகழ்கிற தேசம்தானே இது?! தந்தையை அம்போ என்று விட்டுவிட்டு, அவர்களைக் கண்டுகொள்ளாத உலகம்தானே இது! இதற்கு கௌசல்யையைப் புகழ்ந்த விஸ்வாமித்திரர் மட்டும் விதிவிலக்கா, என்ன?
இங்கே... இன்னொன்றையும் யோசிப்போம்.
தசரதரைப் புகழாமல் இருந்ததற்குக் காரணம்... ஸ்ரீராமரை மட்டும்தானே அவர் காட்டுக்குப் போகச் சொன்னார்! மற்ற பிள்ளைகள் எல்லோரும் அவருடன்தானே இருந்தனர்.
சரி... கைகேயியைப் பாராட்டியிருக்கலாமே என்று தோன்றலாம். அப்படிச் செய்யாமல் இருந்ததற்கு, அவளுடைய மகனான பரதனை, ஸ்ரீராமருடன் அனுப்பவில்லையே, அவள்! ஆகவே, விஸ்வாமித்திரர் அவளைப் புகழவில்லை போலும்!
அடுத்து... சுமித்ரை. 'அடடா... ஸ்ரீராமர் வனவாசம் செல்லும்போது, ஸ்ரீலட்சுமணரையும் அவருடன் அனுப்பி வைத்தவள் ஆயிற்றே! அவளைப் புகழ்ந்திருக்கலாம் அல்லவா?’என்று கேள்வி எழலாம். ஆனால், லட்சுமணன் காட்டுக்குச் சென்றால் என்ன... சுமித்ரையின் இன்னொரு மகன் சத்ருக்னன், அவளோடு கூடவே இருக்கிறானே!
ஆக, ஸ்ரீராமரை வனவாசத்துக்கு அனுப்பினாலும், மற்ற பிள்ளைகள் அருகில் இருக்கிறார்கள் என்கிற நிம்மதி தசரதருக்கு! 'அப்பாடா... நம்ம புள்ளையாண்டான், பரதனை அனுப்பலை’ என்கிற நிம்மதிப் பெருமூச்சு கைகேயிக்கு. 'லட்சுமணன் போனால் என்ன... இன்னொரு மகன் சத்ருக்னன் நம்முடன் இருக்கிறான்’என ஆறுதல்பட்டுக் கொள்ளலாம் சுமித்ரை. ஆனால், கௌசல்யைக்கு ஒரேயரு மகன்தான். அவன்... ஸ்ரீராமன். அவனையும் வனவாசத்துக்கு அனுப்புகிற தருணத்தில், அவளால் எப்படித் தாங்கிக் கொள்ளமுடியும்? அதனால்தான், பெற்றவளையும் பெற்ற வயிற்றையும் 'இப்படியொரு அற்புதமான மகனைப் பெற்றெடுத்திருக்கிறாயே... என்ன நோன்பு நோர்த்தாயோ?’ என்று கௌசல்யையைப் புகழ்கிறார் விஸ்வாமித்திரர்.
கௌசல்யைக்கு மகனாகப் பிறந்து பெருமை சேர்த்தார் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி. திருப்பதி ஸ்ரீவேங்கடாசலபதி குடிகொண்டிருக்கிற ஆலயத்தில் துவங்கி, எல்லோரது வீடுகளிலும் அதிகாலையில் 'கௌசல்யா சுப்ரஜா...’ என்று இன்றைக்கும் ஒலித்துக்கொண்டிருக்கிறது அவளின் நாமம். அத்தனைப் பெருமையை தாயான கௌசல்யைக்குத் தேடித் தந்தான் ஸ்ரீராமபிரான்.

No comments:

Post a Comment