Saturday, August 16, 2014

இறைவனை சரணடையுங்கள்

இறைவனை சரணடையுங்கள்


அந்த ஊரில் தீவிர விஷ்ணு பக்தன் ஒருவன் இருந்தான். அவன் சதா சர்வகாலமும், மகாவிஷ்ணுவை நினைத்து வழிபட்டு வந்தான். மேலும் ஆச்சாரப்படி நியமம் தவறாமல் தன் வாழ்வை கடைபிடித்து வந்தான். இந்த நிலையில் அந்த பக்தனுக்கும், சலவைத் தொழிலாளி ஒருவனுக்கும் ஏதோ ஒரு காரணத்தால் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியது.

சலவைத் தொழிலாளி, அந்த பக்தனை அடித்து உதைத்தான். ஆனால் விஷ்ணுவின் பக்தன் தன் மீது ஒவ்வொரு அடி விழும்போதும், ‘நாராயணா! நாராயணா!’ என்று இறைவனின் திரு நாமத்தை உச்சரித்தான். அப்போது வைகுண்டத்தில், திருப்பாற்கடலில் ஆதிசேஷனின் படுக்கையில் வீற்றிருந்த திருமாலுக்கு, அந்த பக்தனின் குரல் கேட்டது.

அந்த நேரத்தில் மகாலட்சுமி, நாராயணரின் கால்களை மெதுவாக பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். பக்தனின் குரல் தன்னை உலுக்கவே, நாராயணர் அங்கிருந்து எழுந்து பக்தனைக் காக்கப் புறப்பட்டார். ‘தாங்கள் எங்கு செல்கிறீர்கள்? சுவாமி!’ என்று கேட்டாள் மகாலட்சுமி.

நாராயணர், ‘தேவி! எனது பக்தன் ஒருவன் ஆபத்தில் சிக்கித் துன்பப்படுகிறான். நான் உடனே சென்று அவனைக் காப்பாற்றியாக வேண்டும்’ என்று கூறியபடி புறப்பட்டார். சில அடி தூரம் சென்ற நாராயணர், மீண்டும் தன் ஆசனத்தில் வந்து அமர்ந்தார்.

அதனைக் கண்ட மகாலட்சுமி, ‘சுவாமி! தாங்கள் ஏன் திரும்பி வந்துவிட்டீர்கள்? உங்கள் பக்தனைக் காப்பாற்றச் செல்லவில்லையா?’ என்று வினவினாள். அதற்கு நாராயணர், ‘தேவி! நான் போக வேண்டிய அவசியம் இல்லாமல் போய்விட்டது.

என் பக்தன் இப்போது தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ளத் தயாராகி விட்டான். அதாவது தன்னை அடித்துத் துன்புறுத்திய சலவைத் தொழிலாளியை திருப்பி அடிக்கத் தொடங்கி விட்டான். எனது துணை இப்போது அவனுக்கு தேவையில்லை.

எனவே அவசியம் இல்லாததால் திரும்பிவிட்டேன்’ என்றார். தன் ஆபத்தை போக்கும் படி இறைவனின் பாதத்தை பற்றிக்கொள்ளும்போது, அதற்கு செவிசாய்த்து இறைவன் ஓடோடி வருகிறான். அதுவே இறைவனை மறந்து தானே எல்லாம் என்ற எண்ணம் எழும்போது இறைவன் வருவதில்லை. 

No comments:

Post a Comment