Saturday, August 16, 2014

பக்தியின் அடிப்படை நம்பிக்கை

பக்தியின் அடிப்படை நம்பிக்கை




அந்தக் காட்டில் இறைவனை நோக்கி இரண்டு துறவிகள் தவம் செய்து வந்தனர். ஒரு நாள் அவர்கள் இருந்த இடத்திற்கு நாரதர் வந்தார். துறவிகள், நாரதரை வணங்கினர். பின்னர், ‘நாரதப் பெருமானே! நீங்கள் இப்போது வைகுண்டத்தில் இருந்துதானே வருகிறீர்கள்?’ என்று கேட்டனர்.

அதற்கு நாரதர் ‘ஆமாம்’ என்று பதிலளித்தார். இரண்டு துறவிகளும் சேர்ந்தாற்போல், ‘நாரதரே! தாங்கள் வைகுண்டம் சென்றபோது பகவான் என்ன செய்து கொண்டிருந்தார்?’ என்று ஆர்வத்துடன் கேட்டனர்.

நாரதர், ‘துறவிகளே! நான் வைகுண்டம் சென்றபோது, பகவான் ஓர் ஊசியின் காது வழியாக யானைகளையும், ஒட்டகங்களையும் நுழைத்து, அவை அதற்குள் சென்று வருவதை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தார்’ என்றார். துறவிகளில் ஒருவர், ‘முனிவர் பெருமானே! இறைவனின் திருவிளையாடல் இது.

அகிலத்தையே ஆட்டிப்படைக்கும் இறைவனால் முடியாத காரியம் எதுவும் இருக்கிறதா என்ன?’ என்று நெஞ்சுருகிப்போனார். மற்றொரு துறவியோ, ‘நாரதரே! தாங்கள் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை. தங்கள் வார்த்தை அசட்டுத்தனமாக உள்ளது.

உங்கள் பேச்சைப் பார்த்தால், நீங்கள் வைகுண்டம் செல்லவில்லை என்றே தோன்றுகிறது’ என்று கூறினார். இறைவனுக்கு இயலாத காரியம் என்று எதுவும் இல்லை. பக்திக்கு நம்பிக்கையே அடிப்படையாகும். நம்பிக்கை அதிகரிக்க, அதிகரிக்க ஈஸ்வர ஞானம் மேலோங்கும்.

இறைவனின் சுபாவத்தை முற்றிலும் எவராலும் தெரிந்துகொள்ள முடியாது. எனவே இறைவனைப் பற்றி எது சொன்னாலும் அது பொருந்தும்.

No comments:

Post a Comment