Saturday, August 16, 2014

சொர்க்கமும், நரகமும் நம்மில்தான் இருக்கின்றன


சொர்க்கமும், நரகமும் நம்மில்தான் இருக்கின்றன

 

அடர்ந்த காட்டின் வழியாக குருவும், அவரது சில சீடர்களும் சென்று கொண்டிருந்தனர். காட்டைக் கடந்ததும், பெரிய மணல் வெளி தென்பட்டது. குருவும், சீடர்களும் அமைதியாக நடந்து சென்றனர். நெடுந்தூரம் சென்று விட்டனர். உச்சி வெயில் உடலை வாட்டி வதைத்தது.

ஆனால் மணல்வெளி ஒரு முடிவுக்கு வரவில்லை. கிராமங்களோ, மரங்களோ, நீர் நிலைகளோ எதுவும் தென்படவில்லை. கிராமங்கள் தென்பட்டால் ஓய்வெடுக்கலாம். மரங்கள் இருந்தால் இளைப்பாறலாம், நீர்நிலைகள் இருந்தால் தாகம் தணிக்கலாம்.

எதுவும் கண்ணுக்கு அகப்படவில்லை. கண்ணுக்கு எட்டிய வரை மணல்பரப்பாகவே இருந்தது. ஒரு நாள் முழுவதும் நடந்தும் இதே நிலைதான். இருள் சூழ்ந்து விட்டது. மணல் வெளியிலேயே ஓய்வெடுக்கலாம் என்று குரு சொன்னார்.

நாள் முழுவதும் சாப்பிடாத, நீர் அருந்தாத காரணத்தால் சீடர்கள் அனைவரும் பசி மயக்கத்தில் சாய்ந்தனர். அப்போது குருவானவர், ‘இறைவா! இன்று நீ தந்த அனைத்திற்கும் நன்றி!’ என்று கூறினார். இதைக் கேட்ட சீடன் ஒருவன் கடும் கோபம் கொண்டான்.

‘குருவே! இறைவன் இன்று நமக்கு எதுவுமே அளிக்கவில்லையே’ என்றான் ஆத்திரம் அடங்காமலே. ‘யார் சொன்னது?. அவர் இன்று நமக்கு அருமையான பசியைக் கொடுத்தார். அற்புதமான தாகத்தைக் கொடுத்தார். அதற்காகத்தான் நான் அவருக்கு நன்றி செலுத்தினேன்’ என்றார் குரு.

இன்பமும், துன்பமும் வாழ்வின் இரு பக்கங்கள். ஆனால் இன்பத்தை மட்டும் ஏற்கும் மனம். துன்பத்தை ஒரு போதும் ஏற்பதில்லை. அதையும் ஏற்க பழகுபவனே ஞானியாக உயர்வான்.

 

 

அந்த மரத்தின் அடியில் அமைதியாக அமர்ந்திருந்தார் ஒரு ஜென் குரு. அப்போது அந்த வழியாக ஒரு வீரன் குதிரையில் சென்று கொண்டிருந்தான். அமைதியாக வீற்றிருக்கும் துறவியைக் கண்டதும், அவன் குதிரையில் இருந்து இறங்கி அவரை நோக்கி வந்தான். பின்னர் அவர் அருகே வந்து கைக்கூப்பி வணங்கி நின்றான்.

சிறிது நேரம் கழித்து குரு தனது கண்களைத் திறந்து, அவனை ஊடுருவிப் பார்த்தாரே தவிர, அவனிடம் எதுவும் பேசவில்லை. ஆனால் அவன் பேசினான். ‘குருவே! எனக்கு நெடுநாளாக ஒரு சந்தேகம் இருக்கிறது. அதற்கு தகுந்த விடையை தாங்கள் தான் கூற வேண்டும்’ என்றான். அப்போதும் குருவானவர் எதுவும் பேசவில்லை.

மீண்டும் அந்த வீரனே பேச்சைத் தொடர்ந்தான். ‘சுவாமி! சொர்க்கம், நரகம் என்றெல்லாம் பலரும் சொல்லக் கேள்விப்பட்டு இருக்கிறேன். இவை இரண்டும் உண்மையிலேயே இருக்கின்றனவா?. அப்படியிருப்பின் அவை எங்கே இருக்கின்றன?’ என்று தன் சந்தேகத்தை, அந்த குருவின் முன்பாக வைத்தான்.

இப்போதும் ஜென் குரு அமைதியாகவே இருந்தார். எந்த பதிலும் சொல்லவில்லை. ஆனால் அந்த வீரனோ, பதில் கிடைக்காமல் இங்கிருந்து போகமாட்டேன் என்பது போல் அங்கேயே நெடும் நேரமாக அமர்ந்திருந்தான், குருவின் முகத்தைப் பார்த்தபடியே. குருவானவர் இப்போது அந்த வீரனை தீர்க்கமாக பார்த்தார்.

சிறிது நேரம் கழித்து, அவனிடம் ஒரு கேள்வியைக் கேட்டார். ‘நீ என்ன பணி செய்து கொண்டிருக்கிறாய்?’. அதற்கு அந்த வீரன், ‘குருவே! நான் இந்த நாட்டின் தளபதி. எல்லா படை வீரர்களுக்கும் பிரதான சேனாதிபதியாக இருக்கிறேன்’ என்று பெருமையுடன் கூறினான். குருவிடம் இருந்து ஒரு கேலிச்சிரிப்பு வெளிப்பட்டது.

அவர் வீரனைப் பார்த்து, ‘நீ ஒரு முழு முட்டாள். உன்னைப் போன்ற மடையனை எல்லாம் எவன் சேனாதிபதியாக நியமித்தான்?’ என்று கேட்டுவிட்டு மறுபடியும் கேலியாகச் சிரித்தார்.

வீரனுக்கு வந்ததே கோபம். கண்களின் நெருப்பு பொறி பறக்க, ‘ஏய்! என்ன சொன்னாய்?’ என்று ஆவேசம் பொங்க கர்ஜித்தபடி, தன் உறையில் இருந்து வாளை வேகமாக உருவினான்.

இதனைக் கண்ட குரு, ‘இதோ நரகத்தின் கதவுகள் திறக்கின்றன’ என்றார், தன் சிரிப்பை நிறுத்தாமல். அதைக் கேட்டு ஒரு நிமிடம் திகைத்து நின்றான் வீரன். அவனுக்கு ஏதோ விளங்குவதுபோல் இருந்தது.

சட்டென்று வாளை உறையில் போட்டு விட்டு, கைகளைக் கூப்பி குருவை வணங்கியபடி, ‘மன்னிக்க வேண்டும் குருவே!’ என்றான் பணிவுடன். ‘இதோ சொர்க்கத்தின் கதவுகள் திறந்து விட்டன’ என்றார் குரு மீண்டும் புன்சிரிப்புடன்.

சொர்க்கமும், நரகமும் நம்மில்தான் இருக்கின்றன. ஒருவன் கோபத்தைக் கையாளும் போது தனக்குள் இருக்கும் நரகத்தை நோக்கி நடைபோடுகிறான். அன்பையும், அமைதியையும் வெளிப்படுத்தும்போது தனக்குள் இருக்கும் சொர்க்கத்தை நோக்கி பயணப்படுகிறான்

No comments:

Post a Comment