Monday, September 1, 2014

தானத்தில் சிறந்தது ஏது?

மனிதர்கள் அனைவருமே ஒருவாய் சோற்றுக்குத் தான், எல்லா சிரமங்களையும் அனுபவிக்கின்றனர். சித்த புருஷர்களிலேயே, முதல்வராகக் கருதப்படும் பட்டினத்தாரே, ’அன்ன விசாரம் அதுவே விசாரம்...’ எனப் பாடியிருக்கிறார் என்றால் நாம் எந்த மூலை? இதை, நமக்கு அறிவுறுத்தவே, கடவுள் வழிபாட்டில் அன்னதானம் முக்கிய இடத்தை வகிக்கிறது. அடுத்தவர் பசித்திருக்கப் பார்க்காததும், அடுத்தவர் பசியைப் போக்குவதுமே ஆன்மிகம். ஏழாம் நூற்றாண்டில், திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் அஞ்ஞான இருளை போக்கி, மக்களிடம் ஞான மார்க்கத்தை புகுத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் இருவரும், திருவீழிமிழலை எனும் திருத்தலத்தில் தங்கி, நேத்ரார்ப்பணேஸ்வரர் கோவிலில், சிவபெருமானை, வழிபட்டுக் கொண்டிருந்த வேளை - அந்த ஊரில் மழையில்லாததாலும், நதிகளில் நீர்ப்பெருக்கு குறைந்ததாலும், பஞ்சம் ஏற்பட்டது.

மக்கள் மிகுந்த பசித் துன்பம் அடைந்தனர். அப்போது சிவபெருமான், ’நீங்கள் இந்தக் காலபேதத்தால் மனத்துயர் அடைய வேண்டாம். உங்களுக்காக தினமும் படிக்காசு தருகிறோம். அவற்றை வைத்து மக்களின் பசித் துன்பத்தை தீருங்கள்...’என்று கூறி, கோவிலின் கிழக்கு வாசல் படியிலும், மேற்கு வாசல் படியிலும், தினந்தோறும் படிக்காசு - பொற்காசு வைத்தருளினார். அந்த இரு காசுகளையும், திருஞான சம்பந்தரும், திருநாவுக்கரசரும் எடுத்து, அதன் மூலம் பண்டங்களை வாங்கி, உணவு தயாரித்து, ’அடியார்கள் எல்லாரும் அமுது உண்ண வாருங்கள்...’ என, பறைசாற்றித் தெரிவித்து, அன்னமிட்டனர். இந்தச் செயல், பஞ்சம் தீரும் வரை தொடர்ந்தது. ’அன்னத்தை இகழாதே; அன்னத்தை உற்பத்தி செய்...’ என, மறைகளும் முழங்குகின்றன. அதனால், எந்த விதத்திலும், ஒரு பிடி அன்னமாக இருந்தாலும், ஒரு பருக்கை அன்னமாக இருந்தாலும் அன்னத்தை வீணாக்கக் கூடாது. இதிகாசங்கள், புராணங்கள், மறைகள், வழிபாட்டு முறைகள் என, எல்லாவற்றிலும் புகழப்படும் அன்னதானத்தை, முடிந்த வரை செய்வோம்!

No comments:

Post a Comment