Thursday, September 18, 2014

முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம்


முருகனுக்கு வேல்

முருகனுக்கு வேல் ஆயுதமாக உருவகிக்கப்
பட்டிருக்கிறது. வேல் வெற்றிக்கும், அறிவுக்கும் அடையாளமாகத்
திகழ்கிறது. வேல் நடுவில் அகன்றும், உருவில் நீண்டும், முனையில்
கூர்மையாகவும் இருக்கிறது. இதுபோல் இக பர வாழ்வில் மனிதன்
சிறந்தோங்க அகன்ற, ஆழ்ந்த, கூர்மையான அறிவுடையவனாக
இருக்கவேண்டும். அவ்வறிவைத் தருபவன் .. வாலறிவனாகிய ..
இறைவனே. இதையே திருவள்ளுவர்,

     
 கற்றதனா லாய பயனென்கொல் வாலறிவன்
      
நற்றாள் தொழாஅர் எனின் ... என்கிறார்.

முருகன் கையில் இருக்கின்ற வேல் அவனை நம்பி
வணங்குகின்றவர்களுக்கு அறிவையும் ஆற்றலையும் அளித்து
அவர்களின் பகைவர்களையும் அழித்து அருள்புரியும். கூவுகின்ற
கோழி நாத வடிவானது. கோழிக் கொடி வெற்றியின் சின்னமாக
விளங்குகின்றது. அழகிய மயிலின்மிசை வீற்றிருக்கின்றான் முருகன்.
மயில் மனத்தின் சின்னம். பரிசுத்தமான, அழகான உள்ளம்தான்
இறைவனின் உண்மையான கோயில் என்பதனை மயில் வாகனம்
விளக்குகிறது. பாம்பின் மீது மயில் நிற்பது முருகன் எல்லா
சக்திகளையும் ஆட்சி செய்கின்றான் என்பதைக் காட்டுகிறது. தீராத
நோய்களையும் தீர்த்து வைக்கும் தயாபரன் முருகன்.

தமிழ் இந்துக்களின் பெயர்களில் சக்திவேல், ராஜவேல் பழனிவேல் போன்ற வேல் என முடியும் பெயர்களும் வேல்முருகன், வேலப்பன், வேலம்மாள் என்ற பெயர்களும் அதிகமாக காணப்படுகின்றன

 

முருகனின் கையிலுள்ள வேலின் வடிவம், நமது அறிவு ஆழமானதாகவும், பரந்ததாகவும், கூர்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வண்ணம் நீண்ட அடிப்பாகத்தையும் மேல் பகுதியின் அடி அகன்றும் நுனிப்பகுதி கூர்மையானதாகவும் அமைந்துள்ளது என்று கருதப்படுகிறது.

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது

கந்தபுராணத்தில் முருகனின் கையில் இருக்கும் வேல் மகத்துவம் பற்றி கூறப்பட்டுள்ளது. கந்தபுராணம் வேலினைப் புகழ்ந்து கூறியிருப்பதுடன் வேலுக்கும் முருகனுக்கும் இடையிலான தொடர்புகளைத் தெளிவுப்படுத்துகின்றது. எனவே வேல் என்னும் குறிப்பு வேட்டையாடல், வேட்டைத் தலைவர், முருகனின் பூசாரி, முருகனின் போர்க்குணம் மற்றும் முருகனை உணர்த்தும் மறைபொருளாக அமைந்துள்ளது.

வேல் விடுமினையோன், திறல்வேலன், வேல் கொண்டன்று பொருதவீரன், துங்கவடிவேலன், ப்ரசண்ட வடிவேலன், வேல் தொட்ட மைந்தன், அசுரர் தெறித்திட விடும் வேலன் என பலவாறாக முருகனைப் புகழ்ந்துரைக்கும் அருணகிரியார் காலம் முதல் முருகனது வேல் புதிய கோணத்தில் செல்வாக்குப் பெறலாயிற்று.

ஆழ்ந்த முருக பக்தரான அருணகிரியார் பாடிய வேல் வகுப்பு, வேல்விருத்தம் ஆகியவை வேலின் முக்கியத்துவத்தை விளக்குகின்றன. வேலின் தன்மைகளை உயர்வுபடுத்திக் காட்டிய அருணகிரிநாதர் வேலின் சக்திக்குத் தனிப்பட்ட அர்த்தத்தை வழங்கியுள்ளார்.

வேலைப்பற்றித் தனித்தனியாகப் பாடிய ஒரே முருக பக்தரும் புலவருமான அருணகிரியார் வேலானது இருளினை அகற்றக்கூடிய சுடரொளிகளான தீ, சூரியன் மற்றும் சந்திரன் ஆகிய இயற்கைச் சக்திகளை விளக்கக் கூடிய குறியீடெனக் குறிப்பிட்டுள்ளார்.

வேற்கோட்டம் என்ற சொல்லாட்சியானது, தமிழகத்தில் முருகனைச் சுட்டிக் காட்டக்கூடிய ஒரு அடையாளப் பொருள் என்பதைத் தெளிவுப்படுத்துகின்றது. இன்றும் வட ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர், கோவை மாவட்டத்தில் உள்ள பூராண்டான் பாளையம், மதுரை மாவட்டத்தில் பசுமலைக்கு அருகில் உள்ள குமரகம் ஆகிய இடங்களில் வேல் ஒன்றே நட்டுவைக்கப்பட்டு வணங்கப்படுகின்றது.

திருச்செந்தூர், திருப்பரங்குன்றம் போன்ற முருகன் தலங்களில் உள்ள முருகன் ஆலயக் கோபுரங்களில் பெரிய அளவில் வேல்வடிவ சுடர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அவை வெகு தொலைவு வரை முருகன் கோவிலின் இருப்பிடத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. மேலும் தமிழகத்தில் உள்ள முருகன் கோவில்களில் ஒன்றில் கூட வேல் இல்லாமல் இல்லை.

இவை வேல் என்னும் குறியீட்டின் முக்கியத்துவத்தைக் குறிப்பிடுவதாக உள்ளன. தமிழகத்தில் சுந்தரவேல், சக்திவேல், கதிர்வேல், கனகவேல், வடிவேல், குமரவேல், கந்தவேல் ஞானவேல், வேலப்பன், வேல்ச்சாமி, வேலன், வேலாயுதம் போன்ற பெயர்கள் ஆண்களுக்கு அதிகமாகச் சூட்டப்பட்டுள்ளதைக் பார்க்கும் போது வேலின் பெருமையை உணரலாம்

முருகனின் கையில் வேலாயுதம் ஏந்தியுள்ளார். பெரும்பாலான ஹிந்து மத தெய்வங்களின் கைகளில் அழிவிற்கான ஆயுதங்களை ஏந்தியுள்ளனர். இவை நம்மைப் பீடித்திருக்கும் வாஸனைகளாகிய ஆசைகளை அழிக்கவேண்டி உருவகப்படுத்தப்பட்டவை. வாஸனைகளும், அவற்றால் ஏற்படும் ஆசைகளுமே நம் மனதிலிருக்கும் அசுத்தங்களுக்கு மூல காரணம். இந்த அசுத்தங்களே நம்முள் இருக்கும் இறைவனை உணர முதல் தடை. ஆசையில்லா மனிதன் கடவுளை உணர்கிறான். வாஸனைகளுடன் சேர்ந்த கடவுள் மனிதனாகிறான். முருகனின் சக்தி ஆயுதமாகிய வேல், இந்த வாஸனைகளை அடியோடு அழிக்க வல்ல சக்தியாக உருவகம் செய்து பிரார்திக்க வேண்டும்

No comments:

Post a Comment