Monday, October 20, 2014

கிருஷ்ணரை சந்தித்த உதங்கர்

மகாபாரதப் போர் முடிந்து, கிருஷ்ணர் குருஷேத்திரத்தில் இருந்து தன் ஊரான துவாரகைக்குச் செல்லக் கிளம்பினார். போகும் வழியில், ஒரு மாபெரும் பாலைவனத்தைக் கடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதைக் கடந்து போய்க் கொண்டிருந்தபோது, அந்தப் பாலைவனத்திலேயே தங்கிக் கடும் தவம் செய்து கொண்டிருந்த முனிவரான உதங்கர், கிருஷ்ணரைக் கண்டார். கடவுள் உருவமான கிருஷ்ணரைக் கண்டதும், உதங்கரின் மனதில் மகிழ்ச்சி மேலிட்டது.

அவர் கிருஷ்ணரிடம் வந்து பாதபூஜை செய்து வணங்கி நின்றார். பின்னர் கிருஷ்ணரிடம், கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் நிலவி வந்த பிரச்சினையைப் பற்றிப் பேசத் தொடங்கினார். ‘கிருஷ்ணா! கவுரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும்மான பிரச்சினையைச் சரி செய்வதற்காக நீ தூது சென்றாயே!, அது நீ நினைத்தபடி வெற்றி அடைந்ததுதானே?’ என்று கேட்டார்.

கிருஷ்ணரோ அவ்வாறு நடக்கவில்லை என்று கூறிவிட்டு, மகாபாரதப் போர் நடந்த விவரத்தையும் எடுத்துரைத்தார். இப்போது உதங்கருக்கு, கிருஷ்ணர் மேல் கோபம் வந்தது. ‘நீ! எப்படியாவது சமாதானத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டியவன். நீயே இப்படிச் செய்யலாமா?. உன் செயல் தவறானது.

ஆகையால், உனக்கு நான் சாபம் கொடுப்பதென்று முடிவு செய்துவிட்டேன்’ என்று சொல்லி, கிருஷ்ணருக்குச் சாபம் கொடுக்கத் தயாரானார். அமைதியாக உதங்கரின் பேச்சைக் கேட்ட கிருஷ்ணர், ‘உதங்கரே! துரியோதனனுக்கு நான் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், அவனே வலிய வந்து போர் செய்யப் பாண்டவர்களைத் தூண்டினான்.

கொஞ்சமும் சமாதானத்துக்கு அவன் தயாராக இல்லாத போது, நான் வேறு என்ன செய்யமுடியும்?’ என்று அவருக்குத் தெளிவாக விளக்கினார். உதங்கருக்குக் கிருஷ்ணரின் பேச்சில் உள்ள நியாயம் புரிந்தது. ‘கிருஷ்ணா! அவசரப்பட்டுப் பேசிவிட்டேன். என்னை மன்னித்துவிடு’ என்று கிருஷ்ணரை வணங்கினார்.

கிருஷ்ணர் அவரை மன்னித்தாலும், அவர் மனதுக்குள் ஒரு எண்ணம் எழுந்தது. ‘இவ்வளவு நியாயம் பேசும் இந்த உதங்கர், அப்படி என்னதான் நியாயவாதி என்பதைக் கொஞ்சம் சோதித்துத்தான் பார்ப்போமே!’ என்று நினைத்துக் கொண்டார். உதங்கரிடம் வேண்டிய வரத்தைக் கேட்கும்படிச் சொன்னார்.

உதங்கர், ‘வரம் ஏதும் வேண்டாம்’ என்று மறுத்தபோதும், கிருஷ்ணர் வற்புறுத்தவே, உதங்கரும் வேறு வழியின்றி ஒரு வரத்தைக் கேட்டார். ‘கிருஷ்ணா! இந்தப் பாலை வனத்தில் நான் நினைக்கும்போது, எனக்குத் தண்ணீர் கிடைக்கவேண்டும்’ என்று வரம் கேட்டார். கிருஷ்ணரும், ‘அப்படியே ஆகட்டும்’ என்று வரமளித்து விட்டு, அவ்விடத்தில் இருந்து அகன்றார்.

நாட்கள் பல கடந்து விட்டன. உதங்கர் வழக்கம்போலத் தவம் செய்து கொண்டிருந்தார். ஒரு நாள் திடீரென்று உதங்கருக்கு மிகுதியான தாகம் எடுத்தது. ‘என்ன இது! ஒரு நாளும் இல்லாத திருநாளாக இன்று இப்படி தாகம் எடுக்கிறது. என் தவ வலிமையை கொண்டும் கூட இந்த தாகத்தை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லையே’ என்று எண்ணினார் உதங்கர்.

மாயவன் விரித்த மாயவலையில் வீழப் போகும் உதங்கருக்கு, தாகம் அவ்வளவு எளிதில் அடங்கி விடுமா என்ன? வெகு நேராக தாகத்தை அடங்க முயற்சித்தும், அது இயலாது போன நிலையில், கிருஷ்ணர் கொடுத்த வரம் உதங்கரின் நினைவுக்கு வந்தது. உடனடியாக கிருஷ்ணரை நினைத்தபடி, ‘எனக்கு இப்போதே தண்ணீர் கிடைக்கவேண்டும்’ என்று மனதால் வேண்டிக் கொண்டார்.

சற்று நேரத்தில், அந்த வழியாக நாய்களை ஓட்டியபடி ஒருவன் வந்தான். அவனது உருவம் பார்ப்பதற்கே அருவருப்பாக இருந்தது. மாமிசத்தை கையில் வைத்து சுவைத்த படி அவர் உதங்கரை நோக்கி வந்து கொண்டிருந்தான். அவனிடம் இருந்த தோல் பையில் தண்ணீர் இருந்தது. உதங்கர் தாகத்தில் தவிப்பதைப் புரிந்து கொண்ட அவன், ‘உதங்கரே! என் பையில் தண்ணீர் இருக்கிறது.

இந்தாருங்கள், இதைக் குடித்து உங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளுங்கள்’ என்று கூறினான். ‘பார்க்கவே அருவருப்பாக, தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன் போல் இருக்கும் இவனிடம் தண்ணீர் வாங்கிக் குடிப்பதா?’ என்று நினைத்த உதங்கர், ‘எனக்கு உன் தண்ணீர் ஒன்றும் வேண்டாம். தயவுசெய்து இங்கிருந்து சென்றுவிடு’ என்று அவனை விரட்டினார்.

உடனடியாக அவன் அங்கிருந்து மறைந்து போனான். அதைக் கண்ட உதங்கர் அதிர்ச்சி அடைந்தார். அந்த அதிர்ச்சியில் இருந்து அவர் மீள்வதற்குள், அந்த இடத்திற்கு மீண்டும் வந்து சேர்ந்தார் கிருஷ்ணர். அதிர்ச்சியில் உறைந்து போய் இருந்த உதங்கரைப் பார்த்து, ‘என்ன உதங்கரே! நீர் நினைத்தபடித் தண்ணீர் கிடைத்ததா?’ என்று கேட்டார்.

உதங்கரோ, ‘கிருஷ்ணா! என்ன விளையாட்டு இது?. சண்டாளனிடம் நான் எப்படி நீர் வாங்கிக் குடிப்பது?. தர்மம் தெரிந்த உனக்கு இது தெரியாதா?’ என்று இழுத்தார். கிருஷ்ணர் சிரித்துக்கொண்டே, ‘உதங்கரே! இப்படி ஒருவனை, அவன் செய்யும் தொழிலைக் கொண்டு இழிவாகப் பார்ப்பது தவறு. உங்கள் தர்மம்தான் விசித்திரமாக இருக்கிறது.

சரி, அது போகட்டும். வந்தது யார் தெரியுமா?’ என்று கேட்க உதங்கரோ ஒன்றும் புரியாமல், தெரியாமல் திகைப்பில் விழித்துக் கொண்டிருந்தார். ‘நானே சொல்கிறேன். வந்தது இந்திரன். அவன் கையில் இருந்த தண்ணீர் அமிர்தம். உம்மைச் சோதிப்பதற்காகவே அவன் அப்படி வந்தான்.

அமிர்தம் குடித்து தேவனாக வாழ்வு பெறும் ஒரு நல்ல வாய்ப்பை நீங்கள் இன்று இழந்தீர்கள்’ என்று கிருஷ்ணர், உதங்கருக்கு விளக்கினார். தன் செய்கையை நினைத்து உதங்கர் வெட்கித் தலை குனிந்தார். ‘இருந்தாலும் பரவாயில்லை.

உங்களுக்கு நான் அளித்த வரத்தின்படி, இனி நீங்கள் தண்ணீர் வேண்டும் போதெல்லாம், இந்தப் பாலைவனத்தில் மேகங்கள் வந்து மழை பொழிந்துவிட்டுப் போகும். அவை உங்கள் பெயரால் ‘உதங்க மேகங்கள்’ என்றே அழைக்கப்படும்’ என்று உதங்கருக்கு அருள் செய்துவிட்டு அங்கிருந்து மறைந்தார், கிருஷ்ண பரமாத்மா

No comments:

Post a Comment