Monday, October 20, 2014

உள்ளம் உருகினால்தானே கல் உருகும்

ஒரு முறை நாரதருக்கும், தும்புரு முனிவருக்கும் வீணை வாசிப்பதில் ‘தானே உயர்ந்தவர்’ என்ற எண்ணம் இருந்தது. அது அகந்தையாக உருமாறியது. இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது.

தங்களில் யார் பெரியவர் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, கயிலாயம் சென்று சிவபெருமானிடம் வீணையில் வல்லவர் யார்? என்று கேட்டு ஒரு முடிவுக்கு வர இருவரும் எண்ணினார்கள். தங்கள் வீணைகளை எடுத்துக் கொண்டு கயிலாயத்தை நோக்கி புறப்பட்டார்கள்.

வழியில் கதலி வனத்தில் ஒரு சிறு குன்றின் மீது அமர்ந்து ஆஞ்சநேயர் ராமநாமத்தை ஜெபித்துக் கொண்டிருந்தார். நாரதரையும், தும்புரு முனிவரையும் பார்த்த அனுமன், ‘வீணையில் வல்லவர்களே.. நீங்கள் இருவரும் எங்கு செல்கிறீர்கள்?’ என்று கேட்டார்.

அனுமனைப் பார்த்ததும், இருவரும் அவரை வணங்கி துதித்தனர். பின்னர் தங்களின் இருவருக்கும் உள்ள பிரச்சினை குறித்தும், அதனை தீர்க்க கயிலாயம் செல்வது பற்றியும் கூறினர். ஆஞ்சநேயர் புன்முறுவல் பூத்தார். ‘நல்லது! நீங்கள் இருவரும் வீணை வாசியுங்கள்’ என்றார்.

இருவரும் தனித்தனியே வீணை வாசித்தனர். பின்னர் ஆஞ்சநேயர், இருவரில் ஒருவரிடம் இருந்து வீணையை வாங்கி வாசிக்கத் தொடங்கினார். அப்போது அவர் அமர்ந்திருந்த குன்றானது உருகத் தொடங்கியது. அவரது இசை அவ்வளவு உருக்கத்தை ஏற்படுத்தியிருந்தது.

உருகிய பாறையின் மீது வீணையை வைத்தார் அனுமன். சற்று நேரத்தில் உருகிய பாறை இறுகியது. அதில் வீணையும் ஒட்டிப் பிடித்துக் கொண்டது. இப்போது அனுமன், ‘நீங்கள் இருவரும் மீண்டும் வீணை வாசியுங்கள். உங்களில் யார் வாசிப்புக்கு பாறை உருகி இந்த வீணையை எடுக்க முடிகிறதோ, அவர்களே சிறந்த வல்லவர்’ என்று கூறினார்.

இருவரும் தனித்தனியாக வீணை வாசித்தனர். ஆனால் பாறை உருகவில்லை. உள்ளம் உருகினால்தானே கல் உருகும். இருவரும் நாணத்தால் தலை குனிந்து தங்கள் இருப்பிடம் சென்றனர்

No comments:

Post a Comment