Tuesday, November 18, 2014

மனம் ஒரு ஒட்டகம்

மனம் போன போக்கில் நடக்கும் ஒரு இளைஞன், குருவாக ஒருவரை ஏற்றான். ஆனால், அங்கிருந்த கட்டுப்பாடுகள் பிடிக்காமல், சுதந்திரமாக வாழ அங்கிருந்து புறப்பட்டான். செல்லும் வழியில், ஒரு ஒட்டகம் புல் மேய்ந்து கொண்டிருந்தது. அதன் அருகில் நின்றபடி, ""எனக்கு பொருத்தமான குரு யாரும் உலகில் இல்லையே'' என்று தனக்குள் சொன்னான். அதை ஆமோதிப்பது போல, அந்த ஒட்டகம் தலையசைத்தது.
""ஆகா! வாயில்லா ஜீவன் என்றாலும், நான் சொல்வதைப் புரிந்து கொள்ளும் சக்தி இதற்கு இருக்கிறதே'' என்று மகிழ்ந்தான். அந்த ஒட்டகத்தையே தன் குருவாக ஏற்றான்.
ஒட்டகத்தைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை என்று முடிவெடுத்தான்.
சில நாட்களில் ஒரு பெண்ணைக் கண்டு காதல் கொண்டான்.
ஒட்டக குருவைத் தேடி வந்து, ""அவளைக் காதலிக்கலாமா?' என்றான். ஒட்டகமும் வழக்கம் போல தலையாட்டியது.
சந்தோஷத்துடன் காதலிக்க தொடங்கினான்.
சில மாதம் போனது. அவளைத் திருமணம் செய்ய விரும்பினான்.
""ஒட்டக குருவே! அவளையே கல்யாணம் பண்ணிக்கலாமா?'' என்றான். அதுவும் தலை அசைக்க, "உத்தரவிட்டார் ஒட்டக குரு' என்று அவளையே மணந்தான்.
குடும்பம் நடத்த போதிய வருமானம் இல்லாததால், அந்த பெண் அடிக்கடி சண்டையிட்டாள்.
வருத்தத்துடன் குருவிடம் வந்து, "மதுவைக் குடித்து மனக்கவலை போக்கலாமா?'' என்று கேட்டான்.
வழக்கம் போல தலைஅசைக்க, குருவின் சம்மதம் கிடைத்ததாக எண்ணி குடிகாரனாகி வாழ்வையே இழந்தான்.
இந்த ஒட்டகத்தைப் போல, "மனம்' என்னும் ஒட்டகம் நமக்குள் இருக்கிறார். அது சொல்வதில் நல்லதை மட்டும் தான் நாம் ஏற்க வேண்டும். சொல்வதையெல்லாம் கேட்டால் வாழ்வை இழக்க வேண்டியது தானே!

No comments:

Post a Comment