Thursday, November 13, 2014

யார் இந்த திரவுபதி?

பஞ்ச பாண்டவர்களின் மனைவி திரவுபதி. தமிழ்நாட்டில் பல ஊர்களில் திரவுபதிக்கு என்று தனியாக பல ஆலயங்கள் இருக்கின்றன. திரவுபதியை தம் ஊர் காவல் தெய்வமாய் பல கிராம மக்கள் இன்றும் கொண்டாடி வருகின்றனர். பாண்டவர்களின் மனைவியான திரவுபதி, தனது முற்பிறவியில் நளாயினியாகப் பிறந்தவள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவள் மறுபிறவியில் காசிராஜனுக்கு மகளாகப் பிறந்தாள். அப்போது தனக்கு நல்ல கணவன் அமைய வேண்டும் என்பதற்காக சிவபெருமானை நோக்கி தவம் மேற்கொண்டாள். அவளது தவத்திற்கு இரங்கிய ஈசன், அவள் முன்தோன்றி, ‘என்ன வரம் வேண்டும், கேள்!’ என்று வினவினார்.

எல்லாவற்றிக்கும் முதன்மையான சிவபெருமானைக் கண்டதும் மகிழ்ச்சியடைந்த அவள், ஈசனை நோக்கி, ‘பதிம் தேஹி’ என்று கூறினாள். இறைவனைக் கண்ட மகிழ்வில் அதே வார்த்தையை ஐந்து முறை வாய்விட்டு கூறினாள்.

இதனைக் கேட்ட சிவபெருமான், ‘உனக்கு அந்த பாக்கியம் அடுத்த பிறவியில் கிட்டும்’ என்று வரம் அளித்து அங்கிருந்து மறைந்தார். சிவபெருமான் தந்த வரத்தின் பயனாக, துருபத மன்னன் நடத்திய வேள்வித் தீயில் இருந்து திரவுபதியாக பிறப்பெடுத்தாள்.

பின்னர் துருபத மன்னன், தன் மகள் திரவுபதியை திருமணம் செய்து கொடுப்பதற்காக நடத்திய சுயம்வரத்தில் கலந்து கொண்ட அர்ச்சுனனை மணம் முடித்தாள் திரவுபதி. அர்ச்சுனன் மணம் செய்து கொண்ட பெண்ணுடன், பஞ்ச பாண்டவர்கள் அனைவரும் வீடு நோக்கிச் சென்றனர்.

வீட்டை அடைந்ததும், வெளியில் நின்றபடி குந்திதேவியிடம், திரவுபதியை குறிக்கும் வகையில், ‘தாயே! கனி கொண்டு வந்திருக்கிறோம்’ என்று கூறினர். குந்தி தேவியோ திரும்பி பாராது, ‘கனியை ஐவரும் பகிர்ந்து உண்ணுங்கள்’ எனக் கூறினாள்.

பிறகு திரும்பி திரவுபதியைப் பார்த்த குந்திதேவி, தன்னுடைய தவறை உணர்ந்து பதற்றம் அடைந்தாள். அப்போது குந்திதேவியின் முன்பாக நாரதர் தோன்றினார். ‘திரவுபதி சிவபெருமானை நோக்கி தவம் இருந்தாள். அந்த தவத்தின் பலனாக ஐந்து சிவ கணங்களும் அவளுக்கு இப்போது கணவர்களாக வாய்த்துள்ளனர்’ என்று பழங்கதையைக் கூறினார் நாரத முனிவர்.

திரவுபதியும், ஐவரையும் சிவசக்தியாக மணந்து பராசக்தியாக வாழ்ந்தாள். இந்த நிலையில் ஒரு முறை கவுரவர்களின் சூழ்ச்சி வலையில் சிக்கிய தருமர், சூதாட்டத்தில் தன் சொத்துக்களையும், தம்பி களையும், பின்னர் திரவுபதியையும் இழந்துவிட்டார்.

துரியோதனனின் சொல் கேட்டு, துச்சாதனன் திரவுபதியின் சேலையை உருவினான். கோபம் கொண்டாள் சக்தி. தனது கூந்தலை விரித்தாள். கவுரவர்களை வென்ற பின்னரே என் கூந்தலை முடிவேன் என சபதம் செய்தாள். பாரதப் போரில் கவுரவர்களை, பாண்டவர்கள் வென்றனர். அதன் பின்னரே தனது அவிழ்ந்த கூந்தலை திரவுபதி முடிந்தாள் என்பது புராண வரலாறு.

No comments:

Post a Comment