Sunday, November 16, 2014

குருவருள் இருந்தால் திருவருள் கிடைக்கும்!

''பக்தி இருந்தால் முக்தி பெறலாம் என்பது உண்மைதான்! இறைவனை அடைய பக்தி தேவை. இந்த இறைபக்திக்கும் இன்னொரு பக்தி அவசியம். அது குரு பக்தி!''
சென்னை நங்கநல்லூர் ஸ்ரீஅர்த்தநாரீஸ்வரர் ஆலயத்தில் உபந்யாசம். வேப்பத்தூர் ஆர். கிருஷ்ணமூர்த்தியின் பிரவாகமான தெள்ளு தமிழில் கரைந்திருந்தது கூட்டம்!
''உலகில் நமது எல்லாக் காரியங்களுக்கும் குருவின் கருணை வேண்டும். குருவருள் இருந்தால்தான் திருவருள் கிடைக்கும். இதனால்தான் மாதா, பிதாவுடன் குருவை வணங்கவும் வலியுறுத்தினர். குரு பக்தி எவரிடம் உள்ளதோ அவரிடம் மற்ற பக்திகளும் ஒன்றிணையும் என்பது விதி. ஆமாம்... பக்தியில் மூன்று வகை உண்டு. அவை... குரு பக்தி, இறை பக்தி, அடியார் பக்தி! குரு பக்தியுடன் வாழ்ந்தால், இறை பக்தியும் அடியார் பக்தியும் சாத்தியமாகும்; முக்தியை அடையலாம். அப்படியான குரு பக்தியால் முக்தி அடைந்தவர்களுள் அப்பூதிநாயனாரும் ஒருவர்!
அந்தணரான அப்பூதியாருக்கு, வேளாளர் மரபில் பிறந்த திருநாவுக்கரசர்தான் குரு. இதில் ஆச்சரியம்... அவரை நேரில் பார்க்காமலேயே, அவரைப் பற்றி அறிந்த மாத்திரத்திலேயே குருவாக ஏற்றார் அப்பூதியார்; தனது அறசெயல்களை குருநாதரின் பெயரால் செய்து வந்தார். அதுமட்டுமா? தன் குழந்தைகளுக்கு, மூத்த திருநாவுக்கரசு, இளைய திருநாவுக்கரசு எனப் பெயரிட்டார். 'தெளிவு குருவின் திருநாமம் செப்பல்' என்று திருமூலரின் வாக்கும் அதுதானே?!
திங்களூர் நோக்கி திருநாவுக்கரசர் செல்லும்போது, தமது பெயரால் செய்யப்படும், தண்ணீர்ப்பந்தல் உள்ளிட்ட அறச்செயல்களைக் கண்டு வியந்தார். விசாரித்து அறிந்தவர், நேரே அப்பூதியாரின் வீட்டுக்குச் சென்றார். 'உன் அறச்செயலுக்கு உனது பெயரை வைக்காமல், வேறொரு பெயரை ஏன் வைத்தாய்?' என்று திருநாவுக்கரசர் கேட்டதும் உடைந்து போனார் அப்பூதியார். பின்னே... குருநாதரின் திருநாமத்தை 'வேறொரு பெயர்' என்று சொன்னால்...?! பிறகு, வந்தவர் குருநாதர் என அறிந்து சிலிர்த்தவர், உணவுக்கு ஏற்பாடு செய்தார். இலை நறுக்கப் போன மகனை பாம்பு தீண்ட, இறந்து போனான் மகன். விக்கித்து நின்றவர், துக்கத்தை நெஞ்சுக்குள் மறைத்தபடி, குருவுக்கு உணவளித்தார். 'உன் மகனைக் காணோமே... எங்கே அவன்?' என்று குருநாதர் கேட்க... உண்மையைச் சொன்னார் அப்பூதியார். குருநாதரின் கட்டளைப்படி... இறந்து கிடந்தவனை அள்ளிக் கொண்டு கோயிலுக்கு வந்தனர் தம்பதி. பதிகம் பாடி அவனை உயிர்ப்பித்தார் நாவுக்கரசர். அதுமட்டுமா? நாயன்மார்களில் அப்பூதியாரும் ஒருவரானார்; இவருடைய குரு பக்தியும் அதனால் உண்டான இறை பக்தியும், இவற்றால் கிடைத்த முக்தியும், நீங்காப் புகழை அப்பூதியாருக்குத் தந்தன!
நமக்கு நிம்மதியும் சந்தோஷமும் கிடைத்து, அது நிலைத்திருக்கவும் வேண்டுமா? முதலில் குருவைத் தேடுங்கள். ஏக்கமும் ஆர்வமும் பொங்கத் தேடுங்கள். குரு கிடைக்கவும் குருவருள் வேண்டும். அந்த குருவிடம் உங்களை பரிபூரணமாக ஒப்படையுங்கள். பிறகு... குருவருள் இருக்க திருவருள் நிச்சயம் என்பதை உணருவீர்கள்!'' - சொற்பொழிவைக் கேட்டு ரசித்தவர்களின் உள்ளத்தில் நிச்சயம் 'குரு தேடல்' குறித்த சிந்தனை எழும். பூர்வ புண்ணியத்தால் ஏற்கெனவே குருநாதரை பெற்றவர்களும், அவரை இன்னும் பூஜிப்பார்கள்! குருவே நமஹ!

No comments:

Post a Comment