Sunday, November 16, 2014

தீபாவளி பிறந்த கதை

பிரம்மாவிடம் இருந்த வேதங்களை எடுத்துக்கொண்டு, அசுரன் ஒருவன் பாதாளலோகத்தில் ஒளிந்து கொண்டான். அதை மீட்க, பெருமாள் வராக அவதாரமெடுத்து பூமிக்குள் சென்றார். அப்போது, பூமித்தாயாருடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் 'பவுமன்' மகன் பிறந்தான். பொறுமை மிக்க தாய்க்கு பிறந்த அவன், கெட்ட குணங்களைக் கொண்டவனாகத் திரிந்தான். இதனால் "நரகாசுரன்' (மனித ராட்சஷன்) எனப்பட்டான். அவன் தேவர்களையும், பூலோக மக்களையும் கொடுமை செய்தான். பெரிய இடத்துப் பிள்ளை என்பதால், அவனை யாரும் தட்டிக் கேட்க இயலவில்லை. இருப்பினும், அவனது அட்டூழியத்தைப் பொறுக்காத பிரம்மா, பெருமாளிடம் புகார் செய்தார்.
நரகாசுரனோ தன் தாயைத் தவிர வேறு யாராலும் அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான். அப்போது, பூமாதேவி, சத்தியபாமாவாகப் பிறந்து கிருஷ்ணரைத் திருமணம் செய்திருந்தாள். கிருஷ்ணர் அவளை அழைத்துக் கொண்டு நரகாசுரனுடன் போருக்குச் சென்றார்.
ஒரு கட்டத்தில், நரகாசுரனால் தாக்கப்பட்டு மூர்ச்சையடைபவர் போல் நடித்தார். பதறிப்போன சத்தியபாமா, தன் கணவரைக் காப்பாற்ற தன் மகன் மீது அம்பு தொடுத்தாள். நரகாசுரன் மாண்டான். இறந்தது கொடிய பிள்ளை என்றாலும் பெற்ற வயிறு பதறியது. அதேநேரம் அவனது உயிர் துறப்பை எல்லா <உலகங்களிலும் தீபம் ஏற்றிக் கொண்டாடுவதை அவள் பார்த்தாள். பெருமாளிடம், தன் மகன் இறந்தநாளை "தீபாவளி' என்றும், மகனின் பெயரால் "நரக சதுர்த்தசி' என்றும் பெயரிட்டு கொண்டாடுவதற்கு அனுமதி கேட்டாள். ஒருவர் இறந்தால், எண்ணெய் தேய்த்துக் குளிப்பது வழக்கம். அந்த எண்ணெய்யில் லட்சுமியும், அன்று குளிக்க வேண்டிய வெந்நீரில் கங்கையும் வாசம் செய்யவேண்டும் என்று கேட்டுக் கொண்டாள். இந்நீராடலே "கங்கா ஸ்நானம்' என்ற பெயர் பெற்றது

No comments:

Post a Comment