Sunday, November 16, 2014

கொலு வைப்பது எப்படி

அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்க, மந்திரிகள், சேனாதிபதிகள், படைத்தலைவர்கள், ஊர் முக்கியஸ்தர்கள் அவரவருக்குரிய ஆசனத்தில் இருந்தனர். பழைய இலக்கியங்களில், "அரசர் கொலு வீற்றிருந்தார்' என்று தொடங்கி, அரசரின் கொலு வைபவத்தை விரிவாக வர்ணித்து இருப்பார்கள். சாதாரண அரசரின்,"கொலு' வீற்றிருக்கும் வைபவமே இப்படி என்றால், அண்ட சராசரம் முழுவதும் பரவி கொலு வீற்றிருக்கும் அம்பிகையின் வைபவம் எப்படி இருக்கும்?
""யா தேவீ ஸர்வ பூதேஷு
சக்தி ரூபேண ஸம்ஸ்த்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை
நமஸ்தஸ்யை நமோ நம:''
என தேவி மகாத்மியம் சொல்வது போல, அம்பிகையின் சக்தி வடிவம் எங்கும் நிறைந்திருப்பதை உணர்த்துவதே கொலு. கொலு வைக்கும் போது, ஒன்பது படிக்கட்டுவைக்க வேண்டும். முடியாத பட்சத்தில்
5,7 என ஒற்றைப்படை எண்ணிக்கையில் அமைக்கலாம். ஒன்பது படிக்கட்டுகளாகக் கொலு வைக்கும் போது, அது கீழ்க்கண்ட முறையில் அமைந்திருக்க வேண்டும்.
* கீழிருந்து முதற்படியில் செடி, கொடி, மரங்கள் என ஓரறிவுள்ள உயிரினங்கள்.
* இரண்டாம் படியில் நீர் வாழ்வன அதாவது ஈரறிவுள்ள உயிரினங்கள் மீன், நத்தை, சிப்பி ஆகியவை.
* மூன்றாவது படியில் மூன்றறிவுள்ள உயிரினங்கள் அதாவது தரையில் ஊர்வன பாம்பு, பல்லி, ஆமை போன்றவை.
* நான்காம் படியில் பறவைகள்.
* ஐந்தாம் படியில் விலங்குகள்.
* ஆறாவது படியில் ஆறறிவு கொண்ட ஜீவராசிகளான பலவிதமான மனித வடிவப் பொம்மைகள்.
* ஏழாவது படியில் ராமகிருஷ்ண பரமஹம்சர், காஞ்சி மகாபெரியவர், ரமண மகரிஷி முதலான அவதார புருஷர்கள்
* எட்டாவது படியில் தெய்வ வடிவங்கள்
* ஒன்பதாவது படியில் ஸ்ரீராஜராஜேஸ்வரி சிலை அல்லது படம் மற்றும் பூர்ண கும்பம் ஓரறிவுள்ள ஜீவராசிகள் முதல் அனைத்து உயிர்களிலும் சக்தி வடிவமாக இருக்கும் அம்பிகையை, படிப்படியாக முன்னேற்றி தன் திருவடிகளில் சேர்த்துக் கொள்ளும் அம்பிகையை.....உளப்பூர்வமாக உணர்ந்து வழிபாடு செய்வதே கொலு வைப்பதன் தத்துவம்.
நவராத்திரி நாயகியான அந்த அம்பிகை, நம் உள்ளங்களிலும் கொலுவிருந்து நமக்கு அருள வேண்டுவோம்!

No comments:

Post a Comment