Tuesday, November 18, 2014

கீதையின் மேன்மை

பரதன் என்ற பக்தர் காசி புறப்பட்டார். வழியில் இரண்டு இலந்தை மரங்கள் இருந்தன.
அதனடியில் படுத்துறங்கி விட்டு நடந்தார். அவர் தங்கிய இலந்தை மரம் நாளடைவில் காய்ந்து பட்டுப் போனது. அடுத்த பிறவியில் அந்த மரம் இரண்டும் பெண்களாகப் பிறந்தன. ஏழுவயதை அடைந்தனர் அந்தப் பெண்கள். பரதன் காசிக்குச் சென்று அந்த வழியே திரும்பினார். அவரைக் கண்ட அந்த பெண்கள், ""சுவாமி! தங்களின் அருளால் தான் இலந்தை மரமாக இருந்த நாங்கள் மனிதவடிவம் பெற்றோம்'' என்று சொல்லி வணங்கினர்.
அவர்களிடம், ""குழந்தைகளே! உங்களின் வரலாற்றைச் சொல்லுங்களேன்'' என்று ஆவலாக கேட்டார்.
""சுவாமி! கோதாவரிக் கரையில் சத்யதபஸ் என்னும் முனிவர் தவம் செய்து வந்தார். அவருடைய தவத்தைக் கலைப்பதற்காக இந்திரன், எங்களை இங்கு அனுப்பி வைத்தான். ஆடல், பாடலால் அவரின் தவத்தைக் கலைக்க முயற்சித்தோம். கண் விழித்த முனிவர், "நீங்கள் இலந்தை மரமாக மாறக் கடவது'' என்று சபித்து விட்டார். அவரிடம் முறையிட்ட போது. ""பரதன் என்றொரு பக்தன், கீதையின் நான்காம் அத்யாயத்தை அன்றாடம் படிக்கும் வழக்கத்தைக் கொண்டிருப்பான். அவனுடைய புண்ணிய பலனால் உங்களுக்கு சாபவிமோசனம் கிடைக்கும்'' என்று சொல்லி புறப்பட்டார். அதன்படியே,உங்களின் வருகையால் எல்லாம் நன்மையாகவே முடிந்தது'' என்று சொல்லி வணங்கினர்.
இதைக் கேட்ட பரதன் கீதையின் மேன்மையை உணர்ந்து நெகிழ்ந்தார்.

No comments:

Post a Comment