Tuesday, November 18, 2014

எல்லோரும் ஓர் இனம்!

ஒரு சமயம், காஞ்சிபுரம் அருகிலுள்ள கலவையில் காஞ்சி மகாபெரியவர் முகாமிட்டார். அங்குள்ள கிராமதேவதை கோயிலுக்குச் சென்று வணங்கிய பெரியவர், தான் முகாமிட்டிருந்த அந்தணர் தெருவுக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
கலவைக்குச் செல்லும் வழியில் ஒரு கால்வாய் மதகு இருந்தது. அதன் இருபுறமும் இரண்டு அடி உயரத்திற்கு சுவர்.. பெரியவர் கலவைக்குச் செல்லும் போது, அந்த சுவர்களின் மீது பொருள் ஏதுமில்லை. திரும்ப வரும் போது, ஒரு சுவரில் பரங்கிக்காய், பூசணிக்காய், தேங்காய், அவரை, இளநீர், வேர்க்கடலை எல்லாம் இருந்தது.
நாம் போகும்போது, இங்கே ஏதுமில்லை.
இப்போது, இவை எப்படி இங்கு வந்தன என்று பெரியவருடன் சென்றவர்கள் முகத்தில் கேள்வி..!
பெரியவர் அந்தக் கேள்விக்குறியைக் கவனித்தார். நடந்து கொண்டிருந்தவர் அப்படியே நின்று விட்டார். அங்குமிங்குமாக நடமாடினார். நாலு பக்கமும் மாறி மாறி திரும்பினார். தன்னுடன் வந்த தொண்டர்களிடம், சம்பந்தமில்லாத சில விஷயங்களைப் பேசினார்.
தொண்டர்களுக்கு, பெரியவர் எதற்காக இப்படி செய்கிறார் என்பது புரியவில்லை.15 அடி தூரத்தில் அடக்க
ஒடுக்கமாய், பக்திப் பரவசத்துடன் ஒருவர் கைகளைக் கட்டிக் கொண்டு நின்றார். அவர் ஒரு திருக்குலத்து திருத்தொண்டர். தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவர் தான், அந்தப் பொருட்களை அங்கு வைத்திருக்கிறார் என்பதை பெரியவர் புரிந்து கொண்டார்.
ஒரு சிஷ்யரிடம்,""எதற்காக இந்தப் பொருட்களை அவன் இங்கே வைத்திருக்கிறான் என்று கேள்,'' என்றார்.
அவரும் அதுபற்றி கேட்க,""சாமிக்கு தான் வச்சிருக்கேன். எல்லாம் தோட்டத்திலே வெளஞ்சது...சாமி கோயிலுக்கு போறப்ப பாத்தேன்! திரும்ப இந்த வழியாகத்தான் வருவாங்கன்னு தெரிஞ்சு, வீட்டுக்கு ஓடிப்போயி எடுத்தாந்து, அவங்க கண்ணிலே படுற மாதிரி வச்சேன்! நாங்க பாலு, தயிரு தந்தா சாப்பிட மாட்டாங்க! அதனாலே தான் காய்கறிகளை கெடுத்தா சாப்பிடுவாங்களோன்னு நெனச்சு வச்சிருக்கேன்,'' என்றார் அந்த திருத்தொண்டர்.
பெரியவர் தன் சிஷ்யர்களை நோக்கி சைகை செய்து, அவற்றை எடுத்துக் கொள்ளும்படி கூறினார். அத்துடன், ""குகன் கொடுத்ததை ராமன் ஏற்றுக்கொண்ட மாதிரி, நாளைக்கு இதெல்லாம் சந்திர மவுலீஸ்வரருக்கு (பெரியவர் தினமும் பூஜிக்கும் சிவன்) அர்ப்பணம்,'' என்றார்.
சரி...பெரியவர் அதற்காக அங்குமிங்கும் நடந்தார்! ஏன் மாறி மாறி திரும்பினார்? என்ற கேள்விக்கும் விடை வேண்டுமல்லவா! இதற்கும் பெரியவரே பதிலளித்தார்.
""ஏண்டா! என் முன்னாடி நமஸ்காரம் பண்றவாளுக்கு என் முதுகு தெரியுமோ?'' என சிஷ்யர்களிடம் கேட்டார்.
"தெரியாது' என்றார்கள் எல்லாரும்.
""என் முதுகைப் பார்க்கணும்னா என்ன பண்ணனும்? என்னை பிரதட்சணம் பண்ணனும் (வலம் வந்து வணங்க வேண்டும்). அவன் எதிர்லே நான் ஆத்ம பிரதட்சணம் பண்ணனும். அப்போ முன்னே, பின்னே, பக்கவாட்டிலே எல்லாம் பார்க்கலாம் இல்லியோ!'' என்றார்.
அப்போது தான், ஒரு சிவபக்தனுக்கு தன் முழு உருவத்தை யும் காட்ட பெரியவர் அவ்வாறெல்லாம் செய்தார் என்பது எல்லாருக்கும் புரிந்தது. உடனே பெரியவர், "அவன் யார் தெரியுமா? நந்தனார் பரம்பரை' என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து புறப்பட்டார். கருணாமூர்த்தியாக அனைவர் கண்களுக்கும் தெரிந்தார்.

No comments:

Post a Comment