Tuesday, November 18, 2014

இது மவுனமான நேரம்

ஒரு துறவி ஆற்றங்கரையில் அமர்ந்து தண்ணீர் ஓடும் அழகையே பார்த்துக் கொண்டு இருந்தார். இயற்கையில் ஈடுபட்டு மனம் ஒருமுகப்பட்டதால் மவுனத்தில் ஆழ்ந்தார்.
அந்த நேரம் இளைஞன் ஒருவன் வந்தான். கடவுளைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்ற தேடல் அவனுள் இருந்தது.
""சுவாமி எனக்கு ஒரு சந்தேகம். கடவுள் என்பவர் யார் என்பதை <உங்களால் சொல்ல முடியுமா?'' என்று கேட்டான்.
துறவியோ அதைக் கண்டு கொள்ளாமல், தொடர்ந்து அமைதி காத்தார். கேள்வி அவரின் காதில் விழவில்லை என்பதை அவரின் மவுனம் உணர்த்தியது.
""சுவாமி! நான் சொல்வது உங்களின் காதில் விழவில்லையா?'' என சத்தமாக கத்தினான். இப்போது துறவி வாய் திறந்தார்.
""கேள்விக்கான பதிலை சொல்லிவிட்டேனே!'' என்றார்.
இளைஞனுக்கு கோபம்.
""வாயே திறக்கவில்லை! பதில் சொல்லியாச்சு என்கிறீர்களே! துறவி பொய் சொல்லலாமா?'' என்று சற்று கோபமாகவே கேட்டான்.
""மகனே! மவுனமே எனது பதில்'' என்றார் துறவி.
இளைஞனோ,""இப்படி புதிர் போட்டு பேசினால் எப்படி புரியும்? தெளிவாகச் சொல்லுங்கள்,'' என்றான்.
""ஆன்மிகத்தின் ஒட்டுமொத்த பிழிவே மவுனம் தான். எங்கும் நிறைந்திருக்கும் கடவுளை வார்த்தைகளுக்குள் யாரும் அடக்க முடியாது. உனக்குள்ளே தேடிக் கண்டெடுக்க வேண்டிய பொக்கிஷம் அவர். மவுனமாக தியானத்தில் ஆழ்ந்து விடும் நேரத்தில் மட்டுமே அவரோடு உறவாட முடியும்,'' என்ற துறவி மீண்டும் மவுனத்தில் ஆழ்ந்தார்.

No comments:

Post a Comment