Thursday, November 13, 2014

திருச்செந்தூர் கடலில் குளிக்கப் போறீங்களா!

திருச்செந்தூருக்கு சஷ்டி விழாவுக்கு போறீங்க! அங்கே கடல் இருக்கிறது. அதற்குள் கண்ட குப்பையையெல்லாம் போட்டு நாசம் பண்ணக்கூடாது. நாழிக்கிணற்றுக்கு போகும் போது பாலிதீன் பை, சோப்பு இதெல்லாம் அவசியமே கிடையாது. சிலர் ஏதோ பாத்ரூமில் குளிக்கிற மாதிரி நாழிக்கிணற்றை பாடாய் படுத்துறாங்க. அவங்களுக்கெல்லாம் சொர்க்கமே கிடைக்காது. கேளுங்க இந்தக் கதையை!
இந்திரத்யும்னன் என்ற மன்னர் சொர்க்க வாழ்வை அனுபவித்தார். அங்கு தங்குவதற்குரிய புண்ணியம் குறைந்தவுடன் பூமியில் விழுந்தார். விழுந்த அவர் மார்க்கண்டேயரைக் கண்டார்.
அவரிடம் ""என்னைத் தெரியுமா உங்களுக்கு?'' எனக் கேட்டார்.
""தெரியாது'' என்றார் மார்க்கண்டேயர்.
மன்னர் விடவில்லை. ""உங்களை விட சிரஞ்சீவியாக இருப்பவர்கள் யாராவது இருக்கிறார்களா?'' எனக் கேட்டார்.
மார்க்கண்டேயர், ""இமயமலையில் சிரஞ்சீவியான பிரவாரகர்ணன் என்ற பெயர் கொண்ட கோட்டான் இருக்கிறது. அதைக் கேட்கலாம்,'' என்றார்.
இருவருமாக கோட்டானைப் பார்த்தனர்.
அதனிடம்,""என்னை உனக்குத் தெரியுமா?'' எனக் கேட்டார் மன்னர்.
கோட்டானோ,""எனக்கு தெரியாது.
இந்திரத்யும்னன் என்ற ஏரியில் நாலீஜங்கன் என்ற நாரை இருக்கிறது. அதைக் கேட்டால் தெரியும்,'' என்று பதிலளித்தது.
மன்னர், மார்க்கண்டேயர், கோட்டான் மூவருமாக நாரையைப் பார்க்கச் சென்றனர்.
நாரையும் யோசித்தபடி,""எனக்குத் தெரியாது. இந்த ஏரியிலேயே அகூபாரன் என்ற ஆமை இருக்கிறது. அது என்னை விட சிரஞ்சீவியாக இங்கிருக்கிறது. அதனிடம் கேட்கலாம்,'' என்றது.
சொன்னது மட்டுமில்லாமல், அந்த ஆமையை அழைத்து,""ஆகூபாரா! இந்த மன்னரை உனக்குத் தெரியுமா?'' என்று கேட்கவும் செய்தது நாரை.
ஆகூபாரன் தன்னையும் அறியாமல் கண்ணீர் சிந்தியது.
""ஆகா! ஆகா! எனக்குத் தெரியாதா இந்த மகானை? இவர் ஏராளமான யாகங்களைச் செய்தவராச்சே! அளவில்லாமல் பசுக்களைத் தானம் அளித்தவர். அவர் வெட்டியது தான் இந்த ஏரி. அன்று முதல் நீண்ட காலமாக நான் இங்கு தான் இருக்கிறேன்,'' என்று பதிலளித்தது.
அதே விநாடியில் தெய்வீக விமானம் ஒன்று அங்கே வந்தது. அதிலிருந்து இறங்கிய தேவர்கள் சிலர் மன்னரை நெருங்கி வந்து, ""மன்னா! உன் புகழ் இன்னும் இந்த உலகத்தில் விளங்குவதால், நீ சொர்க்கத்திற்கு வர வேண்டும்! பாவ புண்ணியம் உலகில் இருக்கும் வரையில் மனிதனுக்கு சொர்க்க, நரக அனுபவம் இருக்கவே செய்யும்,'' என்று அவரை சொர்க்கத்திற்கு அழைத்துப் போனார்.
அதன் பின் மார்க்கண்டேயர் உள்ளிட்ட மற்றவர்கள் அவரவர் இடத்திற்கு திரும்பி விட்டனர்.
நாம் செய்த நற்செயல் பூமியில் நிலைத்திருக்கும் வரையும், அடுத்தவர்களால் நன்றி பாராட்டப்படும் வரைக்கும் நமக்கு சொர்க்கவாசம் கிடைக்கும் என்பதையே இது உணர்த்துகிறது.
அந்த மன்னர் செய்ததைப் போல, யாகம், பசு தானம், குளம்வெட்டுதல் போன்ற புண்ணிய செயல்களில் ஈடுபடாவிட்டாலும், அவர்களுக்கு இடையூறு செய்யாமல் இருந்தால் கூட போதும். அவர்கள் வெட்டிய குளங்கள் தூர்ந்து போகாமல் பார்த்துக் கொண்டால் கூட போதும். இதன் மூலம் வருங்கால சந்ததியினர் நம்மை என்றென்றும் வாழ்த்தி வணங்குவர்.  

No comments:

Post a Comment