Thursday, November 6, 2014

போரும் சீரும்

போரும் சீரும்
போருக்கு முன் இரு முறை தூதனுப்பியமை, மறைந்து நின்று போராடாமை, ஆயுதம் ஏந்தாதவனுடன் போராடாமை, தனக்குச் சமானமற்ற வீரனுடன் போராடாமை, புறங் கொடுப்பவனைக் கொல்லாமை ஆகிய செயற்பாடுகள் கந்தபுராணத்திலுள்ள போரில் ‘அசுரர்களால் கூட’ அநேகமாகக் கடைபிடிக்கப்படுவதைப் பார்க்கிறோம். செஞ்சோற்றுக்கடனுக்குச் சிங்கனும், பிதிர்க்கடனுக்கு இரணியனும், மானத்திற்குச் சூரனும், கற்பிற்கு சூரன் மனைவியும் கந்தபுராணத்தில் எடுத்துக்காட்டுகளாக விளங்குகின்றனர்.
ஆனால், இன்றைய உலகில் நடைபெற்ற, நடைபெறும் மோதல்கள் இவற்றை எல்லாம் புறக்கணிக்கிறது. எந்தப் பிரச்சினையிலும் தலையிடாமல் ஒதுங்கி இருக்கிற மருத்துவமனையையும் தாக்குகின்றனர்.
இவையெல்லாம் நிச்சயமாக இன்றைய சமூகத்தைக் காட்டிலும் கந்தபுராண காலச் சமூகம் உள, ஒழுக்க ரீதியில் உயர்வானதாகவே இருந்திருக்கும் என நம்பச் செய்கின்றன.
கந்தபுராணம் என்பது தமிழரின் வாழ்வோடு இணைந்தது. ஆக, இதில் ஊறிய எவரும் இதைக் கதை என்று சொல்வதில்லை. சிற்சில இடங்களில் கதைக்குரிய உயர்வு நவிற்சி இருந்தாலும், இது பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உண்மையில் நடந்த சம்பவம் என்றே அவர்கள் நம்புகிறார்கள்.
இவ்வாறான ஆய்வுகளின் படி முருகன் பிறந்தது கைலாசச் சாரல் என்றும், தரை வழி யுத்தம் நடந்தது திருப்பரங்குன்றம் என்றும், விண் வெளி யுத்தம் நடந்தது திருப்போரூர் என்றும், கடல் வழிச் சமர் நடந்தது திருச்செந்தூருக்கு அப்பாலுள்ள கடல் என்றும் ஐதீகம். இலங்கையின் கதிர்காமத்தில் படைவீடு அமைத்துத் தங்கி, அப்பால் தெற்கே சூரனுடைய நகரை நோக்கிச் சென்றதாகக் கூறப்படுவதால் சூரன் அக்கால ஆப்பிரிக்கதேச அரசன் என்று கருதுவாரும் உள்ளனர். முருகனின் வலது புறம் எழுந்தருளியிருக்கும் வள்ளியம்மை தமிழ் மொழி பேசும் குறவர் இனப் பெண் என்பது வேறு ஐதீகம். இதுவும் ஆய்விற்குரியதே.
யாழ்ப்பாணத்தின் கடற்கரையோரத்தில் உள்ள பிரபல ஸ்கந்த ஸ்தலம் ‘மாவிட்டபுரம்’. ஆக, திருச்செந்தூருக்கும் மாவிட்டபுரத்திற்கும் இடைப்பட்ட பரந்த சமுத்திரப் பகுதியில் மாமரமாகி மாயா ஜாலங்கள் செய்து முரகனுடன் சூரன் போராடியிருக்கிறான்.
‘தீயவை புரிந்தாரேனும் குமரவேள் திருமுன் உற்றால்
தூயவராகி மேலைத் தொல்கதி அடைவர்’
என்ற கந்தபுராண அறைகூவல் எங்கள் ஒவ்வொருவரையும் தட்டி எழுப்பி “ஓ… அஞ்ஞானிகளே, கடந்த காலம் போயது. உங்கள் அறியாமை மூட்டைகளை நீக்க நல்ல ஒரு வழி கிடைத்திருக்கிறது. உடனடியாகக் கந்தப்பெருமானின் கழலடிகளைப் போய்ச் சேருங்கள். நீங்கள் ஞானியராவீர்கள்…” என்று நமக்கெல்லாம் அரிய பெரிய நற்செய்தி சொல்கிறது.

No comments:

Post a Comment