Monday, November 17, 2014

ஒருவரது கடந்த கால வாழ்வை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு யாரும் வருவது கூடாது

பொய்யில் தொடங்கி, திருட்டு, கொலை என்று வளர்ந்து, வாழ்நாளின் பெரும் பகுதியைக் கடத்தி விட்டான் ஒரு இளைஞன். ஒரு கட்டத்தில் வாழ்க்கையே வெறுத்துப் போனது. இனியும் பாவம் செய்துதான் வாழ வேண்டுமா என்று யோசித்தான். திருந்தி மனிதனாக வாழ விரும்பினான்.
ஒருநாள் மனம் போன போக்கில், கால்கள் நடை போட்டன. திடீரென அவனுக்குள் ஒரு மாற்றம்..காந்தம் போல குறிப்பிட்ட இடம் நோக்கி அவன் கால்கள் விரைந்தன. ஏன் என்று அவனுக்குப் புரியவில்லை. ஓரிடத்தில் ஒரு மடாலயம் இருந்தது. அது ஞான தீபமான புத்தரின் இருப்பிடம். தான் செய்த பாவம் தீர, அங்கு பிராயச்சித்தம் கிடைக்கும் என்ற நம்பிக்கை அவனுள் எழுந்தது. ஆனால், அப்போது அங்கு புத்தர் இல்லை. பிச்சை ஏற்க ஊருக்குள் சென்றிருந்தார். சாரிபுத்ரர் என்ற சீடர் மட்டும் இருந்தார். அவரைக் கண்ட திருடனுக்குக் கண்ணீர் பெருகியது. தன்னை ஏற்று அருள் புரியுமாறு பணிந்து வேண்டினான்.
திருடனின் தோற்றம் கண்ட சாரிபுத்ரர், "" உன்னால் இனி ஒருநாளும் திருந்த முடியாது. அதற்கான வழி தெரியவில்லை. வந்த வழியே திரும்பி போகலாம். உனக்கெல்லாம் அறிவுரை சொல்லி என்ன பயன்?'' என்று கடுமையாகப் பேசி விட்டார்.
திருடன் மனம் நொந்து அங்கிருந்து புறப்பட்டான். இனியும் ஏன் உயிரை வைத்திருக்க வேண்டும் என்று தோன்றியது. மடாலய வெளிப்புறச் சுவரில் தலையை முட்டிக் கொள்ள முயன்றான். பிச்சை ஏற்று, திரும்பி வந்து கொண்டிருந்த புத்தர் அவனைப் பார்த்து விட்டார்.
ஓடி வந்து தடுத்ததுடன், மீண்டும் மடத்திற்குள் அழைத்து வந்தார்.
சீடர் சாரிபுத்ரரை நோக்கி, ""இவன் நம்மோடு இருக்கட்டும்'' என்று மட்டும் சொன்னார். சாரிபுத்ரரும் தலையாட்டினார்.
அதன் பின் திருடன் புத்தரை விட்டு ஒரு அடி கூட நகரவில்லை. நிழல் போல பின்தொடர்ந்தான். புத்தரின் வழிகாட்டுதலை பின்பற்றினான். ஞான மாளிகையின் கதவுகள் அவனுக்குள் திறக்கத் தொடங்கின. மனம் முழுமையாகப் பண்பட்டதை உணர்ந்தான். திருடனாக இருந்த பழைய வாழ்க்கை அடியோடு மறந்து போனது. காலம் உருண்டோடியது.
ஒருநாள் அவனிடம், ""உனக்கு புத்த பிட்சுவாகும் தகுதி வந்து விட்டது'' என்று உறுதியளித்தார் புத்தர்.
சாரிபுத்ரர், ""குருவே! நீங்கள் சொல்வது உண்மை தானா! இந்த அதிசயம் அவனுக்குள் எப்படி நிகழ்ந்தது?'' என்று கேட்டார்.
புத்தர் அவரிடம்,""சாரிபுத்ரா! நீ நல்லவன் தான். ஆனால், உன்னிடம் போதுமான அளவு கருணை இல்லாமல் போனது. உயர்ந்த ஞானமும் உனக்கில்லை. பொய்யான, இறந்த காலத்தை மட்டும் எண்ணிக் கொண்டு இவனைப் புறக்கணிக்க முடிவெடுத்தாய். வரவிருக்கும் எதிர்காலத்தை மறந்து விட்டாய். இவனுடைய மாற்றத்திற்கு காரணம் நான் அல்ல. கடந்த காலத்தில் இருந்து விடுபட, இவன் தவித்த தவிப்பே விடுதலையைக் கொடுத்து விட்டது.
கல்லுக்குள்ளும் ஈரம் இருப்பதுண்டு. அவன் மனதில் இருந்த பாவச்சுமை அனைத்தும் நீங்கி விட்டது,'' என்றார்.
ஒருவரது கடந்த கால வாழ்வை மட்டும் மனதில் வைத்துக் கொண்டு ஒரு முடிவுக்கு யாரும் வருவது கூடாது என்பதை புத்தர் இதன் மூலம் உணர்த்தினார்.

No comments:

Post a Comment