Tuesday, July 7, 2015

வாரியார் சுவாமிகள் சொற்பொழிவில் இருந்து...

வாரியார் சுவாமிகள் சொற்பொழிவில் இருந்து......
உலகம் தோன்றிய நாள்தொட்டுத் தாய்மார்கள் குழந்தைகளைப் பெறுவார்கள். அப்பா பெயர் வைப்பார். ஆனால் அப்பா குழந்தை பெற்று அம்மா பெயர் வைக்கின்றாள். இது ஒரு புரட்சி. உலகத்திலே எங்குமே ஆண்கள் மருத்துவ விடுதி கிடையாது. ஓர் ஆண் பிள்ளை குழந்தை பெற்றான் என்ற சரித்திரம் கிடையாது. கைலாயத்தில்தான் சிவபெருமான் நெற்றிக்கண்ணிலிருந்து முருகப் பெருமானை உண்டாக்குகின்றார். "ஆண்பிள்ளை" அவர் ஒருவர்தான். நாமெல்லாம் பெண்பிள்ளைகள். பெண் வயிற்றிலிருந்து பிறந்தால் பெண் பிள்ளைகள்தானே.
ஒரு பெண் என்றால் அடக்கமாக இருக்க வேண்டும். ஆண்கள் என்றால் வீரமாய் இருக்க வேண்டும். மாறியிருக்கக் கூடாது. அதேபோல் கடவுள் என்று சொன்னால் கடவுளுக்குச் சில இலக்கணங்கள் உண்டு. என்ன இலக்கணம்? முதல் இலக்கணம் இறப்பும் பிறப்பும் இல்லாமல் இருக்க வேண்டும்.
நான் சொல்வதையெல்லாம் எப்பொழுதும் நினைவிலே வைத்துக் கொள்ள வேண்டும். எத்தனையோ காலமாக எத்தனையோ நூல்களைப் படித்து அனுபவத்தில் சொல்கிறேன். பிறந்தான், இறந்தான் என்று சொன்னால் அது கடவுளல்ல. நம்மைப் போல பெரிய ஆத்மா என்றுதான் அர்த்தம். சிவபெருமானுக்கு இறப்பும் பிறப்பும் கிடையாது. சிவனே முருகன்; முருகனே சிவன். ஆகவே முருகனுக்கும் இறப்பும் பிறப்பும் கிடையாது.
"செம்மான் மகளைத் திருடும் திருடன்
பெம்மான் முருகன் பிறவான் இறவான்"
- என்கிறது அருணகிரியாரின் கந்தரனுபூதி.
இராமன் அவதாரம் பண்ணின நாளை நாமெல்லாம் கொண்டாடுகிறோம்; ஸ்ரீ ராம நவமி. கண்ணன் அவதாரம் பண்ணின நாளைக் கொண்டாடுகிறோம்; கிருஷ்ண ஜயந்தி. ஹனுமத் ஜெயந்தி,சங்கர ஜயந்தி, மத்வ ஜயந்தி, ஸ்ரீ இராமானுஜ ஜயந்தி, பரசுராம ஜயந்தி, வாமன ஜயந்தி. எந்தக் கோவிலிலாவது சிவ ஜயந்தி, சிவன் பிறந்தநாள் விழா, சுப்ரமணிய சுவாமி ஜயந்தி, முருகன் அவதாரம் பண்ணின நாள் என்று இதுவரையிலும் உண்டா? கிடையாது. பிறப்பு இறப்பு இல்லாதவன் இறைவன். அதுதான் இறைவனுடைய லட்சணம். இந்தப் பாட்டில் வருகிறது:
"ஆதியும் நடுவும் ஈறும் அருவமும் உருவும் ஒப்பும்
ஏதுவும் வரவும் போக்கும் இன்பமும் துன்பும் இன்றி
வேதமும் கடந்து நின்ற விமலஓர் குமரன் தன்னை
நீதரல் வேண்டும் நின்பால் நின்னையே நிகர்க்க என்றார்" - கந்தபுராணம்.
நீ தர வேண்டும். ஆண்டவனே குழந்தையை நீரே தர வேண்டும். "நீ தர" - அது தங்களிடத்திலிருந்து வர வேண்டும். "நின்னையே நிகர்க்க" என்றார்.

1 comment:

  1. பிறப்பும் இறப்பும் இல்லாதவன் இறைவன்... என்பதை வாரியார் மிக அழகாகச் சொல்லியிருக்கிறார்.

    ReplyDelete