Tuesday, July 7, 2015

நிஷ்க்ரமண சம்ஸ்காரம்

நிஷ்க்ரமண சம்ஸ்காரம்
என் குழந்தை படிக்கவே மாட்டான் என்கிறான், பாடங்களோ கஷ்டமாக இருக்கின்றன. என்ன ஆச்சோ, ஏதாச்சோ ! இவனை கூட்டிக் கொண்டு , யாரவது மனநல நிபுணரிடம் காட்டி, சரி பண்ணிக் கொண்டு வரலாமா ? ஏதாவது கோயிலுக்கு போய் பரிகாரம் செய்யலாமா ? இப்படி புலம்பாத பெற்றோர் மிகவும் குறைந்து விட்டனர். அந்தக் காலத்திலும் குழந்தைகள் இருந்தார்கள். அவர்கள் குருகுலத்தில் போய் வேதம் படித்தார்கள். அது, இப்போது நாம் படிக்கும் கம்ப்யூட்டர் சயின்சை விட கஷ்டமான விஷயம். இது உண்மையா இல்லையா என சோதித்து பார்க்கவேண்டுமானால், ஏதாவது ஒரு வேதபுத்தகத்தை திருப்பிப் பாருங்கள். தலை சுற்றிவிடும் ! பாடம் கடினமா இல்லையா என்பது ஒரு பொருட்டே அல்ல ! நம் குழந்தைகள் படிக்காததற்குரிய அடிப்படைக் காரணம் என்ன தெரியுமா ? ஆன்மிக அறிவை நம் குழந்தைகளுக்கு நாம் ஊட்டாதது தான். இதனால், நல் பழக்க வழக்கங்கள் குறைந்து போய் விட்டன. படிக்கும் திறனும் குறைந்து விட்டது.
இன்றைக்கும் கிராமங்களுக்கும் போய் பாருங்கள். பாட்டிகள் தங்களுக்கு பிறந்த பேரன் பேத்திகளை அதிகாலை வெயிலில் முகம் காட்டிக் கொண்டிருப்பார்கள். ஆனால், எதற்காக இதைச் செய்கிறோம் என்ற விபரம் அவர்களுக்கு தெரியாது. கேட்டால், வழிவழியாக வந்த பழக்கம் என்பார்கள் அல்லது குழந்தையின் கண்ணுக்கு நல்லது, உடலுக்கு நல்லது என பொதுப்படையாகச் சொல்லுவார்கள். சரி... நான்கு மாதத்தில் குழந்தையை சூரியனிடம் காட்டினால் என்ன நல்லபழக்கம் வந்து விடப்போகிறது என்பது அடுத்த கேள்வி. சூரியன் தினமும் வருவான். மழை பெய்தாலும் வருவான், வெயில் அடித்தாலும் வருவான். ஒளியை நிச்சயம் தருவான். இது மறுக்க முடியாத உண்மை. அவனது ஒளி உஷ்ணமாக இருக்கிறது. இது வலிமைக்கு அடையாளம் அவன் ஒருநாட்டில் மறைந்தால். இன்னொரு நாட்டில் உதிப்பான், அதாவது அவனுக்கு ஓய்வே இல்லை. இது சோம்பலின்மைக்கும், கடமை உணர்வுக்கும் அடையாளம். ஜாதி, மதம், நாடு, பாவம் செய்தவன், புண்ணியம் செய்தவன் என பாராமல் எல்லாருக்கும் ஒரே மாதிரியான வெப்பத்தையே தருவான், இது தியாகத்தையும், பாரபட்சமின்மையையும் குறிக்கிறது. ஆக உண்மை, வலிமை, சுறுசுறுப்பு, தியாகம், பாரபட்சமின்மை, கடமை என்ற அரிய குணங்களை சூரியன் கற்றுத் தருகிறான். நான்கு மாத குழந்தையை அதிகாலை சூரிய ஒளியில் காட்டும் போது, இந்த நற்குணங்களெல்லாம் அந்த குழந்தையையும் சேருமென நம் முன்னோர்கள் கருதினார்கள். இந்த நமஸ்காரத்திற்கு நிஷ்கிரமணசமஸ்காரம் என்று பெயரும் வைத்தார்கள்.
இந்த சடங்கை எப்படி செய்வது ? குழந்தை பிறந்த நான்காம் மாதத்தில், ஒரு நல்லநாள் பார்த்து, அதிகாலையே வீடுமெழுக வேண்டும். வீட்டில் அனைவரும் நீராடி, குழந்தையையும் நீராட்டி, காற்றோட்டமான இடத்திற்கு கொண்டு சென்று, உதயமாகும் சூரியனின் ஒளி, குழந்தையின் மீது படச் செய்ய வேண்டும். 15 நிமிடங்கள் காட்டினால் போதும். அன்றிரவில் சந்திர ஒளியும் குழந்தைக்கு கிடைக்கும்படி செய்ய வேண்டும். பின்னர் தினமும், சூரிய ஒளியில் குழந்தையைக் காட்ட வேண்டும். அறிவியல் ரீதியாக சூரிய ஒளியில், இருந்து வைட்டமின்கள் கிடைக்கும் என்பது ஒருபுறமிருக்க, குழந்தையிடம் நல்ல பழக்கங்களும் சூரிய நமஸ்காரத்தால் தொற்றிக்கொள்ளும் என முன்னோர் கணித்து வைத்துள்ளனர்.

No comments:

Post a Comment